woman1) கற்பிதம்
----------------
வயிறு முட்டும்
மலத்தைச் சுமந்தவாறு
பொதுக்கழிப்பறையில்
அவஸ்தைகளுடன்
காத்திருக்கிறோம்.
வெப்பமூச்சு நிரம்பி வழியும்
நெருக்கடி மிகுந்த பேருந்துகளில்
நுழைந்து பயணித்து
வெளியேறுகிறோம்.
மின்வெட்டால்
எப்போது ஊற்றப்படும் எனத்தெரியாமல்
நீண்டவரிசையில்
ரேசன்கடை
மண்ணெண்ணெய்
பல்கில் தவமிருக்கிறோம்.
ஆறுகளைத் தொலைத்துவிட்டு
குடிநீர் பாட்டில் வாங்க
கடைகளுக்கு அலைகிறோம்.
வாழ்தல் என கற்பித்துக்கொண்டாலும்
எப்படியேனும்
வாழக்கற்றுக் கொள்கிறோம்
வாழ்க்கையை
ஒரு பச்சோந்தியைப் போல.


2) உன்னைத் துரத்தும் இசை

--------------------------------------------

செத்தமாட்டின்
வீச்சம் மாறாத
பறையின் சாவொலி
உன்னைத் துரத்துகிறது.
மணம் பரப்பும் என்ற
பரப்புரைகளோடு
குசுவை கசியவிடும்
லாவகத்தோடு
சிந்தும் உனது இசையால்
திணறுகிறது காற்றின் திசைகள்.
எமக்கான இசை எனக்கு.
உமக்கான இசை உமக்கு.
இதில் எது புனிதம்?

ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It