1.

பிரதான வீதிகளைக் கொண்டதான அது

அரசர்களின் நகரம்

அழுக்குபடியாத அதன் தூய்மை

அங்கவஸ்திரம் போல் இருக்கிறது

விதவிதமான ரதங்கள்

வண்ணவண்ணமாக தெருக்கடல்களில்

இடைவிடாமல் செல்வது

நம்மை அண்டவொண்ணாமல்லே செய்கிறது

கூட்டமாக வாழும் புறாக்கள்கூட

அரசர்களின் வருகையின்மீதே தங்கள் கண்களை

பதித்திருக்கின்றன. அருகினில் ஒருவேளை

செல்வோமேயெனின் அவை விலகி செட்டைகளை

அடித்துக்கொண்டு பறக்கின்றன

நெடிய தூரங்களில் மட்டுமல்ல

அருகினில் இருக்கும் உயர்மாளிகைகளும்தான்

அச்சமூட்டுகின்றன

அரசர்கள் மற்றும் அரசாங்கத்தினர்

வருகையின்போதே பூக்களை சொரிகின்றன அவ்வுயர்ந்த

மரங்கள் மீதி நேரங்களில் நிழலையும் சாய்ப்பதில்லை

சந்தடி மிகுந்தவை அனைத்து தெருக்களும்

அது அரச சந்தடி

அந்நகரத்தின் ஒரு தெருவில் மட்டும்

மக்களின் கூக்குரல் கேட்கிறது

அரசசபை இருக்கும் இடத்திற்கு வெகுதொலைவு

அது என்பதால் ஒற்றர்கள் மட்டுமே எப்போதாவது வந்து

அவர்களுக்கு தோதானதாக தேர்ந்தெடுத்துச் செல்கின்றனர்

முழக்கங்களை.

மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு மீண்டபின்

மிகப்பெருமையாக பேசிக்கொள்கின்றனர்

தலைநகரில் அரசர்களுக்கு எதிராக

பேசியதாக.

2.

பாலங்களைக் கடக்கும்போதெல்லாம்

என்ன தோன்றுகின்றது என்று வழக்கம்போல் கேட்ட

கிளாடிக்கு பதில் ஒன்றும் நான் சொல்லவில்லை

அவளே சொன்னாள்

சமவெளிகளில் கைகோர்த்து நடந்த

ரேச்சலும் அவளின் மரணமும் என்று

கிளாடிக்கு எப்போதோ தெரியும் நானும் அப்போதே

இறந்துவிட்டது.

என்மேல் வைத்திருந்த தன் வலது கையினை

எடுத்துக்கொண்டாள் கிளாடி.

3.

அந்த பெரிய அங்காடி வளாகத்தில்தான்

அவளை முதன்முதலில் நான் சந்தித்தேன்

பால்யத்தின் புன்சிரிப்பும் பிரியமும்

அவளிடம் கொட்டிக்கிடந்தன

அவளறியாமலேயே அவளுள் நான்

பயணம் செய்தேன்

அந்தப் பயணத்தின் துணையாய்

அவளே அனுப்பியிருந்த அவளின்

அன்பை ஸ்பரிசிக்க அழைக்கிறேன் அவளை

கூக்குரலெடுத்து

நெடுஞ்சாலையின் ஓரத்தில் துளிர்த்து இருந்த

நிழலில் யாரோ நின்றிருக்க

மாயமாகிறாள் அவள்

உங்களுக்கு நினைவிருகின்றதா

எனக்கிருகின்றது அவள் பெயர் கிளாடி.

4.

யாருமேயற்ற பெருவெளி யொன்றில்

புறப்படுகிறது எங்கள் பேருந்து

யுத்தங்களில் தொடர்ந்து வேட்டையாடுகிறான்

அப்பாவிகளின் ரத்தங்களை தோளின் துண்டாக்கிக் கொண்ட

ஆட்சியாளன்

அவன் வீசிய எரியும் குண்டொன்றில்

பிஞ்சுக் குழந்தையின் விரல் தகர்ந்து

விழுகிறது பாலுறைந்து விறைத்துப் போன

தாயின் மார்பின்மீது.

செய்திகளாகிப்போன படுகொலைகள்

பேச்சாகி அலைகின்றன பேருந்தில்

மொழி தெரியாத ஓட்டுனன்

பேருந்தை செலுத்துகிறான்

களியாட்டங்கள் நிறைந்த

அவன் படுகொலைகளைக் கணக்கில் கொண்டு.

 

5.

போராட்டங்கள் முடிந்து

அரச நகரத்தின் கடைவீதிக்குப் போனோம்

கடைவீதியின் பெருங்கூச்சல்

எங்கள் முழக்கத்தைவிட சப்தம் மிகைந்தது

தங்கள் பைகளை நிரப்ப

பேரம் பேசிக்கொண்டிருந்தோம்

புரியாத அந்நகரத்தின் மொழியில்.

- யாழன் ஆதி

 

Pin It