vizhi_logo

பலப்பம் பிடிக்கும்
விரலிடுக்கில்
எச்சில் கோப்பை!

ஏடு செதுக்கும் சிற்பி
விரல் நகங்களில்
பரம்பரைச் சோம்பல்!

சீருடை அழகு
உடலில்
கரை சுமக்கும் கந்தல்!

எதிர்காலப் பிரபஞ்ச
வழிகாட்டி தலையில்
மண்சட்டி!

கலையைக் கற்கும் பருவம்
கவலையைக் கற்றவாறு!

சடுகுடு ஆடும் நரம்புகள்
சம்பளத்துக்காகப் புடைத்தன!

தொழத் தோன்றும்
பாதமென்மையில்
புழுதிகள் முலாம்பூசி!

அச்சு உடைய
குடும்பப் பொதி சுமந்து!
காரணிகளைக் கணக்கிலறியாமல்
காரணங்களைக் கணக்கிட்டறிந்து!

தளிர் எலும்புகள்
பூட்டிச் சுற்றும்
இயந்திரமாய்!

செங்கல் சூளை விரகாய்
கற்களைச் சுடக்
கை விரல்களைத் தீ மூட்டி!

அடி வாழையாய்க்
குலை தள்ளவேண்டிய குலம்
அடி மாடாய்
அவமானம் சுமந்து!
Pin It

உலக வரைப்படத்தில் ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடுதான் அல்ஜீரியா. கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த காட்டு நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆதி பழங்குடியினர் மட்டுமே தங்களுக்கான வாழ்விடமாக புழங்கி வந்தனர். காலமெனும் மேகங்கள் அந்த காட்டுப்பகுதியின் மேல் மெல்ல கடந்து போக மொராக்கோ துனிஷியா வழியாக வந்த ஆப்பிரிக்கர்களும் ரோமர்களும் காஸ்தானியர்களும் இதர ஐரோப்பியர்களும் இந்த இடத்தைப் பண்படுத்தி நிலங்களாக மாற்றி பண்ணைகளாகவும் வசிக்கத் தகுந்த பூமியாகவும் மாற்றி வந்தனர்.

 இந்நிலையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு அரேபியர்களின் குடியேற்றம் பெரு வாரியாக நிகழ்ந்தது. மக்களில் பலர் இஸ்லாமியர்களாக மாறினர். இதனிடையே பதின்மூன்றாம் நூற்றாண்டில் நாடு பிடிக்கும் ஆசையில் கப்பல்களில் திசைக்கொரு பக்கமாக அலைந்த ஸ்பானியர்கள் மொராக்கோ வழியாக அல்ஜீரியாவுக்குள் நுழைந்தனர். அல்ஜீரியாவை ஆக்ரமித்தனர். அதன் பிறகு துருக்கியைச் சேர்ந்த ஏட்டோமான் வம்சத்தினர் அல்ஜீரியாவை ஸ்பெயினர்களிடமிருந்து கைப்பற்றினர்.

இறுதியாக, 1830ல் பிரெஞ்சுப் படை அல்ஜீரியாவை முழுமையாகத் தன் வசப்படுத்தியது. அப்போது பிரெஞ்சு அரசு ஏற்படுத்திய எல்லைகளின் மூலமாக உருவாக்கப்பட்டதுதான் இன்றைய அல்ஜீரிய அரசு. அது அல்ஜீரியாவை முழுமையாகக் கைப்பற்றியதோடு மட்மில்லாமல் அல்ஜீரிய மக்களின் சொத்துகளையும் கையகப்படுத்தியது.

அல்ஜீரியாவில் முஸ்லிம்களைப் போலவே, யூதர்களும் பெரும்பான்மையினராக இருந்தனர். ஆனால், பிரெஞ்சு அரசாங்கம், தனது குடியேற்ற பிரெஞ்சு மக்களுக்கு மட்டுமே குடியுரிமை கொடுத்தது. இதனால் பிரெஞ்சு குடியுரிமை அதிகாரத்தில் முக்கிய பதவிகளில் பிரெஞ்சு மக்களே பங்கேற்றனர். உடன் ஏகபோக சுகத்தையும் அனுபவித்தனர். இதனால் மண்ணின் மைந்தர்களாக இருந்த அல்ஜீரிய முஸ்லிம்களும் யூத இனத்தவர்களும் பிரான்சு அரசாங்கத்தின் மேல் கடும் கோபம் கொண்டிருந்தனர். கூட்டாக இணைந்து அரசாங்கத்தை எதிர்த்தனர்.

இதனால் 1865ல் பிரான்சை ஆண்ட மன்னன் நெப்போலியன் அல்ஜீரிய மக்களின் இந்த எதிர்ப்பை பலவீனப்படுத்த ஒரு திட்டம் வகுத்தான். அதன்படி யூத மக்களுக்கு மட்டும் வாக்குரிமை அதிகாரத்தை வழங்கினான். இது மண்ணின் பூர்வ குடிகளான அல்ஜீரிய மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது.

காலங்காலமாக இந்த மண்ணில் வாழும் தங்களுக்குக் குடியுரிமை இல்லாமல் குடியேற்றமாக வந்த வேறு இனத்தார் நம்மை அடக்கி ஆள்வதா? மக்களிடம் இந்த கேள்வி குமுறலாக வெடித்தது. அல்ஜீரிய தேசிய அடையாள மீட்பு பணியில் அல்ஜீரிய மக்கள் ஒன்று திரள ஆரம்பித்தனர். படிப்பறிவு மிக்க அல்ஜீரிய மக்கள், இன உணர்வையும் தேசிய இனத்திற்கான தேவையையும் மக்களிடம் வலியுறுத்தி போராட்ட விதையை அல்ஜீரிய மக்களின் மனதிலே ஊன்றினர்.

1930ல் இத்தகைய உணர் வெழுச்சிகள் ஒரு வடிவம் கொண்டன. தேசிய விடுதலை முன்னணி எனும் இயக்கம் அல்ஜீரிய முஸ்லிம்களிடையே உதயமானது. இச்சூழலில்தான் இரண்டாம் உலகப் போர் வந்தது. தொடக்கத்தில் முதல் உலகப் போரைப் போல இரண்டாம் உலகப்போரிலும் பிரெஞ்சு அரசை ஆதரித்தனர். போரின் இடையில் வெற்றி சட்டென ஜெர்மன் நாஜிக்களின் பக்கமாகத் திரும்ப அதுவரை அல்ஜீரிய மக்களிடையே இருந்து வந்த பிரெஞ்சு மக்களின் ஆதரவு குறையத் தொடங்கியது.

அல்ஜீரிய விடுதலைக்கான சுதந்திரக் குரல்கள் பகிரங்கமாக எழ ஆரம்பித்தன. 1943இல் பெர்ஹாத் அப்பாஸ் எனும் முஸ்லிம் தலைவர் 56 அல்ஜீரியத் தேசிய உலகத் தலைவர்களின் கையெழுத்துடன் கூடிய அல்ஜீரிய மக்கள் அறிக்கை ஒன்றைத் தயாரித்து பிரெஞ்சு அரசாங்கத் திடம் சமர்ப்பித்தார். அதில், அல்ஜீரிய முஸ்லிம் மக்களுக்கு அல்ஜீரிய ஆட்சியில், சட்ட வசதிகளில் சம உரிமை அளிக்க கோரி அந்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், பிரெஞ்சு அரசாங்கம் இந்த கோரிக்கைகளை பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டுள்ள சிலருக்கு மட்டும் பிரெஞ்சு குடியுரிமை தருவதாக கூறியது. இது அல்ஜீரியாவில் கொந் தளிப்பை உருவாக்கவே மக்கள் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பை காண்பிக்கத் திரண்டனர்.

மே 8, 1945.

அல்ஜீரிய வீதிகளில், வீட்டுச் சுவர்களில், முதல் முறையாக ரத்தக்கறைகள் படிந்த நாள். அன்று மக்கள் பிரெஞ்சு அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி வீதியில் சென்றனர். பிரெஞ்சு அரசாங்கம் பாதுகாப்புக்காக வீதிகள்தோறும் எண்ணற்ற ராணுவத்தினரை வரிசையாக துப்பாக்கி மற்றும் லத்தியுடன் நிற்க வைத்தது. ஊர்வலத்தில் ஏற்பட்ட சிறிய சலசலப்பு சடுதியில் பெரிய கலவரமாக வெடித்தெழுந்தது. அதற்காகவே காத்திருந்த ராணுவத்தினர் வெறித் தாக்குதலை மக்கள் மீது நடத்தினர். தப்பித்து ஓடிய மக்கள் எல்லாரையும் விரட்டி விரட்டி போலீஸ் அடித்து நொறுக்கியது.

பிரெஞ்சு அரசின் அதிகாரபூர்வ கணக்குப்படி மொத்தம் 1500 முஸ்லிம் மக்கள் இந்த கலவரத்தினால் இறந்ததாக கணக்குக் காட்டப்பட்டது. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை உண்மையில் 6000 முதற்கொண்டு 45000 வரை இருக்கும் என பத்திரிகைச் செய்திகள் கூறின.

இந்த சம்பவம்தான் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கத்தின் மீது நிரந்தர வெறுப்பை உருவாக்கியது. பல மறைமுக இயக்கங்கள் தோன்றின. ஒவ்வொரு அல்ஜீரிய இளைஞனும் பிரெஞ்ச் அரசாங்கத்தை நாட்டிலிருந்து விரட்டியடிப்பது என உறுதியெடுத்துக் கொண்டனர்.

அவ்வப்போது பல எதிர்ப்புகள் ஊர்வலமாக நிகழ்த்தப்பட்டன. அதனை பிரெஞ்ச் அரசாங்கம் தனது வன்முறை நடவடிக்கைகளால் அடக்கி ஒடுக்கியது. இதனிடையே இரண்டாம் உலகப் போர் முழுவதுமாக முடிவடைந்து ஜெர்மனி பிரான்சிடம் முழுமையாக சரணடையவே அதுவரை பயந்திருந்த பிரெஞ்சு அரசு முழு பலத்துடன் அல்ஜீரிய போராளிகளை ஒடுக்க முடிவு செய்தது.

ராணுவத்தினர் இரவு பகலாக மறைமுகப் போராட்டங்களிலிருந்த முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடிக் கொன்றது. கிராமங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 50,000 பேர் பிரெஞ்சு அரசாங்கத்தால் கொல்லப்பட்டதாக யூவ்ஸ் பெனாட் எனும் வரலாற்றறிஞர் குறிப்பிடுகிறார். இதன் பிறகும் நாம் அமைதியாகப் போராடுவது வெற்றியைத் தராது என முடிவெடுத்த அல்ஜீரியா விடுதலை முன்னணியைச் சேர்ந்த மக்கள் இனி முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும் என முடிவு செய்தனர். அனைவரும் கைகளில் ஆயுதங்களுடன் சபதம் மேற் கொண்டனர். போராட்டத்தில் களமிறங்கினர். அதன் ஆரம்ப வேலையாக போராளிகளைத் தேர்ந்தெடுத்தனர். ஆயுதப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போருக்கான தகுந்த சமயத்திற்காக காத்திருந்தனர். நேரமும் வந்தது.

அல்ஜீரிய சுதந்திரப் போர் நவம்பர் 1, 1954

தேசிய விடுதலை முன்னணி அல்ஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்குதலைத் தொடங்கி, தனது போரைத் தொடங்கியது.

பிரெஞ்ச் அரசாங்கத்தின் ராணுவக் கிடங்குகள், காவல் நிலையங்கள், பாதுகாப்பு முகாம்கள் தகவல் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் அரசாங்கக் கட்டடங்கள் ஆகியவை தாக்குதலுக்கு இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. சற்றும் எதிர்பாராத இந்த திட்டமிட்ட தாக்குதலால் பிரெஞ்ச் அரசு அதிர்ந்தது. முன்பே, தேசிய விடுதலை முன்னணியினர் தங்களது படைகள் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர் சங்கங்கள், மருத்துவர்கள், அலுவலர்கள் என பல்வேறு பிரிவுகளில் மக்களிடம் தன்னை வலுப்படுத்திக் கொண்டிருந்தது.

போராட்டக் குழுவின் தலைவர் அகமத் பென் பெலா எகிப்தின் கெய்ரோவிலிருந்து தனது திட்டங்களை துல்லியமாக தீட்டி உடனுக்குடன் தனது கொரில்லா வீரர்களை செயல்பட வைத்துக் கொண்டிருந்தார். அதேபோல் தேசிய விடுதலைப் படையின் மற்றொரு தலைவரான பிரான்ஸ்வா பனான், தேசிய விடுதலைப் படையின் இந்த அதிரடி கொரில்லா தாக்குதல் எந்த வகையில் நியாயமானது என்பதை அறிவார்ந்த ரீதியாக தெளிவாக உணர்ந்து அதற்கான சித்தாந்தங்களை உருவாக்கி உலக அரங்கில் போராட்டத்திற்கு ஒரு மதிப்பீட்டை உருவாக்கித் தந்திருந்தார். போராட்டத்தின் முதல் வேலையாக அல்ஜீரியாவின் கிராமங்களில் பண்ணைகள் மூலமாக ஏகப்பட்ட சொத்துக்களை வளைத்துப் போட்டிருந்த ஐரோப்பியர்களை அவரவர் நாட்டுக்கு விரட்டி அடித்துப் போராளிக் குழுவினர் சொத்துக்களை கைப்பற்றினர். பதிலுக்கு பிரெஞ்ச் அரசாங்கம் போராளிகளை நசுக்க கடும் நடவடிக்கை எடுத்தது.

போராளிகள், கைகளில் கிடைத்தால் அவர்களை பலவிதமாக சித்ரவதைக்குட்படுத்தி பொது மக்களிடம் தங்களது நடவடிக்கைகளின் கொடூரத்தை உணர்த்தி பயமுறுத்தி வந்தனர். போராளியின் வீடுகள் சூறையாடப்பட்டன. போராளிகளின் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதனால், போர் இரண்டு பக்கங்களிலும் அதிக அளவிலான வெறியை மென்மேலும் மூட்டியது. பிரெஞ்சு அரசாங்கத்தின் வன்முறை நடவடிக்கைகள் காரணமாக போராளியின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி தேசிய விடுதலை முன்னணிப் படை மேலும் வலுப்பெற்றதே ஒழிய, பயமேற்படவில்லை.

விடுதலைப் போரையும் போராளிகளையும் எகிப்து உள்ளிட்ட இதர முஸ்லிம் நாடுகளின் அரசுகள் அங்கீகரிக்க தொடங்கியது. எழுத்தாளர்கள் மற்றும் உலகப் புகழ் பெற்ற தத்துவவாதிகளான ஆல்பர்ட் காம்யூ, சார்த்தர் ஆகியோர். பிரான்சிலிருந்து கொண்டு போராளிகளுக்கு ஆதரவாக தத்துவ நிலைப்பாட்டை உலகறிய தங்களது எழுத்துகள் மூலமாக பகிர்ந்துகொண்டனர். ழான் போல் சார்த்தர் ஒரு படி மேலாக சென்று இலக்கியத்திற்காக தனக்களித்த நோபல் பரிசையே போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நிராகரித்து போராட்டத்தை உலகறியச் செய்தார்.

இதன் காரணமாக தேசிய விடுதலைப் படையின் இந்த அல்ஜீரியச் சுதந்திரப் போரானது உலகெங்கும் பெரிய ஆதரவைப் பெற்றது. அல்ஜீரியாவை அல்ஜீரியாவுக்கே விட்டுக் கொடுங்கள் என உலகம் முழுக்க அரசியல் தலைவர்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதில் ஆல்பர்ட் காம்யூ போராளிகளின் கொடூர சித்திரவதை குறித்து அறிந்து பிரெஞ்ச் அரசாங்கத்திடம் நீங்கள் சுதந்திரம் தராவிட்டாலும் பரவா யில்லை, மக்களை சுதந்திரமாகவாவது வாழவிடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், தேசிய விடுதலை முன்னணியினர் இதனைக் கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் “ஆல்பர்ட் காம்யூவை’’ முட்டாள் எனக் கூறினர். எங்களுக்கு நடுநிலையாளர்கள் தேவையில்லை. எங்களுக்கு விடுதலை வாங்கித் தர ஒத்துழைக்கும் ஆதரவாளர்கள் மட்டுமே தேவையென உறுதியாகக் கூறினர். அவர்கள் அப்படிக் கூறியதற்குக் காரணம் ஆல்பர்ட் காம்யூ அல்ஜீரியர் என்றாலும் அவர் ஒரு ஐரோப்பிய வம்சாவளி யைச் சேர்ந்தவர் என்பதுதான்.


போர் துவங்கிய சில நாட்களிலேயே UDMA., PCA., கம்யூனிஸ்டுகள் என பல்வேறு குழுக்களாக பிரிந்திருந்த அல்ஜீரிய விடுதலைப் போராளிகள் ஒவ்வொருவராக தேசிய விடுதலை முன்னணியுடன் இணையத் தொடங்கினர். UDMAவின் தலைவரான அப்பாஸ் திலிழின் தலைமையிடமான கெய்ரோவிற்கு விமானத்தில் பறந்து சென்று தங்களது குழுவை இணைத்துக் கொள்ளும் தகவலைக் கூறினார். இவர்களுள் மெஸ்ஸாலி ஹெட்ஜ் என்பவரைத் தலைவராகக் கொண்ட MNA மட்டும் FLNன் வன்முறைப் பாதையைக் கடுமையாக எதிர்த்து வந்தது. பிரான்சிலிருந்த அல்ஜிரிய தொழிலாளர்கள் மத்தியில் MNA அமைப்புக்கு பெரும் ஆதரவு இருந்தது. அல்ஜீரியாவில் விழிகி தனது இந்த ஆதரவாளர்களுடன் போராடி வந்தது. FLNன் ராணுவப் பிரிவான ALN எனப்படும் கொரில்லாப் படை MNAன் இந்தச் சிறிய ஆதரவுச் குழுவை முழுமையாக பிரான்சிலேயே அழித்தொழித்தது.

இதன் மூலம் அல்ஜீரியா முழுவதும் ஒரே போராளிக் குழுவாகத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. மேலும், பிரான்ஸ் நகர வீதிகளிலும், காபி கடைகளிலும் இரண்டு குழுக்களைச் சேர்ந்த போராளிகளும் திடீர் திடீரென மோதிக்கொண்டனர். இந்த மோதலில் மட்டும் ஏறக்குறைய 5000 போராளிகள் இறந்திருந்தனர். இதனிடையே பிரெஞ்ச் அரசாங்கம் 1955 ஜனவரியில் ஜாக்குஸ் ஸான்ஸ்டுலே (Jacues Sanstalle)வை கவர்னர் ஜெனரலாக அல்ஜீரியாவின் போராளிகளைச் சமாளிக்க அனுப்பிவைத்தது. அவர் முஸ்லிம் மக்களிடையே தன் மதிப்பைப் பெற்று அல்ஜீரியாவுக்கு ஆதரவாக சில திட்டங்களைத் தீட்டி பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு நன்மதிப்பை ஈட்ட பார்த்தார். ஆனால், அது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதையும் சீக்கிரத்தில் உணர்ந்துகொண்டார்.

பிரச்சினையின் தீவிரத்தை அதுவரை பிரான்ஸ் அரசு உணராமல் அசட்டையாகத்தான் இருந்தது. ஆகஸ்ட் 1955ல் பிலிப் வில்லி (Philio Villee) நகரத்தில் FLN நடத்திய பெரும் தாக்குதல்கள் பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு FLN ன் பலத்தையும் தீவிரத் தன்மையையும் உணர்த்தியது. அதுவரை கிராமங்களில் மட்டுமே போரிட்டு வந்த போராளிகள் முதன்முறையாக இச்சமயத்தில்தான் நகரத்தைக் குறிவைத்தனர். மேலும் அதற்கு முன்வரை பொதுச் சொத்துக்களுக்கு மட்டுமே சேதம் விளைவித்து வந்த போராளிகள் முதல் முறையாக கடுமையாக தாக்கியதில் 123 பேர் கொல்லப்பட்டனர். அதில் 79 பேர் பிரெஞ்ச் நாட்டவர். இறந்தவர்களில் வயதான பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்.

1956 ஆகஸ்டில் FLNல் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 34 பேர் அடங்கிய அதன் உயர்மட்டக் குழு ஒன்றாகக் கூடி FLNஐ இரண்டாகப் பிரித்தது. போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வென ஒரு குழுவும் வெளியுறவு நடவடிக்கைகளில் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றொரு குழுவுமாக பிரிக்கப்பட்டது.

இதனிடையே 1956 அக்டோ பரில் FLN ன் படைக்குழுத் தலைவர்களான அகமத் பென் பெல்லா, முகமது போதியர்ஃப், முகமத் சிதர் மற்றும் அஜித் அசயத், ஹோசின் ஆகியோர் மொராக்கன் DC-3 மைதானத்தில் சென்றபோது பிரெஞ்ச் விமானப்படை அதிகாரிகள் அத்துமீறி விமானத்தினுள் நுழைந்து போராட்ட தலைவர்களை கைது செய்தனர். அந்த கைது சம்பவத்திற்கு ஐ.நா.வின் அரபு நாடுகள் கூட்டணியினரிடமிருந்து கம்யூனிஸ்ட் தலைவர்களிடமிருந்து பிரெஞ்சு அரசாங்கத்திற்கு கண்டனங்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில்தான் FLN தனது உச்சகட்டப் போரை நிகழ்த்த முடிவெடுத்தது.

செப்டம்பர் 30, 1956 அன்று மூன்று பெண்கள் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், பிரெஞ்சு விமானப் படையின் டவுன் அலுவலகமும் ஒன்று. 1957ல் இலையுதிர் காலம் வரை ஏறக்குறைய 800 துப்பாக்கி சூடுகளையும் குண்டு வெடிப்பு களையும் நிகழ்த்தி, FLN பிரெஞ்ச் அரசாங்கத்தை அலற வைத்தது.

இதே காலகட்டங்களில் திலிழி மறைந்து தாக்கும் கொரில்லா யுத்த நடவடிக்கைகளில் மிகுந்த திறமையுடன் பயன்படுத்தியது. உடன் போராளிகளை காட்டிக் கொடுத்த சக அல்ஜீரியர்களையும் திலிழி போராளிகள் கொடூர முறையில் சித்திரவதை செய்தனர். இதில் கிராமத்தினர்கள், அரசாங்க ஊழியர்கள், அப்பாவி விவசாயிகள் சிலரும் திலிழின் இந்தக் களையெடுக்கும் நடவடிக்கைகளில் பலி வாங்கப்பட்டனர். காதுகளை அறுத்தல், மூக்குகளை அறுத்தல் போன்றவை அவர்களது நடவடிக்கைகளில் உட்சபட்ச கொடூரமாக பின்பற்றப்பட்டது.

FLN ன் உட்பிரிவுக்குழு ஒருபுறம் இதுபோன்ற பேரழிவு நடவடிக்கைகளில் இறங்க பிறக் குழுக்களானது ராஜதந்திர காரியங்களில் இறங்கி உலக நாடுகளின் கவனத்தை அல்ஜீரியாவின் பக்கம் திருப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு முக்கிய நிகழ்வாக 1957ல் அது அல்ஜீரியா முழுதும் மிகப் பெரிய வேலைநிறுத்தத்தை உருவாக்க திட்டமிட்டது. இப்படி ஒரு வேலை நிறுத்தம் மட்டும் நடந்து முழுவெற்றி பெற்றால் அது உலக நாடுகளுக்கு FLN மீது பொது மக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும். அதனால், ஐ.நா.சபை பிரான்சிடம் அல்ஜீரியாவுக்கு திரும்பத் தரும்படி கட்டளை இடும். இதனால் தவிர்க்க முடியாமல் அல்ஜீரியாவை விடுதலை செய்ய நேர்ந்துவிடும் என முடிவெடுத்த பிரான்ஸ் அந்த பொது வேலை நிறுத்தத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட முடிவு செய்தது. இதன் முதல் கட்டமாக தங்களது அல்ஜீரிய பிரதிநிதியான ஜெனரல் மாசுவுக்கு உடனடியாக கட்டளையிட்டது.


எப்பாடு பட்டேனும் எந்த நடவடிக்கை எடுத்தாவது இவ்வேலை நிறுத்தத்தை தகர்க்க வேண்டும். ஜெனரல் மாசு உடனடியாக தன் வேட்டையை முதலில் கிராமங்களில் தொடங்கினார். ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீடாக புகுந்து திலிழி போராளிகளை கைது செய்தனர். அப்பாவி முஸ்லிம்கள் இரண்டு தரப்பிலும் சித்தரவதைக்கு உள்ளானார்கள்.

பல இடற்பாடுகளுக்கு இடையில் வேலை நிறுத்தம் நடந்தது. அல்ஜீரிய முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கைகோர்த்தது போல் வேலை நிறுத்தத்தை முழுமையாக வெற்றியடையச் செய்தனர். தெருக்கள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன. ஜெனரல் மாசுவின் ராணுவ வீரர்கள் செய்த தந்திரங்கள் எதுவும் பலிக்கவில்லை.

ஐ.நா.சபையில் இந்த வேலை நிறுத்தம் குறித்து பெரும் விவாதங்கள் எழுந்தன. ஆனாலும், பிரெஞ்சு அரசாங்கம் அதைப் பொருட்படுத்தவில்லை. இதன் பலனாக சில மாற்றங்கள் மட்டும் நிகழ்ந்தன. டிக்காலே மீண்டும் பிரான்சின் அதிபராக பதவி யேற்றார். அல்ஜீரிய மக்களின் மன வேதனையை தான் முழுமையாக அறிந்துகொள்வதாக கூறினார். அல்ஜீரியாவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி அதன்மூலம் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண விரும்புவதாக அறைகூவல் விடுத்தார். போரினால், தொய்வுற்றிருந்த முஸ்லிம் மக்களுக்கு டிக்காலேவின் பேச்சு ஆதரவும் நம்பிக்கையும் தருவதாக இருந்தது. ஆனாலும், FLN இதற்கு உடன்படவில்லை. இதனூடே மற்றொரு சம்பவமும் நிகழ்ந்தது.

Force-K எனும் தலைப்பில் FLN போராளிகள் சிலர் பிரெஞ்ச் ராணுவத்தில் ஊடுருவல் நிகழ்த்தினர். ஆனால், ராணுவத்திற்கு எப்படியோ மூக்கு வியர்த்துவிட்டது. வீரர்கள் மத்தியில் அடையாள பரிசோதனைகள் நடத்தப்பட்டு திடீர் திடீரென பல வீரர்கள் காணாமல் போயினர். திலிழின் இந்த Force-K நடவடிக்கையும் தோல்வியடைந்தது. இதனிடையே FLN ன் கூடுதலான வன்முறை நடவடிக்கைகளுக்கு மக்களிடையே அதிருப்தி தோன்ற ஆரம்பித்தது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலமாக மட்டுமே பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும் என அல்ஜீரிய மக்கள் நம்பத் தொடங்கினர். இதனால் FLN ஒரு முடிவுக்கு வந்தது.

GPRA (Provisional Government of the Algerian Republic) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு அரபு நாடுகளும் கம்யூனிஸ நாடுகளும் ஆதரவு அளித்தன. FLN ன் தலைவரான அப்பாஸ் தான் இதற்கும் தலைவராக அறிவிக்கப்பட்டு துனிஷியாவில் இருந்து இந்த அமைப்பை இயக்கி வந்தார். இந்த அமைப்பு அதிபர் டிக்காலேயுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதன்படி அல்ஜீரிய மக்களிடம் பொது வாக்கெடுப்பு நிகழ்த்துவது என்றும், மக்கள் விருப்பப்பட்டால் அல்ஜீரியாவை சுதந்திர நாடாக அறிவிப்போம் என்றும் டிக்காலே உறுதி கூறினார். இதற்கு சம்மதம் கூறி 1962 ஜூனில் பிரெஞ்சு மக்களவையில் வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. 90 சதவீதம் பேர் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தனர்.

அதன்படி 1962 ஜூலை 1 ல் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கம் பொதுவாக்கெடுப்பு நிகழ்த்தியது. 6.5 மில்லியன் மக்கள்தொகையில் மொத்தம் 6 மில்லியன் மக்கள் அல்ஜீரிய விடுதலைக்காக தங்கள் வாக்குகளை அளித்திருந்தனர். ஜூலை 3 அன்று அதிபர் டிக்காலே அல்ஜீரியாவுக்கு விடுதலை அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார். ஜூலை 5 மிகச்சரியாக பிரெஞ்ச் நாட்டினர் அல்ஜிரியாவுக்குள் நுழைந்து 132ஆவது ஆண்டில் அல்ஜீரியா முழு தேசிய விடுதலை நாடாக அறிவிக்கப்பட்டது. எண்ணற்ற பிரெஞ்ச் ஆதரவு முஸ்லிம்களும், யூதர்களும், இதர ஐரோப்பிய சமூகத்தினரும் அல்ஜீரியாவை விட்டு வெளியேறினர். அதனையும் மீறி அவர்கள் அங்கு இருந்திருந்தால் அவர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதுதான் உண்மை.

இந்த நீண்ட எட்டாண்டு விடுதலைப் போரில் ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்கள் போரிலும் அதன் தொடர்பான நடவடிக்கைகளிலும் இறந்திருந்தனர். பிரெஞ்ச் தரப்பிலிருந்து 18000 பேர் பலியாகி இருந்ததாகவும் 65000 பேர் காயமுற்றதாகவும் அறிவிக்கப் பட்டனர். ஐரோப்பிய சமூகத்தில் 10,000 பேரும், பொது முஸ்லிம்கள் 70,000 பேரும் இப்போராட்டத்தில் கொல்லப்பட்டதாக இன்னொரு பட்டியல் கூறியது. விடுதலைப் பெற்ற நாளிலிருந்து FLN தலைவரான அகமது பென் பெலா மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்தார்.

இன்னொரு FLN தலைவரான பென் கத்தா தலைமையில் மற்றொரு குழு ஆட்சிப் பதவிக்குப் போட்டியிட உடனடியாக பென் பெலாவால் அக்குழு அடக்கி ஒடுக்கப்பட்டது. செப்டம்பர் 20ல் முழுமையான தேர்தல் நடந்து அகமது பென் பெலா ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். தொடர்ந்து 109வது நாடாக அல்ஜீரியா அக்டோபர் 8, 1962ல் ஐக்கிய நாடுகள் சபையில் இணைக்கப்பட்டது-.

(விரைவில் வெளிவர இருக்கும் அஜயன் பாலாவின் ‘அல்ஜீரிய விடுதலைப் போர் வரலாறும் சினிமாவும்’ என்ற நூலிலிருந்து இந்தக் கட்டுரை எடுக்கப்பட்டுள்ளது.)

Pin It
(மலையாளத்தில் : வைக்கம் முகம்மது பஷீர்)
ஆங்கிலம் வழி தமிழாக்கம் : கூத்தலிங்கம்

அது ஒரு திகைப்பை ஏற்படுத்தும் செய்தியாக இருந்தது. சூடான விவாதத்தின் பேசுபொருளாகவும் அறிவு ஜீவிகள் மற்றும் தத்துவ வாதிகளின் மயிர்சிலிர்க்கச் செய்யும் விவாத மையமாகவும் ‘மூக்கு’ ஆகிவிட்டிருந்தது. பிறகு அது மெல்ல உலகளாவிய போற்றத் தக்க ஒன்றாகவும் ஆகிவிட்டது. அந்த மூக்கின் உண்மை வரலாற்றை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

நமது கதாநாயகன் அவனது வாழ்க்கையின் இருபத்தி நான்காம் வயதிற்குள் நுழையும் தருணத்தில்தான் அப்பேற்பட்ட மூக்கின் வரலாறு தொடங்குகிறது. இருபத்தி நான்காம் அகவைக்கு அப்படி ஏதும் முக்கியத்துவம் இருக்கிறதாவென நான்கூட ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். எவ்வகையில் பார்த்தாலும் ஒரு விஷயம் நிச்சயம். வரிசைக்கிரமமான சரித்திரக் குறிப்பை நீங்கள் கவனமாக உற்று நோக்கி வந்தீர்களேயானால், சாதனைகள் பல புரிந்த வரலாற்றுப் புருஷர்களின் இருபத்தி நான்காம் வயது, ஏதோ ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் பெற்று விளங்குவதாக இருக்கிறது என்று நான் நிச்சயமாகச் சொல்வேன். நான் சொல்லும் இந்த வெளிப்படையான உண்மையைக் கேட்டு வரலாற்று மாணவர்கள் என் மேல் கோபம் கொள்ளக்கூடும்.

நமது கதாநாயகன் ஓர் ஏழை சமையல் தொழிலாளி. அவனது புத்திசாலித்தனத்தைப் பற்றி குறிப்பிட்டு ஒன்றும் சொல்வதற்கில்லை. அவனுக்கு எழுதவும் தெரியாது, படிக்கவும் அறிந்திருக்கவில்லை. அவனது ஒரே உலகம் சமையல் கூடம். வெளியே எது நடந்தாலும் அது பற்றி யெல்லாம் கவலைப்படமாட்டான் அவன். அவன் ஏன் கவலைப்பட வேண்டும்? அவனுடைய வழக்கமான தொடர் செயல்பாடுகளாகிய சமைத்தல், மனதார சாப்பிடுதல், தரமான மூக்குப்பொடியை சுரீரென உறிஞ்சி லயித்தல், தூக்கம் போடுதல், விழித்து எழுதல், மறுபடியும் தனது சமைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுதல் இப்படியான கடமைகளுக்குள் ஆட்பட்டுக்கிடக்கிறான்.

மூக்கனுக்குக் கிழமைகளின் பெயரோ, மாதங்களின் பெயரோ தெரியாது. அவனுடைய சம்பளம், அந்தந்த பாக்கித் தொகைகளும் அவனது அம்மாவிடம் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த வயதான பொம்பளை அவனுக்கு மூக்குப் பொடி வாங்கிக் கொடுப்பாள். இப்படியாக அவன் தனது இருபத்தி நான்காம் வயது வரைக்கும் மகிழ்வாகவும் அமைதியாகவும் வாழ்ந்துவந்தான். அதற்குப் பிறகுதான் இருந்தாற்போல் இருந்துவிட்டு அப்படி ஒரு திடீர் நிகழ்வு அவனது வாழ்க்கையில் நடக்கத் தொடங்கியது.

 அது ஒரு சாதாரணமான நிகழ்வில்லை என்றுகூட ஒரு வேளை இருக்கலாம். மூக்கனின் மூக்கு உடனடியாக நீளமாக வளர்ந்துகொண்டே போனது. அவனது வாயையும் கடந்து கொஞ்ச காலத்திற்குள் தாடைக்கும் கீழேகூட போய்விட்டது. மூக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது. ஒரு மாதத்திற்குள் அதன் முனை அவனது தொப்புளுக்குச் சமமாக நீண்டிருந்தது. நீளமான உறைக்குள் வைத்து மூடி மறைத்துவிட அது வேறு ஏதாவதொரு பொருளல்ல. ஆனால், மூக்கனைப் பொறுத்த வரைக்கும் அது ஏதாவது அசௌகரியங்களை உண்டாக்கியதா? கொஞ்சம்கூட இல்லை. மற்ற எந்த மூக்குகளையும் போலவே இதுவும் அதன் வேலைகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தது. மூச்சுவிடுதல், மூக்குப்பொடியை உறிஞ்சுதல், வாசனைகளை மோப்பம் பிடித்தல் போன்ற அதன் எல்லா வேலைகளையும் கச்சிதமாகச் செய்தது.

உண்மையாகவே, இத்தகைய அற்புத நிகழ்வுகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எசகுபிசகான மூக்குகளைப் பற்றிய அரிய சம்பவங்கள் அத்தகைய கூறுகெட்ட மூக்குகளில் இதுவும் ஒன்று என நீங்கள் நினைக்கிறீர்களா? இது அப்படி இல்லையென பந்தயம் கட்ட முடியும். நமது ஏழை கதாநாயகன் அவனது மூக்கின் காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டான். ஏன் இப்படி?

அவன் வேலையை மீண்டும் பெறுவதற்கு எந்த யூனியனும் போராடவில்லை. அவனுக்கு நடந்த மாபெரும் அநீதியை கண்டுகொள்ளாமல் எல்லா அரசியல் கட்சிகளும் முகத்தைத் திருப்பிக்கொண்டன. மூக்கனை ஏன் பணிநீக்கம் பண்ணினார்கள்? மனித நேயவாதிகள் அல்லது மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் யாரும் இது பற்றி கேள்விகள் எழுப்பவில்லை. மூக்கன் தெருவிற்கு தள்ளப்பட்ட போது நம் கலாச்சார காவலர்கள் எங்கே போனார்கள்? பாவம் மூக்கன்!

ஏன் வேலையிலிருந்து நீக்கப்பட்டோம் என்பது மூக்கனுக்கு நன்றாகவே தெரியும். அவனது மூக்கு வளரத் தொடங்கியதும் அவனை வேலைக்கு வைத்திருந்த குடும்பம் பட்ட அவதி கொஞ்ச நஞ்சமல்ல. அவனது மூக்கைக் காண்பதற்காக மாபெரும் கூட்டம் அந்த வீட்டின் முன்பாக திரண்டு விடும். புகைப்படக்காரர்கள், பத்திரிகை நிருபர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் படம் எடுப்பவர்கள்... பேரிரைச்சல் கொண்ட மனிதக் கடல் அந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டது. அநேக தடவைகள் அந்த வீட்டில் கொள்ளை போனது. அந்த வீட்டிலிருந்த ஒரு இளம் பெண்ணை கடத்திச் செல்லக்கூட ஒருமுறை முயற்சி நடந்திருக்கிறது.

தனது எளியக் குடிசைக்குள் அவன் இளைத்து வாடிக்கிடந்த போதும், அந்த ஏழை சமையல் தொழிலாளி தன் மூக்கு தனக்கு ஈடிலாப் புகழை ஈட்டித் தரும் என தன்னைத் தானே தேற்றி ஆறுதல்படுத்திக் கொண்டான். அவனது மூக்கைப் பார்ப்பதற்காக தூரப்பகுதி ஊர்களிலிருந்தும், சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்தும் மக்கள் தொடர்ச்சியாக வந்தபடியே இருந்தார்கள். அதைப் பார்க்கும்பொழுது ஆச்சர்யமடைந்தார்கள்.

சிலர் அதைத் தொட்டுப் பார்க்கவும் துணிச்சல் கொண்டார்கள். ஆனால் யாரும், எந்த ஒரு மனிதப் பிறவியும் ஆறுதல்படுத்தும்படியான இனிமையான விசயங்களை அவனிடம் பேசவில்லை. ஒரு இசையைப் போல அவனது காதில் ஒலிக்கச் செய்யும் விசாரிப்புகளை எந்த ஒரு மனித ஆத்மாவும் அவனிடம் வைக்கவில்லை. ஏன் இப்படி பலவீனமாக இருக்கிறாய்? மத்தியானம் ஏதாவது சாப்பிட்டாயா?

மூக்குப்பொடி வாங்கக்கூட அவனிடம் பைசா இல்லை. மிருகக் காட்சி சாலையில் பட்டினி கிடக்கும் ஒரு விலங்கைப்போல அவன் எத்தனை காலம்தான் இப்படியே வாழ்வான். அவன் மற்றவர்களைப்போல இல்லாவிட்டாலும் அவனும் ஒரு மனிதன்தானே!- கடைசியில் அவன் அம்மாவை அழைத்து அவளிடம் கட்டாயமாகச் சொல்லி விட்டான், “இனி அடிதான் கிடைக்கும் எனச் சொல்லி அவர்கள் முகத்திற்கு எதிராகக் கதவைச் சாத்து’’.

அவனது வயதான அம்மா தந்திரமாகப் பேசி, ஆர்வமுடன் பார்க்க வந்த கூட்டத்தினரைக் கலைத்துவிட்டு முன் கதவைச் சாத்தினாள். அதன் பிற்பாடு தான் மூக்கனின் வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்பம் உண்டானது. வயதான தாயின் முகம் அதிர்ஷ்டத்தால் மலர்ந்தது; அவளது மகன் புகழ்பெறத் தொடங்கினான். மூக்கனது மூக்கை பலதடவை தரிசித்தும் ஆர்வம் மட்டுப்படாத ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் பணம் கொடுத்து பார்க்கலாயினர். கழுதைத்தன்மை மிக்க இத்தகைய முட்டாள் மக்களிடம் இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இது ஒரு மிகப்பெரிய மோசடி என அறிவு ஜீவிகளும் தத்துவப் புடுங்கிகளும் தங்களது குரல்களை உரத்து ஒலித்தனர். ஆனால் அவர்களது எதிர்ப்புக் குரல்கள் செவிடன் காதில் ஓதிய வேதமாகப் போனது.

அரசாங்கம் மூக்கனுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசாங்கம் இந்த குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் மவுனமாக இருந்ததால் கொதிப்படைந்த அறிவைக்கொண்டு ஜீவிப்பவர்கள் (Intellectuals) மற்றும் சில கடைந்தெடுத்த தத்துவவாதிகள் (philosophist) இவர்களெல்லாம் நாசகார சக்திகளுடன் ரகசியமாக கை கோர்த்து பலவகை நிழல் மறைவுச் சதிவேலைகளில் ஈடுபட்டனர்.

மூக்கனுக்கு அவனது மூக்கி னால் வருமானம் பெருத்தது. இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு நாளைக்கு ஒரு கவளம் சோறுக்கூட கிடைக்காமல் பட்டினி கிடந்த அந்த ஏழைச் சமையல் தொழிலாளி, ஆறு வருடத்திற்குள் மில்லியனர் ஆகி விட்டான்.

மூக்கன் மூன்று திரைப் படங்களில் நடித்தான். மனித நீர்மூழ்கிக்கப்பல் என்ற அவன் நடித்ததொரு படம் பலகோடி ரூபாய் செலவில் நவீன வண்ணத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நாட்டின் அனைத்து மக்களும் பார்த்து கழித்தனர். ஆறு மகாகவிகள் மூக்கனைக் குறித்து காப்பியங்கள் எழுதி வடித்தனர். ஒரு டஜன் சுய சரிதைகள் மூக்கனைப்பற்றி எழுதப்பட்டு, அவை புகழையும் பணத்தையும் ஈட்டித் தந்தன எழுத்தாளர் சமூகத்தார்க்கு.

மூக்கனின் மாளிகைத் திறந்தே இருந்தது. யாராக இருந்தாலும் அங்கே போய்ப்பசிக்கு உணவுக் கேட்கலாம்... ஒரு சிட்டிகை மூக்குப் பொடியும்கூட. மூக்கன் இரண்டு அந்தரங்க காரியதரிசினிகளையும் வைத்திருந்தான். இரண்டு பேரும் அழகானவர்கள். மேலும் அதிகம் படித்தவர்கள். இரண்டு பேரும் மூக்கனை விரும்பியதோடு அவனை வணங்கத்தக்கவனாகவும் மனதில் ரகசியமாக எண்ணம் கொண்டிருப்பவர்கள்.

சில அழகான இளநங்கைகள் வழிப்பறிக் கொள்ளையர்கள் அல்லது கொலையாளிகளைக் கூட நம்பி அவர்களைக் காதலிக்கிறார்கள் என்பதை இங்கேக் குறிப்பிடலாம். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினீர்கள் என்றால் இரண்டு பெண்கள் ஒரே ஆணைக் காதலிக்குமிடத்து சிக்கல் தோன்றுவதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். மூக்கனின் வாழ்க்கையிலும்கூட நடந்தது. அவனது இரண்டு காரியதரிசினி நங்கைகளைப் போலவே மக்களும் தங்களது இதயப்பூர்வமான அன்பினையும், மரியாதையினையும் மூக்கனுக்கு அளித்தார்கள்.

உலகப் பெருமைவாய்ந்த மூக்கு, நீண்ட மற்றும் எழில் மிகுந்த தொப்புளுக்கும் கீழே வரை வளர்ந்திருக்கும் அது, மகிமையின் அடையாளம் இல்லையெனில், பிறகு வேறு என்ன அது? அகில உலகத்திலும் அவ்வப் போது நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்து மூக்கன் அறிக்கைகள் விட்டு பத்திரிகையாளர்களை குதூகலப்படுத்தினான்:

மணிக்கு 10,000 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து செல்லும் புதிய ஜெட் விமானத்தைப் பற்றிய அறிமுகக் கூட்டத்தில் திருவாளர் மூக்கன் கூறியதாவது, மருத்துவர் ‘பராசி’ பாரஸ் இறந்த நோயாளி ஒருவனை மறுபடியும் பிழைக்கவைத்த தனது வெற்றிகரமான செயலைப் பத்திரிகை நிருபர்களிடம் தெரிவித்தார். மூக்கன் இது குறித்து அலட்சியமானதொரு புன்னகையை வெளிப்படுத்தி இருக்கிறார். இது அறிவுக்கு அப்பாற்பட்ட மூக்கனது சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கிறது.’’

உலகத்தின் எந்த மூலையில் எது நடந்தாலும் உடனே மக்கள் ஒருவரையருவர் கேட்டுக் கொண்டனர்: ‘அதைப் பற்றி மூக்கன் என்ன சொல்லி இருக்கிறார்?’ மூக்கன் அது குறித்து ஒன்றும் சொல்லியிராவிட்டால்... ‘ச்சே! அது மதிப்பு வாய்ந்த செயலே இல்லை. அதைப்பற்றிப் பேச நமக் கென்ன வேண்டிக் கிடக்கிறது?’’

காலப்போக்கில் மூக்கனது சிந்தனைகள் வேறுவேறு துறைகளைப்பற்றி விரிந்துசென்றன. பிரபஞ்சத்தோற்றம், குப்பைகள் அகற்றுதல், சர்ரியலிச ஓவியங்கள், புதினங்கள் பற்றிய விமர்சனம், டாய்லெட் சோப், மரணத்திற்குப் பிறகான மனித வாழ்வு, பாதாள சாக்கடைத் திட்டங்கள், உலக மக்களுக்கு அறிவுரைகள் மற்றும் உலகப் போக்குகள் குறித்த எச்சரிக்கைகள். சூரியனுக்குக் கீழே மூக்கனால் விவாதிக்கப்படாத எந்த சங்கதிகளும் இல்லை என்ற அளவுக்குப் போய் விட்டது.

அந்தச் சமயத்தில், மூக்கனைத் தக்க சமயத்தில் உபயோகத்துக் கொள்வதற்கான தொடர் சூழ்ச்சிகள் நடைபெற்றன. நீங்கள் வரலாறு முழுவதையும் புரட்டிப் புரட்டிப் படித்தீர்களானால், அதில் ‘தக்கச் சமயத்தில் உபயோகித்துக் கொள்ளல்’ என்பதைத் தவிர வேறொன்றையும் காண மாட்டீர்கள். உண்மையாகவே மனித சமூக வரலாறு என்பது தக்கசமயத்தில் உபயோகித்து கொள்ளலின் வரலாறே ஆகும்.

தக்க சமயத்தில் உபயோகித்துக்கொள்ளல் என்பதன் பொருள் என்ன?

நான் அதை உங்களுக்கு விளக்கிச் சொல்கிறேன். நீங்கள் சில தென்னங்கன்றுகளை நிலத்தில் நட்டு, நாள் தோறும் தண்ணீர் ஊற்றி வருவீர் கள். வருஷங்கள் கடந்து போகின்றன. அந்தக் கன்றுகள் உயரமான தென்னையாக வளர்ந்து குலை குலையாக தேங்காய்கள் காய்க்கத் தொடங்கும். உங்கள் பக்கத்து வீட்டுக்காரனான, ஒரு நாளும் நேர்மையான உழைப்பறியா சோம்பேறி, ஒரு நாள் காலையில் தொரட்டிக் கொண்டோ அல்லது அலக்கு கொண்டோ உங்கள தேங்காய்கனை திருடிக் கொண்டிருப்பான். இதுதான் தக்க சமயத்தில் உபயோகித்துக் கொள்ளல்.

மூக்கனைத் தக்கசமயத்தில் உபயோகித்துக்கொள்ளல்! இந்த யோசனை ஒரேசமயத்தில் பல பேருக்கு உண்டானது. அரசாங்கம் முதன் முயற்சியாக மூக்கனை தக்க சமயத்தில் உபயோகித்துக் கொண்டது. அரசாங்கம் முன்னெப்போதும் எடுத்திராத மிகவும் தந்திரமான திட்டம் அது. அவனுக்கு ‘நீண்ட மூக்குடைய தளபதி’ என்னும் பட்டம் அளித்து தங்க மெடலும் தந்தது. சிறப்பு வாய்ந்ததொரு விழாவில் அந்த மெடலை ஜனாதிபதி வழங்கினார். மூக்கனின் கைகளை குலுக்குவதற்குப் பதிலாக ஜனாதிபதி அவனது மூக்கைப் பிடித்துக் குலுக்கினார். அந்த விழா செய்திப்படமாக எடுக்கப்பட்டு தொலைக்காட்சியிலும், இப்பரந்த நாட்டின் முழுவதும் இருக்கும் திரை அரங்குகளிலும் காட்டப்பட்டது.

அரசியல் போக்கில் மாபெரும் மாற்றங்களை அது ஏற்படுத்தியது.

‘தோழர் மூக்கன் வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த மக்கள் போராட்டங்களுக்கத் தலைமை ஏற்று நடத்தவேண்டும்!’ தோழர் மூக்கன்?!

பாவம் மூக்கன்! அவனை அநியாயமாக அரசியலுக்குள் இழுத்தார்கள். ஆனால், மூக்கன் எந்தக் கட்சியில் சேருவது? அநேகக் கட்சிகள் இங்கே, எல்லோரும் விரும்பும் கட்சியாக மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் இருந்தது. அதே நேரத்தில், மூக்கன் தனது ஆதரவை மக்கள் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு காட்டவில்லை.

மூக்கன் தனக்குள் பேசிக் கொண்டான்: “என்னைக் கட்சியில் சேர்க்கப்போகிறார்களாம். ச்சே! ஒரே சங்கடமாப் போச்சே!’’

அவனுடைய அழகான அந்தரங்கச் செயலாளினி ஒருத்தி இந்த வாய்ப்பை கைப்பற்ற முயற்சி செய்தாள்: “தோழர் மூக்கன் அவர்களே, நீங்கள் என்னை நேசிப்பது உண்மை எனில், நான் இருக்கும் கட்சியில் நீங்கள் சேர வேண்டும்.’’

மூக்கன் மவுனமாக இருந்தான்.

“நாம் ஏதாவதொரு அரசியல் கட்சியில் சேரத்தான் வேண்டுமா?’’ அவன் இன்னொரு காரியதரிசினி நங்கையிடம் கேட்டான். அவள் மூக்கனின் மனதில் உள்ளது இன்னதென அறிந்து கொண்டாள். “ஆமாம், அதிலென்ன!?...’’ அவள் தோள்களைக் குலுக்கியபடி பதிலுரைத்தாள்.

ஆனால், மக்கள் மறு மலர்ச்சி இயக்கத்தின் (இடது) ஒரு பிரிவினர் மூக்கனைக் கலந்து பேசி சமாதானம் செய்து அவனைத் தங்கள் இயக்கத்தின் ‘ஆள்’ என அறிக்கை வெளியிட்டனர்.

“காம்ரேட் மூக்கன் ஜிந்தா பாத்! மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் ஜிந்தாபாத்!’’ கோஷங்கள் எதிரொலித்து அதிர்ந்தன. இது, இன்னொரு மக்கள் மறுமலர்ச்சி இயக்கத் தவர் (வலது)களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் மூக்கனின் அந்தரங்கச் செயலாளினி ஒருத்தியை கைக்குள் போட்டுக் கொண்டு, அவனது நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் அவளைக் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு அறிக்கைகள் தரச்செய்தனர்:

“மூக்கனைப் பற்றிய ஒரு பயங்கர உண்மையை உங்களிடம் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். அவர் தனது கீழ்மையான ஏமாற்று வேலையால் மக்களை நம்பவைத்தது மட்டுமல்லாமல் ஓர் அரசியல் இயக்கத்தையும் தந்திரமாக ஏமாற்றிவிட்டார். மிகவும் தாமதமாக நான் இதை வெளிப்படுத்துவதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்; அதாவது மூக்கனுடைய மூக்கைப் பற்றிய உண்மையை; அது வெறும் ரப்பர் துண்டுதான்!’’.

வாவ்! உலகத்தின் அனைத்துப் பத்திரிகைகளும் இந்தச் செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டன. நீண்ட மூக்கு அதிசயம் குட்டு வெளிப்பட்டது. தந்திரக்காரனின் புத்திசாலித்தனமான பொய் வேலை, ஒரு அரசியல் கட்சியும் ஏமாற்றுக்காரனுக்கு ஆதரவு, மக்களை ஏமாற்றி நம்ப வைத்த பிரம்மாண்டமான வஞ்சகத் திட்டம், உண்மையான மூக்கு, அது ஓரங்குலத்தைக் காட்டிலும் மிகவும் சிறுசு.

இத்தகைய செய்திகள் அதிகார மையங்களுக்கு அதிர்ச்சி அலைகளுடன பரவிச் செல்வதென்பது இயல்பானது. தொடர் தொலைபேசி அழைப்புகளாலும், தந்திகளாலும் மற்றும் கடிதங்களாலும் திக்கு முக்காடிப் போனார் ஜனாதிபதி.

“தளபதி ரப்பர் மூக்கன் ஒழிக! அவனது இயக்கம் வீழ்க! இன்குலாப் ஜிந்தாபாத்!’’

மக்கள் மறுமலர்ச்சி இயக்க (மூக்கன் எதிர்ப்பு அணி) தொண்டர்களின் கோஷம் நாடெங்கும் ஒலித்தது. உடனே மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் (மூக்கன் ஆதரவு அணி) நடவடிக்கையில் இறங்கி செயல்படத் தொடங்கினர். அவர்கள் மூக்கனுடைய இன்னொரு காரியதரிசிப் பெண்ணை வைத்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி தரச்செய்தனர்.

“தோழர்கள் மற்றும் நண்பர்களே, என்னுடன் காரியதரிசினியாக வேலை செய்துவந்த ஓரு சக ஊழியை ஒருத்தி தன்னைத் தானே விளம்பரப்படுத்தி கொள்ளும் திட்டத்தில், சோடிக்கப்பட்ட பொய் ஒன்றை அறிக்கையாக அவிழ்த்துவிட்டுள்ளாள். அது கெட்ட நோக்கத்துடன் பரப்பப்படும் ஒரு பிரச்சார மேயன்றி வேறொன்றுமில்லை. மூக்கன் அவளை வெறுத்து ஒதுக்கியதாலும், அவளது சுயநலப் பேச்சுகளை உதாசீனப்படுத்தியதாலும் அவர் மீது அவள் பொறாமை கொண்டு இருக்கிறாள். மூக்கனுடைய பெரும் பணம் மற்றும் புகழ் இவைகளினால் மட்டும் ஆசைப்பட்டு அவள் அவருடைய அந்தரங்கச் செயலாளினியாக இருந்தாள் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் அவளது சகோதரன் ஒருவன் உறுப்பினராக இருக்கும் அரசியல் இயக்கத்திற்கு மூக்கனைப் பயன்படுத்த நினைத்தாள். அந்தக் கட்சியினர் கொஞ்சமும் வெட்கமில்லாமல் தங்களை ‘மக்கள் மறுமலர்ச்சி இயக்கம்’ என அழைத்துக் கொள்கிறார்கள். அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகள் மற்றும் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் என்ற உண்மையை இந்தத் தருணத்திலே உங்களிடம் கூறிக்கொள்ள இதை ஒரு வாய்ப்பாகக் கொள்கிறேன். தோழர் மூக்கன் அவர்களுடைய மிகவும் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் உரிய செயலாளராகக் கடமை ஆற்றிவரும் நான் சொல்கிறேன், அவருடைய நீண்ட மூக்கு உண்மையானது. எனது தூய்மையான இதயத்தைப்போல. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையிலும்கூட தோழர் மூக்கனின் பின்னால் திரண்டு நிற்கும் மக்கள் கூட்டத்தை நான் வணங்குகிறேன். காம்ரேட் மூக்கன் ஜிந்தாபாத்! மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் ஜிந்தா பாத்! இன்குலாப் ஜிந்தாபாத்!’’

இதையெல்லாம் கேட்டு மக்கள் என்னதான் செய்வார்கள்? நாடு முழுவதிலும் மாபெரும் குழப்பம். மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் (மூக்கன் எதிர்ப்பு அணி) அரசாங்கத்தை எதிர்த்து சரமாரியான குற்றச்சாட்டுகளைப் பொழிந்ததால் எங்கும் பெரும் கொந்தளிப்புகள் எழுந்தன.

மூக்கனுக்கு ‘நீண்ட மூக்குடைய தளபதி’ என்னும் பட்டம் வழங்கப்பட்டு அத்துடன் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க மெடல் பரிசளிக்கப் பட்டது ஏன் என்பது இப்பொழுது வெட்டவெளிச்சமாகத் தெரிந்து விட்டது ஒரு சில ஏமாளிகளைத் தவிர. இந்த விஷயத்தில் மக்களை ஒட்டு மொத்தமாக ஏமாற்றியதில் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் நேரடிப் பங்கு இருக்கிறது. இது மாபெரும் சதித்திட்டம் என்பதில் சந்தேகமே இல்லை.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும், பிரதமரும் கூட. மொத்த மந்திரிசபையும் ராஜினாமா செய்வதுதான் இன்றைய சூழ்நிலைக்கு உகந்ததாகும். ரப்பர் மூக்கு வஞ்சகன் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து அவனை உள்ளே தள்ள வேண்டும். ஜனாதிபதி கொதிப்படைந்தார். பிரதமரின் மனநிலையும் அதுவாகத்தான் இருந்தது. மூக்கனது மாளிகை நோக்கி கவசம் அணிந்த பீரங்கி வண்டிகள் உருண்டு சென்றன. மூக்கன் கைது செய்யப்பட்டான்.

அதன் பிற்பாடு பல நாட்களுக்கு மூக்கனைப் பற்றிய எந்தச் செய்திகளும் வெளிவரவில்லை. மக்கள் மூக்கனையும் மற்றும் அவனது மூக்கையும் மெல்ல மறக்கத் தொடங்கினார். நாடு அமைதி கொண்டது. மூக்கன் அனைவருடைய நினைவுகளிலிருந்தும் மறையத் தொடங்கிய வேளையில் ஜனாதிபதி ஒரு புதுக் குண்டைப் போட்டார். ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அதிகார பூர்வமான அறிவிப்பு:

மார்ச் 9ஆம் தேதி அன்று ‘நீண்ட மூக்குடைய தளபதி’ திருவாளர் மூக்கன் பொது விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார். ரப்பரால் கட்டமைக்கப்பட்ட போலியான மூக்கைப் பொருத்தி, அதை உண்மையானது என்று அனைவரையும் நம்பச் செய்து, மக்களிடம் கண்காட்சி நடத்தி அவர்களிடமிருந்து பணம் வசூலித்த குற்றத்திற்காக மூக்கன் தற்பொழுது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வழக்கை எதிர் நோக்கியுள்ளார்.

நாற்பத்தெட்டு நாடுகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் வருகை புரிந்து மூக்கனின் மூக்கு உண்மையானதுதானா அல்லது செயற்கையானதா எனப் பரிசோதிக்க உள்ளனர். உலக நாடுகளின் அனைத்துப் பத்திரிகையாளர்களும் மற்றும் வானொலி, தொலைக்காட்சி செய்தியாளர்களும் இதில் கலந்து கொண்டு நேரடி தகவல்களைத் தர இருக்கிறார்கள். மக்கள் அமைதியாக இருக்கும்படிகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆனால் மக்கள் கழுதைக் கூட்டங்களாக மாறினார்கள். அவர்கள் அமைதியாக இருக்கவில்லை. அவர்கள் தலைநகரத்தில் மந்தை மந்தையாகக் கூடிக் கொண்டு உணவு விடுதிகளைச் சூறையாடினார்கள், பத்திரிகை அலுவலகங்களைத் தாக்கினார்கள், திரைப்பட அரங்குகளுக்குத் தீ வைத்தார்கள், மதுபானக் கடைகளுக்குள் புகுந்து திருடினார்கள், அரசு அலுவலகங்களையும், காவல் நிலையங்களையும் அடித்து நொறுக்கினார்கள். ஏராளமான இனக்கலவரங்கள் வேறு. மூக்கனது மூக்கின் காரணமான கலவரப் போக்கின் சாக்கில் ஏராளமான ஆண்களும் பெண்களும் உயிர்த்தியாகம் செய்தார்கள்.

மார்ச் 9. ஜனாதிபதி மாளிகை இருக்கும் பகுதியின் மைதானங்கள் மற்றும் சாலைகளெங்கும் மக்கள் நூற்றுக் கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் கூடிவிட்டார்கள். கடிகாரம் சரியாகப் பதினொன்று அடிக்கையில் மாளிகையைச் சுற்றி வைக்கப்பட்ட ஒலிப்பெருக்கிகள் அறிவிப்பை முழங்கியது: மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அமைதிகாக்கவும்! பரிசோதனைத் தொடங்கிவிட்டது.

மருத்துவ நிபுணர்கள் ‘நீண்ட மூக்குடைய தளபதி’யின் மூக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் ஒன்றோடு ஒன்றாக நெருக்கித்திருகினார்கள். ஜனாதிபதி மாளிகைக்கு வெளிப்புறத்தில் கூட்டம் கூட்டமான மக்கள் திரள் தணிந்த சுவாசத்துடன் காத்துக் கிடந்தார்கள்!

மருத்துவ நிபுணர்களில் ஒருவர் மூக்கனுடைய மூக்குத் துவாரங்களை அடைத்தார். அவன் மூச்சுவிட சிரமப்பட்டு வாயைத் திறந்துகொண்டான். மற்றொரு மருத்துவ நிபுணர் அவனது நீண்ட மூக்கின் நுனியில் ஒரு ஊசியால் குத்தினார். அவ்வளவுதான்... அதிசயத் திலும் அதிசயம்! விவாதித்திற்கும் புகழுக்கும் உரிய அந்த மூக்கின் நுனியில் ஒரு துளி ரத்தம் துளிர்த்து நின்றது!

அது ரத்தமும் சதையும் கொண்ட உண்மையான மூக்கு. மருத்துவ நிபுணர்களின் ஏகமனதாக தீர்ப்பு. மூக்கனுடைய நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் உரிய காரியதரிசி நங்கை காவலர்களின் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு, மருத்துவ நிபுணர்களின் ஊடே புகுந்து மூக்கனின் அருகே ஓடிப்போய் அவனது உண்மையென நிரூபிக்கப்பட்ட நீண்ட மூக்கின் நுனியில் மிகுந்த ஆசையுடன் முத்தமிட்டாள்.

“காம்ரேட் மூக்கன் ஜிந்தாபாத்! மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் ஜிந்தாபாத்! தோழர் மூக்கனின் உண்மை மூக்கு எழுச்சி அடைக!’’ கோஷங்கள் ஜனாதிபதி மாளிகையின் சுவர்களை அதிரச் செய்தன.

கோஷங்கள் மெல்ல அடங்கியதும், ஜனாதிபதி அடுத்துவொரு விவேகமான செயலைச் செய்ய இருக்கும் திட்டத்துடன் வெளியே வந்து மக்கள் முன் தோன்றினார். மூக்கனுக்கு மூக்கஸ்ரீ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு மேலும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளார் எனவும் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியானது. “மூக்கஸ்ரீ மூக்கன், எம்.பி.!”

ஒரு பிரசித்திப் பெற்ற பல்கலைக் கழகம் மூக்கனுக்கு M.L.tt., பட்டம் வழங்கி கௌரவிக்க, மற்றொரு பழம்பெருமை மிக்க பல்கலைக் கழகம் அவனுக்கு D.Litt., பட்டம் வழங்கி அப்பல்கலைக்கழகம் தன்னைக் கௌரவித்துக்கொண்டது.

மூக்கஸ்ரீ மூக்கன், Master of Literature!
மூக்கஸ்ரீ மூக்கன், Doctor of Literature!

ஆனால், மக்கள் மறு மலர்ச்சி இயக்கம் (மூக்கன் எதிர்ப்பு அணி) அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக ஒரு கூட் டமைப்பு முன்னணியை உருவாக்கியது. மருத்துவ நிபுணர்களின் தீர்ப்பால் எரிச்சல் அடைந்து அவர்கள் உரத்த குரலெடுத்து கத்தினார்கள்:

“ஜனாதிபதியே பதவி விலகுக! பிரதமரே பதவி விலகுக! மூக்கன் ஒழிக! அவனது ரப்பர் மூக்கு ஒழிக! மக்களிடம் மாபெரும் பொய்மையைப் பரப்ப ஒத்துழைப்பு நல்கியவர்கள் ஒழிக!’’ மக்கள் மறுமலர்ச்சி இயக்கத்தின் போக்கு மட்டுப்பட்டு அடங்கவில்லை.

அறிவுஜீவிகள் மற்றும் தத்துவ வாதிகள் இத்தனை கூச்சல்களையும் குழப்பங்களையும் உண்டாக்க என்னதான் இருந்தன? உலகம் அங்கீகரித்த மூக்கை அவர்களும் உண்மையென ஒத்துக்கொள்ள வேண்டி இருந்தது. அவர்களை துரத்தி அடித்து வெளியேற்றுங்கள்.

Pin It

வரலாற்று வாக்கிலான வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட மாறுதல்கள், நெருக்கடிகள், எதிர் கொள்ளப்பட்ட சிக்கல்கள், ஈட்டப்பட்ட சாதனைகள், அனுபவித்த தோல்விகள், துயரங்கள், வர்க்கப் பிரிவினைகள், வர்க்க நலன்கள், சாதிப் பிரிவுகள், அதன் கொடுமைகள், தேசியக் கருத்தாடல்கள், மத, இன, மொழி புலங்களின் மீதான விவாதங்கள், அவை அனைத்தினூடாக மனித சமூகம், இன்றுவரை உண்மைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது. இதுவரை கண்டடைந்த தத்துவங்களுக்கும், தேடிக் கொண்டிருக்கும் உண்மைகளுக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவதால், மனித சமுகம் போலிகளிடம் தஞ்சமடைய நேரிடுகிறது. அத்தகைய ஆபத்துகளிலிருந்து மக்களை மீட்பவர்களே மாமனிதர்கள். சிந்தனை நேர்மையும் செயலூக்கமுமே மாமனிதனை உருவாக்குகிறது. அந்த வகையில்,

இந்தியத்தின் தேசியக் கவி பொதுவுடமை புரட்சிக்கவி என்றெல்லாம் புகழப்படும் சுப்ரமணிய பாரதியார் கூட மாமனிதர் தான். பாரதி மாமனிதராக உருவாக்கப்பட்டதில் நாம் வருத்தம் கொள்ளவில்லை. சாதிக்கொரு மாமனிதனைக் கொண்டிருக்கும் நாடல்லவா இது! மாமனித பீடத்தைக் கட்டிக் கொடுத்து அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும், பாரதி பற்றாளர்களிடம் நாம் சொல்ல விரும்புகிறோம்; பாரதியின் ‘மாமனிதர்’ பட்டம், அய்யத்திற்குரியது!

ஒரு முழுமையான ‘புரட்சிவாதி’ என்று கார்ல் மார்க்ஸால் புகழப்பட்ட ஷெல்லியின் ‘தாசன்’ என்று தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமை அடைந்திருக்கிறார் பாரதி. பாரதி, முதன் முதலாக ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திவந்த “சக்ரவர்த்தினி’’ என்ற மாதப் பத்திரிகையின் 1908ஆம் ஆண்டு ஜூலை இதழில் துளசி பாய் சரித்திரத்தின் இறுதிப்பகுதி வெளியிடப்பட்டுள்ளது. அதனடியில் ‘ஷெல்லி தாசன்’ என்று கையப்பமிடப்பட்டுள்ளது. அது பாரதி இட்ட கையொப்பமாகும். இளமைக்காலத்தில் எட்டயபுரத்தில் வாழ்ந்த நாட்களிலேயே ‘ஷெல்லியன் சங்கம்’ என்ற சங்கத்தை (Shelleyan Guild) பாரதி ஏற்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் ஷெல்லி மீது அளவற்ற பற்றுதல் கொண்டவராக பாரதி இருந்திருப்பதை அறியமுடிகிறது.

இயல்பான மக்கள் விடுதலையை, சமூக சமத்துவத்தைத் தனது கவிதைகளின் ஆதார சுருதியாகக் கொண்டவர் ஷெல்லி. தனது 18ஆவது வயதில் ‘உரிமைகளின் பிரகடனம்’ என்ற துண்டுப் பிரசுரத்தை எழுதி வெளியிட்டவர்.

ஷெல்லி இறந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் துண்டு பிரசுரத்தை அடிப்படையாகக் கொண்டு கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்தது. சோசிலிச கருத்துருவாக்கங்களின் முன்னோடியாக விளங்கிய ஷெல்லியின் ‘தாசராக’ இருக்க எண்ணிய பாரதியின் ஆழ்மனம், சனாதன இந்து தர்மத்தின் மீது வெறிகொண்ட பற்றுடையதாக இருந்தது. சனாதனத்தை வலியுறுத்தும் இந்து வேத இதிகாசங்களின் மீது ஆழ்ந்த பற்றுடைய ஒரு மனிதர், அதற்கு நேரெதிரான கொள்கைகளையுடையவருக்கு ‘தாசராக’ இருப்பது சாத்தியமற்றது.

ஷெல்லியிடமிருந்து பாரதி கற்றுக் கொண்ட ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்,’ ஆகிய வார்த்தைகளுக்கு எதிரான சனாதன இந்து மத கருத்தை தீவிரமாக வலியுறுத்தி கொண்டிருந்தார் பாரதி. அதன் பின்னும் ஏன் ஷெல்லியின் மீது தன் மரணகாலம் வரை பற்றுடையவராக பாரதி இருந்தார் என்பதற்கு வேறு காரணமிருந்தது.

ஷெல்லியின் கவிதை வளமும், உவமை வேகமும், நவீன மொழியாடல்களும் பாரதிக்குத் தேவைப்பட்டன. பாரதியின் கவிதைகளில் மேலோங்கி நிற்கும் ‘சுட்டுணர்ச்சிக் குறியீடுகள்’ ஷெல்லியிடமிருந்து எடுத்தாளப்பட்டவை. அதற்காக, பாரதி எந்த இடத்திலும் ஷெல்லிக்கு நன்றி பாராட்டவில்லை. ‘பாரதிக்காக தமிழ்மொழி காத்துக்கிடந்தது’ என்று எழுதத் துணியும் தமிழ் மரபுக் காவலர்கள், பாரதியின் கவிதாளுமை ஷெல்லியிடமிருந்து திருடப்பட்டவை என்பதை ஏற்றுக் கொள்ள முன்வருவார்களா?

சனாதன தர்மத்தின் மீது ஆழ்ந்த பற்றுடைய ஒருவர் தன்னை முற்போக்குவாதியாக காட்டிக் கொள்ள முயற்சித்தால் அது அவருக்குச் சிரமமான வேலையாக இருக்கும். ஆனால், பாரதிக்கு அது சுலபமான வேலையாக இருந்தது. ஷெல்லியிடமிருந்து கற்றுக்கொண்ட பொதுவுடைமை முற்போக்குத்தனத்திற்கும், தன் பாரம்பரிய பார்ப்பன சனாதனத்திற்கும் இடையே தாவித் தாவித் திரியும் பாரதியின் ‘கவிதாளுமை’ உண்மையில் அவருடையதுதான்.

அவரது முற்போக்கான சிந்தனைகள்கூட, அவர் உயிரினும் மேலாக நேசித்த நால்வருண சமூகத்தை காப்பாற்றவே முயற்சித்தன. இதைத் தான் புரட்சியாளர் அம்பேத்கார், ‘அறிவு விபச்சாரம்’ என்றார். அவர் பாரதியை நோக்கி இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை, இந்தியா வின் ‘மகாத்மா’வைப் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொன்னார்.

1906ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாரதி தொடங்கிய ‘இந்தியா’ பத்திரிகையின் முகப்பில், ‘ஸ்வதந்திரம் ஸமத்துவம் ஸகோதரத்துவம்’ என்ற முழக்கத்தை பதித்தார். அப்போதே. அவருக்கு மிக உயர்ந்த மனித மதிப்பீடுகளின்பால் அக்கறையும், அதையே நோக்கமாகவும் கொள்ளும் உறுதியும் ஏற்பட்டதாக நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், 1917 ஆம் ஆண்டிலே நடந்த ரஷியப் புரட்சி பற்றி, ‘‘கொலையாலும், கொள்ளையாலும், அன்பையும், ஸமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத்தாமே உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்’’ என்று எழுதுகிறார். பதிலாக, சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அடைய பாரதி சொல்லித்தரும் பாடம் அபத்தமானது என்பதைவிட ஆபத்தான நால்வருண வழி என்று சொல்ல வேண்டும்.

“மிராசுதாரர்கள் அவர்களாகவே முன்வந்து ஏழைகளிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும்.’’, “தொழில் நிர்வாக சங்கம் அமைக்க வேண்டும்’’, “இன்னின்ன தொழிலிற்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்று தீர்மானம் செய்ய வேண்டும்’’, “கிராமத்தில் உள்ள அத்தனை பேருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்துவிடுகிறோம்’’, பிள்ளை பிள்ளை தலைமுறைக்கு இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்த படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகள் மேல் ஆணையிட்டு பிரதிக்ஞை செய்துகொடுக்கிறோம்’’, “செப்புப் பட்டயம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிறோம்’’ இதில் கண்ட கொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும் பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். அதனை உலகத்தாரெல்லாருங்கைக் கொண்டு நன்மையடைவார்கள்’’ என்று எழுதுகிறார்.

இதில் வெளிப்படுவது அவரது அறியாமை என்று நீங்கள் சொல்லுவீர்களா? சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும், பண்ணையார்கள் பட்டயம் எழுதி கோயிலில் சத்தியம் செய்வதன் மூலம் கிடைத்துவிடுமா? இதை படிப்பறிவற்ற பாமரனின் தற்குறித்தனம் என்பீர்களா? அல்லது மகா கவியாகவும், பத்திரிகையாளனாகவும் பொதுவுடைமை பெண்ணிய புரட்சிக்கவியாகவும், மாபெரும் தேச விடுதலைப் போராட்ட தியாகியாகவும் வாழ்ந்த ஒரு மனிதரின் வாக்குமூலம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது இரண்டுமல்ல என்று நான் துணிந்து சொல்கிறேன். மாறாக, சாதிய ஒடுக்கு முறையும், பண்ணை நிலவுடைமைச் சுரண்டலும் தங்கு தடையற்று நிகழ்ந்துகொண்டிருந்த கிராமங்களில் சமூக மேலாண்மை செய்து கொண்டிருந்த ஆச்சாரம் மிகுந்த ஒரு பார்ப்பனரின் குரல் அது. அக்குரலை புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்லது மறுப்பவர்கள் இந்துப் பார்ப்பனியத்தின் சுமை தாங்கிகள்தானே தவிர வேறில்லை.

சுதந்திரத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னூறாண்டுகளுக்கும் மேலாகக் போராடி வருகிறார்கள். மனித உரிமைகள் மறுக்கப்பட்டுவரும் ஒரு நாட்டில் வாழும் அம்மக்கள் எல்லாராலும் ஏமாற்றப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதற்கு யார் பொறுப்பு என்று நீங்கள் கேட்கக் கூடும். சாதி இழிவில் அம்மக்களை அமிழ்த்தி வைத்திருக்கும் சக்தி எது என்ற வினாவுக்குப் பதில் இல்லாமல் இல்லை. “சாதிக் கருத்தியலை மக்கள் சிந்தனையிலே பதித்து வைத்திருக்கிற இந்துமதமே அல்லது இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற வேத சாஸ்திரங்களே ஒடுக்கப்பட்ட மக்களின் பயங்கர எதிரி’’ என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். “ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் வேத சாஸ்திரங்களின் பிடியிலிருந்து விடுவியுங்கள்; மக்களின் மனங்களில் சாஸ்திரங்கள் உருவாக்கி வைத்திருக்கின்ற நாசகரமான கருத்தமைவுகளை நீக்கித் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று வழிகாட்டுகிறார் அம்பேத்கர்.

வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி இந்து வேதங்களையும் இதிகாசங்களையும் நால்வருண முறையையும் போற்றிப் புகழும் ஒரு பார்ப்பனக் கவிஞனிடமிருந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன கிடைக்கும்? என்ன கிடைத்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்!
“பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நமது முதற் கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்துப் பட்லர்களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களில் உள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றி பேச்சு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச் சொல்லு. அவர்களோடு ஸமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன்; அவர்களையெல்லாம் உடனே ஒன்றுசேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள்; மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டைச் செட்டிகளே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள்.’’

பூதாகரமான எதிரியாக நம் கண் முன்னே விரிந்து நிற்கும் பாரதி அதோடு நிற்கவில்லை.

“இனிமேல் பறையன் கை நீட்டாமல் இருப்பதற்கு வழிவகை தேடிக்கொள்ளுங்கள். சென்னைப் பட்டணத்திலே நாலு பட்லர்கள் ஹிந்து மதத்தை உல்லங்கனம் செய்தபோதிலும் நாட்டிலுள்ள பறையர்கள் எல்லாரும் உண்மையான ஹிந்துக்களே என்பதை மறந்துவிடக்கூடாது’’ என்ற தனது முன்னோர்களின் சதிச்செயலை வழி மொழிகிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களை இந்து சாதியக் கட்டமைப்பில் நிலை நிறுத்திவைத்து, அதன் மூலம் தனது சமூக மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கும் இந்துப் பார்ப்பன சாதிப் பயங்கரத்தின் நிழலாய் பரவும் பாரதி,

“சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’’

என்று குழந்தைத் தாலாட்டுப் பாடுகிறார். அதையும் நமது முற்போக்கு வாதிகள் பாரதியின் ‘சாதி எதிர்ப்பு’ என்ற கணக்கில் கொண்டு வருவதை எப்படி புரிந்து கொள்வது! இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும்!

நால் வருண விதிமுறைகளைச் சட்டங்களாக்கிய மநுவின் வாரிசாகவே வந்து நின்று, வகை பிரிக்கிறார் பாரதி. “போலீஸ் வேவுத் தொழில் செய்பவன் பிராமணன் ஆகமாட்டான். குமாஸ்தா வேலை செய்பவன் ஷத்திரியன் ஆகமாட்டான். சோம்பேறியாக முன்னோர் வைத்து விட்டுப் போன பொருளையழித்துத் தின்பவன் வைசியன் ஆகமாட்டான். கைத்தொழில்களையெல்லாம் இறக்கக் கொடுத்து விட்டு சோற்றுக்குக் கஷ்டமடைவோர் சூத்திரர் ஆகமாட்டார். இவர்களெல்லாம் மேம்பாடுடைய சூரிய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீச கூட்டத்தார். நமது தேசம் முன்போலக் கீர்த்திக்கு வர வேண்டுமென்றால், உண்மையான வகுப்புகள் ஏற்பட வேண்டும்.’’ இவ்வாறு நால்வருண படிநிலைச் சமூகத்தைக் கொண்டுவரத் துடிக்கும் பாரதிக்கும், இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதிகளுக்கும் வேறுபாடு இருக்கிறதா? இந்து அடிப்படைவாதத்தை நூறாண்டுகளுக்கு முன்பு மிகத் தீவிரமாக வலியுறுத்திப் பேசிய பாரதி, ஒரு மதச்சார்பற்ற நாட்டின் தேசிய கவியாக கருதப்படுவதை வெட்கக் கேடு என்று சொன்னால் அது தவறாகிவிடாது.

கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்ததினால், மிகப்பெரும் புரட்சி நடத்திவிட்டதாக பாரதியும் கருதினார்; அவரது ஆதரவாளர்களும் கருதுகிறார்கள். அத்தகையப் பூணூல் வெட்டப்படும் ஆட்டிற்குப் போட்ட மாலையாகத்தானிருக்குமே தவிர, கனகலிங்கம் பார்ப்பனராகி விட்டாரா? சாதி இழிவிலிருந்து மீண்டுவிட்டுரா? பாரதியால் அதை உறுதிசெய்ய முடிந்ததா? பாரதி வழியில், அவரது பற்றாளர்கள் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவிக்க ஏற்பாடு செய்திருக்கலாமே! கனகலிங்கத்திற்குப் போடப்பட்ட பூணூல், பெரும் ஆச்சார மாற்றமாக கருதப்படுகிறது.

வேத இதிகாசங்களில் ஆழ்ந்த பற்றுடைய பாரதி, குரூரமும் அழுக்கும் நிறைந்த பார்ப்பன பழமைவாதிகளை வெறுத்தார். இந்திய தேசத்தின் கீர்த்தி மீண்டும் வருவதற்கு நால்வருண சமூக அமைப்பு மீண்டும் ஒழுங்கு செய்யப்படவேண்டும்; அதற்கு தீனிக்காக அலையும் வயிறு தள்ளிய பழமை ஆச்சார சடங்குகளை உயர்வாகக் கருதிய பார்ப்பனர்களை எதிர்க்கத் துணிந்தார். அதன் வெளிப்பாடாக, பல சூழ்நிலைகளில் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமானார். மீண்டும் தெளிந்தார். கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்தது இந்தப் போராட்டங்களினூடாக நிகழ்ந்த கூத்து. அவ்வளவே! அதைப் புரட்சி எனச் சொல்லுவோரின் முகம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பாரதியின் தேசாபிமானமும், இந்து மதப்பற்றும், பவுத்த எதிர்ப்புக் கருத்து நிலையும், மீண்டும் மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் மிகப்பெரும் எதிரியாக கொண்டு வந்து நிறுத்துகின்றன. அவற்றைப் பற்றிய விவாதங்களை, நேரங்கருதி விலக்குகிறேன்.

பாரதி மிகத் தீவிரமாக இயங்கிய காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் இயக்கங்கள் ஏராளமாகச் செயல்பட்டன. பண்டிதர் அயோத்திதாசர், சென்னைப் பட்டிணத்திலே யாவரும் அறியும்படி இயக்கம் நடத்தியவர். 1907 லே சென்னை ராயப்பேட்டையில் சாக்கிய பவுத்த சங்கத்தை நிறுவி, ஜி. அப்பாத்துரையார், பெரியசாமிப்புலவர், குருசாமி, முருகேசம் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டுள்ளார்கள். அவர்களோடு எவ்வித தொடர்பும் இல்லாமல், இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு எதிராக எழுதி வந்தவர் பாரதி.

ரெட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றோர் இந்திய அளவில் பலரும் அறிந்திருக்கக்கூடிய வலிமையான தலைவர்களாகச் செயலாற்றினர். அவர்களோடும் பாரதிக்குத் தொடர்பு இருந்ததாக ஆதாரங்கள் இல்லை. தென்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் மறுமலர்ச்சிக்குத் தீவிரமாகச் செயலாற்றிய பெருமாள் பீட்டர் போன்றவர்களுடன் பாரதிக்கு அறிமுகம் கிடைத்ததற்கான ஆதாரங்களும் இல்லை. எனவே பாரதியின் வாழ்வும் எழுத்தும், அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு ஆக்கப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக அம்மக்களை, சாதிப்படி நிலைச் சமூகத்தில் அமிழ்த்தி, இந்துப் பார்ப்பன சாதியமைப்பிற்குள்ளாகவே அவர்களுக்கு நியாயம் வழங்க துடித்தார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் என்று சொல்லித்தான், போராடிப் பெற்ற இரட்டை வாக்குரிமையை வஞ்சகமாகப் பறித்தார் காந்தி. அக்கொடுஞ்செயல் நடந்து முடிந்து முக்கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனாலும் தங்களின் அரசியல் உரிமைகளுக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதே தளத்தில்தான் பாரதியும் நிற்கிறார். ஆனால், அவர் பறித்தது எதுவுமில்லை. ஆனால் அவரது கருத்துகளை, வாழ்வியலை புதுப்பித்துக் கொண்டிருப்பதன் மூலமும், போற்றிக் கொண்டிருப்பதன் மூலமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான பார்ப்பன சாதியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதுதான் இங்கே வேதனையுடன் குறிப்பிடவேண்டியதாக இருக்கிறது.

வேத இதிகாசப்பற்று, இனவெறி, சமஸ்கிருத மோகம், சனாதனப் பற்று, மூடநம்பிக்கை, ஆணவம், சூழ்ச்சி, தந்திரம், பாரத சிந்தனை, பவுத்த எதிர்ப்பு போன்ற அனைத்துப் பார்ப்பனத் தன்மையோடும் வாழ்ந்து முடித்த பாரதியை தேசியக் கவியாக்கி வைத்திருப்பதன் பொருள் என்ன? முற்போக்குவாதியாகவும் பொதுவுடைமையாளராகவும், பெண்ணிய சிந்தனையாளராகவும் சித்திரித்துக் கொண்டிருப்பவர்களின் நோக்கம் என்ன? கவிதை பாடியதற்காகவும் பூணூல் அணிவித்ததற்காகவும், இன்னும் சில உளறல்களுக்காகவும் பாரதிக்கு சாதி எதிர்ப்பாளர் என்ற பட்டம் சூட்டி மகிழ்வதன் பின்னணி என்ன? என்பதைப் பற்றியே நாம் பெரிதும் கவலையுறுகிறோம்.

காலத்திற்குப் பொருந்தாத பயன்பாடற்ற பாரதியின் தத்துவவியல் கோட்பாடுகளும் கண்ணோட்டமும் இன்றைய இந்து மதவெறி அடிப்படைவாதிகளுக்கு மட்டுமே பயன்தரத்தக்கன. பாரதியின் கவிதைகள் காலச்சாற்றை இழந்து நிற்கின்றன. அத்தகையவற்றை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதனடியில் மறைந்து நிற்கும் நவீன இந்துத்துவ பயங்கரவாதத்தின் தளபதிகள், இந்திய போலிப் பொதுவுடைமைவாதிகள், தமிழ்மரபுக் காவலர்கள் தான் இன்றைய காலச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் முன் நிற்கும் பாரதிகளாகத் தெரிகிறார்கள். பாரதியின் விசம் தடவிய வார்த்தைகளைப் போலவே, இவர்களது வார்த்தைகளும் வெளிப்படுகின்றன.

பாரதி மீதான விமர்சனங்களுக்கு இவர்கள் தரும் பதிலுரைகளில் வெளிப்படும் ‘தலித் எதிர்ப்புணர்வும்’, ‘பார்ப்பனப் பற்றும்’ அவர்களை யார் என அடையாளப்படுத்துகிறது. அவர்களின் இனமரபுக் குறியீடாய் பாரதி வீற்றிருப்பது புரிகிறது. பொதுவுடைமைக் கருத்தியல்களையும், பெண்விடுதலை முழக்கங்களையும், சாதி எதிர்ப்புக் கருத்துகளையும் தனது படைப்புகளில் கொண்டு வந்ததற்காக பாரதிக்குப் புகழ் மகுடம் சூட்டப்படுகிறது என்றால், பாரதியைவிட மிக அழுத்தமாக, துல்லியமாக, அர்ப்பணிப்புடன் தனது கவிதைகளில் பதிவு செய்த பாரதிதாசனுக்கல்லவா இந்த போலி முற்போக்குவாதிகள் மகுடம் சூட்டியிருக்க வேண்டும். அவர்கள் நோக்கம் அதுவல்ல!

நீண்ட நெடுங்காலமாக கொடிகட்டிப் பறக்கும் பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவாகத்தான் பாரதி இன்று வரையிலும் பீடத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறார். பாரதிக்கு வழங்கப்பட்டிருப்பது இலக்கிய மதிப்போ, தத்துவ மதிப்போ, அரசியல் மதிப்போ அல்ல. தங்களை சமத்துவச் சிந்தனையாளர்களாக, சமூக உணர்வாளர்களாக காட்டிக் கொள்ள எத்தனித்தவர்களால் வழங்கப்பட்ட போலி மிகை மதிப்பு! பார்ப்பன அறிவுஜீவிகளாலும், இடைநிலைச் சாதிய தமிழாளர்களாலும், போலிப் பொதுவுடைமைவாதிகளாலும் பாரதிக்கு கட்டியெழுப்பப்பட்ட மகாகவிப் பீடம், ஒடுக்கப்பட்ட மக்கள், சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களை பெரும் வீச்சாகக் கிளம்பி நிறைக்கிறபோது தகர்ந்து சரியும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

பயன்பட்ட நூல்கள்:

1. பாரதியும் ஷெல்லியும், ரகுநாதன், நியு செஞ்சுரி புக் ஹஷஸ், 1979.
2. சுப்பிரமணிய பாரதி கட்டுரைகள், ஸ்ரீ. சி. சுப்பிரமணிய பாரதி, பாரதி பிரசுராலயம், 1946.
3. பாரதியார் கவிதைகள், சி. சுப்பிரமணிய பாரதியார், பாரதி பதிப்பகம், 1960.
4. தமிழ் கவிதைகளில் பாரதியின் தாக்கம், க.த.திருநாவுக்கரசு, தமிழ்க் கடல் பதிப்பகம், 1984
5. The works of P.B. Shelley. The wordsworth Poetey library
6. திராவிட இயக்கப் பார்வையில் பாதியார், வாலாசா வல்லபன், தமிழ்க் குடியரசு பதிப்பகம், 2005
7. பாரதிய ஜனதா பார்ட்டி: விமர்சனமும் விளக்கமும், தொகுப்பு கலகம், 2004
8. பாரதி வளர்த்தது பார்ப்பனியமே: வெற்றிமணி பெரியார் நெறியன் பதிப்பகம், 1987
9. பாரதியின் தத்துவ இயல் கோட்பாடுகள், முனைவர், து.மூர்த்தி, புலமை வெளியீடு, 1994

Pin It

 “மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களைப் பலப்படுத்தவும், அவர்களை அவர்களுக்கே அடையாளம் காட்டவும் கலை என்கிற கருவியால் மட்டுமே முடியும்’’ என்பார் மாவோ. “என்னைக் கலைஞன் என்று குறிப்பிட வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் நான் நடிகன் மட்டுமே’’ என்ற முன்னுரையோடு பதிலளிக்கத் தொடங்கினார் நடிகர் நாசர். ஒரு படப்பிடிப்பின் இடைவேளையில்...

75 வருட தமிழ் சினிமா இதுவரை என்ன சாதித்திருக்கிறது?

Automobile, Textile போன்ற எல்லா துறைகளைப் போலவே தமிழ் சினிமாவும் முன்னேறிப் போய்க்கொண்டுதான் இருக்கிறது.

இவ்வளவு வருட அனுபவமிக்க தமிழ் சினிமா ஏன் இன்னமும் உலக சினிமாக்களோடு போட்டி போட முடியாமல் ஒதுங்கியே நிற்கிறது?

காரணம் என்னன்னா, தமிழ் சினிமா முழுக்க முழுக்க வியாபாரிகள் கையிலதான் இருக்கு. அப்புறம் கதாநாயகர்களை மையப்படுத்தி மட்டுமே இந்தத் துறை நகர்ந்துட்டு இருக்கு. இங்க யாரும் கதை, கருத்து பற்றி யோசிக்கிறதல்ல. கோட்பாட்டு ரீதியா இது கலை, ஊடகம்னு சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமா ஊடகமாகவும் இருந்ததல்ல, கலையாகவும் இல்ல.

மற்ற மொழி சினிமாக்களில் இல்லாத அளவுக்கு தனிமனித வழிபாடு இங்கு அதிகமா இருக்கே, ஏன்?

தமிழ் சினிமாவிலே வியாபாரிகள் ஒரு மனுஷனை பிரபலப்படுத்தி அவன் முதுகுல சவாரி செய்வதன் விளைவுதான் இது.
உலகம் முழுக்க இந்தப் பிரச்னை இருந்தாலும் இங்க கொஞ்சம் அதிகம்தான். இந்தித் திரைப்படத்துறைகூட இந்த விஷயத்துல இப்ப நிறைய மாறியிருக்கு.

இந்த விஷயம் இருக்கக்கூடாதுன்னுதான் நான் நெனக்கிறேன். தனி மனித வழிபாட்டை எப்படி மக்களுக்கு திருப்பி நல்ல வழில குடுக்குறதுங்கிறது அவங்க கையிலதான் இருக்கு. இது அந்த தனி நபர் மனப்பான்மையைப் பொறுத்து மாறிக்கிட்டேதான் இருக்கு. இது மாறணும். உதாரணத்துக்கு இந்தில ஷாருக்கானின் ‘ச்சக்தே இந்தியா’வ சொல்லலாம். ஹீரோயிசம் இல்லாம முயற்சி பண்ணியிருக்காங்க. நல்ல விசயம். பாராட்டலாம்.

நம்மைவிட பல விஷயங்கள்ல பின்தங்கியிருந்த மேற்கு வங்கத்துல ஒரு சத்யஜித்ரே உருவாகியிருக்கும்போது இங்க முடியலயே ஏன்?

நாம, இங்க இப்பவரை வெகுஜன சினிமாவை தான் வளர்த்துகிட்டு வந்திருக்கோம். ஆனா, கேரளால அடூர் கோபாலகிருஷ்ணன் மாற்று சினிமாப் பாதையிலே இன்னமும் பயணிச்சுட்டுத்தான் இருக்கார். இந்தியைப் பொறுத்தவரைக்கும் ஷ்யாம் பெனகல், மிருணாள் சென் இவங்க மாற்று சினிமாவுக்கு நிறைய முயற்சிப் பண்ணாங்க. ஆனா தமிழில் மட்டும்தான் அரசும் சரி, மற்ற எல்லா அமைப்புகளும் சரி, வெகுஜன சினிமாவத்தான் ஆதரிச்சுட்டு இருக்காங்க. அப்படிப்பட்ட சினிமாவத்தான் பார்க்குற மாதிரி மக்களை நிர்ப்பந்திக்கிறாங்க. மற்ற மொழிகள்ல மாற்று சினிமாங்கிறது இலக்கியத்தோட பயணிக்கிற விஷயம். உதாரணத்துக்கு சத்யஜித்ரே திரைப்பட இயக்குநர் மட்டுமில்லே, நல்ல இலக்கியவாதியும் கூட. ஆனா, இங்க அப்படிப்பட்ட ஆட்கள் குறைவு.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், தமிழ் சினிமாவின் எதிர்கால வளர்ச்சிக்காக, தொலைநோக்குப் பார்வையோடு உருப்படியாக எதுவும் செய்ததாக தெரியலையே?

இது ஒரு துரதிஷ்டமான விசயந்தான். ஆனா இங்க சாதிச்சவங்க எல்லாம் அந்த வெற்றியும் சாதனையும் மேல இருந்து வந்த மாதிரியும், தன்னோட ஜாதகத்துல இருக்குறதாகவும்தான் பார்க்குறாங்க. குறைந்தபட்சம் அவங்க உழைப்பையாவது எழுத்தில் பதிவு பண்ணி யிருக்கலாம். சித்தாந்தரீதியா சொல்லணும்னா ‘கலையை பயிற்றுவிக்கும் முறை’ என்கிற சிந்தனை இந்த நூற்றாண்டிலேதான் வந்தது. ரெண்டாவது, தமிழ்ச் சினிமாவ இங்க யாரும் கலையாய் பார்க்கிறதில்லே. அதுதான் பிரச்னை. வரும் காலங்கள்ல அவங்க உழைப்பையும் திறமையையும் பதிவு பண்ண வேண்டியது அவசிய குது. அப்படி நடக்கும் என்று நம்புகிறேன்.

எல்லா காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் நிலவுகிற ஆணாதிக்க மனோபாவம் பற்றி உங்க கருத்து .?

இது வருந்தத்தக்க விஷயம்தான். ஏன்னா, ஆணாதிக்கவாதிகளின் கைகளில்தான் தமிழ் சினிமா இருக்கு. இந்த நிலைமை கண்டிப்பா மாறணும். இதுக்கு, ஆணாதிக்க மனோபாவம் நம்ம எல்லார்கிட்டேயிருந்தும் மாறணும். மகேந்திரன், பாலுமகேந்திரா காலத்துல பெண்களைப் போராளியாகக் காட்டாவிட்டாலும் அவங்களை மையப்படுத்தி எடுத்தாங்க. ஆனா, இப்பதான் பெண்கள் நிலைமை மோசமா ஆயிடுச்சு.
இன்னிக்கு நடிகர்கள் சிலர் கட்சி ஆரம்பிச்சு பெண்களுக்கு அரசியல்ல 33 சதவீதம் இடஒதுக்கீடு கேட்குறாங்க. அவங்க இருக்கிற சினிமா துறையில அத செஞ்சாங்களா? எனக்கு செஞ்ச மாதிற தெரியலை.

தமிழ் சினிமாவுல வன்முறைக் காட்சிகள் இப்போ கொஞ்ச நாளா அதிகமான மாதிரி தெரியுதே?

இது கொஞ்சம் சீரியசான விஷயம்தான். ஆனா, சினிமாவுல வன்முறைக் காட்சிகள் காட்டுறதால நடைமுறை வாழ்க்கையிலே வன்முறை அதிகமாகுதுன்னு என்னால ஏத்துக்க முடியாது. வன்முறைக் காட்சிகள் சினிமாவிலே ரொம்ப யதார்த்தமா எடுக்கிறதால, உண்மையான வன்முறைகளைக் கூட மக்கள் சினிமா மாதிரியான உணர்ச்சியில் பாக்குற சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. எனக்கு வன்முறைக் காட்சிகள்ல உடன்பாடு இல்லை.

எவ்வளவோ விஷயங்களைப் பற்றி பேச வாய்ப்பு இருந்தும்கூட, தமிழ் சினிமா 90 சதவீதம் ‘காதல்’ என்கிற ஒரு விஷயத்தைப் பற்றியே நிறைய பேசியிருக்கே ஏன்?

நீங்க சொல்றது சரி. ஆனா, மக்களோட வாழ்வியலைப் பற்றி இங்க யாரும் சரியா கவனம் செலுத்தறதில்லே. இப்போ இந்த நிலைமை மாறிட்டு இருக்கு. உதாரணத்துக்கு இந்தில இப்போ ‘காதலை’ மையப்படுத்தாம நிறைய படங்கள் வந்துகிட்டு இருக்கு. வந்து வெற்றியும் பெறுது. அது மட்டுமில்லாம இங்க காதலையே கொச்சைப்படுத்துறாங்க. உதாரணத்துக்கு சமீபத்தில தமிழ்ல இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் பொருட்செலவுல எடுக்கப்பட்ட படத்துல கூட, வெளிநாட்டுல இருந்து வந்த ஒரு சாஃப்ட்வேட் இன்ஜீனியருக்கு ஒரு பெண்ணுகிட்டே எப்படி காதலை சொல்றதுன்னுகூட தெரியாத அளவுக்கு தமிழ் சினிமா காதலைக் கேவலப்படுத்தியிருக்காங்க. இங்க காதல் பிரச்சினையில்லை. இங்க நிஜமான காதலை எப்படி சுவாரசியமாக் கொடுக்கிறது அப்படிங்கிறதுலதான் தவறிடுறோம். இந்த நிலைமையை மாத்தணும். ஆனா, யார் மாத்துவாங்கன்னு தெரியலை.

1990களுக்குப் பிறகு வந்த தமிழ் திரைப்படங்கள்ல, சாதி, மத ரீதியிலான திணிப்புகள் அதிகமிருப்பதாகச் சொல்லப்படுதே? உதாரணத்திற்கு தீவிரவாதிகளாக இஸ்லாமியப் பெயர்களையும், கதாபாத்திரங்களையும் உருவாக்குவது!

ஒரு விசயத்தைக் கவனிக்கணும். இங்க யாரும் சமூக சீர்திருத்தத்துக்காக படம் எடுக்கிறதில்லே. எது பரபரப்பா பேசப்படுதோ அது வியாபார மாகுது. இங்க யாரும் திட்டமிட்டு சாதி, மத விசயங்களை திணிப் தில்லை. ஆனாலும், இது பின்னாடி பெரிய விளைவுகளை ஏற்படுத்துதுங்கிறது உண்மை. அதை மறுக்க முடியாது.

அறிவியல், தொழில்நுட்பம், ஊடகம் எல்லாம் வளர்ந்த பின்பும் பிற்போக்குத்தனமான மதவெறியைத் தூண்டும் வகைச் சம்பவங்கள் அரங்கேறுவது குறித்து?

என்னைப் பொறுத்தவரைக்கும் மதமே இல்லைன்னாலும்கூட மனிதன் ஒரு நல்ல வாழ்க்கையை, அமைதியான வாழ்க்கையை வாழமுடியும். ஆனா, இன்னிக்கி காலகாட்டத்துல மதத்தை அரசியல் சக்தியா மாத்துறதுல எனக்கு உடன்பாடில்லை.

பெரியாரைப் பற்றி...?

அவர் உண்மையிலே ஒரு நல்ல சித்தாந்தவாதி. ஆனா, இப்ப அவர் சில அரசியல் கட்சிகளுக்குள் வரையறுக்கப்பட்டு அவர களுக்கு சொந்தக்காரரா சித்திரிக்கப்பட்டிருக்கார். அவரை சித்தாந்தவாதியா நான் பார்க்குறேன்.

காதல், பருத்திவீரன், கற்றது தமிழ் போன்ற படங்களில் சமூகம் சார்ந்த சித்திரிப்புகள் யதார்த்தமாக வந்திருக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து...?

யதார்த்தமான படங்கள்னு சொல்ற எல்லா படங்களுமே நல்ல படங்கள்னு சொல்லிட முடியாது. ஆனா, நீங்க குறிப்பிட்ட படங்களை நான் பார்க்காததனால அதைப்பத்தி என்னால சொல்ல முடியலை.

மக்களை கட்டிப்போடுகிற தொலைக்காட்சித் தொடர்கள் பற்றி?

நான் தொலைக்காட்சிப் பார்ப்பதற்கு நேரமுமில்லை, தொடர்களைப் பார்ப்பதுமில்லை. ஆனால், உலகம் முழுக்க ஊடகங்களை யார் கையாள்றாங்க அப்படிங்கிறது தான் முக்கியம். மற்ற பொருட்களுக்கு இருக்கிற தரக் கட்டுப்பாட்டு நிர்ணயம் அடிப்படிங்கிற விஷயம் படைப்பாளிகளுக்குப் பொருந்தாது. அதனால படைப்பாளிகள் கொஞ்சம் உணர்வுபூர்வமா தங்கள் படைப்பை வெளிக் கொணரணும்.

நீங்க நாடகத் துறையிலே இருந்து சினிமாவுக்கு வந்தவர். இப்போ நாடகத்துறையின் நிலைமை சரியில்லையே?

இந்தச் சிதைவுங்கிறது நாடகக்கலைக்கு மட்டுமல்ல, நாட்டுப்புறக் கலை, தெருக்கூத்துன்னு எல்லா விஷயத்துலயும் இருக்கு. இதுல முக்கியமான விசயம். (சிரிப்புடன்) உலகம் முழுக்க ‘அரசு’ங்கிற எந்திரம்தான் பிரதானமா இருக்கு. அது சில அக்கறைகள் எடுத்துருக்கணும். ஆனா, தமிழ் நாட்டைப் பொறுத்த வரைக்கும் அரசியலும் சினிமாவும் ஒண்ணா கலந்துருக்கிறதனால மற்ற கலைகள் மீது அதிக கவனம் செலுத்த முடியாமப் போச்சு. ஆனா, திரைப்படங்களை துவக்கி வெச்ச ஐரோப்பிய நாடுகள்ல இன்னமும் நாடகத் துறை நல்ல நிலைமைலதான் இருக்கு. இரண்டு துறையச் சார்ந்தவங்களுக்கும் தன்னுடைய துறையப் பற்றியும், தன்னை வளர்த்த கலையைப் பற்றியும் ஒரு தெளிவான அக்கறை இருந்திருக்கணும், தவறிட்டாங்க. தவறிட்டோம்.

மாற்று சினிமா, மாற்று ஊடகம் என்கிற கனவு மெய்ப்படுமா?

மெய்ப்படாதுன்னு யார் சொன்னது? எதுவுமே முயற்சி செய்யக்கூடிய படைப்பாளிகளைப் பொறுத்தது.

எவ்விதமான நிர்பந்தமுமின்றி, கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சமூகப் பொறுப்புடன் பதிலளித்து, தன்னுடைய மற்றொரு முகத்தை நிறைவு செய்தது இந்த திரைமுகம்.

சந்திப்பு : நெல்சன், ஜார்ஜ்

Pin It

உட்பிரிவுகள்