"மகராசர்கள் உலகாளுதல்

நிலையாம்எனும் நினைவா?...

உதவாதினி ஒருதாமதம்

உடனே விழி தமிழா!" - எச்சரிக்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்.

கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டை ஆண்ட 'மகராசர்'களை தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள்.

விழிப்படைந்த தமிழர்கள் தி.மு.கவின் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் அணிவகுத்துக் காவிகளுக்கு விடை கொடுத்து விட்டார்கள் 19-04-2024 அன்று, மை விரலால்.

இப்பொழுது இந்திய ஒன்றியம் முழுவதும் தாமரையைத் தூக்கியெறியத் தயாராகி விட்டார்கள்.

 இப்பொழுதும் மோடி, அமித்ஷாக்களின் வெறுப்புப் பேச்சுகளில் இருந்து அவர்களின் கோரமுகம் தெளிவாகத் தெரிகிறது.

ஆர். எஸ். எஸ் இன் 'அஜெண்டா' வைச் சிரமேற் கொண்டிருக்கும் பா.ஜ.க அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானாலும், ஆர்.எஸ்.எஸ் இன் பார்ப்பனிய சனாதனத்தை நிலைநிறுத்த வேண்டுமானாலும் என்ன வேண்டுமென்றாலும் செய்யும்.

பா.ஜ.கவை ஆட்சியில் இருந்து அகற்றினால் மட்டும் போதாது. ஒரே ராம ராஜ்ய நாடு, ஒரே சர்வாதிகார அதிபர் ஆட்சி, ஒரே சமஸ்கிருத மொழி, ஒரே சனாதனப் பண்பாடு என்று பாசிசத்தை வலுப்படுத்தி மேலெடுக்க அது முயற்சி செய்யும். பதுங்கிப் பாய்வது அதன் இயல்பான குணம். தேர்தல்களோடு நம் பணி எப்போதும் முடிந்திடுவதில்லை. அதையும் தாண்டி தந்தை பெரியார் வழியில் பணியினைத் தொடர, இதோ புரட்சிக் கவிஞர் அழைக்கிறார்,

"கொலை வாளினை எடடா மிகு

கொடியோர் செயல் அறவே

குகைவாழ் ஒரு புலியே உயர்

குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே புரி

சரிநீதி யுதவுவாய்!

சமமே பொருள் ஐனநாயகம்

எனவே முரசறைவாய்!"

புரட்சிக்கவிஞரின் பிறந்தநாள் ஏப்ரல் 29. அந்நாள் நம் பேரவை நாள். அன்றே உறுதியேற்போம்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It