அணிகலங்களை அணியும் பழக்க வழக்கங்களைக் கொண்ட தொல் சமூக எச்சமாகவே தொடர்ந்து இன்றைய காலம் வரை அணிகலங்கள் மேல் அபரிவிதமான ஆசைகளோடு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் இருக்கிறது. ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது என்பதாக கூறுவதை விட பொருளாதாரத்தில் நிலையே இந்த ஆசை வாழ்வை நிர்ணைக்கிறது. தங்கம் எனும் பொன் உலோகத்தால் மட்டுமே ஆன அணிவிக்கப்படும் ஆபரணங்களை ஏற்றுக் கொள்ளுவதில்லை. பல்வேறு பிற உலோகங்களின் மூலமும் தோல்களினால் மற்றும் கயிறுகளினால் உருவாகும் அணிகலங்களையும் அணியும் பரவலாக்கப்பட்ட நிலையில் பல்வேறு இளைஞர்களிடம் உலவுவதை காண முடிகிறது.

 அணிகலங்களை உடலில் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்குமான பல்வேறு விதமான அணிகலங்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இதை பொதுவாக தலையணி, காதணி, கழுத்தணி, புயஅணி, கையணி, விரலணி, காலணி (இது செருப்பல்ல) என்பதாக விரிகின்ற பட்டியலில் மூக்கணி என்ற வகை எப்போது உருவானது, மூக்கணியை இருபாலரும் அணிகின்றனரா? மூக்கணியில் மூக்குவாளி என்ற மூக்கணி போடுவதற்கான நோக்கமென்ன இது குறித்தான நம்பிக்கை விழுமியங்களைக் காண்போம்.

 மூக்கணி மூக்கில் அணியப்படுகின்ற அணிகலனுக்கு மூக்கணி என்பார். மூக்கில் மூக்குத்தி என்ற அணிகலனை பிரத்தியோகமாக பெண்கள் பலர் (இம்மூக்குத்தி அணியாத பேர்களும் உண்டு) அணிவதைப் பார்த்திருக்கிறோம். ஒரு பக்கம் மட்டுமில்லாமல் இரண்டு பக்கமும் கல் தோடை போட்டுக் கொண்டு மூக்கில் இரு பக்கமும் அணிந்திருப்பதைப் பார்த்து இருப்போம். இது மட்டுமின்றி மூக்கட்டு, நத்து, பேசரி போன்ற நகை வகைகளையும் மாட்டி இருக்கின்றனர். ஒவ்வொரு விதமான மாநிலத்திலும் வெவ்வேறு விதமான மூக்கணி உள்ளது. மூக்கில் வளையம் போன்றும் இந்த வளையத்தில் செயின் காது கம்மலோடு அல்லது தலை மயிர் கோத்தோடு இணைக்கப்பட்டதாகவும் இருக்கின்றது. தமிழ் நாட்டில் தங்கத்தில் ஆன மூக்கணியே உள்ளது. வட பகுதி மக்களிடம் வெள்ளி மற்றும் பிற உலோகத்தில் மூக்கணி போடுகின்றனர். விசேச காலங்களில் இந்த அணிகலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

 இந்த மூக்கணி திருமணத்திற்கு முன்னால் அல்லது சிறிய வயதிலே மூக்கில் குத்தப்படும் இது காது குத்துவதை போல தான். காது குத்துவதற்கென்ற நம்பிக்கை ஒன்று இருக்கின்றதைப் போல மூக்கு குத்துவதற்கென்ற தனித்த நம்பிக்கை எதுவும் கிடையாது. ஆனால் மூக்குவாளி போடுவதற்கென்ற தனித்த நம்பிக்கை உண்டு. முதல் மொட்டை போடுவதும் காது குத்துவதும் சடங்காக நடத்தப்படுகிறது. இந்த மரபு பெளத்தத்தின் எச்சமாகவே கருத வேண்டும், பெளத்தர்கள் தங்களிடம் எப்போதும் இருக்க வேண்டியவைகளில் மயிர் நீக்கும் ஆயுதமும் ஒன்று. பிற்கால சைவம், வைணவை இதை தவிர்க்க முடியாது தங்களுக்குள்ளும் வைத்து கொண்டனர்.

 தமிழகத்தில் முற்காலத்தில் மூக்கு குத்தும் பழக்கம் இல்லாமல் இருந்துள்ளது, இவை பிற்காலத்தின் ஊடுருவல் என்கின்றனர். இதனை, “மூக்கணிகள் மூலம் முசுலிம்கள் தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றர்கள். பண்டைய பேரணி கலங்களை யெல்லாம் அகற்றி விட்டு ஒரு சில சிற்றணிகளை அணிய முற்பட்ட தமிழர்கள் பிற்காலத்தில் இந்தப் புதிய அன்னிய நாகரிகத்தில் வந்த மூக்கணிகளை எப்படி அணிய முற்பட்டார்கள் என்பது நமக்குப் பேராச்சரியமாக இருக்கிறது” என்கிறார் (ப.266 இ.ராகவன், தமிழ்நாட்டு அணிகலங்கள்) மூக்கணி என்ற அணிகலன் அந்நியர் ஊடுருவலால் வந்தது என்ற கருத்தை முன் வைப்பதில் தெளிந்த முடிவு இன்றி உள்ளது.

 மூக்கு குத்தும் பழக்கம் பிற்கால உருவாக்கமென்றும் கூறுவது பொருந்தும் சிலைகளில் மூக்குத்தி அல்லது புல்லாக்கு அமைப்பிலான அணிகலங்களை அணிவிக்கப்பட்டதாக காட்டப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன், குமரியம்மன் மூக்குத்தியை முன்னிலைப்படுத்தும் நிலையைக் காணலாம். பெரும்பாலான பெண்கள் இடது நாசிப் பகுதியிலேயே மூக்குத்தி அணிவார். என்றாலும் வலது நாசிப் பகுதியிலும் போடுவர். அல்லது இரு பக்கமும் கல் கம்மலும் போடுவர். ஒரு செயல் விருப்பப்படும் போது அது அதிக பரவலாக்கப்படுவது இயல்பு, அவ்வாறே இந்த மூக்கு குத்துதல் பரவலாக்கப்பட்டு உள்ளது. வடபகுதியில் போடப்படும் வளையம் போன்ற அணிகலங்களான சாயல் தமிழ் நாட்டில் இல்லை.

 இந்த மூக்குத்தி குத்துவதற்கு மூலமாக மூக்கு வாளி இருந்திருக்குமா? என்பதான ஆதாரம் தெரியவில்லை. மூக்கு வாளியை ஆண், பெண் ஆகிய இரு பாலரும் போட்டிருக்கின்றனர். இந்த அணிகலன் பிற அணிகலங்களைப் போலல்ல, பச்சிளம் குழந்தையாக இருக்கும் போதே மூக்கில் ஒரு சிறிய நூல் அளவிலான தங்க கம்பியில் முத்து போன்ற அரும்பினை கோர்த்திருக்கும், மூக்கில் ஒரு பகுதிக் குத்தி வளையம் போல கம்பியை இணைத்து விடுவார்.

 இந்த அணிகலன் சமூக இருப்பில் பிரத்தியோகமான வகையைச் சார்ந்தது ஆண், பெண் இரு பாலரும் அணியும் உரிமை உண்டு என்றாலும் சில வரைமுறைகள் உள்ளன. மூக்குவாளி போடுவது அவர்கள் ஏற்றுக் கொண்டு போடுவதில்லை. இது மகப்பேறு குறித்தான நம்பிக்கை சார்ந்த அடிப்படையில் உருவானது. மகப்பேறு குறித்த வெவ்வேறு வகையான நம்பிக்கை உள்ள போதும், பிறக்கும் குழந்தைகள் பிரசவத்தில் இறப்பதுண்டு. இன்றைய நவீன அமைப்பு சார்ந்த அறுவை சிகிச்சைமுறை இல்லாமையால் தாய் அல்லது குழந்தையை இறப்பிற்குக் காரணமாக பல்வேறு நம்பிக்கைகள் உருவாக்கம் பெற்றது. “மனித வாழ்வில் காணப்படும் நம்பிக்கைகளுக்குக் காரணம் அறிய முடியவில்லை என்றாலும் மனித சமுதாயம் நம்பிக்கை வயப்பட்டுச் செயல்படுவதைக் காண்கிறோம்” ப.189 சு.சக்திவேல்) என்பதை நாம் யூகித்துக் கொள்ள வேண்டும்.

 நல்லபடியாக மகப்பேறு நடப்பதற்கும், வேண்டுதல்கள் வைக்கும் படியாக வேண்டிக் கொள்ளுவார். பல்வேறு விதமான நம்பிக்கைகளில் கர்ப்பிணிப் பெண்கள் பற்றிய நம்பிக்கையும் பல உண்டு, மனைவி கர்ப்பமானால் கணவன் மயிர் மழித்தல் செய்து கொள்ள மாட்டார். மலை இனமக்களிடம் மகப்பேறு நேரங்களில் இப்பெண்ணின் சேலையை அந்த கணவன் உடுத்திக் கொள்ளுவதும், பத்தியம் இருப்பது உண்டு என்று எட்கர் தர்ஸ்டன் கூறுகிறார். தற்போதும் தொடர்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். மேலும் கைக்கோளார் சமூகத்தில் ஒரு வீட்டில் ஒரு பெண்ணை பசவியாக்கி விடுவர். தற்போது இவை இல்லை.

 இவ்வாறான நம்பிக்கைகளைப் போல பிறந்த குழந்தையை வாழ்வதற்கான செயலாக காது குத்து உள்ளதைப் போல, பிறந்த குழந்தை இறக்காமல் வாழ்வதற்கு மூக்குவாளி போடப்படுகிறது. மூக்குவாளி போட்டிருக்கும் ஆண் அல்லது பெண் என்பவர் அந்த வீட்டில் பிறப்பதற்கு முன் அவர் வீட்டில் அவருக்கு முன்பாக ஒருவர் அதற்கு மேற்பட்டவர் பிறந்து நிலைக்காமல் இறந்திருப்பார். தற்போதைய குழந்தை பூமியில் நிலைப்பதற்காக கடவுளிடம் நேர்ந்து கொண்டு குழந்தையை கடவுள் குழந்தையாக மாற்றி விடுவதின் மூலம் துர்தேவதைகள் எடுத்துச் செல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

 சாவு குறித்தான இந்த நம்பிக்கையால் எக்காரணத்தைக் கொண்டும் அந்த குழந்தையோ அல்லது பிறரோ அந்த மூக்குவளையத்தை எடுத்து தூர எறிவதில்லை. ஆனால் இது தொடர்ந்து நீடிப்பதுமில்லை, தங்கத்தால் ஆன இந்த கம்பி தேய்மானம் ஏற்பட்டு தவறி கீழே விழுந்து விடும் அல்லது விழுந்ததை எடுத்து கோவிலுக்கு காணிக்கையாக்கி விடுவர்

 நவீன மருத்துவத்தின் காரணமாக குழந்தை இறப்பு குறைந்ததாலும் இந்த மூக்கு வாளி போடும் நேர்த்திக் கடன் இல்லாமல் போனது. ஆனால் கடினமான முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு காதில் மூக்கு வாளி போன்ற வளைத்தை முத்து போன்ற அரும்புக்கு பதிலாக சிவப்பு வண்ண பாசியை கோர்த்தப்படி காதில் மாட்டி இருக்கிறார்கள். இது அந்தோணியார் கோவிலில் வேண்டிப் போடப்பட்டதாக கூறுகின்றனர். கிருத்துவர்களிடமும் இது போன்ற நாட்டார் பண்பாட்டு பழக்கம் இருப்பதை அறிய முடிகின்றது.

 மூக்காண்டி, மூக்கம்மா என்ற பெயர்களின் தோற்றப் பின்புலம் இதுவாகத்தான் இருக்கும். இதைப் போல பிச்சாண்டி, பிச்சை போன்ற பெயர்களும் தவிட்டுக்கு தத்து எடுக்கும் குழந்தைகள் குழந்தை பூமியில் நிலைப்பதற்காக செய்து கொள்ளும் நம்பிக்கைகளாகும். நெருக்கமான உறவினரிடம் கோவிலுக்குச் சென்று தவிட்டுக்காக பிள்ளையை விற்று பெற்றுக் கொள்ளுவார். இதன் கட்டம் தவிர்ப்பதாக நினைத்துக் கொள்ளுதல் ஆகும். மேலும் இக்குழந்தையை திருமணம் முடியும் நேரத்தில் தத்தை வாங்கிக் கொள்ளுதல் என்ற சடங்கும் உண்டு. மூக்குவாளி போல இந்த அடையாளம் பரவலாக வெளியே தெரிவதில்லை.

அறிவியல் வளராத காலகட்டத்தில், சமூகத்தில் பல நம்பிக்கைகள் இருந்திருக்கின்றன. சில நம்பிக்கைகள் தெரியாமல் போவதைப் போல இந்த மூக்குவாளி குறித்தான நம்பிக்கையும் பரவலாகத் தெரியாமல் போனது.

- முனைவர் மா.ச.இளங்கோமணி,
உதவிப் பேராசிரியர்,
தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி,
பாளையங்கோட்டை.

Pin It