எப்படியாவது
தெரிந்து கொள்ள வேண்டும்
சுற்றி வளைத்துப் பேசி
சுற்றம் பற்றி பெருமையடித்து
எந்தப் புள்ளியிலாவது
பிடித்து விட வேண்டும்
ஒரு படி மேல் என்று
நிரூபித்து விட்டால் தான்
நெஞ்சாறும் நிம்மதி
கைகள் நடுங்கும்
ஒரு குடி அடிமை போல
எதிர் இருப்போர்
இன்னார் என
தெரியத் துடிக்கும் சபலம்
அறிவார்ந்த கூட்டத்தின் நடுவே
அரைவேக்காடாய் மாறுவதெல்லாம்
ஐயோ பாவம் தான்
எத்தனை நிறைந்து என்ன பயன்
என்ன ஆளுங்க என்று
கூசாமல் கேட்டு
நிமிர்ந்து நிற்பதாக
கூனிக் குறுகுகிறது
குறைகுடம்...!

- கவிஜி

Pin It