சிதைவுச் சிக்கல்
***********************************************
கவலைகளைக்
கவிதையில் இறக்கி வை என்கிறான்
நண்பனொருவன்
அப்படிச் செய்வதிலொரு
ஆபத்திருக்கிறது!
வைக்க வைக்க
எடுத்துக் கொள்வீர்கள்...
பின்னொரு நாளில்
புன்னகையென்றொரு கவிதை
எழுதியிருப்பேன்!
கண்ணீரெனப் பொருள் தரும்
உங்கள் அகராதி...
0
அவர்களுக்காக
************************************************************
ஒரு சம்பவத்திற்குப் பிறகு
நானும்
ஓடிப்பிடித்து
ஜன்னல் வழியே
கைக்குட்டை போட்டு
கூட்டம் விலக்கி
இருக்கை தேடியடிமர்ந்து
இன்னொருவரும் வருவதாய்ச்
சொல்லுகிறேன்
இருக்கை கேட்போரிடம்...
வரக்கூடும் மெதுவாக
கைத்தாங்கலாய் அணைத்தபடியே
கர்ப்பிணி மனைவியோடு
கணவன் ஒருவன்...
0
எந்திர மனிதன்
***********************************************
விலையை
கடைக்காரன் நிர்ணயிக்கிறான்
உறிஞ்ச வேண்டிய கால அளவை
அருகிலிருக்கிற பெண்
தீர்மானிக்கிறாள்
கழிக்க வேண்டிய நேரத்தை
அலுவல் முடிவு செய்கிறது
குடித்து...
வைத்து...
வெளியேற்றும்
இயந்திரமாகிப் போனது
உடல்...
தேநீராலும்
சிலநேரம்
சிறுநீராலும் நிரம்பியிருக்கிற
வயிறு
பசியறிவதில்லை!
0
நிறமாற்றம்
******************************************
"இரண்டு நாட்களாகச் சாப்பிடாத
இந்தக் குழந்தைக்குப்
பால் வாங்கனும்
ஏதாவது கொடுங்க"
என்றவளுக்காகச்
சட்டைப்பையைத்  துழாவியவன்
நிறம் மாறியதும்
மனம் மாறிக் கிளம்பிவிட்டான்..
பச்சை விளக்கு
பசிக்கிற சில வயிறுகளுக்கு
சிகப்பு விளக்கு...

   - நாவிஷ் செந்தில்குமார்

 

Pin It