கடந்த சில வருடங்களாக தமிழர் வாழ்வியல், தமிழர் நடைமுறை, தமிழக அரசியல், தமிழ்ச் சமூகம் ஆகியவற்றை கவனிக்கிற பொழுது சில தமிழ் வார்த்தைகளின் சொல்லாடல் தவறாக அல்லது ஒரு சார்பாக பிரயோகிக்கப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
ஆண்பால்/ பெண்பால் என்று தனித்தனியாக குறிப்பிடவும், இருபாலரையும் சேர்த்து குறிப்பிடுவதற்கான பொதுச்சொல் என்று வேறெந்த மொழியிலும் இல்லாத தனிச்சிறப்பாக தாய்த்தமிழ் மொழியில் சொற்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு "தலைவர்" இருபாலாருக்குமான பொதுச்சொல், தலைவன்/தலைவி என்பது பாலினத்துக்குறிய சொற்கள். "நடிகர்" பொதுச்சொல், நடிகன்/நடிகை பாலின சொற்கள், "ஆசிரியர்" பொதுச்சொல், ஆசிரியன்/ஆசிரியை பாலின சொற்கள், இவ்வாறு பல சொற்களை உதாரணம் கூற முடியும்.
ஆனால், தமிழில் சில சொற்களுக்கு பாலின வேறுபாடு கிடையாது. உதாரணத்திற்கு, "தொழிலாளர்" என்றால் அது உழைக்கும் தொழிலாளர்களான அனைத்து பாலினத்தவருக்கும் பொருந்துமே அன்றி, யாதொரு தனி பாலினத்தையும் குறிக்கின்ற சொல்லல்ல. அதேபோல் பாலின வேறுபாடற்ற பல சொற்கள் தமிழில் இருக்கின்றன. தொண்டர், நெசவாளர், பொறியாளர், மருத்துவர், வழக்கறிஞர், சிறுபான்மையினர் என்ற இவ்வனைத்து சொற்களும் நடைமுறையில் பாலின வேறுபாடற்ற சொற்களாகவே பயன்பாட்டில் உள்ளன. மருத்துவர் என்றால் ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம் திருநங்கை திருநம்பியராகவும் இருக்கலாம்.
பிரச்சனை எங்கே வந்துவிட்டது என்றால், "இளைஞர்" என்ற சொல்லின் பயன்பாட்டில் தான் வந்துவிட்டது, இது நடைமுறையில் மிகப் பெரிய பிரச்சனையாக தான் இருக்கிறது. "இளைஞன்" என்றால் ஆண்பால், "இளைஞி" என்றால் பெண்பால், "இளைஞர்" என்றால் ஆண்பால், பெண்பால் மற்றும் அனைத்து பாலினத்தவரையும் குறிக்கின்ற சொல்லாகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் இங்கே நடைமுறையில், தமிழக அரசியலில், தமிழ் சமூகத்தில் "இளைஞர்" என்ற சொல் பாலின வேறுபாடற்ற சொல்லாகத்தான் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற மிகப்பெரிய கேள்வியை முன்வைக்க வேண்டியிருக்கின்றது.
இளைஞர் என்ற சொல்லை ஆங்கிலத்தில் "Youth" என்று ஆராயும் பொழுது, collective noun ஆக பயன்படுத்தும் பொழுது, youth என்ற சொல்லுக்கு, பதின் பருவத்திற்கும் மேல் adulthood க்கும் கீழான வயதுக்குட்பட்ட, பாலின வேறுபாடற்ற, "இளையோரை" குறிக்கும் சொல்லாக உலகம் முழுவதும் பொருள்படுகிறது. வயது வரம்பு மட்டுமே விதியாக இருக்கிறது. ஆண்பாலை மட்டுமே குறிக்கும் சொல்லாக youth பயன்படுத்தப்படுவது இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. Singular noun ஆக குற்றச்செயல்களில்/கெட்ட செயல்களில்/விரும்பத்தகாத ஈடுபட்ட ஒரு தனிநபர் இளைஞனை குறிப்பிடும் பொழுது மட்டும் young boy அல்லது young man என்று ஆண் பாலினத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. பிரிட்டிஷ் ஆங்கில அகராதியில் youth என்ற சொல்லுக்கு exclusive ஆக young male, young male rogue ஐ, youf என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது - again, singular noun pertaining to young "male" involved in unwanted activities.
நிகழ்காலத்தில், Youth/இளைஞர் என்றால் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்ட, பாலின வேறுபாடற்ற, அதாவது, gender equal/ gender neutral term ஆக, அனைத்து இளையோரையும் குறிக்கும் சொல் என்பது உலகம் முழுமைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாக இருக்கிறது. ஐ நா சபையும் இதே போன்றதொரு விளக்கத்தினை அளித்திருக்கிறது. அந்த விளக்கத்தில் கூட, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாச்சாரங்களில் இளைஞர்கள் என்றால் அவர்கள் எந்த வயதுக்குட்பட்டோர் என்பதை வரையறை செய்வதில் தான் வேறுபாடு நிலவுகிறதே தவிர, அனைத்து பாலினத்தவரும் இளைஞர் என்ற சொல்லுக்குள் அடக்கம் என்பதில் எவருக்கும் குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான் ஐ நா சபை இளைஞர்களுக்கான விளக்கத்தை இவ்வாறு விவரித்துள்ளது (கீழே)...
உலகம் முழுமைக்கும் இளைஞர் என்ற சொல்லாடலின் பயன்பாடு இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிரயோக படுத்தப்பட்டிருக்கும் பொழுது, தமிழகத்தில், தமிழக அரசியலில், தமிழ் சமூகத்தில் மட்டும் இளைஞர் என்ற சொல் எப்போதுமே exclusive ஆக "ஆண்" பாலினத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாக நடைமுறை பயன்பாட்டில் இருக்கிறது என்பதே எதார்த்தமான உண்மை. ஒட்டுமொத்த இந்திய நாட்டில், ஒன்றிய அரசில், பல்வேறு இந்திய மாநிலங்களில் இச்சொல் சரியான பயன்பாட்டில் இருக்கிறதா என்பது தெரியவில்லை, ஆனால், இந்தியா முழுமைக்கும் வருடம்தோறும் கொண்டாடப்படுகின்ற National Youth Day (12 ஆம் தேதி ஜனவரி) அனைத்து பாலின இளையோரையும் உள்ளடக்கிய நிகழ்வாகவே இணையத்தில் காணக் கிடைக்கின்றன. 2024 ஆம் வருடம் நடந்தேறிய அந்த நாளுக்காக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் படத்தில் கூட இருபாலாரும் இடம்பெற்றிருக்கின்றனர்.
முக்கியமாக தமிழகத்தின் அரசியல் கட்சிகளில் இச்சொல் எவ்வாறு பிரயோகப் படுத்தப்பட்டிருக்கிறது என்பது கண்கூடு. பெரும்பாலான அரசியல் கட்சிகளில் "இளைஞர் அணி" இருக்கிறது. அந்த இளைஞர் அணிகள் எந்த பாலினத்தவரை மட்டுமே உள்ளடக்கிய அணி என்பது அனைவரும் அறிந்ததே, தமிழக அரசியல் கட்சிகளின் இளைஞர் அணி உட்பட, பிற அணிகளில், அதாவது மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி என்றால் இவற்றில் அனைத்து பாலினத்தவரும் இருப்பர், ஆனால், இளைஞர் அணியில் மட்டும் ஆண் பாலினத்தவர் மட்டுமே இருக்கின்றனர்.
இதை எப்படி இவ்வளவு காலங்களும் விவாதத்திற்கு உட்படுத்தாமல் அனுமதித்தோம் அல்லது ஏற்றுக் கொண்டோம் என்பது புரியவில்லை. எனக்குத் தெரிந்து, நாம் தமிழர் கட்சியில் மட்டும் இளைஞர் பாசறை என்பது சரியாக பொருள் புரிந்துகொள்ளப்பட்டு, பாத்திமா பர்ஹானா என்கிற இசுலாமிய பெண் தான் அதற்கு மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தார் என்று செய்திகள் கவனித்திருக்கிறேன். இப்போதும் அவர் தான் ஒருங்கிணைப்பாளரா என்பது தெரியவில்லை, மேலும், ஒரு வயதுக்குட்பட்ட அனைத்து பாலின இளையோரும் அப்பாசறையில் இருக்கின்றனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. மற்றபடி எந்த ஒரு தமிழக அரசியல் கட்சியிலும் அனைத்து பாலின இளையோரும் இளைஞர் அணிகளில் இருப்பதாக தெரியவில்லை. சில கட்சிகளில் இளம் பெண்கள் பாசறை என்று தனியாக ஒரு அணி இருப்பதையும் கவனிக்க முடிகிறது.
தமிழ் படைப்புகளிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, அன்றாட சமூக நடைமுறையிலும் சரி, ஏறத்தாழ அனைத்து விடயங்களிலும் இளைஞர் என்ற சொல் ஆண்பாலை மட்டுமே குறிப்பதாக அமைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. "மாணவர்" என்ற சொல்லும் கூட சில சமயங்களில் ஆண் பாலினத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகின்றது. பள்ளிகளில், பள்ளி கல்வி குறித்த செய்திகளில் மாணவர் அல்லது "மாணவச்செல்வங்கள்" என்பது அனைத்து பாலின மாணவர்களையும் குறிக்கும் என்றாலும், இதே சொல் அரசியல் கட்சிகளில் "மாணவர் அணி" என்கிற பொழுது, ஆணுக்கு மட்டுமே உரியதாக மாறிவிடுகின்றது. அதேபோல் சிறுவர் என்றாலும் அது ஆண்பாலை குறிக்கின்ற சொல்லாகவே தற்போது மாறியுள்ளது (சிறுவன் சிறுமி என்றிருந்தாலும்).
"ர்" என்பது மரியாதைக்குறிய விகுதி என்பதால், மேன்மை பொருந்திய விகுதி என்பதால், "ர்" விகுதியுடன் முடியும் அனைத்து பொதுச்சொற்களும் ஆணுக்குரிய சொற்களாக, ஆண் பாலினத்தை மட்டுமே குறிப்பிடுகின்றன சொற்களாக, நிலவும் ஆணாதிக்க சமூகத்தில் நிலை நாட்டப்பட்டு விட்டனவோ என்கிற அச்சம் ஏற்படுகிறது, முக்கியமாக இளைஞர், சிறுவர், மாணவர், தலைவர், ஆசிரியர், நடிகர் போன்ற சொற்களில் !!
உலக வரலாற்றில் எத்தனையோ வகையான ஒடுக்குமுறைகளையும் அடக்குமுறைகளையும் பெண் பாலினத்தோர் அனுபவித்திருந்தாலும், அவற்றை கடந்து வந்திருந்தாலும், இன்றளவும் பெண்களுக்கான ஒடுக்குமுறைகளும் வேறுபாடுகளும் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், ஒரு சொல்லின் பொருளில் / சொல்லாடலில் இருந்தே முற்றும் முழுவதுவாக பெண் பாலினத்தவரை வெளியேற்றிய கொடுமை தமிழில் நிகழ்ந்துவிட்டதோ என்ற கேள்வியை அனைவரிடமும் முன்வைக்க விரும்புகிறேன். திராவிட மாடல் ஆனாலும், ஜெய்பீம் மாடல் ஆனாலும், சமூக நீதி மாடல் என்றாலும் இன்னும் எத்தனை எத்தனை மாடல்கள் வந்தாலும் பெண்களுக்கான தீண்டாமை மட்டும் திண்ணம்....
பெரும்பாலான விடயங்களில் முற்போக்காகவும், உலகுக்கே எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் தமிழ்ச் சமூகம், இத்தகைய ஒரு பெரும் பிழையை சரி செய்யாமல் கடந்து சென்றால், வரலாற்றின் கரும் பக்கங்களில் இடம் பெறுவது நிச்சயம். எனவே, தமிழக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள் இவ்விடயத்தை விவாதத்துக்கு உட்படுத்தி, மாற்றத்தை ஏற்படுத்தி, பொதுச் சமூகத்திற்கும் சரியான சொல்லாடலை கொண்டு சேர்ப்பது நம் அனைவரின் முக்கியக் கடமை என்று கருதுகின்றேன்.
- தேன்மொழி
References:
https://www.un.org/en/global-issues/youth#:~:text=Who%20Are%20the%20Youth%3F,of%2015%20and%2024%20years
https://www.youtube.com/watch?v=pwLi-FRhVtU