உலக வரலாற்றில் இயற்கை, இயற்கைச் சார்ந்த சமூக இயல்புகளை பல்வேறு கோணத்தில் சமூகவியலாளர்கள் ஆராய்ந்து வந்துள்ளனர். இயற்கை, சமூகம் பற்றி பல்லாயிரக்கணக்கான கேள்விகளை எழுப்பி அதற்கான விடையையும் கண்டு விளக்கினர். அவற்றுள் மாரக்ஸின் அரசியல் பொருளாதார ஆய்வான வரலாற்று விஞ்ஞான இயங்கியல் பொருள் முதல் வாதம் உலகெங்கும் பல்வேறு சிக்கல்களுக்கு விடை தந்தது என்றே சொல்லலாம்.
15, 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரான ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சியும், உற்பத்திக் கருவிகளின் கண்டுபிடிப்பும் பல்வேறு புதியதொரு தேடலை தொடங்க வைத்தது. வாணிபத்திற்கான நோக்கமும், இயற்கை, இயற்கைசார் பொருட்களை ஆராயும் வேட்கையும் கடல்வழி பயணத்தை மேலும் தீவிரப்படுத்தின. அதன் மூலம் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழத் தொடங்கின. ஒவ்வொரு துறையும் தனித்த தன்மையில் அதிவேகமாய் வளரத் தொடங்கின.
இவற்றுள் மனித சமூகத்தை பற்றிய மானுடவியல் ஆய்வுகள் குறிப்பிடத்தக்க இடத்தினைப் பெற்றன. மனிதன் என்பவன் யார்? அவனின் மூதாதையர்களின் தோற்றம் எது? உயிரினங்களின் தொடக்க நிலை என்ன? எங்கிருந்து எங்கு வந்தான்? உயிர்களின் பரிணாமத் தோற்ற விளைவுகள் என்ன? அவை எப்படி ஏற்பட்டன என்பவற்றுக்கெல்லாம் 19-ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில்; சார்லஸ் டார்வினால் தெளிவாக விளக்க முடிந்தது. இது ஒருபுறமிருக்க, கார்ல்மார்க்ஸின்,
‘அரசியல் பொருளாதாரம்’ மனிதகுல வரலாற்றை தெளிவுபட விளக்கி கூறியது. அந்நூலில்,
வரலாறு கண்டிருக்கும் ஐந்து அடிப்படை முறைகள் பின்வருமாறு :
புராதன - சமுதாய அமைப்பு
அடிமையுடைமை அமைப்பு
பிரபுத்துவ அமைப்பு
முதலாளித்துவ அமைப்பு
சோஷலிச அமைப்பு
என்று 5 வகையான வரலாற்று முறைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இதனை பற்றிய தெளிவுற விளக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள், புராதன சமுதாயம் என்பது எப்படி இருந்தது என்பதை,
“புராதன காலத்தில் மக்கள் ஒருவரையொருவர் சுரண்டாமலேயே பல நூறு ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். எல்லோரும் அக்காலத்தில் பொருளுற்பத்தியில் பங்கெடுத்துக் கொண்டார்கள். அவர்களுடைய உழைப்பு உபரிப் பொருட்களைத் தோற்றுவிக்கவில்லை. சிலர் வேலை செய்யாமலேயே ஏனையோரது உழைப்பை உண்டு வாழ்ந்திருந்தால் மற்ற ஏனையோரால் உயிர் வாழவே முடியாமல் போயிருக்கும்” (அரசியல் பொருளாதாரம் பக். 20)
என்று விளக்குகின்றது. ஆக, அடிப்படையில் பொதுவுடைமையாய் நிலைபெற்ற சமூகமாயும் உபரிப் பொருட்களைத் தோற்றுவிக்காத காலமாகவும் இக்காலம் இருந்தது என்பது அந்நூல் கருத்தாகும்.
மேலும், புராதன மனிதன் இயற்கையை எதிர்த்து ஓயாது பெரும் போராட்டம் நடத்தினான். கற்களும் கம்புகளும் அவனுடைய ஆரம்ப கால கருவிகள். அவன் உடல் உறுப்புகளை மேலும் சற்று நீண்டு சென்று இயங்க வைத்த செயற்கை இணைப்புகளாக இக்கருவிகளை சொல்ல முடியும். முன்பை விடவும் அதிக உணவு பெறுவதற்கு அவனுக்கு இந்த எளிய கருவிகள் உதவின. எளிய முறையிலான வேட்டை அப்பொழுது தான் சாத்தியமாயிற்று.
காலப் போக்கில் இவர்கள் கைத்தடிகள், ஈட்டிகள், கத்திகள், வேல்கள் செய்ய கற்றுக் கொண்டார்கள். கற்களையும் கம்புகளையும் விட இக்கருவிகள் கூடுதலான பயனை அளித்தன. இவற்றைக் கொண்டு ஆதிமனிதர்கள்; பெரிய விலங்குகளையும் வேட்டையாடினர்; மீன்களையும் குத்திப் பிடித்தனர். ஆக, மனிதனின் தொடக்க வாழ்வு இயற்கையிலான அமைப்பு முறையாய் இருந்தது.
உழைப்பு பிரிவினை
மனிதனின் தேடல் சமூகமாய் ஒன்றிணைவதற்குரிய சூழலை தோற்றுவித்தது. ஆதுவே உழைப்புப் பிரிவினையை உருவாக்கியது.
உழைப்புப் பிரிவினையை இருவகையாக பகுத்துக் கூறுவர்.
1. இயற்கை வழியிலான உழைப்புப் பிரிவினை
2. சமூக உழைப்புப் பிரிவினை.
இவற்றுள் “இயற்கை வழியிலான உழைப்புப் பிரிவினையின் (னுiஎளைழைn ழக டுயடிழரச) ஆரம்பக் கூறுகள் தோன்றலாயின. அதாவது ஆண், பெண் பாலருக்கும் வெவ்வேறு வயதினருக்கும் ஏற்ப அமைந்த உழைப்புப் பிரிவினை தோன்றலாயிற்று. பெண்கள் குழந்தைகளையும் இல்லத்தையும் கவனித்துக் கொண்டனர். உண்டி தயாரித்தனர். குழுவினர் இடம் பெயர்ந்து சென்ற போது வழியில் ஆடவர்கள் வேட்டைக்கு செல்வதற்கு வசதியாய் இருக்கும் பொருட்டு பெண்டிர் அக்குழுவின் சொற்ப உடைமைகளைச் சுமந்து சென்றனர்”. (அரசியல் பொருளாதாரம் பக். 30-31) என்று விளக்குகின்றது.
பூர்வீக குடியமைப்பில் தொடக்கத்தில் பெண்கள் ஆதிக்க நிலையில் இருந்திருக்கின்றனர். பூர்வீகக் குடியே தாய்வழி மரபுடையதாக விளங்கியிருக்கின்றது. வீட்டிலிருந்த பெண்களே பெரும்பாலும் சாகுபடி நடத்தினர். உற்பத்தி சக்திகள் தொடர்ந்து வளர்ச்சியடைய தாய்வழி மரபு மறைந்து தந்தைவழி மரபு தோன்றியிருக்கின்றது. நாடோடி முறையிலான கால்நடை வளர்ப்பின் உதயமே இந்த மாறுதலுக்கு பெருமளவு காரணமாய் இருந்துள்ளது.
செழிப்பான புல்வெளி பிரதேசங்களில் வசித்தக் குடிகள் பயிர் சாகுபடியையும் வேட்டையாடுதலையும் கைவிட்டு, கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாயினர். கால்நடை வளர்ப்பானது பயிர் சாகுபடியிலிருந்து பிரிக்கப்பட்டதே முதலாவது உழைப்புப் பிரிவினை என்றும், விவசாயத்திலிருந்து கைத்தொழில்கள் பிரிக்கப்பட்டது தான் இரண்டாவது பெரிய உழைப்புப் பிரிவினையாகும் என்றும் அரசியல் பொருளாதாரம் பண்டைக் கால சூழலை தெளிவுற விளக்கி உரைக்கின்றது. இவை யாவற்றிற்கும் அடிப்படையாக அமைந்தது இயற்கையின் புறச்சூழலே ஆகும். அவற்றுள் நிலம், பருவகாலம் முக்கியத்துவத்தைப் பெற்றது. இதனை அறிந்து தொல்காப்பியர் மனித வாழ்வில் முதற்பொருளாக
“முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே” (தொல். பொருள். நூ. 3)
புவியை ஆராய்கையில் அடிப்படையாக ஐவகை நிலப்பகுதி உடையதாகக் காணப்படுகின்றது. அவை காடு, மலை, சமவெளி, கடல், பாலைவனப் பகுதிகளாகும். ஒவ்வொரு நிலப்பகுதியும் தனித்தனித் தன்மைகளுடன் திகழ்கின்றது. குறிப்பாக ஓர் நிலத்துள் தோன்றிய உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் பிற நிலத்துள் பலவும் இல்லை. அப்படி ஒரு சில நிலத்துள் தோன்றிய உயிரினமோ மற்றும் தாவரமோ நன்கு அறிய முடிகிறது. இக்கருத்துக்கள் நவீன சமூக அறிவியலாளர் எடுத்துரைத்தனர். இக்கருத்திற்கு ஏற்றார் போல ஐவகை நிலப்பகுதியையும் ஒருங்கே பெற்ற நிலப்பகுதியாய் தமிழகம் இருந்திருக்கின்றது. இதனை
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
என்று தொல்காப்பியம் பாடல் (தொல். பொருள். நூ. 5) குறிப்பிடுகின்றது. இப்பாடலின் வழி, காடுறை - காடும் காட்டைச் சார்ந்த பகுதியும்; மைவரை - மலையும் மலையைச் சார்ந்த பகுதியும்; தீம்புனல் உலகமும் - வயலும் வயல் சார்ந்த பகுதிகளும்; பெருமணல் - கடலும், அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் என நான்கு நிலத்தினைப் பற்றி குறிப்பிடுகின்றது. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும்,
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியழ்பு இழந்து நடுங்கு துயரறுத்து
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்” (சிலப்பதிகாரம் பா. 64 - 66)
என்ற பாடல் வழியாக முல்லை நிலமான காட்டுப்பகுதி, குறிஞ்சி நிலமான மலைப் பகுதி திரிந்து போய் (ஒவ்வொரு நிலமும் அதன் தன்மையிலிருந்து மாறி ‘பாலை’ என்கின்ற வெண்மணற் பரப்பாகிறது) ‘பாலை’ என்ற நிலமாக மாறியது என்ற கருத்தும் சேர்த்து தொல்காப்பியர் குறிப்பிடும், ‘நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு’ என்ற கருத்தின் அடிப்படையிலும் ‘பாலை’ நிலம் தோன்றியதை அறிய முடிகிறது. ஆக 5 வகை நிலங்கள் தமிழ் மொழி வழங்கும் தேசத்துக்குள் அடங்கியிருந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
ஆக, உயிரினத் தோற்றுவாய்க்குரிய நீர்ப்பகுதிகள் நீர்ப் பகுதியை ஒட்டியுள்ள நிலப்பகுதியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப இயற்கை புற செயல்கள், காடு, மலை, சமவெளி, கடல் என அனைத்து நிலப்பரப்புகளையும் ஒருங்கே பெற்ற நிலப்பகுதியாய் பண்டையத் தமிழகம் விளங்கியிருக்கின்றது. உலகெங்கிலும் உள்ள நிலப்பகுதிகளுள் உயிர்கள் வாழ்வதற்குரிய சுற்றுப் புறச் சூழலும் மிகமிக குறைவே. அவ்வடிப்படைத் தகுதியையும் தமிழகம் பெற்றிருந்தது.
ஆக, அடிப்படையில் வேட்டையாடுதலும், மீன்பிடித்தலும், பின்னர் கால்நடை வளர்ப்பும், சாகுபடி முறையும் தோன்றின என்பது பெறப்படுகின்றது. ஆக, மனித சமூகத்தில் அடிப்படைத் தொழில்களாக இவை மாறியது. அவை மேலும் மேலும் பல கருவிகள் தோற்றமும், உற்பத்தியின் பெருக்கமும் சமூகத்தை நன்கு வளர்ச்சி பெற செய்ததே வரலாற்றின் நிகழ்வாகும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மேற்கூறியதன் அடிப்படையில் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்” என்று குறிப்பிடப்படும் வடக்கே வடவேங்கட மலையும் தெற்கே குமரியும் உள்ளிட்ட பகுதியில் மக்கள் வாழ்வு நிலைபெற்றிருந்தது என்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளது.
இவற்றுள், டார்வினின் ‘உயிரின பரிணாமத் தோற்றம்’ பற்றிய கருத்தியல் அடிப்படையில் “தம்மை தகவமைத்துக் கொண்டு வாழத் தகுதியற்ற உயிரினங்கள் மடிந்து போகும்” எனும் தக்கவை பிழைத்தல்’ எனும் கோட்பாடு வழி ஆராய்கையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே பல்லாயிரம் உயிர்கள் தோன்றி அவற்றுள் பல இன்றும் நிலைபெற்று வாழ்வதற்குரிய இயற்கையின் புறச் சூழலை தமிழகம் பெற்றிருக்கிறது என்பதையும் நாம் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது.
ஆக, உயிரினத்தின் தொடக்க நிலை எங்கிருந்து தோன்றியது? எங்கிருந்து நிலை பெற்று வாழ்வதற்குரிய சூழல் அமைந்திருந்தது? என்பது நம் முன் எழும் வினாவாகும். இதனை அடிப்படையில் ஆராய்கையில் தொல்காப்பியம் எனப்படும் (கி.மு. விற்கு முன் தோன்றிய நூல். சுமார் 5 முதல் 3 என காலம் கணக்கிடப்பட்டுள்ளது) நூலின் வழியாகவே பெரும்பகுதி செய்திகளை அறிய முடிகிறது.
தொல்காப்பியம் குறிப்பிடும் நிலமக்கள்
தொல்காப்பிய நூலில் 4 வகையான நில மக்களையும், 4 வகையாக உயர்குடியினரையும், 4 வகையான கீழ்குடியினரையும் (விளக்கிக் கூறுகிறது) எடுத்துரைத்துள்ளது. அவற்றுள் 4 வகை நிலமக்கள் என்போர் நில அடிப்படையில் தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு வாழ்வோராவார். 4 வகை நிலமான,
குறிஞ்சி - மலை, மலை சார்ந்த இடம்
முல்லை - காடு, காடு சாரந்த இடம்
மருதம் - வயல், வயல் சார்ந்த இடம்
நெய்தல் - கடல், கடல் சார்ந்த இடம்
இவற்றுள், பாலை நிலத்து மக்கள் தனித்த வளர்ச்சிப் பெற்ற நிலத்துள் வாழாது வழிபறியில் ஈடுபட்டதை பற்றி பல குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றொடு ஐவகை நில மக்களாகக் கொள்வர். இதனை,
“ஆயர் வேட்டுவர் ஆடூஉ திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே” (தொல். பொருள். நூ. 23)
என்று தொல்காப்பிய பாடல் எடுத்துரைக்கின்றது.
ஒவ்வொரு நிலத்தைப் பற்றியும் கூறப்பட்ட செய்திகளைப் பற்றிய குறிப்புகளை பின்வருமாறு காண்போம்.
குறிப்பாக நில மக்களை அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையிலேயே பெயர்களை வைத்துக் கொண்டனர். அவை காரணப்பெயர்களாகும். “எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே” (தொல். பொருள். நூ. 157) என்ற விதிக்கேற்பவும், இயற்கை பொருளை இற்றெனக் கிளத்தல் (இயற்கைப் பொருளை அப்படியே கூறுதல்) (நூ.) செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறுதல் (செயற்கை பொருட்களை ஆக்கமொடு கூறுதல் (நூ. ) என்ற விதிப்படியும்,
ஒவ்வொரு நிலத்துத் தெய்வம், மக்கள், உயிரினங்கள், நிலத்துத் தன்மை என இவற்றிற்கு ஏற்பவும், செய்யும் தொழிலுக்கு ஏற்பவுமே பெயர் வைப்பு முறை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு நிலத்தைப் பற்றி வரிசையாகக் காண்போம்.
முல்லை
ஆயர்; ஆ - பசு; பசுவிற்கு உரியவர்
இவர்கள் கால்நடையை முதன்மைத் தொழிலாக கொண்டவர்கள். இவர்களை ‘கோவலர்’ என்றும் அழைப்பர்.
கோ - பசு
கோவலன் - பசுவிற்கு உரியவன் என்றும் கூறுவர்.
மேலும், ஆயர் - இடையர்; இடை நிலத்து வாழக் கூடியவர்; அதாவது சமவெளியும் இல்லாது காடும் இல்லாது நிலத்தில் வாழ்தலால் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் என்பர்.
ஆயர்பாடி - இடையர் ஊர் : இடைச்சேரி
கோவதை - 'ஆ’க்கொலை
கீதாரி - இடையன்
குறும்பொறை நாடன் - முல்லை நிலத்துத் தலைவன்
இவற்றுள் அடிப்படையில் முல்லை நிலத்து மக்களை ஆயர், ஆய்ச்சியர் என்றும், இடையர், இடைச்சியர் என்றும், கோவலன், கோவலர், கீதாரி என்றும் அழைத்ததைக் காண முடிகிறது. இவர்களுக்கு தலைவனாக குறும்பொறைநாடன் என்றும் வழங்கப்படுகிறது. ஆக, ஓர் குழுவின் தலைவன் அக்குழுவிற்குக் கட்டுபட்ட மக்கள்; அவர்கள் ஆடு, மாடுகளை பழக்கி அதன் மூலம் வருவாய் ஈட்டி வாழும் வாழ்க்கையை உடையவராய் இருந்ததை அறிகின்றோம்.
குறிஞ்சி
கொடிச்சி - இடைச்சி: குறிஞ்சி நிலத்துப் பெண்
குறத்தி - கொடிச்சியர்
கொற்றவனன் - அரசன் : கொற்றை - இழிவானவன், கேவலமானவன்
கொற்றவி - அரசு
சிலம்பன், வெற்பன் - எனவும் வழங்கப்பெறுகிறது
வேட்டுவர், வேடன், குறவன், குறத்தியர் என்று இந்நிலத்து மக்களை கூறுவர். மேலும்,
குன்றவர், குன்றபாணர் - குன்றுகளில் வாழும் குறிஞ்சி நில மக்கள்
குன்றுவர் - வேட்டுவர், குன்றுக்குரியோர், குன்றில் வாழ்வோர்
கானவன் - கானகத்தில் வாழக் கூடியவன்
வேடன் - வேட்டையாளி
குறவன் - ஒரு சாதி : குறிஞ்சி நில மகன் : பாலை நில மகன், வலைத் தைத்தல், கூடை முடைதல், குறி சொல்லுதல் போன்ற தொழிலை உடையவன்.
வேட்டம் - வேட்டையில் கிடைக்கும் பொருள்
குறிஞ்சி நிலத்து ஊர் : சிற்றூர் : குறும்பொறை நாடு : சிறுமலை
பொறை - மலை : பொருப்பு - பக்க மலை : பொருப்பன் - குறிஞ்சி நிலத்
தலைவன், பொருப்பரையன் - பொருப்பு வில்லான் : மலையரசன் (மலைக்குத் தலைவன்)
வெற்பு - மலை : மலையைச் சார்ந்தவன் அல்லது மலைக்கு உரியவன் என்பது பொருள் : அம்மலையை சார்ந்தவனை ‘வெற்பன்’ என்றனர்.
குறிஞ்சி நிலத் தலைவன் - கானகநாடன்
குறிஞ்சி நில தெய்வம் - முருகன்
குறிஞ்சி நிலத்தினை சொல்லாய்வின் அடிப்படையில் நோக்க காடும் காட்டை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்து ‘வேட்டையாடுதல்’ தொழிலை மேற்கொண்டவராவர். அவர்கள் மலைகளிலும், குன்றுகளிலும், காடுகளிலும் தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்ததையும் அறிய முடியும்.
மருதம்
சமவெளிப் பரப்புகளின் வாழ்ந்த மக்கள் ஆவர். மருத நில மக்கள் - உழவர், உழத்தியர், வீரன் எனப்படுபவர். உழற்றுதல் - உழலச் செய்தல்; அணைய செய்தல்’ சுழற்றுதல் இதில் நிலத்தை உழலச் செய்வதால் ‘உழவன்’ எனப்பட்டான்.
உழுதுண்போர் - வேளாளர்; வெள்ளத்தை ஆள்பவர் (வெள்ளம் - நீர்)
மகிணன் - மகிழ்நன், மருத நிலத் தலைவன்
ஊரன் - மருத நிலத் தலைவன்
மருத நில கடவுள் - (வேந்தன்) இந்திரன்
இதன் வழி வயலும், வயலைச் சார்ந்த பகுதிகளில் முதன்மைத் தொழிலாக விவசாயம் இருந்ததையும், நீரினை தமது கட்டுக்குள் கொண்டு விவசாயத்தை மேற்கொண்டதால் ‘வேளாளன’; என்றும், உழுதலின் மூலம் நிலத்தை சமப்படுத்தி இத்தொழிலை செய்ததால் உழுவன் - ‘உழவன்’ என அழைக்கப்பட்டதையும் அறிகிறோம்.
நெய்தல் :
பரதவர், பரச்சியர்
பரத - வலையை விரித்தல் : தொழிலைச் செய்வோர்
நுளையர், நுளைச்சியர் - நெய்தல் நிலப் பெயர்கள். நுள் - கிள்ளு - மீனைக் கிள்ளுதலுமுண்டு.
நுளையர் - வலைச்சாதி (ஈனம், குருகு)
வலையர், வலைஞர் - வலையைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவராதலால் இப்பெயர் பெற்றனர்.
சேர்ப்பார் (பன்) - உப்பு விளைவித்து சேர்ப்பவன்;
நு - தோணி என்ற பொருளும் உண்டு; தோணியர் - தோணியை உடையவர்களை இப்படி அழைத்திருக்கலாம்.
பாலை
எயினர் - பாலை நில மக்கள்
வேடர், மறவர்
எயின் - பலி; எயின்கடன் - பலிக்கடன்
எயின் சேரி - வேடன் ஊர்; எய்ப்பாடி - வேடர் ஊர்.
எய்த - நன்றாக, நிரம்ப் எய்தல் - அம்பெய்தல், விடுதல்.
எய், எய்ய, எய்த, எய்தும் - அடிப்படையில் அம்பெய்திய வேடன்; வேட்டையாடுகின்ற தொழிலை உடையோன்;
வேட்டம் - வேட்டைகளில் கிடைக்கும் பொருள்
வேடுபறி - வழிபறி
இதனை ஆய்கையில் பெரும்பாலும் மலையும், மலையை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்த வேட்டையாடுதலை தொழிலாகக் கொண்டோர். அவ்வழியே பிறர் பொருட்களை கொண்டு செல்லும் போது வழிப்பறி செய்தமையை அறிகின்றோம். மேலும், குறிஞ்சி நிலப் பகுதியில் வாழ்ந்த மக்கள் உணவுப் பற்றாக்குறையின் விளைவாக ஒருசிலர் இச்செயலை செய்திருக்க முடியும் என கருதலாம்.
அதுமட்டுமின்றி முல்லை, குறிஞ்சி நிலப்பகுதிகள் திரிந்த தற்செயலாக வேனிற் காலத்தில் தோன்றும் நிலப்பகுதியே ‘பாலை’ நிலப்பகுதி என்பர். ஆக, வெப்பம் மிகுந்த காலத்தில் உணவுப் பற்றாக்குறை மிகுதியாக ஏற்பட்டிருக்க வேண்டும் ஆக அவ்வடிப்படையில் இச்செயல் ‘தொழிலாகவே’ மாறியிருக்கலாம்.
சமூக வரலாற்றை தமிழ்ச் சமூகம் சுமந்து வந்துள்ளது என்பது மிகையாகாது. இன்றைய ஆய்வின்படி உலக ஆய்வாளர்களின் வழிகாட்டுதலின்படி ‘நாகரீகக் காலக் கட்டம்’ என்று வருணிக்கப்படும் கிரேக்க எகிப்திய, ரோம நாகரீகங்களுக்கு ஒப்ப ‘சிந்து சமவெளி’ மக்களின் வாழ்வு அமைந்திருந்ததாக ஆய்வுகள் நிரூபிக்கப்பட்டன. மேலும், குஜராத், தமிழகத்தின் அகழ்வாராய்ச்சிகள் (ஆதிச்சநல்லூர், பூம்புகார், கிழவெளி போன்ற பகுதிகள்) கல்வெட்டுக்கள் மற்றும் இன்ன பிற ஆராய்ச்சிகளின் வழியாக பல தகவல்கள் பெறப்பட்டுள்ளன. எனின், பழந்தமிழகத்தின் வரலாற்றை பெரும்பகுதி தாங்கிக் கொண்டு வருவது இலக்கண, இலக்கியங்களே ஆகும். கால வெள்ளத்தால் பல அழிந்தும், சிதைந்தும், மறைத்தும் விட்ட பல நூல்களை பற்றி ஆங்காங்கே கூறப்படினும் நிதர்சனமாய் தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் பெரும்பாலான தரவுகளை வெளிப்படுத்தியுள்ளன என்பதை உணர வேண்டும்.
இவை யாவும் அடிப்படையில் அரசியல் பொருளாதாரம் உணர்த்தும் உழைப்பு பிரிவினை தன்மையை கொண்டிருக்கின்றன. ஆக, மனித வாழ்வில் தொடக்க நிலையின் வாழ்க்கை முறை பழந்தமிழகத்தில் நிலவி இருக்கின்றது. இனக்குழு வாழ்வு நில மக்கள் வாழ்வு முறையாய் அமைந்திருக்கிறது.
துணை நூற்பட்டியல்
1. அரசியல் பொருளாதாரம், லெவ் லியோன்டியெவ், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ - 1975.
2. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, தமிழ்ப் பல்கலைக் கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவூர் - 2008.
3. கழகத் தமிழ் அகராதி, சை.சி.நூ. கழகம், சென்னை - 1964.
4. சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார், தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர் - 1985.
- முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306