காதல் வாழ்வின் அடிப்படை. காதலே நாகரீக அறுவடை. அது இல்லாத உடலில் உத்வேகம் ஏது. அது இல்லாத வழியில் மலர்வனம் ஏது.

காதல் கண்ணுக்கெட்டும் தூரம் வரை நீலவானம். அது இல்லாத கடலில் அலை ஏது. காதல் ஏங்கித் தவிக்கும் தொலை தூரம். அது இல்லாத மடலில் இனிப்பேது. காதல் ஒரு கனி மரம். அதில் இல்லாத உயிர்கள் பிறகேது.

உடலும் உயிரும் ஈடு கொடுத்து வாழ்ந்து விட காதலே ஆயுள் காக்கும் அளவுகோல். காதலின் வழியே நிகழ்வதெல்லாம் ஒரு பூங்கொத்து அசைவு. தென்றலினூடாக ஊடுபாவும் சாரலில் சீவி சினுக்கெடுக்கும் அதன் மொத்த வடிவங்கள். யுத்த களத்திலும் காதலே நம்மை காக்கும் ஆயுதம்.lovers 466தோள் கொடுக்கும் தோழமை. தோகை கொடுக்கும் காதல். இதயம் முழுக்க சுவாசம் பூக்கும் காதலின் வலிமை... காற்றென்றால் பூக்கள் தூவும். காடென்றால் வானம் ஏறும். பாறையில் நீர் பூக்க கற்றதெல்லாம் காதலின் கண் பட்டுதானே. கடற்கரைப் பாத சுவடுகளில் கனியாகப் பதிவதெல்லாம் காதலின்றி ஏது. வந்து போகும் அலைகளில் நுரை கவனி. காதல் தான். வந்த பிறகு மழை கவனி காதல் தான். காற்றுப் புரவிக்கு காதல் பவனி. உலகத் துறவிக்கும் காதலே தனிமை.

உன்னிலிருந்து உனைப் பிரிக்கும் பூ அன்னம் இந்தக் காதல். பூவிலிருந்து புன்னகை பிரிக்கும் தேன் கிண்ணம் இந்தக் காதல். முது நெல்லியின் மகத்துவம். மூங்கில் காட்டின் தனித்துவம். நதி என்றால் மெது வளைவு. பதி என்றால் அடர் நுழைவு. தாங்கிப்பிடிக்கும் கரங்களில் கவனி... காதல் விரல்கள். மூச்சு வாங்க அணைக்கும் பொன்னுடலில் பார்... காதல் சூடு. முத்தமிடும் யுத்தமிடும் சத்தமிடும் கத்தும் குயிலும். காதல் கண்ணில் காண் பற்றும் வெயிலும்.

காதலில் நிலவுக்கு தூரம் குறைவு. நிலவில் காதலுக்கு பாரம் அதிகம். மர உச்சி மதிய வானம் காதல் என்றால் அடி மரத்து அபிநயமும் காதலே.

காதல் கனவுகளை வழிநடத்தும் ஒற்றையடி. கானக மரச்சரிவுகளில் அது காக்கா குருவி பறவை பட்சியாக நாட்களை விரிக்கும். வானத்தை முத்தமிட கற்றுத் தரும் காதல்... மேகத்தை தூது விடவும் பழக்கும். விடிந்த பின்னும் தூங்க செய்யும் மெய்ம் மலர்தல் காதல் எனினும் உழைக்க நினைப்பவனுக்கு கிரியா ஊக்கி காதல். உலர்ந்த பாறையில் முட்டி மோதி வெளியேறும் ஒரு செடி அது. உன்னத வழி பாடுகளில் ஒரு சிறு இருளும் அது.

மாய வலையில் மாட்டாத மீன்களின் செதில்கள் காதல். தாகத்தில் ஓடையென உருளும் நீர் உளறல் காதல். இரு பக்க மரங்களின் நடுவே தார் பூசிய கானலும் தான் காதல்.

காதல் கம்பீரம் கற்றுத்தரும். சுயத்தின் வழியே தன்னை உணர செய்யும் ஓய்வில்லா சிறகு. வாழ்ந்த சாட்சி ஒருவருக்கு காதலின்றி வேறேது. காதலிக்காதவர் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவரைக் காற்றும் ஒதுக்கும். காதலிக்கப்படுகையில் வரும் நம்பிக்கை அது சாவதற்கும் துணியும். சாவையும் எதிர்க்கும். காதலின் வழியே உருளுவதெல்லாம் வேறு ஓர் உலகம். காதலில் இருப்போரே அதற்கு சீனி சக்கரம். மலரும் ஒவ்வொரு பூவிலும் காதல் உண்டு. உதிரும் ஒவ்வொரு இலையிலும் காதல் உண்டு. தேடும் ஒவ்வொரு கண்களிலும் காதல் உண்டு. காத்திருக்க கற்றவருக்கு காதல் தானே ஆசானாக இருந்திருக்க முடியும்.

ஒரு நாளும் இடைவெளி இல்லாத காதலை அள்ளி அள்ளி தரும் அன்பர்களே இந்த வாழ்வின் அஸ்திவாரம். வெறுப்புக்கு கொல்லி வைக்க... வேண்டி விரும்பி ஏற்றுக் கொள்ள காதலே சிறந்த வழி. சிறு பிள்ளையைப் போல காதலிக்க வேண்டும். சித்தனான பின்னும் காதல் வேண்டும்.

எந்தச் சூழலிலும் காதலிப்பதை விட்டு விடவே கூடாது. நாம் வாழ்வதை மிக நேர்த்தியாக நமக்கு காட்டும் காலக் கண்ணாடி காதல். காலம் முழுக்க காதலில் இருக்கிறவன் சொல்கிறேன். காதலே நிம்மதி.

- கவிஜி

Pin It