இன்னும் எத்தனை பேரின் ரத்தத்தைக் குடிக்க இந்தச் சாதி மிருகம் காத்துக் கொண்டிருக்கின்றது எனத் தெரியவில்லை. ஆயிரம் ஆயிரமாய் சாதி ஒழிப்புப் போராளிகள் களத்தில் இறங்கி போராடியும், இந்த மானங்கெட்ட சாதி மிருகத்தைக் குறைந்த பட்சம் அடக்கி வைக்கக்கூட முடியவில்லையே என நினைக்கும் போது மனம் மிகுந்த கலவரமடைகின்றது. பெரியார் பிறந்த மண்ணில் இன்னும் சாதி மிருகம் உயிர்ப்போடு அடங்காமல் வெறி கொண்டு அலைகின்றது என்பது ஒட்டுமொத்த முற்போக்குவாதிகளுக்கும் பெரும் அவமானம் ஆகும். நம்முடைய அனைத்துப் போராட்டங்களும், முன்னெடுப்புகளும் ஒவ்வொரு மனிதனின் ஜனநாயக உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றத்தான். எந்த ஒரு தனிமனிதனின் உரிமைகளும் சாதியை, மதத்தைக் காரணம் காட்டி பறிக்கப்பட்டால் அதற்கு எதிரான முதல் குரலாக பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரியவாதிகளின் குரலாகத்தான் இருக்கும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உத்திரவாதப் படுத்தியுள்ள அடிப்படை உரிமைகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்றவை மறுக்கப்பட்டால், அதற்கு எதிராக பெரிய அளவில் களமாட முன்வரும் அமைப்புகளுக்கு, வயதுவந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டு இணைந்து வாழ்வதை தடுக்கும் போதும், அதை வன்முறையால் நசுக்கும் போதும் ஏனோ அதற்கு எதிராக பெரிய அளவில் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்ய வேண்டும் என்றோ, அதற்கான தீர்வை நோக்கி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றோ தோன்றுவது இல்லை.

 சாதிய ஆணவப் படுகொலைகள் நடைபெறும் போது மட்டும் அதற்கு எதிராகப் போராடுவதும், அறிக்கைவிடுவதும் செய்துவிட்டு, பின்பு அமைதியாகி விடுகின்றோம். அது எல்லாம் போதாது என்பதைத்தான் ஒவ்வொரு முறையும் முகத்தில் அறைந்தார் போல ஒவ்வொரு சாதி ஆணவப் படுகொலையும் நமக்கு உணர்த்திவிட்டுப் போகின்றது. நாத்திகம் பேசுகின்றோம், முதலாளித்துவ ஒழிப்பைப் பற்றி பேசுகின்றோம், இன்னும் சமூகத்தில் எவ்வளவு கேடுகெட்ட பிற்போக்குத் தனங்கள் எல்லாம் இருக்கின்றதோ அதற்கு எதிராகவெல்லாம் பேசுகின்றோம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட ஒரு ஆணும் பெண்ணும் தனக்குப் பிடித்திருந்தால் சேர்ந்து வாழ்வது ஒரு அடிப்படை ஜனநாயக உரிமையாகும். எனவே அதைப் பெற்றுத் தருவதற்காக போராடுவது நமது முக்கிய கடமையாகும். சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக ஒரு தீவிரமான இடைவிடாத போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இப்போது வாழ்கின்றோம். அதைச் செய்ய தவறுவோமானால் நமது அனைத்துப் போராட்டங்களும் எதற்கும் பயன்படாமல் போய்விடும். மேலும் அது இளைஞர்கள் மத்தியில் சமூகத்தின் மீதான அவநம்பிகையை ஏற்படுத்திவிடும். அவர்கள் முற்போக்கு இயக்கங்கள் மீதான நம்பிக்கையும் இழந்துவிடுவார்கள்.

 இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் வாழ்க்கையை முடித்துவைத்த அயோக்கியர்கள் இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் எந்தச் சாதிக்குள்ளும் கலப்புமணம் செய்வதைத் தடுப்போம் என்ற நிலைக்கு வந்திருக்கின்றார்கள். பெண் ஆதிக்க சாதியாக இருந்து ஆண் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே பெரும்பாலும் சாதி ஆணவப்படுகொலைகள் நடைபெறும். ஆனால் தற்போது பெண் ஆதிக்க சாதியாகவும், அதே போல ஆணும் ஆதிக்க சாதியாக இருந்தாலும் கூட சாதி ஆணவப் படுகொலைகள் நடக்கும் என்பதை சுகன்யாவின் படுகொலை நமக்குக் காட்டியிருக்கின்றது. சாதிய தூய்மைவாதம் என்பது எல்லா சாதிகளுக்கும் பொருந்தும், அதை எல்லா சாதிகளுக்கு எதிராகவும் கடைபிடிப்பார்கள் என்பதை சுகன்யாவின் படுகொலை மெய்பித்திருக்கின்றது.

 மதுரை பேரையூர் அருகில் உள்ள வீராளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுகன்யாவும், ஈரோடு அருகே சித்தோட்டைச் சேர்ந்த பூபதி என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஈரோட்டில் வசித்து வந்திருக்கின்றார்கள். இதில் சுகன்யா அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர், பூபதி நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். இருவருமே ஆதிக்க சாதிகள்தான். அப்படி இருந்தும் சுகன்யாவின் பெற்றோர்கள் சுகன்யாவை அடித்துக்கொன்று உடலை எரித்திருக்கின்றார்கள். இந்தச் சம்பவம் நடப்பதற்கு காவல்துறையின் மெத்தனப்போக்கும் ஒரு காரணமாக இருந்துள்ளது. மனைவியை மீட்டுத்தர சொல்லி, புகார்கொடுத்து 25 நாட்கள் ஆகியும் அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அடித்துக் கொன்று எரிக்கும்வரைக்கும் பொறுமை காத்திருக்கின்றார்கள் சாதிவெறி பிடித்த காவல்துறையினர். தமிழ்நாட்டில் நடந்த பல சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு முக்கிய காரணமாக காவல்துறையே இருந்திருக்கின்றது. பெண்களை வலுக்கட்டாயமாகப் பிரித்து பெற்றோர் உடன் அனுப்பி வைப்பது, உள்ளூர் சாதி வெறியர்களிடம் காசு வாங்கிக்கொண்டு ஆதிக்கசாதி வெறியர்களை நக்கிப் பிழைப்பது என தனது மானங்கெட்ட செயலை அது தொடர்ந்து செய்துவருகின்றது. பூபதி புகார் கொடுத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் நிச்சயம் சுகன்யாவை உயிருடன் சாதிவெறி பிடித்த அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டிருக்கலாம். பூபதிக்கு மனைவி முக்கியம், ஆனால் காவல்துறைக்கு எவன் வீட்டில் எழவு விழுந்தாலும் காசுதான் முக்கியம்.

 உண்மையிலேயே இங்கு சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக பெரிய அரசியல் கட்சிகளுக்கு நேர்மையான அனுகுமுறை எல்லாம் கிடையாது. எங்கே சாதி ஆணவ படுகொலையைக் கண்டித்தால் அந்தச் சமூக மக்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமோ என பிழைப்புவாத கண்ணோட்டம் அவர்களை அதற்கு எதிராக செயல்படவிடாமல் தடுக்கின்றது. எவன் எல்லாம் சாதிவெறி பிடித்து வெறிநாயைப் போல அலைகின்றானோ, அவனுடன் எல்லாம் அவர்கள் கூட்டணி வைக்கவே துடிக்கின்றார்கள். ராமதாசும், ஈஸ்வரனும், மணிகன்டனும் இங்கே சில முற்போக்கு வேடமணிந்த கழிசடைகளுக்கு ஜனநாயக சக்தியாகத் தெரிகின்றார்கள். சமீபத்தில் ஒரு பெரியாரியக் கட்சி கவுண்டர் சாதி வெறியன் மணிகண்டன் உடன் கூட்டு இயக்கம் எடுத்தது. இன்னொரு திராவிட அரசியல் கட்சி ஈஸ்வரனை அழைத்துவந்து தனது மேடையில் பேசவைத்து அழகு பார்த்தது. இப்படி இவர்களே கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் போது நாம் எப்படி சாமானிய மக்களிடம் சாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல முடியும்? இங்கே சில பேருக்கு வெட்கமும் இல்லை, மானமும் இல்லை, சுயமரியாதையும் இல்லை. எல்லாவற்றிலும் பிழைப்புவாதம் மட்டுமே நிரம்பி வழிகின்றது. அதுதான் ஒரு மனிதனாகக் கூட மதிப்பதற்கு லாயக்கற்ற, சாதிவெறியைக் கக்கும் மிருகங்களை நக்கி தங்களது பிழைப்பு ஓட்டிக்கொள்ள அவர்களைத் தூண்டுகின்றது.

 உண்மையிலேயே சாதி ஒழிய வேண்டும், சாதிவெறியை சமூகத்தில் பரப்பும் நாய்களை தனிமைபடுத்த வேண்டும் என நினைத்தால் அது போன்றவர்களிடம் இருந்து அனைத்துவகையிலும் முற்போக்குவாதிகள் தங்களைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். தன் சாதிமக்களை அடகுவைத்து அரசியல் அதிகாரத்தை ருசிக்கத் துடிக்கும் அவர்களின் கேடுகெட்ட இழி நோக்கத்தை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். அப்படி செய்யாமல் அவர்களுடன் கூட்டு இயக்கம் எடுப்பது, கூட்டணிக்கு அழைப்பது போன்ற செயல்களை செய்யும் போலியான முற்போக்குவாதிகளை இனம் கண்டு ஆரம்பத்திலேயே களை எடுக்க வேண்டும். இது போன்றவர்கள் எல்லாம் ஒட்டுமொத்த முற்போக்குவாதிகளுக்கும் இழி பெயரை தேடிக்கொடுத்துவிடுவார்கள். சாதிவெறியர்களைவிட மோசமானவர்கள் அவர்களை அழைத்துவந்து மேடை ஏற்றுபவர்கள் தான். இந்தக் கழிசடைகள் தான் அவர்களுக்கு இந்தச் சமூகத்தில் ஒரு ஜனநாயக முகமூடியை வழங்குகின்றவர்கள். எனவே இவர்களையும் சேர்த்தே நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

 சாதி ஆணவப் படுகொலையை சட்டத்தின் மூலமாக தடுப்பது என்பது ஒருபுறம் இருந்தாலும், சாதிமாறி காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர்கள் தயவுசெய்து முற்போக்கு அமைப்புகளின் துணையுடன் செய்து கொள்ளுங்கள். பெரியார் சுயமரியாதை திருமண நிலையங்கள் உள்ளன. அது போன்ற இடங்கள் மிகப் பாதுகாப்பானது. இல்லை என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவற்றின் துணையுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள். எப்போதுமே ஓர் அமைப்பாக இருப்பது பாதுகாப்பானது. உங்களுடைய பிரச்சினைகளைத் தங்களுடைய பிரச்சினையாக ஏற்று நிச்சயம் தோழர்கள் குரல் கொடுப்பார்கள். உங்களைப் பழிவாங்க நினைக்கும் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் அது நிச்சயம் ஒரு அச்சத்தைக் கொடுக்கும். மேலும் திருமணம் செய்தவுடன் சட்டப்படி பதிவுசெய்துவிடுங்கள். வீட்டில் சொல்லிவிட்டுத் திருமணம் செய்யலாம், பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்து முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். நிச்சயம் சதி செய்து உங்கள் காதலை முடித்து வைத்துவிடுவார்கள். ஒரு விடயத்தை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் பெற்றோர்கள் வேறு தலைமுறை, நீங்கள் வேறு தலைமுறை. அவர்கள் சனாதன தர்மத்தில் ஊறிப்போனவர்கள். நீங்கள் அதை ஒரு பொருட்டாக மதிக்காதவர்கள். எனவே அவர்கள் எப்பாடுபட்டாவது உங்கள் காதலை ஒழித்துக் கட்டப் பார்ப்பார்கள். எனவே நீங்கள் தான் உசாராக இருந்து உங்களையும், உங்கள் காதலையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். முற்போக்கு அமைப்புகளோடு இருந்து பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள். அது ஒன்றுதான் சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு தற்போதைக்கு உள்ள ஒரே வழி.

- செ.கார்கி

Pin It