வாழ்ந்து மறைந்த தலைவர்கள் குறித்து விழாக் காலங்களின் போது மட்டும் அவசர அவசரமாக நினைவு கூரப்படுவதும் விவாதிக்கப்படுவதும், அதே வேகத்தில் கவனமாக மறந்துவிடுவதும் அறிவுலகின் வாடிக்கை. இந்த நடைமுறையை மீறி, தான் சொல்லிச் சென்ற கருத்துக்களையட்டி தொடர்ந்து அதிர்வலைகளை எழுப்பிக்கொண்டிருக்கும் மிகச்சிலரில் பெரியாரும் ஒருவர்.

அறிவியலின் துணைகொண்டு காரல் மார்க்ஸ் செய்த சமுக மற்றும் பொருளாதார பகுப்பாய்வு முடிவுகள் ஒவ்வொரு தசாப்தத்திலும் முகிழ்த்தெழும்பும் வெவ்வேறு இசங்களினால் விரிவான பதவுரை மற்றும் பொழிப்புரைகளால் பொருள்விளக்கம் கொள்ளப்படுகிறது. மார்க்ஸ் ஆய்வுகளி னூடாக கண்டறிந்து கோட்பாட்டு வடிவத்தில் நிரூபணம் செய்ததையே வாழ்வியல் அனுபவங்களிலிருந்து உணரப்பெற்று கருத்துப் பகிர்வாக பெரியார் முன்வைத்துச் சென்றிருப்பதால் அதன் மீதான மறுவாசிப்புகளும் முக்கியத்துவம் கொண்டவையே.

நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ காலகட்டங்களில் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து தன்னை மிக வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டுள்ள பன்னாட்டுப் பெருமுதலாளித்துவத்தின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து நொறுக்க வேண்டுமெனில், பொருளாதார அடிப்படையிலான ஆட்சியதிகாரங்களிடமிருந்து தொழிலாளிகளை மீட்டு சமதர்மத்தை நிலைநாட்டும் மார்க்சிய கொள்கைத் திட்டங்களை நிகழ்காலத்தின் சூழல்களுக் கேற்றவாறு கூர்தீட்ட வேண்டியிருக்கிறது; என்றபோதும், முதலாளித்துவத்தை / நிலப்பிரபுத்துவத்தை அழித்தொழித்து சமதர்ம சமுதாயத்தைக் கட்டமைத்து அதை தக்க வைத்துக்கொள்ள இயலாமல் போன நாடுகளாலும் உலகமயம் தவிர்க்கவியலாத தீங்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாடு பிடிக்கும் வெறியில் அடுத்தடுத்து இரணடு உலகப் போர்களை நடத்தி பொருளாதார அளவில் நலிந்துபோன சில நாடுகள், தமக்குள் கருத்தொருமித்து பன்னாட்டு வணிக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தி உலக நாடுகள் அனைத்தையும் நூதனமாக சுரண்டும் முடிவுக்கு வந்து அதன் வெற்றிக்கனியை இப்போது சுவைத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பெரியாரை எங்ஙனம் கைகொள்வது என்றெண்ணுவது மிக்க பயனுள்ளதாய் இருக்கும்.

1944 சேலம் மாநாட்டில் கூலி உயர்வுக்குப் பதிலாக இலாபத்திலும் நிர்வாகத்திலும் தொழிலாளர்களுக்குப் பங்கு வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார் பெரியார். ஆடம் ஸ்மித்தையும் டேவிட் ரிக்கார்டோவையும் அடிக்கடி மேற்கோள் காட்ட இயலாத ஈரோடு ராமசாமி கூலிஉயர்வு என்பது தற்காலிகத் தீர்வு மட்டுமே என்று பேசியதைக் கேட்ட கற்றறிவாளர்கள் கொண்ட கோபமும் அடைந்த எரிச்சலும் இயல்பான விஷயங்கள்தான்.

தொழிற்புரட்சியின் போதும் அதையட்டிப் பின்வந்த காலகட்டத்திலும் உபரிமதிப்பு முழுவதும் முதலீட்டாளர்களையே சென்றடைந்து, உழைப்பின் பலன் தொழிலாளிகளுக்கு மறுக்கப்பட்டது. அப்போது கூலி உயர்வு கேட்டுப் போராடுவதும் அதையொட்டி தொழிலாளர் அமைப்பை ஒருங்கிணைப்பதும் மார்க்சியத்தை முன்வைத்து இயங்கிய அமைப்புகளுக்கு போதுமானதாய் இருந்திருக்கலாம். ஆனால் பெரும் முதலீடுகள் அனைத்தும் பங்குமூலதனமாக மாற்றப்பட்டு, அதன் பயனில் கொஞ்சம் பங்குதாரர்களுக்கும் அளிப்பதற்குத் தயாராகிவிட்ட இச்சூழலில் தொழிலாளர்கள் தங்கள் உழைப்புக்கு மறுபயனாகப் பெறும் ஊதியத்தின் ஒரு பகுதியை மூலதனத்தில் தம் பங்காக சேர்க்கவும் அதிலிருந்து பயனடையவும் பலமடையவும் உரிமைகோர வேண்டும் என்ற யோசனை மட்டுமே மிகச்சரியானது. ஆனால் கூலி உயர்வுப் போராட்டத்தின் போது கொஞ்சமேனும் இறங்கி வரும் முதலாளிகள் மூலதனத்தில் பங்குகள் வழங்க அவ்வளவு எளிதாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஏனெனில், பெரியாரின் கோரிக்கைகள் அனைத்தும் நிரந்தரத்தீர்வை எதிர்நோக்கியவை. எனவே நிறைவேறும் காலம் தாமதிக்கவே செய்யும். நடப்பிலிருக்கும் பெருமுதலாளித்துவம் தன் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கு எந்தவிதமான உத்தரவாதத்தையும் அளிக்காமல் எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து வெளியேற்றும் நிலையில் ஒப்பந்தக் கூலிகளாகவே தொடர்வதற்கு முனைகிறது. உருவாகிவரும் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதாக சொல்லப்படும் கண்துடைப்புச் சட்டங்கள்கூட கண்டுகொள்ளப் படப்போவதில்லை. ஆனால் அதே வேளையில் முதலாளித்துவம் என்பது எந்தவொரு தனிநபருக்கும் முற்றுமுழுதாக உரிமையாகிவிடுவதில்லை. அது எந்நேரத்திலும் அவரைவிட்டு நீங்கி, பிறிதொருவர் அந்நிலைக்கு வரலாம். இந்த உறுதியற்ற நிலையை எதிர் கொள்ளவே முதலாளித்துவம் பெருமுதலாளித்துவமாக உருமாற்றம் கொள்கிறது.அதை துடைத்தழித்து சமதர்மத்தை நிர்மாணிக்கும் கூடுதல் சுமையை தோள்மீது ஏற்றிக் கொள்ளாமல் பங்கு மூலதனத்தில் உழைப்பின் பங்கை உறுதிசெய்வதே காலத்திற்கேற்ற மாற்று வழிமுறை.

பெருமுதலாளித்துவத்தின் காரணமாக பெரிதும் பாதிக்கப்படும் மூன்றாம் உலக நாடுகளின் முற்போக்குச் சக்திகள் பன்னாட்டு வியாபார நிறுவனங்கள் உள்ளே நுழைவதைக் கடுமையாக கண்டித்து வருகின்றன. தொழிலாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் கதர்த்துணி கட்டச் சொல்வது நாணயமற்றது என்ற பெரியாரின் விமர்சனம் இதற்கும் பொருந்தும். வளர்ந்த நாடுகள் தமது அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கு உலகளாவிய காப்புரிமையை கொண்டாடிவரும் சூழலில், மூன்றாம் உலக நாடுகள் இன்னும் தமது பழைய தொழில் நுட்ப முறையிலிருந்து கிஞ்சித்தும் மாறவில்லை. காரணம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறைக்காக பெரும் தொகையை செலவழிக்க முடியாது என்பது மட்டும்தான். இதையும் பெரியார் அறியாதவரல்ல. சித்தையன் கோட்டையில் 22.6.1931 அன்று அவர் ஆற்றிய சொற்பொழிவில் (குடி அரசு 28.6.1931) மேல்நாட்டுக்காரர்கள் தினம் தினம் அறிவை விருத்தி செய்வதாலேயே பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். சரி நம்மால் ஏன் அவ்வளவு பணம் செலவழிக்க முடியவில்லை? அதற்கும் அவரிடமே பதிலிருக்கிறது...

“நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற்சாலைகள், இயந்திர சாலைகள் முதலியவை ஏற்பாடு செய்வதற்கும் மார்க்கமில்லாமல் பொருட்களை எல்லாம் சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்து கொள்வதோடு கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவை செய்துவைத்தல், மற்றும் உற்சவம், பூசை ஆகியவற்றிற்கும் ‘பண்டு’, பூமிகள் முதலிய சொத்துக்கள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்கள் பெரும் பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன. ஆகவே இந்த மாதிரியாகவெல்லாம், எல்லாப் பொருள்களும் வீணாகிக் கொண்டிருக்கையில் இந்த நாடு எந்தக் காலத்தில்தான் எந்த வகையில்தான் பொருளாதாரத்தில் சீர் அடையமுடியும்?’’

(களக்காட்டில் 27.12.1930ல் சொற்பொழிவு, குடி அரசு 18.1.1931).

மதநம்பிக்கையின் காரணமாக வழிபாட்டிற்கு செலவழிக்கப்படும் தொகையையும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறைக்கு வேண்டிய தொகையையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும். கடவுள் மறுப்புக் கொள்கையை அழுத்தி அழுத்தி சொல்லவேண்டிய அவசியம் இப்போது புரிகிறதா?

Pin It