விடிய விடிய பெய்த
பெருமழையொன்று
மண்வாசனையை உதிர்த்துக் கொண்டிருந்தது
குளிர்ந்த காற்று
உடலெங்கிலும் ரீங்காரமிட
மெய் சிலிர்த்துக் கொள்கிறது
என் பிரியத்தின் வானவில்
உன்னோட ஆராதிக்க
வேண்டிய இம்மழையிரவு
ஏனோ நீயின்றி நீள்கிறது
கோரைப்பாயும் தலையணையும்
அதன் தனிமைக்குள்ளிருந்து பிடுங்கி
என் தோள்களின் மீது வந்தமர்த்துகிறது
உன் நினைவுகளை
தவிட்டு மழையில் நனைந்த
சேலையின் ஈரம்
கதவிடுக்குகளில் கசிந்துருகி
காட்டாற்று வெள்ளமாய்
நம்மைப் புரட்டுகின்றன
தாகத்துடன் கொத்துகிற
சிறு பறவையின் ஏக்கமென
துடித்து அடங்கும்
அவஸ்தைகள் என்னுளிறங்க
சிறகிழந்த ஈசலாய்
ஊசலாடித் திரிகிறேன்
இப்போதான சாரல் இரவிலும்
ஓய்ந்தபாடில்லை
மழையும் உன் நினைவும்

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Pin It