lovers 322அனைத்தையும் காசாகப் பார்க்கும் முதலாளித்துவம் மனிதனின் ஒவ்வொரு உணர்ச்சியையும் காசாக்க நினைத்ததின் விளைவு, ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒரு சிறப்பு தினமும், அதற்கென்று பிரத்யேக வாழ்த்து முறையும் உருவாக்கியது.

அந்த வாழ்த்து முறைகளைப் பார்த்தால் அனைத்தும் நுகர்வு முறையிலேயேதான் இருக்கும். அந்த முறைகளை செய்யவில்லை என்றால் அவன் மனிதனே இல்லை என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் முறைகளே அவையனைத்தும்.

எது எப்படியோ ஒரு சில முதலாளித்துவ சிறப்பு நாள்கள் அதன் லாபவெறிக்கு உருவாக்கப்பட்டாலும். அவை ஒரு விதத்தில் மனித சமூகத்திற்கு பயனுள்ளவையாகவே உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாள்தான் காதலர் தினம்.

காதலர் தினம் என்ற பெயரில் நடக்கும் கூத்துகள் ஒரு புறமிருந்தாலும், பண்பாடு என்ற பெயரில் பிற்போக்குத் தனங்களைக் கொண்டுள்ள இந்தியா போன்ற நாட்டில் சாதி, மதம், இனம் போன்ற விஷங்கள் ஆழமாக சமூகத்தில் கலந்து சமூகமே விஷமாக மாறியுள்ளது.

பல முற்போக்கு சக்திகளும், முதலாளித்துவ வளர்ச்சியும் ஓரளவு இந்த விஷத்தை நீக்கும் முயற்சியில் சொல்லிக் கொள்ளும் அளவு மாற்றத்தை நிகழ்த்தியுள்ளனர். இருந்தும் இன்னும் இந்த சாதி, மதம், இனம், வர்க்கம் போன்றவை இறுகிய நிலையில் உள்ளன. அதனால்தான் இன்றும் சாதி, மதம், இனம் மாறி காதலித்து மணம் முடிப்பவர்களை இந்த சமூகம் ஏற்காமல் விரட்டுகிறது.

சாதி, மதம், இனம் என்பவை குடும்பம் என்ற அமைப்புக்குள் ஆழப் புதைந்துள்ளன. இந்த பழமையான குடும்ப அமைப்பை சிதைக்காமல் இந்த சமூகத்தைப் பிடித்து ஆட்டும் சாதி, மத, இன பேதம் ஒழியாது.

இவற்றை மாற்றும் ஓர் ஆயுதம் காதல். சாதி, மதம், இனம் கடந்து மனிதத்தை நேசித்து ஜனநாயகப்பூர்வமான, பெண்ணடிமைத்தனம் இல்லாத காதல் உருவாக வேண்டும். அப்போதுதான் இந்த பேதங்கள் அகன்று ஒரு நல்ல முன்னேற்றத்தை நோக்கி சமூகம் முன்னேறும்.

ஆனால் இந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஜனநாயகக் காதல் என்பது சாத்தியமல்ல. இவை சாத்தியப்பட வேண்டுமானால் சமூகம் ஜனநாயகப்பட வேண்டும். இவை இரண்டும் ஒரே நேர்கோட்டில்தான் நடக்க வேண்டும். முதலாளித்துவம் உருவாக்கிய இந்த காதலர் தினத்தை இந்து முன்னணி , தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அடிப்படைவாதிகள் எதிர்க்கின்றனர். காரணம், சாதி, மத கட்டுமானத்தை காதல் ஆட்டம்காணச் செய்வதால்.

அடிப்படைவாதிகள் காதலை தங்களுக்கு எதிரி எனப் பிரகடனம் செய்து அதற்கெதிராக வேலை செய்கின்றனர்.

காதல் செய்பவர்கள் மற்றும் முற்போக்குவாதிகள் என்ன செய்ய வேண்டும்? அந்த காதலை தனக்கு நண்பனாக்கிக் கொண்டு அடிப்படைவாதிகளை எதிர்க்க வேண்டும். அதற்கு இந்த காதலர் தினத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனி காதலர் தினத்தை சாதி, மத, இன, பெண்ணடிமைத்தன ஒழிப்புக்கான ஒரு நாளாக எல்லாரிடத்திலும் பிரச்சாரம் செய்து சமூகத்தில் காதலை வளர்ப்போம்.

சாதி, மத, இனம் மறந்து காதல் செய்யும் அனைவருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

- திராவிடன் தமிழ்

Pin It