தோட்டக்காரன்
கவிஞன் என்றால்
தோட்டத்தில் நூறு நிலாக்கள்

*
சீரியல் பல்புகளும் நிலவும்
நகல்கள் மத்தியில்
அசல் அந்தரத்தில்

*
சிறுமி பறவை வரைகிறாள்
பறவையோ
வானம் வரைகிறது

*
முட்டாள் மீன்கள் தனக்கென்று
வந்து மாட்டிக் கொள்கின்றன
வலை அலைகளுக்கு

*
கவிஞன் இறங்கி இருந்தால்
நிலவில் கால்களையா வைத்திருப்பான்
முத்தத்தை அல்லவா பதித்திருப்பான்

*
முதலில்
கொலுசு அழுதது
பிறகு தான் குழந்தை

*
ஆபத்தான பகுதி இறங்க வேண்டாம்
ஆற்றோர எச்சரிக்கை மீறியும்
இறங்கிப் பார்க்கிறது நிலா

*
ஊரும் தயார் தேரும் தயார்
அடம்பிடித்த கடவுளுக்கு
அன்றும் விடுமுறை இல்லை

*
மழைக்கு விரிந்த குடையெல்லாம்
மடங்கி விட்டன
காதலுக்கு விரிந்தது மட்டும்
கடற்கரைக் குல்லாவாய்

*
ஏன் சாலையெல்லாம் பூ சிதறல்
சோகத்தோடு கடக்கிறது
வண்ணத்துப் பூச்சி

*
எத்தனை முயன்றும் சொந்த சாதியில்
பெண் தான் கிடைத்தது
ஆப்பிள் போன் இல்லை

- கவிஜி

Pin It