காதல்

இந்து மதத்திற்கு எதிரானது

இந்துமதக் கோட்பாட்டிற்கு எதிரானது

இந்துமதக் கலாசாரத்திற்கு எதிரானது

காதல் ஓர் ஒழுக்கக் கேடான விசயம்

 இந்துத்துவவாதிகளின் கூக்குரல்கள் இவை. காதலை ஒழித்துவிட வேண்டும் என்று பிறப்பெடுத்துத் திரிகின்ற இந்தப் புண்ணியவான்களுக்குக் காதலைப் பற்றியும் தெரியாது, கலாசாரம் பற்றியும் தெரியாது.

எளிய சொற்கள், சந்தங்களினால் பாடல் எழுதும் ஆற்றல் பெற்றிருந்த பாரதியார், ஓர் இந்துத்துவவாதியாகவும் இருந்தார் என்பதற்கு, அவர் எழுதிய பகவத் கீதை விளக்கம் சான்றாக நிற்கிறது.

ஆனால் அவரே சொல்கிறார், "காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல்". அவருக்குத் தெரியாதா காதல் இந்து மதக் கோட்பாடு, கலாசாரத்திற்கு எதிரானது என்று. நாடகத்திலும் கதைகளிலும் வரும் காதலைப் போற்றுகின்றவர்கள் தம் வீட்டில் காதல் என்றால் எதிர்க்கிறார்களே என்று ஆதங்கப் பட்டவர்தானே பாரதியார் !

இதை இந்துத்துவவாதிகள் ஏற்றுக்கொள்கி றார்களா, இல்லையா?

இந்துத்துவ கலாசாரம் பற்றிப் பேசுகின்றவர்களின் முதல் வேதநூல் ரிக்வேதம். அதில் 10ஆம் மண்டலத்தில் (7-10-65) ஒரு சுவையான கதை சொல்லப்பட்டு இருக்கிறது.

புரூரவா என்று ஒரு மன்னன். இவன் ஓர் உல்லாசப் பிரியன். அவன் ஊர்வசி என்ற அப்சரசைப் பார்க்கிறான். அவளும் பார்க்கிறாள். இவருவரும் காதல் கொள்கிறார்கள் - காதலிக்கி றார்கள். புரூரவனும் - ஊர்வசியும் உண்மையில் அன்றைய சப்த சிந்துவில் வாழ்ந்த மனிதர்களே ஒழிய அவர்கள் தேவர்கள் இல்லை. ராகுல சாங்கி ருத்தியாயன் சொற்களில் சொன்னால் அந்தக் காதல் "கிளுகிளுப்பூட்டக் கூடியதாக" இருந்துள்ளது. புரூரவன் ஊர்வசியின் காதல் பேச்சு ரிக்வேதத்தின் இனிமையான ஒரு தொகுப்பாக "ரிசா" (செய்யுள்) வாக இருப்பதை ராகுல சாங்கிருத்தியாயன் சுட்டிக் காட்டுவது இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று.

புரூரவன்-ஊர்வசியின் காதலின் தாக்கம் இன்றும்கூட பஞ்சாப் "ஹீர்-ராஞ்சா',"சோஹனி -மஹிவால்' போன்ற காதல் கதைகள், வடிவங்கள் வழக்கத்தில் இருக்கின்றன.

இங்கே புரூரவன்-ஊர்வசி என்ற மனிதர்களின் காதல் தெய்வீகமாக ஆக்கப்பட்டு, ஊர்வசியை தெய்வீகப் பிறவியாகவே ஆக்கிவிட்டார்கள் என்றால், காதல் தெய்வீகமானது என்பதுதானே இந்து கோட்பாடு.

"கிருஷ்ண பரமாத்வா"வைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அவன் ஆடிய காதல் களியாட்டங்களைக் "கோபியர் கொஞ்சும் ரமணா" என்றல்லவா இந்துக்கள் பாடிக்கொண்டிருக் கிறார்கள். இங்கே காதல், இந்துவின் கலாசாரமாக அல்லவா தோற்றம் பெறுகிறது.

இப்படி வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் காதல், புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் காதல், ஆரியக் கவிஞர் பாடியிருக்கும் காதல் இவைகளை எல்லாம் மறைத்துவிட்டு, காதல் இந்து கலாச்சாரத்திற்கு எதிரானது என்று இந்துத்துவ வாதிகள் சொல்லிக்கொண்டு இருக்கிறார் கள் என்றால், அங்கே நமக்கு ஐயம் ஏற்படுகிறது.

அதற்கான விளக்கம் ஒன்றும் மறைவானது இல்லை. பார்ப்பனிய வர்ணாசிரமத்தைப் பாதுகாக் கவும், அதை நிலைபெறச் செய்யவும் வேண்டும் என்பதற்காகத்தான் காதலை அவர்கள்  முழுமூச்சாக எதிர்க்கிறார்கள்.

ஆரியர்கள் தொடக்க காலம் முதலே தம் இனத்தில் கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாகச் செயல்படுபவர்கள். அதனால்தான் அவர்கள் அகமணமுறையை நடத்திப் புறமண முறையை எதிர்த்து வருகிறார்கள்.

நான்கு வருணங்களைச் சொல்லும் ஆரியத்தின் சட்டமான மனு ஸ்மிருதி, இதில் பார்ப்பனர் கலப்பை மட்டுமல்ல, பிற மூன்று வருண சாதிகளும் ஒன்றுடன் ஒன்று கலப்பாகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறது.

ஆரியத்தைப் பொறுத்தவரை சத்ரியர், வைசியர், சூத்திரர் இவர்கள் மூவருமே சூத்திரர்கள் தான். சூத்திரர்கள் ஒன்றுபட்டுவிட்டால் ஆரியத்தின் ஆதிக்கம் சிதைந்துவிடும் என்பதனால்தான் இந்தப் பிரிவினையை சூத்திரர்களிடமே ஆரியமும் செய்துவிட்டது. அவர்ணர்கள் என்று சூத்திரர்களில் ஒருபிரிவை ஏற்படுத்தி, அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கிவிட்டார்கள்.

நான்கு வருணங்கள் சாதிகளாகப் பலவாய்ப் பிரிந்து பலம் குன்றியது. இப்பிரித்தாளும் சூழ்ச்சியினால் சாதிகள் குலங்கள் ஆக்கப்பட்டு, சாதிகளின் மேல் மதம் கட்டமைக்கப்பட்டு, மதத்தின் மேல் கடவுளைக் காட்டிப் பார்ப்பனியம் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டது. இந்த ஆதிக்கத்தின் மறுபெயர்தான் இந்து கலாசாரம், இந்து கோட்பாடு, இந்து மதம் !

காதல் என்றால் என்ன? அதன் வலிமைதான் என்ன?

சொல்லிக்கொண்டு இருபாலருக்கிடையே வருதவல்ல காதல். உள்ளம் - உடல் சார்ந்து இயல்பாக ஏற்படும் பிணைப்பே காதல். அதனால் தான் காதலை "இயற்கைப் புணர்ச்சி" என்கிறார் தொல்காப்பியர். இயற்கை செயற்கையை வென்றுவிடும். இயல்பான காதல், செயற்கையாய் உருவாக்கப்பட்ட வர்ணக் கோட்பாடுகளை வென்றுவிடும்.

சாதி பார்த்து காதல் தோன்றாது. சாதிகளை உடைத்துக் கொண்டு காதல் வெளிக்கிளம்பும்.

தீண்டாமையைக் கண்டு திகைத்து நிற்காது காதல். தீண்டாமையை நொறுக்கி வீசிவிட்டுக் காதல் சிலிர்த்து எழும்.

மதங்களின் தடையைக் கண்டு மயங்காது காதல். மதங்களைத் தாண்டி இணையும் வல்லமை காதலுக்கு உண்டு.

பார்ப்பனியச் சாஸ்திரச் சடங்குகளை வீசிவிட்டுப் பதிவுத் திருமணங்களில் வாழ்வை அமைக்கும் புதிய தலைமுறையினர் இன்று பெருகி விட்டார்கள்.

அம்மியை மிதித்து, அருந்ததியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆரியத் திருமணங்களை அப்புறப் படுத்தும் வேலையைக் காதல் செய்து கொண்டு இருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், காதல் ஒரு சமூகப் புரட்சியாக உருவெடுத்து, ஒரு சமத்துவச் சமூகத் திற்கு வழி சமைத்துக் கொண்டு இருக்கிறது. சமநிலைச் சமூக அமைப்பு, பார்ப்பனியத்திற்கு எதிரானது. அவர்களின் சமூக ஆதிக்க அதிகாரத்திற்கு அது சிதைவை ஏற்படுத்தும்.

அதனால்தான் அவர்களின் வேத, இதிகாச, புராணக் கதைகளில் சொல்லப்பட்டு இருக்கும் காதல் கதைகளை மறைத்துக் கொண்டு காதலை இழிவு கலாசாரமாகப் பேசுகிறார்கள்.

காதல் எந்த ஒரு சாதிக்கோ, மதத்துக்கோ, நாட்டுக்கோ சொந்தமானதன்று. உலக மாந்தர்கள் அனைவருக்கும் பொதுவானது, இனிமையானது காதல். அதனால்தான் உலக அளவில், ஆண்டு தோறும் பிப்ரவரி 14ஆம் நாள் "காதலர் தினம்" உருவானது.

ஒவ்வொரு காதல் நாளிலும், உலக மாந்தர்கள் காதலைப் பரிமாறிக் கொண்டு இருக்கும் இனிய நாளில், இந்தியாவில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பிற அமைப்புகள் காதலர்களைப் பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றன.

காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று, காதலர்களைக் கண்டால் உடனே தாலிகட்டச் சொல்வதும், கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதும், காதலர்களை அடித்து, உதைத்து, விரட்டுவதுமான மனித உரிமை மீறல்கள் அத்து மீறி நடத்தப்படுகின்றன. இதற்கு இந்துமதம், கலாசாரம், கட்டமைப்பு என்ற சொற்கள் திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.

இவர்கள் மனித நேயம் உள்ளவர்களாக இருந்தால், மனிதனை மனிதன் மதிக்கும் மாண்பு இவர்களிடம் இருக்குமானால், இவர்கள் காதலை வாழ்த்த வேண்டும். காதலர்களை வாழ்த்த வேண்டும். காதல் திருமணங்களை வாழ்த்த வேண்டும்.

இந்த மனித நேயத்தைப் பார்ப்பனியத்திடம், இந்துத்துவவாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. அதுதானே உண்மை !

அதனால் என்ன? நாம் காதலை வரவேற்போம்! காதலர்களை வாழ்த்துவோம்! காதல் திருமணங்களைப் பரவலாக்குவோம்!

தந்தை பெரியாரும், பேரறிஞர் அம்பேத்கரும் சொன்னதுபோல காதல் சாதியை உடைக்கும், மதத்தை உடைக்கும், சமத்துவத்தை உருவாக்க வழியைக் காட்டும்!

Pin It