எதுவும் பேசாமலாவது இருந்திருக்கலாம், பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை! நாங்கள் ஒரு ரூபாய் கூடக் கொடுக்கப் போவதில்லை என்று அவர் சொன்ன அந்தச் சொற்கள், இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு பெரிய கேலிக்கூத்தாக ஆகும் என்று யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள்!

நான்கு கோடி ரூபாய் நயினார் நாகேந்திரன், இப்போது வாய் திறந்து இருக்கிறார். பணத்தைக் கொண்டு வந்த அவர்கள் எனக்கு மிகவும் வேண்டியவர்கள் தான். ஆனால் அந்தப் பணம் என்னுடையதில்லை என்று சொல்லி இருக்கிறார். ஒரு திரைப்படத்தில், மாப்பிள்ளை இவர்தான் - ஆனால் சட்டை இவருடையதில்லை என்பதாக ஒரு நகைச்சுவைக் காட்சி வரும். அதை மிஞ்சி விட்டது நயினாரின் கூற்று!

மோடி ஆட்சி மாறிய பிறகு, மாப்பிள்ளையும் இவர்தான், சட்டையும் இவருடையது தான் என்பது தெளிவாக, அப்போது மாப்பிள்ளை மாமியார் வீட்டுக்குப் போய் வர வேண்டி இருக்கும்!

சென்னையில், மயிலாப்பூர் இந்து சாசுவத நிதியில் 525 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ஏடுகள் சொல்கின்றன. அந்த நிறுவனத்தில் பணத்தைப் போட்ட பொதுமக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். ஆனால் அந்த நிறுவனத்தின் தலைவர், தேவநாதன்தான் சிவகங்கை பாஜக வேட்பாளர்!bjap thirumangalam posterஊழல் என்றால் என்ன என்றே தெரியாத பாஜகவின் லட்சணம் இது!

அரசல் புரசலாகப் பேசப்பட்ட செய்திகள் எல்லாம், இன்று விருதுநகர்த் தொகுதியில் வெட்ட வெளிச்சமாய் நடுத்தெருவிற்கே வந்து விட்டன! பூத் ஏஜென்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட 30 லட்சம் ரூபாயை, மாவட்ட நிர்வாகிகள் சுருட்டி விட்டனர் என்னும் புகாரை அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களே சுவரொட்டிகளாக அடித்து, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதி முழுவதும் ஒட்டி இருக்கிறார்கள்.

இப்படிப் பொது பணத்தைப் பங்கு பிரிக்கும் உத்தமர்கள்தான் பாஜகவில் இருந்து கொண்டு, ஊழல் - மோசடி பற்றி எல்லாம் பேசுகிறார்கள்.

சத்தியவான்களின் யோக்கியதை, இப்போது சந்தி சிரிக்கும் நிலைக்கு உள்ளாகி விட்டது!

- சுப.வீரபாண்டியன்

Pin It