நிஜமான நிஜத்தின் வழியே நிம்மதிக்கு வெகு தூரம் உண்டென்ற ஓர் உளவியல் அடுக்கின் வழியே காண்பதெல்லாம் கனவினைப் போலப் புதைந்தழிந்தே போகும்தான். அதற்கு முன் முகம் முகமாகச் சிதையும்... மனம் மனமாய் அலையும் மானுட வேட்கையின் மறுபக்கம் இப்போதெல்லாம் ப்ளூ டிக்கில் கிளர்த்தெழுவதாகவே நம்பலாம். அதுவே அது கொண்ட நிஜம் என்ற தோரணை டிக் டிக் என நீலக்கோட்டில் நிம்மதி தேடுவதுதான் இங்கே சிக்கல்.
ப்ளூ டிக் ஆப்ஷனை மறைத்துவிட்டால் போதும்.... குறுஞ்செய்தி அனுப்புவோன் மரண பீதியில் அல்லாடுவான். பார்த்தானா இல்லையா... பார்த்துவிட்டு ஏன் அமைதியாக இருக்கிறான்.. என்னாச்சு என ஒரு மாயக்கொக்கி காற்று வழியே வந்து காதில் மாட்டியிருக்கும். ஒருவேளை அந்தப் பக்கம் இருப்பது அவளாக இருந்துவிட்டால் முடிந்தது கதை. தனக்குத் தானே தவிப்பு கொண்டு, தானே தன்னைத் தாக்கியும் கொண்டு, ஒரு சூனியத்தில் சுகம் தேடிச் சுபம் போடப் படும் தவிப்பு இருக்கிறதே... தக திமி தா... ம்ஹும், சக திமிர் தான்.
அன்புக்கு ஏங்குகிறவன்... ஆசைக்குப் சாகிறவன்... தேவைக்குத் தாங்குகிறவன்... எல்லாம் தாண்டி உறவுக்குள் சிக்கினவன் என இந்த ப்ளூ டிக்கில் சிக்காதவன் பாக்கியவான். அதுவும் சில குரூர கைகள்... கைபேசி திரையில் செய்தி வந்ததைப் பார்த்துவிட்டு அதில் ஒரு குளுகுளு மனநிலைக்குச் சென்றுவிட்டு, ஆனாலும் வேலையில் இருப்பதாக மாலை வரை காட்டிக்கொண்டு, பிறகு பார்த்து, இப்போதுதான் பார்த்த மாதிரி பாவிக்கும் படுகேவலமான கவன ஈர்ப்பு முறை இது. முன்னெல்லாம் சண்டைனா நேரா பேசி விஷயத்தைச் சரிபண்ற காலம் இருந்துச்சு. இப்போ ப்ளூ டிக் வழியே ஒரு பனிப்போரை நிகழ்த்தி... அதில் சூடு கொள்ளும் சுயம் என்ற தன்முனைப்பு தன்னைத்தானே சுமந்து எடை ஏறி உறவுகளில் நகர முடியாத சூழலை உருவாக்கிக் கொண்டுவிடுகிறது.
20 வினாடிகளுக்கு ஒரு முறை ப்ளூ டிக் வந்தபடியே இருக்க ஆழ்மனம் விரும்புகிறது. அதிலும் ஒன்று டிக் ஆகி இன்னொன்று ஆகாத போது இனம் புரியாத கொந்தளிப்பு உடல் எங்கும் உருளுகிறது. சந்தேகம் வந்துவிடுகிறது. ரத்த அழுத்தம் எகிறிவிடுகிறது. சமநிலை குலைந்துவிடுகிறது. எந்த உறவோ அந்த உறவின் அடித்தளமே ஆட்டம் கொண்டுவிடுகிறது. சொல்லொணா உருவத்தின் வடிவம் உருகி... உள்ளே சொற்களற்ற புழுக்கம் கொப்பளிக்கும். நம்பிக்கை தரைதவழ, அவநம்பிக்கை வானமேறி, இந்த வாழ்க்கையே என்று தொத்து வியாதி போன்ற சுய கழிவிரக்கப் புராணத் தத்துவம் வாசித்துக் கொண்டிருக்கும்.
என்னவா இருக்கும்.. என்ற கற்பனைகளின் வழியே சென்று நிற்கும் இடம் கோபம். உச்சிக்கு ஏறிய தவிப்பின் அல்லாடல்களை ஒரு சின்ன டிக் உருவாக்குகிறது என்றால் மானுடத்தின் உயரம் இத்தனை சிறு துளிக்குத் தாவியது ஏன்?
ஏன் பாக்கல... ஏன் பார்த்துட்டுப் பதில் சொல்லல... ஏன் இன்னொரு டிக் அடிக்கவே இல்ல. மொபைல் யார்கிட்ட இருக்கு? ஏன் என்னை அவாய்ட் பண்றாங்க? நான் என்ன பண்ணினேன்? யார் கூட பேசிட்டு இருந்த? என்ன பண்ணிட்டு இருந்த? வேணும்னே அலைய விட்டுப் பாக்கறியா? இல்ல நீ பாத்துட்ட, ப்ளூ டிக் காட்டிருச்சே. ஓ அப்போ வேணும்னுதான் டிக் காட்டாத மாதிரி செட் பண்ணி வெச்சிருக்கியா... இன்னும் பல வழிகளில், பல விதங்களில் கேள்விகளைக் கேட்கலாம். ஆனால் மறுமுனை அவசரத்துக்கு உச்சா போயிருக்கும். அந்த இடைவெளியில்தான் இந்த மடை திறந்த மல்லுக்கட்டு.
அந்த இன்னொரு டிக் வரும் இந்த சில நொடிகளில் இத்தனை எடை கற்கள் சரமாரியாகச் சுய தாக்குதலில் ஈடுபட்டிருக்கும். ஏனோ அந்தச் சில நொடி தாமதம் கூட தாங்கொணாத் தவிப்பைத் தருகிறது என்றால், அன்பு, பேரன்பு, காதல் இப்படி எதையாவதையோ சொல்லி அந்த இன்னொரு டிக்கைச் சமன்படுத்தப் பார்க்கக் கூடாது. உடனுக்குடன் வந்தாக வேண்டிய பிடிவாதமாகவும் இருக்கலாம். ஆதிக்க மனநிலையின் அலப்பறை இப்படி அலைபேசிக்குள் காற்றாய் வருகிறது.
நீலக் கோட்டில் தன்னைச் சுருக்கிக்கொண்ட மனிதனின் கனம் தாங்க முடியாததாக இருக்கிறது.
அப்படியே அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தால், அந்த குரூரம் பகல் முழுக்க டிவி பார்த்துக்கொண்டு மல்லாந்துதான் கிடக்கும். நமக்காக ஒருவர் காத்திருக்கிறார் என்று தெரிந்த பிறகு, அதை அணு அணுவாக ரசித்து, எறும்பைக் கொல்வது போலக் கொண்டாடுவது, அந்த உறவின் வழியே ஒரு ஈகோவை நிகழ்த்திப் பார்த்துத் தன்னைத் தராசில் சற்று உயர வைத்துக் கொள்வது. தனக்குள்ளாகவே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள இனியொருவன் / வள் கிடைத்த நுட்ப உரிமை மீறல் இது. அற்ப சந்தோஷம் என்பார்களே... அதுதான் இது. மன அடுக்கின் சிடுக்கு வழி சித்திரம் இப்படித்தான் வண்ணம் மீறி வழியும்.
நமது அன்புக்குக் காத்திருக்கிறார்கள் என்று தெரிந்த பிறகும் அதைக் காக்க விடும் அன்பு எப்படி அன்பு? நமக்காகக் குறுஞ்செய்திகள் காத்திருக்கின்றன என்பது பெருமிதம் அல்ல, பொறுப்பு.
இதில் இன்னொரு கூட்டம் இருக்கிறது. பெட்டியில் இருக்கும் செய்தி அடுத்த நாள் அதுவாகவே அழிந்து விடும்படி செட் செய்துகொள்வார்கள். பெரிய ராணுவ ரகசியத்தைப் பகிர்ந்துகொள்வது போல இவர்களின் செயல் எரிச்சலூட்டும். இவர்களுக்குப் பொதுவாகவே யார் மீதும் நம்பிக்கை இல்லை என்று காட்டி கொடுத்துவிடும் தொழில்நுட்பத் தந்திர பாகம் இது. தொழில் ரீதிக்குச் சரி, தோழமை ரீதிக்குத் தப்பு.
இன்னைக்கு அனுப்பிய செய்திக்கு நாளை ராத்திரி சரக்கு போட்டால்தான் பதில் சொல்லத் தோன்றுவதெல்லாம் ஒன்றுமே சொல்வதற்கில்லை. அந்த உறவின் மீதான மரியாதையற்ற செருக்கு... டிக்-ஐ தாண்டிய தக்கு மஹராஜ் மனநிலையில் செயலாற்றுகிறது என்று பொருள். விட்டகலுவதைத் தவிர வாய்ப்பு கிடைத்தால் விட்டெறிய ஒரு செருப்பைப் பத்திரப்படுத்த வேண்டும்.
முக்கியம்... முக்கியம் இல்லை என்பதெல்லாம் தேவையில்லை. ஒருவருக்கு ஒருவர் செய்தி அனுப்பியிருக்கிறார் என்றால் அதற்குப் பதில் சொல்ல வேண்டியது... சக மனிதனின் சமநிலை தத்துவம். என்ன நேரமில்லை? அப்படி என்ன... காலத்துக்கு மணி கட்டற வேலையா பார்த்துட்டுருக்க? ம்ஹும்... முன்னுரிமை இல்லை. உள்ளே விருப்பம் இல்லை. மனதுக்குள் அந்த குறிப்பிட்ட நபர் மீது மரியாதை இல்லை. அதுக்குத்தான் அத்தனை சாக்கு.
முதல் ரிங்கில் எடுத்தால் அழைப்பவரை விட எதிலோ குறைந்து விடுவதாகவே மனம் நம்புகிறது போல. ஏழெட்டு ரிங் விட்டு எடுக்கலாம். ஒரு டீசன்ட்டான தரத்தில் வாழ்விருக்கிறது என்று உணர்த்தலாம் என்றா அந்த ஒரு தான்தோன்றி தாமதம்? நான் கூப்ட்டா எடுக்கறதுல்ல... இரு சிக்கிருக்கான் என்று கடைசி ரிங் வரை விட்டு இன்னும் குரூரம் கொய்யா பழமாய் இனிக்க வேண்டுமெனில் இரண்டு மூன்று முறை அழைப்பைத் தவறவிட்டு ஒரு கீழ்மையான மேதமையை நிகழ்த்திப் பார்க்கிறார்கள்.
எல்லாம் மனித நுட்பங்கள். மனதின் வழியே உறவை சேமிக்கும் விளைவுகள். இந்தக் குளறுபடிகளுக்கு அன்பையோ உறவையோ காரணமாய் நீட்டக் கூடாது. அதற்கு நிஜமான பதில் "நான்" என்பதுதான்.
கவிஜி