இறந்தவர்கள் குறித்து வருந்தும்போது ‘மிஸ் யூ’ என்ற சொற்கள் ஏகத்துக்கும் புழக்கத்தில் இருக்கிறதைப் பார்க்கிறோம். இப்போதெல்லாம் ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட துக்கத்தின் வெளிப்பாடாகவே அது ஆகிவிட்டது. உண்மையில் அந்தச் சொற்கள் அந்தத் துயரத்தைத் தாங்கி வருகிறதா என்றால் இல்லை. இதயம் வருந்துவதை அந்தச் சொற்கள் வாரி வழங்குகிறதா என்றால் இல்லை. ‘மிஸ் யூ’வை வலிமையற்ற சொற்களாகவே பார்க்கிறேன். அதில் இதயத்திலிருந்து வெளிவரும் துக்கமோ துயரமோ இருப்பதாகத் தெரியவில்லை. நிஜமாகவே துக்கம் உள்ளவர்கள் கூட அந்த வார்த்தைகளின் வழியே தங்களின் வெளிப்பாட்டைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

சாலையில் போகிற போக்கில் கோயிலைப் பார்த்ததும் கன்னத்தில் போட்டுக் கொள்வது போலத்தான்... இந்த ‘மிஸ் யூ’கள்.

நினைவு நாள் வந்துவிடக் கூடாது.. யாரும் செத்துப்போகக் கூடாது. உடனே ‘மிஸ் யூ’ வந்து விடுகிறது. நேரா லண்டனில் இருந்து கிளம்பி காலையில்தான் ஊருக்கு வந்தது போல. ‘RIP’தான். ‘miss you’தான். அதைத் தாண்டி வெளிப்படுத்த வேறு வார்த்தைகள் உணர்வுபூர்வமாக இல்லையா? உதட்டிலிருந்து கிளம்பும் ‘sorry... thanks’ போல இந்த ‘miss you’ சலிப்பு. இழந்ததற்கான மரியாதையை இந்த வார்த்தைகள் கொன்று கூறுபோடுவதாகவே தோன்றுகிறது.

இங்கிலீஷ்காரன்.... சாவுக்குக் கல்லு மாதிரி நிற்பான். கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு அதையும் ஒரு நிகழ்வாவே பார்ப்பான். விதிவிலக்குகள் இருக்கலாம். நாம நெஞ்சு நெஞ்சா அடிச்சுக்கிட்டு அழற கூட்டம். மொத்த வாழ்க்கையே பறிபோன மாதிரி துக்கம் நமக்குப் பிச்சுக்கும். அழுது கதறி ஒப்பாரி வைக்கறதுக்கும் ‘மிஸ் யூ’ சொல்றதுக்கும் எத்தனை தூரம்! அய்யயோ சகிக்கவே முடியாத சொற்களாக இந்த ‘மிஸ் யூ’கள் இருக்கின்றன. துக்கத்தை மூடிய முகமூடியாகவே தெரிகிறது இந்த வார்த்தைகள்.

இறந்தவர்கள் குறித்த கவலைக்கெல்லாம் ‘மிஸ் யூ’ சொல்வது மேம்போக்காக இருக்கிறது. மரித்தவர்களை அவமானப்படுத்துவதாகப் படுகிறது. அத்தனை சுலபமாகப் போய்விட்டார்களா மரித்தவர்கள்? ‘மிஸ் யூ’... என்ன ‘மிஸ் யூ’... எவ்ளோ ‘மிஸ் யூ’... எப்படி ‘மிஸ் யூ’... அதெல்லாம் சொல்ல வார்த்தை இல்லையா... இல்ல வருத்தம் இல்லையா? நானும் அட்டெண்டன்ஸ் போடறேன்னு சொல்றதா ‘மிஸ் யூ’? மரணத்தை முழுசா உள்வாங்கினா ‘மிஸ் யூ’ வருமா? முசுக் முசுக்குனு அழ வருமா?

பாட்டி செத்த அடுத்த நாள் வேலைக்குப் போறவன்லாம் இருக்கான். அவன் சொல்ற ‘மிஸ் யூ’வெல்லாம் மரணத்தைச் சுலபம் ஆக்குகிறதோ என்னவோ... மனிதத்தை மட்டமாக்குகிறது.

நானும் மொய் வைக்கிறேன்ங்கிற மாதிரி அந்த ‘மிஸ் யூ’. ஒருத்தன் சொல்லிட்டா போதும்... ஆளாளுக்கு ‘மிஸ் யூ’. அதைத் தாண்டி உள்ளே ஒண்ணுமே ஓடாதா? குழுவில் ஒருவன் ‘மிஸ் யூ’ சொல்லிவிட்டால் போதும். பிறகு கண்ணை மூடிக்கொண்டு அடுத்தடுத்து வந்து விழும் ‘மிஸ் யூ’கள் எதுக்கு வம்பு, சொல்லி வைப்போம் என்பது போலவே இருக்கும். மரித்தவரின் இடத்தை மலிவுபடுத்துவதாகவே இந்த ‘மிஸ் யூ’ இருக்கிறது.

மாறாக அவர் பத்தின விஷயங்களைப் பகிர்ந்துகொள். பேசு. புலம்பு. அழு. இதெல்லாம் பண்ண வரலையா.. அமைதியா இரு. என் புருசனும் கச்சேரிக்குப் போறாங்கிற மாதிரி ‘மிஸ் யூ’ சொல்லிட்டுத் திரியக்கூடாது.

காலம் மாறுகிறது சரிதான். அதுக்காக அம்மாவை ‘ஆன்டி’னா கூப்பிட முடியுமா? அது போலத்தான். ஒருவரின் இழப்பை ‘மிஸ் யூ’ வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. பேருந்தைப் மிஸ் பண்ணினதுக்குச் சமமாக உடன் வாழ்ந்த ஒருவரைக் குறிக்கிறது இந்த ‘மிஸ் யூ’. முன்னது இயந்திரம். பின்னது இதயம். துயரத்துக்கும் துக்கத்துக்கும் முகமூடி போடுவதாகவே இந்த ‘மிஸ் யூ’ இருக்கிறது. துக்கம் உணர்வுகளில் உன்னதமானது. அதற்கு ஆங்கில வார்த்தைகள் ஈடு கொடுக்காது. ஒருவர் இல்லை என்பது மலை போன்றது. அதற்கு மலைத்து களைத்து உள்ளே ஒரு போராட்டம் நடக்க வேண்டும். போகிற போக்கில் ‘மிஸ் யூ’ சொல்லிவிட்டுத் தேநீர் அருந்த சென்றுவிடக் கூடாது.

‘மிஸ் யூ’வை வெற்றுச் சொற்களாகவே பார்க்கிறேன். அதில் உறவுப் பிணைப்போ உண்மையோ இருப்பதாக நான் உணரவில்லை. ஒருவேளை இங்கிலீஷ்காரன் அவன் ஊரில் சொல்லும்போது அது சரியாகப் பொருந்து கொள்ளுமோ என்னவோ. இங்கே அகம் சேர்வதில்லை. முகம் தொட்டுப் போகும் வலிய திணித்த சோகம் அது. ‘மிஸ் யூ’ சொல்வதற்கான இடங்கள் வேறு. அது நினைவு நாளுக்கோ மரித்த மனிதனுக்கோ ஆனது அல்ல. என் வாழ்வில் நீ இல்லை. நீ என்னோடு எங்களோடு இல்லை. நீ இந்த உலகத்தில் இல்லை.. என்பது எத்தனை பெரிய கனம். அதைத் தாங்கும் இந்த ரெட்டைச் சொல்லில் பலம் இல்லை. பாலிஷ் செய்யப்பட்ட துக்கத்தின் முகத்தில் துக்க வீட்டு ஈக்கள் எப்படி வந்தாடும்?

துக்கத்தில் பங்கெடுப்பது பண்பாடு. வார்த்தைகள் எனில் அமைதி அழகானது. நானும் இருக்கிறேன் என்று உளறிக் கொட்ட ‘மிஸ் யூ’ வை விட்டெறியக் கூடாது.

எது ஒண்ணுக்கும் ‘வேற லெவல்’னு சொல்லிட்டு அடுத்து வார்த்தை கிடைக்காமல் அல்லது தெரியாமல் தடுமாறுவதற்குச் சமம் இந்த ‘மிஸ் யூ’. நெஞ்சின் ஆழத்திலிருந்து வரும் வலி மிகுந்த துயரத்துக்கு ‘மிஸ் யூ’ போதவில்லை. மேலும் அது அந்த மரணத்தையோ நினைவு நாளையோ வெகு சாதாரணமாக்கி விடுகிறது. ஒரு சகஜ நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இந்த வயசுன்னு இல்ல.. எல்லா வயசுக்காரங்களுக்கும் ‘மிஸ் யூ’. மரியாதையற்ற தொனி இந்த சொற்களில் வெளிப்படுவதை உணர முடிகிறது. இப்போ யாரைப் பார்த்தாலும் எந்த வயசுக்காரனும் ‘ப்ரோ’னு சொல்ற மாதிரி... இந்த ‘மிஸ் யூ’ மேம்போக்குச் சொல்லாடல். டபுள் கிளிக் உலகத்தில்... எமோஜிகள் வாழ்க்கை முறை போல.. இந்த ‘மிஸ் யூ’வில் மானுட சகவாசம் சற்று அற்று இருக்கிறது.

‘மிஸ் யூ’களில் மனம் திறந்த வருத்தம் வெளிப்படுவதில்லை. மாறாக வருத்தத்தை நானும் பகிர்ந்துகொண்டேன் என்ற கணக்குதான் பதியப்படுகிறது.

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.