என் வாழகத்துக்கு வந்தடையும்

வழிகளிலெல்லாம் நீயே

ஓடிவருகிறாய்

என் முகம் முழுதும்

ஆனந்தம் கொப்பளிக்க

உனை அள்ளிக்கொள்ளவென

இரு கரம் நீட்டுகிறேன்

வந்தவள் மாயமாகி

என் மனதுக்குள்

ஒளிந்துகொள்கிறாய்

*

ஏழு வண்ணங்களும்

என் கண்களில் தேங்கி நிற்கும்படி

நேற்றொரு வானவில்லையுன்

கனவில் கண்டாயோ

என் பார்வையில் மின்னட்டுமென

நட்சத்திரங்கள் முளைக்கும்படி

ஆகாயவெளியில் போய்

தாரகை விதைகளை

நட்டு வைத்தாயோ

எதுவானாலும்

சொல்லிவிட்டுப்போ

உன் மௌனம் கிளப்பும்

பேரோசையால்

பாதி இரவில் தினமென்

தூக்கம் பறி போனதடி

- எம்.ரிஷான் ஷெரீப்

 

Pin It