என் அம்மா விசாலாட்சியின் நினைவாக அறக்கட்டளை தொடங்கியபோது, முதலில் செய்ய வேண்டியது எதுவென்று யோசித்தேன். பரிசுகள், போட்டிகள், நூல்கள் எல்லாம் பின்னால் வரலாம். கருத்தரங்கங்கள் நடத்தலாம். அதற்கு முன்னால், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில் வளரும் பிள்ளைகளுக்கு நம் சமூகம் என்ன செய்கிறது என்பதைக் கவனப்படுத்துவதே அவசியம் என்று தோன்றியது.
என் வீட்டில் அம்மாவுக்கும் அக்காவுக்கும் என்ன துயரம் இருந்தது என்பதை என்னால் முழுமையாகச் சொல்ல முடியாது. அது அவர்களுடைய கதை. அவர்கள் கதைகளைக் கூறுவதற்கு முன்பு என்னுடைய கதையை முதலில் கூறுவதுதான் சிறப்பாக இருக்கும். எனக்கு என்ன நடந்தது என்பதை என்னால் இயல்பாகச் சொல்ல முடியும். அதைச் சொல்வது ஒரு தனிமனிதனின் புலம்பல் அல்ல; இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பிள்ளைகள் வாய் திறக்காமல் சுமக்கும் ஒரு சுமையின் சாட்சியம். அந்தச் சுமைக்கு உளவியல் ஆய்வுகள் வைத்துள்ள பெயர்: "பெற்றோராக்கல்" (Parentification).
ஏறத்தாழ நாற்பது வயதில், கொள்கை முரண்பாடுகள் காரணமாக நான் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறினேன். கட்சியை விட்டு வெளியேறுபவர்களுக்குப் பொதுவாகச் சில பாதைகள் உண்டு. சிலர் தம் சொந்த வாழ்க்கையைக் கவனிக்கத் தொடங்குவார்கள்; சிலர் வேறு கட்சியில் சேர்வார்கள்; அரிதாகச் சிலர் குடிக்குப் பழகுவார்கள். ஆனால் எனக்கு நடந்தது இவற்றில் எதுவுமல்ல. வெளியே வந்த சில நாட்களிலேயே பயங்கரமான கனவுகள் வரத் தொடங்கின. படுத்தால் கனவுகள் மட்டுமே. அவை சாதாரணக் கனவுகள் அல்ல. உலகில், நாட்டில் எங்கோ நடக்கும் ஏதோ ஒரு பிரச்சினையின் நடுவில் நான் இருப்பேன். ஈரான்-அமெரிக்கா போர் என்றால் அந்தப் போரின் நடுவில் நான்; ஒரு திரைப்படத்தில் கண்ட போராட்டம் என்றால் அதன் நடுவில் நான், சில நேரம் அதற்குத் தலைமை தாங்குபவனாக. பெரும்பாலும் அடிவாங்குபவனாக, பாதிக்கப்படுபவனாக. துடித்து எழுவேன்.
இது ஒருநாள், இருநாள் நிகழ்வல்ல. ஓராண்டு, ஈராண்டு, மூன்றாண்டு என்று தொடர்கதையானது. ஒவ்வொரு நாளையும் அப்படித்தான் எதிர்கொண்டேன். இரவு என்பது எனக்குக் கொடூரமான காலமாக மாறியது. தூக்கம் வராமல் இரண்டு மணி நேரம் புரண்டு படுத்த பிறகு, வீட்டில் எல்லோரும் தூங்கிய பின், எங்கள் கிராமத்தின் நிசப்தமான தெருக்களில் நான் மட்டும் தனியே நடப்பேன். "கொஞ்சம் குடித்தால் தூக்கம் வரும்" என்று நான் வேலை செய்த அலுவலகத்தில் பலர் சொன்னார்கள். குடித்தேன்... ஆனால் இரவு பன்னிரண்டு மணிக்குத்தான் குடித்தேன். வேறு வழியே இல்லாமல் குடித்தேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தக் காலம் முழுவதும் என் மனைவி எனக்குப் பெரும் துணையாக இருந்தார். அவர் எதைப் பற்றியும் கவலைப்படாத, உண்மையிலேயே மகிழ்ச்சியான பெண். நிம்மதியாகத் தூங்குவார். ஒருவேளை அந்த மன அமைதிதான் என்னைத் தாங்கும் வலிமையை அவருக்குத் தந்ததோ என்னவோ. ஆனால் இந்தக் குடி ஆரம்பத்தில் நன்மை செய்தாலும் பின்னால் பெரும் துயரமானது. அது இன்னொரு கதை; அதை பிறகு சொல்கிறேன்.
"இது ஏன் எனக்கு மட்டும் வருகிறது?" என்ற கேள்வியோடு மருத்துவம் தேடத் தொடங்கினேன். தொடக்கத்தில் ஹோமியோபதி மருந்து ஓரளவு பலன் தந்தது. பின்னர் சித்த மருத்துவம், யோகா, ஆயுர்வேதம் என்று ஒவ்வொன்றாகத் தேடினேன். பல மருத்துவர்களைச் சந்தித்தேன். எல்லாம் தற்காலிகத் தீர்வுகள்தான் தந்தன. ஆனால் என்னை உயிர் பிழைக்க, பைத்தியம் பிடிக்காமல் இருக்க இந்த மருத்துவ சிகிச்சை முறைகள் உதவின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2009-இல் ஈழத்தில் நிகழ்ந்த பெரும் இனப்படுகொலை என்னை மீண்டும் உலுக்கியது. உலகில் நடக்கும் ஒவ்வொரு கொடுமைக்கும் தன்னையே பொறுப்பாளியாக உணரும் ஒரு மனத்துக்கு அது இன்னும் தாங்க முடியாத பெரும் சுமையாக மாறியது. அதிலிருந்து மீள வேண்டுமென்றால் மீண்டும் ஆங்கில மருத்துவத்துக்குத்தான் போக வேண்டும் என்று முடிவு செய்து, மனநல மருத்துவர் அரவிந்தன் அவர்களை அணுகினேன். இன்றுவரை 16 ஆண்டுகளுக்கு மேலாக அவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன்.
நேற்று பேராசிரியர் சிவகுமார் அவர்களின் 80-ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியபோது, சொல்ல நினைத்த சிலரின் பெயர்களை விட்டுவிட்டேன். மேடையை விட்டு இறங்கியதும் பேராசிரியர் கல்யாணி, "66 வயதிலேயே உங்களுக்கு நினைவு தவறுகிறதா?" என்று கேட்டார். என்ன சொல்வது? இருபது ஆண்டுகளாகத் தூக்கமின்மையோடும் அதன் விளைவுகளோடும் வாழ்ந்து வருகிறேன். நீண்டகாலத் தூக்கக் குறைபாடு நினைவாற்றலையும் கவனத்தையும் பாதிக்கும் என்பது இன்று பரவலாக அறியப்பட்ட மருத்துவ உண்மை.
வேரைத் தேடி: நாலரை வயதுக் குழந்தை
"ஏன்?" என்ற கேள்விக்கு விடை நானே தேட வேண்டியிருந்தது. கண்டடைந்த விடையின் தீவிரம் தொடக்கத்தில் எனக்குப் புரியவில்லை; இப்போதுதான் முழுமையாகப் புரிகிறது. அதன் வேர் என் நாலரை வயதுக் குழந்தை பருவத்தில் இருக்கிறது. என் அப்பா இறந்தபோது எனக்கு நாலரை வயது. அந்த வயதுக் குழந்தைக்கு உலகம் பற்றி எதுவுமே தெரியாது. அப்போதுதான் உலகைப் பார்த்து, மண்ணில் வீடு கட்டி விளையாடி, கற்கத் தொடங்குகிறது. நான்கிலிருந்து ஏழு வயது வரையிலான காலம்தான் ஒரு குழந்தை மனிதனாக உருவாகும் அடித்தளக் காலம். அந்தக் காலத்தில் சமூகம் அதற்குத் தர வேண்டியது பாதுகாப்பும் அன்பும் அறிவும். ஆனால் எனக்குச் சொல்லித் தரப்பட்டது வேறு: "இனி நீதான் குடும்பத்தின் தலைமகன். அம்மாவுக்கு, தம்பிகளுக்கு, அக்காவுக்கு, குடும்பத்திற்கு நீதான் பொறுப்பு." உண்மையில் குடும்பத்தை நடத்தியவர் அம்மா. பொருளாதார ரீதியாகவும் எல்லா விதத்திலும் பொறுப்பேற்றவர் அவர்தான். ஆனால் சாதிச் சமூகமும் ஆணாதிக்கமும் அவரது தலைமையை மறுத்தன; அவரைப் புறக்கணித்து, ஒதுக்கி வைத்தன. அவர் சுமந்த சுமையை அங்கீகரிக்காமல், "குடும்பத் தலைமை" என்ற சுமையை ஒரு நாலரை வயதுக் குழந்தையின் தோளில் ஏற்றின. இந்தச் சுமையை இன்று வரை 66 முதுமை வயதிலும் என்னால் இறக்கி வைக்க முடியவில்லை.
"அப்பாவைத் தின்றவன்": சொற்களால் புனையப்பட்ட குற்றம்
எனக்குப் பதினாறு வயதானபோது அம்மாவும் கர்ப்பப்பை புற்றுநோய் ஆபரேஷனில் ஜன்னி கண்டு இறந்தார். சென்னை போரூர் சாலையில் பெரியபனிசேரி என்ற இடத்தில் உள்ள ஒரு மோசமான வளைவில், ஒரு லாரி மோதி எனது அப்பா எனது நான்கரை வயதில் இறந்தார். சாலையில் இருந்த பள்ளமாக இருக்கலாம், வாகனக் கோளாறாக இருக்கலாம், ஓட்டுநரின் தவறாக இருக்கலாம். அந்த வளைவு இன்றும் ஆபத்தானதாகவே இருக்கிறது. ஆனால் உறவினர்கள் என்னிடம் சொன்னது இன்றும் என் நினைவில் தெளிவாக இருக்கிறது: "அப்பாவைத் தின்றாய்; இன்று அம்மாவையும் தின்றுவிட்டாய்."
அப்படியென்றால் நான் என் அப்பாவைக் கொன்றேனா? அம்மாவைக் கொன்றேனா? எந்த விதத்திலும் பொறுப்பே இல்லாத ஒரு குழந்தையின் மீது ஒரு சமூக அமைப்பு எப்படி இவ்வளவு கொடூரமான குற்றத்தைச் சுமத்துகிறது? இது முழுப் பொய். ஆனால் இந்தச் சொற்கள் பத்து, பதினைந்து ஆண்டுகள் முழுவதும் மீண்டும் மீண்டும் என் மீது சுமத்தப்பட்டன. இது எனக்கு மட்டும் கிடையாது. இப்படிப் பலர் இருக்கிறார்கள்.
நம் சமூகத்தில் ஒரு பிள்ளை பிறந்த சில காலத்தில் பெற்றோரில் ஒருவர் இறந்தால், அந்தப் பிள்ளையின் "ராசி", "ஜாதகம்", "பிறந்த நேரம்" மீது பழி போடும் வழக்கம் பரவலாக உள்ளது. மருத்துவ, சமூகக் காரணங்களால் நிகழும் மரணத்துக்கு ஒரு குழந்தையைக் காரணமாக்கும் இந்த மூடநம்பிக்கை, அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதையும் சிதைக்கும் ஆற்றல் கொண்டது.
பெற்றோராக்கல் (Parentification): ஆய்வுகள்
குடும்ப உளவியல் ஆய்வாளர்கள் இவான் போசோர்மெனி-நாகி (Ivan Boszormenyi-Nagy), ஜெரால்டின் ஸ்பார்க் (Geraldine Spark) ஆகியோர் 1970-களில் "பெற்றோராக்கல்" என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தனர். ஒரு குழந்தை தன் வயதுக்குப் பொருந்தாத, பெற்றோர் ஏற்க வேண்டிய பாத்திரங்களையும் பொறுப்புகளையும் ஏற்கக் கட்டாயப்படுத்தப்படுவதே பெற்றோராக்கல் என்று சமீபத்திய ஆய்வு மதிப்பாய்வு ஒன்று வரையறுக்கிறது [2].
குடும்பச் சிகிச்சையாளர் வர்ஜீனியா சாட்டிர் (Virginia Satir), மகன் குடும்பத் தலைவனின் இடத்தில், பொதுவாகத் தந்தையின் இடத்தில் அமர்த்தப்படும் நிலையை "பாத்திரத்துக்கும் செயல்பாட்டுக்கும் இடையிலான முரண்" என்று விவரித்தார் [1]. இல்லாத பெற்றோரின் இடத்தை மூத்த பிள்ளையைக் கொண்டு நிரப்புவது ஆபத்தானது என்று எரிக் பெர்ன் (Eric Berne) எச்சரித்தார் [1].
என் வாழ்க்கை இந்த வரையறைகளுக்கு நேரடி எடுத்துக்காட்டு. ஆய்வாளர்கள் பெற்றோராக்கலை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர் [3]:
கருவிசார் பெற்றோராக்கல் (Instrumental): சமையல், தம்பி-தங்கையரைப் பார்த்துக் கொள்வது, வீட்டு வேலைகள், வருமானம் ஈட்டுவது போன்ற அன்றாடப் பொறுப்புகளைக் குழந்தை சுமப்பது.
உணர்வுசார் பெற்றோராக்கல் (Emotional): பெற்றோரின் மனத் துயரங்களைக் கேட்டு ஆறுதல் சொல்பவராக, அவர்களின் உணர்வுத் தேவைகளை நிறைவு செய்பவராகக் குழந்தை மாறுவது.
ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில், குறிப்பாக மூத்த பிள்ளை, இல்லாத பெற்றோரின் பொறுப்புகளை ஏற்க நேரிடுவது அதிகம் என்று ஆய்வுகள் சுட்டுகின்றன [3]. சில குடும்பங்களில் இல்லாத பெற்றோரின் பாலினத்தோடு பொருந்துவதற்காக, மூத்த பிள்ளையாக இல்லாவிட்டாலும் ஒரு மகனோ மகளோ இந்தப் பாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதும் உண்டு [1]. தந்தை இறந்த குடும்பத்தில் மகன் "தலைமகன்" ஆக்கப்படுவது இதுதான்.
இதன் நீண்டகால விளைவுகள் கடுமையானவை. குழந்தைப் பருவத்தில் பெற்றோராக்கப்பட்டவர்களிடம் வளர்ந்த பிறகு மனச்சோர்வு, பதற்றம், போதைப் பழக்கம், வேலையின்மை, உடல்நலக் குறைவு, குறைந்த கல்வி நிலை ஆகியவை அதிகமாகக் காணப்படுவதாக முந்தைய ஆய்வுகள் காட்டுகின்றன [2]. ஒற்றைப் பெற்றோருடன் வாழ்வதும், பொருளாதார நெருக்கடியும் இந்த அபாயத்தை அதிகரிக்கக்கூடும் [2].
அதே நேரம் ஒரு முக்கிய நுணுக்கத்தையும் கவனிக்க வேண்டும்: ஒற்றைப் பெற்றோர் குடும்பம் என்பதே பெற்றோராக்கலுக்குக் காரணம் அல்ல. அந்தப் பெற்றோருக்குக் கிடைக்கும் சமூக, உணர்வு ஆதரவின் அளவும் தரமுமே முக்கியக் காரணி என்று ஒரு ஆய்வு முன்மொழிகிறது [4]. அதாவது, தனித்து நிற்கும் தாய்க்கு உறவும் சமூகமும் துணை நின்றால், குழந்தையின் தோளில் சுமை ஏறாது. என் அம்மாவுக்கு அந்தத் துணை கிடைக்கவில்லை; மாறாக, அவர் புறக்கணிக்கப்பட்டார். பழி மட்டும் எனக்குக் கிடைத்தது.
குழந்தைகளின் "மாய சிந்தனை":
நான்கிலிருந்து ஏழு வயது வரையிலான குழந்தைகள் "மாய சிந்தனை" (Magical Thinking) கொண்டவர்கள் என்று குழந்தை உளவியல் விளக்குகிறது. தன் எண்ணமோ சொல்லோ செயலோ ஒரு நிகழ்வை உண்டாக்கிவிடும் என்று குழந்தை நம்புகிறது. இந்த வயதுக் குழந்தைகள் தம்மை மையப்படுத்தியே உலகைப் பார்ப்பதால், பெற்றோரின் மரணத்துக்குத் தாமே காரணம் என்று அடிக்கடி நம்பிவிடுகின்றனர் [5].
போதுமான விளக்கம் கிடைக்காதபோது, அன்புக்குரியவரின் மரணத்துக்குக் குழந்தை தன்னையே குற்றம் சாட்டிக் கொள்ளக்கூடும் என்று பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக வழிகாட்டி ஒன்று குறிப்பிடுகிறது [6]. மாய சிந்தனை, இழப்புக்குத் தானோ வேறொருவரோ பொறுப்பு என்ற தவறான முடிவுகளுக்குக் குழந்தையை இட்டுச் செல்கிறது என்று ஜேம்ஸ் ஃபோகார்ட்டி தன் நூலில் விளக்குகிறார் [7].
இதனால்தான் துயர ஆலோசகர்கள் பெற்றோருக்கு முதலில் சொல்வது: "மரணம் குறித்து உங்கள் குழந்தைக்கு இருக்கும் குற்ற உணர்வையும் பொறுப்புணர்வையும் நீக்குங்கள்; மரணத்துக்கான உண்மைக் காரணத்தைத் தெளிவாக, உண்மையாக விளக்குங்கள்" [5].
இப்போது யோசித்துப் பாருங்கள்: இயல்பாகவே தன்னைக் குற்றம் சாட்டிக் கொள்ளும் இயல்புடைய வயதில் உள்ள ஒரு குழந்தையிடம், பெரியவர்களே "நீதான் காரணம்" என்று சொன்னால் என்ன நடக்கும்? குழந்தையின் மனத்தில் உருவாகும் தவறான நம்பிக்கையை அகற்ற வேண்டிய சமூகம், அதை உறுதிப்படுத்தி, கல்லில் செதுக்கி வைக்கிறது. அதுதான் எனக்கு நடந்தது.
குழந்தைப் பருவக் காயமும் வயதான பின் தூக்கமின்மையும்
நாற்பது வயதுக்குப் பிறகு வந்த அந்தக் கனவுகளுக்கும் நாலரை வயதில் நடந்ததற்கும் என்ன தொடர்பு? இதற்கு இன்று உலகளாவிய ஆய்வுகள் விடை தருகின்றன.
"குழந்தைப் பருவப் பாதக அனுபவங்கள்" (Adverse Childhood Experiences, ACEs) என்று அழைக்கப்படும் நிகழ்வுகளில் பெற்றோரின் மரணமும் ஒன்று. 2015-இல் வெளியான முறைசார் மதிப்பாய்வு ஒன்று 30 ஆய்வுகளைத் தொகுத்தது; அவற்றில் பின்னோக்கிய ஆய்வுகள் 28-இல் 25, தூக்கக் கோளாறுகளுக்கும் குழந்தைப் பருவத் துன்பங்களுக்கும் இடையே புள்ளியியல் ரீதியாக முக்கியத் தொடர்பைக் கண்டன. துன்ப அனுபவங்களின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரிக்க அதிகரிக்க, இந்தத் தொடர்பும் வலுவடைவதாகப் பல ஆய்வுகள் காட்டின [8].
அமெரிக்காவின் "Add Health" நீள்காலவியல் ஆய்வு, இளமைப் பருவம் முதல் நடுத்தர வயது வரை 22 ஆண்டுகள் மக்களைப் பின்தொடர்ந்தது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதக அனுபவங்கள் கொண்டவர்களுக்கு வயதுவந்த பிறகு தூக்கமின்மை அறிகுறிகளுக்கான வாய்ப்பு ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகம் என்று அது கண்டது [9].
குறிப்பாகக் கனவுகள் பற்றி: குழந்தைப் பருவத்தில் பெற்றோரை இழந்தவர்கள் வயதுவந்த பிறகு அடிக்கடி பயங்கரக் கனவுகளைக் காண்பதாக 2023-இல் அமெரிக்கத் தூக்க அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்தது [10]. பாதக அனுபவங்கள், குறிப்பாக நெருக்கடியான காலகட்டங்களில், மனத்தை அதீத விழிப்பு நிலையில் (hyperarousal) வைத்திருக்கும் வாய்ப்பை அதிகரிக்கின்றன என்றும் அது குறிப்பிட்டது [10].
நெதர்லாந்து ஆய்வாளர்களின் 2023 ஆய்வு மேலும் ஒரு படி செல்கிறது: குழந்தைப் பருவக் காயம், வெட்க உணர்வைக் கையாளும் தவறான முறைகள் வழியாக, வயதுவந்த பிறகான தூக்கமின்மைக்கும் அதீத விழிப்புக்கும் இட்டுச் செல்லக்கூடும் என்று அது முன்மொழிகிறது [11].
இந்த ஆய்வுகளின் வெளிச்சத்தில் என் அனுபவத்தைப் பார்க்கும்போது ஒரு தெளிவான வரைபடம் தெரிகிறது. கட்சியை விட்டு வெளியேறியது என் வாழ்வின் ஒரு நெருக்கடிக் கட்டம். பல ஆண்டுகள் ஒரு அமைப்பின் கூட்டுப் பொறுப்புக்குள் இருந்த மனம், திடீரென்று தனித்து நின்றது. "இது தோல்வியா? இதற்கு நான்தான் காரணமா?" என்ற கேள்விகள் எழுந்தபோது, நாலரை வயதில் விதைக்கப்பட்ட குற்ற உணர்வு மீண்டும் தலைதூக்கியது. உலகின் ஒவ்வொரு போரிலும் போராட்டத்திலும் நான் நடுவில் நின்று அடிவாங்கிய கனவுகள், "உலகில் நடக்கும் எல்லாத் துயரங்களுக்கும் நீதான் பொறுப்பு" என்று என் ஆழ்மனம் நம்பியதன் வெளிப்பாடுகள்.
பொறுப்பு என்றாலே அச்சம்
இந்தக் காயம் என் பொது வாழ்விலும் ஒரு விசித்திரமான முரணை உருவாக்கியது. எந்த அமைப்பில் இருந்தாலும், எந்தப் பொறுப்பையும் உடனே ஏற்க நான் மிகவும் தயங்குவேன். இன்றுவரை அந்தத் தயக்கம் இருக்கிறது. ஆனால் அந்தப் பொறுப்பை ஏற்றவர்களைவிட அதிக வேலையை நான் செய்வேன். வேலை செய்வேன்; பொறுப்பை மட்டும் ஏற்கமாட்டேன்.
காரணம் எளிமையானது: பொறுப்பே இல்லாத ஒரு விஷயத்துக்கே என்னைக் குற்றவாளியாக்கினார்கள். அப்படியென்றால், உண்மையிலேயே பொறுப்பை ஏற்றால், ஏதேனும் தவறு நேர்ந்தால், அந்தக் குற்ற உணர்வு பல மடங்கு பெருகிவிடுமோ என்ற அச்சம். பொறுப்பு என்பது எனக்குக் கடமை அல்ல; தாங்க முடியாத சுமையாக மாறிவிட்டது.
அறிவளவில் எனக்குத் தெரிகிறது: அப்பாவின் மரணத்திலும் அம்மாவின் மரணத்திலும் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால் நான் வளர்க்கப்பட்ட விதம் என் மனத்தில் ஏற்படுத்திய குற்ற உணர்விலிருந்து விடுபட வழியே தெரியவில்லை. அது வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது; இன்றுவரை தொடர்கிறது. இதிலிருந்து எப்படி மீள்வது என்பது என் அறிவுக்குத் தெரிந்தாலும், என் மனத்துக்கு இன்னும் தெரியவில்லை.
ஒரு தனிமனிதனின் பிரச்சினை அல்ல
இதை நடராஜன் என்ற ஒரு தனிமனிதனின் பிரச்சினையாக நீங்கள் பார்க்கலாம். ஆனால் புள்ளிவிவரங்கள் வேறு கதை சொல்கின்றன.
ஐ.நா. பெண்கள் அமைப்பின் "உலகப் பெண்களின் முன்னேற்றம் 2019-2020" அறிக்கையின்படி, இந்தியாவில் ஏறத்தாழ 1.3 கோடி குடும்பங்களை, அதாவது மொத்தக் குடும்பங்களில் 4.5 விழுக்காட்டை, தனித்து வாழும் தாய்மார்கள் நடத்துகின்றனர் [12].
இதைத் தவிர, மேலும் ஏறத்தாழ 3.2 கோடி தனித் தாய்மார்கள் கூட்டுக் குடும்பங்களுக்குள் வாழ்கின்றனர். அவர்கள் அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களில் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை [13].
தனித் தாய் நடத்தும் குடும்பங்களில் வறுமை விகிதம் 38 விழுக்காடு; இருபெற்றோர் குடும்பங்களில் இது 22.6 விழுக்காடு மட்டுமே [12].
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கணவனை இழந்தவர்கள், மணவிலக்குப் பெற்றவர்கள், பிரிந்து வாழ்பவர்கள், மணமாகாதவர்கள் உள்ளிட்ட தனித்த பெண்கள் 7.14 கோடி பேர் [14].
இந்தக் கோடிக்கணக்கான குடும்பங்களில் வளரும் பிள்ளைகளில் எத்தனை பேர் "நீதான் தலைமகன்", "நீதான் அம்மாவுக்குத் துணை", "உன் ராசிதான் காரணம்" என்ற சொற்களைச் சுமந்து வளர்கிறார்கள்? இதற்கு எந்தப் புள்ளிவிவரமும் இல்லை. ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், உலகெங்கும் இந்தப் பிள்ளைகளின் சாட்சியங்களை நாம் எளிதாகத் தேடிக் கண்டடைய முடியும். "பெற்றோராக்கல்" என்ற சொல், ஒற்றைப் பெற்றோர் குடும்பத்துப் பிள்ளைகள் அனைவருக்கும் உலகம் முழுவதும் ஒரு பொதுவான சுமையாக இருக்கிறது.
சாதிச் சமூகம், ஆணாதிக்கம், தாயின் மறைக்கப்பட்ட உழைப்பு
என் அனுபவத்தில் இரண்டு அநீதிகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. முதலாவது, குழந்தையின் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றமும் பொருந்தாத பொறுப்பும். இரண்டாவது, உண்மையில் குடும்பத்தைத் தாங்கிய தாயின் உழைப்பு மறைக்கப்பட்டது.
ஆணாதிக்கச் சமூக அமைப்பு, குடும்பத் தலைமை ஆணுக்கு மட்டுமே உரியது என்று நம்புகிறது. தந்தை இல்லாதபோது, வீட்டை உண்மையில் நடத்தும் தாயை அது தலைவியாக ஏற்பதில்லை. பதிலாக, எவ்வளவு சிறிய வயதாக இருந்தாலும் ஒரு ஆண் குழந்தையைத் "தலைமகன்" ஆக்குகிறது. சாதிச் சமூகத்தின் சடங்குகளும் வாரிசு முறைகளும் இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகின்றன. இதனால் ஒரே நேரத்தில் தாயின் உழைப்பு அழிக்கப்படுகிறது; குழந்தையின் குழந்தைப் பருவம் பறிக்கப்படுகிறது. இரண்டு உயிர்களும் இந்த அமைப்பின் பலியாகின்றன.
பெண்கள் விஷயத்தில் இது வேறு வடிவம் எடுக்கிறது. தாய் இல்லாத குடும்பங்களில் மூத்த மகள் "சின்ன அம்மா" ஆக்கப்படுவது பரவலானது. மூத்த மகள்கள் மீதான இந்தச் சுமை அவர்களின் மனநலத்தைக் கடுமையாகப் பாதிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன [1].
என்ன செய்ய வேண்டும்?
என் அனுபவமும் இந்த ஆய்வுகளும் சேர்ந்து சில தெளிவான கடமைகளை நம் முன் வைக்கின்றன:
- ஒரு குழந்தையிடம் பெற்றோரின் மரணம் பற்றிப் பேசும்போது உண்மையைத் தெளிவாக, எளிமையாகச் சொல்லுங்கள். "இது உன் தவறல்ல" என்று திரும்பத் திரும்ப உறுதி கூறுங்கள்.
- "ராசி", "ஜாதகம்", "பிறந்த நேரம்" என்ற பெயரில் ஒரு குழந்தையின் மீது மரணத்தின் பழியைப் போடுவது ஒரு வன்முறை என்பதைச் சமூகம் உணர வேண்டும். இந்த மூடநம்பிக்கைக்கு எதிராக முற்போக்கான இயக்கங்கள் பேச வேண்டும்.
- "இனி நீதான் குடும்பத் தலைவன்" என்ற சொற்களைக் குழந்தைகளிடம் சொல்லாதீர்கள். குடும்பத்தை நடத்தும் தாயை அல்லது தந்தையைத் தலைமையாக அங்கீகரியுங்கள்.
- தனித்து நிற்கும் பெற்றோருக்கு உறவினர்களும் சமூகமும் அரசும் உணர்வு ரீதியான, பொருளாதார ரீதியான துணையாக நிற்க வேண்டும். பெற்றோருக்குத் துணை கிடைத்தால், குழந்தையின் தோளில் சுமை ஏறாது.
- பள்ளிகளில், குறிப்பாகப் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு, பயிற்சி பெற்ற ஆலோசகர்களின் துணை கிடைக்க வேண்டும்.
- வயதுவந்த பிறகும் தொடரும் தூக்கமின்மை, பயங்கரக் கனவுகள், விளக்க முடியாத குற்ற உணர்வு ஆகியவை பலவீனத்தின் அடையாளங்கள் அல்ல; குழந்தைப் பருவக் காயத்தின் தடயங்களாக இருக்கலாம். இவற்றுக்கு மருத்துவ, உளவியல் உதவி நாடுவதில் வெட்கம் தேவையில்லை.
- இந்தப் பிள்ளைகளின் அனுபவங்கள் இலக்கியத்தில் பதிவாக வேண்டும். ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் சொல்ல முடியாததை நாவல்களும் கவிதைகளும் சொல்லும்.
விசாலாட்சியின் பெயரால்
என் அம்மா விசாலாட்சி தனியொருவராகக் குடும்பத்தைத் தாங்கினார். அவரது உழைப்பை இந்தச் சமூகம் அங்கீகரிக்கவில்லை. அவர் மறைந்தபோது, அந்த மரணத்தின் பழியையும் ஒரு ஐந்து வயது, பதினாறு வயதுச் சிறுவன் மீது சுமத்தியது. அவரது பெயரில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் முதல் பணி, இந்த இரட்டை அநீதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதே.
இதன் தொடர்ச்சியாகவே "ஒற்றைப் பெற்றோர்" என்ற மையக்கருவில் நாவல் போட்டியை அறிவித்திருக்கிறோம். ஒற்றைத் தாய்மார்கள், கணவனை இழந்தவர்கள், மணவிலக்குப் பெற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஒற்றைத் தந்தையர் ஆகியோரின் பிள்ளைகளின் வாழ்வியல் தமிழ் இலக்கியத்தில் முழுமையாகப் பதிவாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இந்தப் பொருளில் ஏற்கெனவே பலர் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்; சில சிறுகதைகள் வந்துள்ளன; சில நாவல்கள் வந்துள்ளன. அவற்றைச் சேகரித்துத் தொகுப்பதே ஒரு பெரிய பணி. அந்தப் பணியில் நீங்களும் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குற்றம் செய்யாத ஒரு குழந்தையும் குற்றவாளியாக வளரக் கூடாது. அதுவே இந்த முயற்சியின் ஒற்றை நோக்கம்.
ஆதாரங்கள்
[1] "Parentification," Wikipedia (Satir, Berne, Schmideberg மேற்கோள்கள்; மூத்த மகள் நோய்க்குறி). https://en.wikipedia.org/wiki/Parentification
[2] Parentification review (2023), PMC10341267, National Library of Medicine. https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC10341267/
[3] "Parentification and Its Relationship With Attachment," The Attachment Project. https://www.attachmentproject.com/psychology/parentification/
[4] "Mother-son interactions predictive of high parentification self-reported by adolescent sons," Familia, INRS. https://www.familia.ucs.inrs.ca/notice/?ID=6213
[5] "Eight Ways to Help Your Grieving Child," OUR HOUSE Grief Support Center. https://www.ourhouse-grief.org/grief-pages/grieving-children/eight-ways-to-help-your-grieving-child/
[6] Stoffel, "A Guide to Help the Grieving Preschooler," University of Pittsburgh. https://www.sbbh.pitt.edu/sites/default/files/guide_help_grievng_preschlr_stoffel.pdf
[7] Fogarty, J. A. (2000). The Magical Thoughts of Grieving Children. Baywood / Routledge.
[8] Kajeepeta, S., Gelaye, B., Jackson, C. L., Williams, M. A. (2015). Adverse childhood experiences are associated with adult sleep disorders: a systematic review. Sleep Medicine 16(3): 320-30. https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC4635027
[9] "The association between adverse childhood experiences and insomnia symptoms from adolescence to adulthood: Evidence from the Add Health study," Sleep Health. https://addhealth.cpc.unc.edu/?p=747504
[10] "Adverse childhood experiences associated with adult insomnia and nightmares," 37th Annual Meeting of the Associated Professional Sleep Societies (2023). https://research.usq.edu.au/item/z2976
[11] Schalkwijk, F., Van Someren, E. J. W., Wassing, R. (2023). From childhood trauma to hyperarousal in adults: The mediating effect of maladaptive shame coping and insomnia. Frontiers in Human Neuroscience 17. doi:10.3389/fnhum.2023.990581
[12] UN Women, Progress of the World's Women 2019-2020: Families in a Changing World (செய்திக் குறிப்பு: SheThePeople). https://www.shethepeople.tv/news/un-report-13-million-single-mothers-head-households
[13] Antra Bhatt, "By undercounting single mothers, we underserve families," UN Women (2020). https://www.unwomen.org/en/news/stories/2020/2/experts-take-antra-bhatt-on-single-parent-households
[14] Census of India 2011, தொகுப்பு: ecoi.net. https://www.ecoi.net/en/document/2118460.html
- கி. நடராசன்