சுயநலனுக்காக வாழ்ந்து மடிபவரின் மரணம் இறகை விட இலேசானது. மக்கள் நலனுக்காக வாழ்ந்து மடிபவரின் மரணம் மலையை விட கனமானது - மாவோ
நம்மல தோழர்னு கூப்பிட சிலரும்,
நம்ம தோழர்னு கூப்பிட்ட சிலருமா அரசியலில் நுழைவோம்.
பல வருசம் பழகுன சில நண்பர்களைக் கூட வீட்டுக்குள்ள விட தயங்குன நாம், அரசியலின் பேரால் முதல் முறையா ஒரு வெளியாளான பாண்ட் "ஜேம்ஸ் பாண்ட்"கள வீட்டுக்குள்ள விடுவோம்.
புதிய ஜனநாயகம் - மறுகாலனியாக்கம் - அரைக்காலனி - அரை நிலப்புரத்துவம்ற வார்த்தையெல்லாம் நமக்கு ரொம்ப புதுசா இருக்கும்.
தினத்தந்தி--சன் நியூஸ்னு போய்கிட்டு இருந்த நம்ம அரசியல் வாழ்க்கை உள்ளூர் அரசியல்ல தொடங்கி உலக அரசியல் வரை போக ஆரம்பிக்கும். முதல் முறையா இதுவரை நாம் சிந்திக்காத கோணத்துலயும் பரிட்சையம் இல்லாத அரசியல் வார்த்தையிலும் மூழ்க ஆரம்பிப்போம்.
அம்பியா சாந்தமாவும், அந்நியனா ஆக்ரோசமாவும் மாறி மாறி சமூகத்துல நடக்குற அநீதி பற்றி நமக்கு விளக்கும் அந்த தோழரப் பாத்து,
“யார்ரா இந்த மனுசன்” நம்மள மாதிரி கஷ்டப்படுற சாதாரண மக்களுக்காக இப்படி சிந்திக்குறாறே,
ஆட்சி, அதிகாரத்துல இருக்குறவங்களுக்கு எதிரா “இவ்வளோ ஆக்ரோசமா பேசுறாறேனேனு” ஆச்சரியமா இருக்கும்.
நம்மள விட உருவத்துல சின்னதா இருக்குற தோழர் கூட நம்ம உள்ளத்துல மலை அளவுக்கு உயர்ந்து நிற்க ஆரம்பிப்பாரு. (இத வேற மாதிரியும் சொல்லலாம்; சொந்த அப்பன் ஆத்தா, கூடப்பிறந்தவங்க பேச்சக் கூட மதிக்காம மதயானையா இருந்த நம்மள. கோவில் யானையா மாறி பக்தி பரவசத்தோட எதிர்லயே நமக்கான அங்குசம் ஒன்னு உருவாகுறத பாத்துகிட்டிருப்போம்.)
தோழர் நானும் என்னால முடிஞ்சத செய்றேன்னு சொல்லுவோம். சரிங்க தோழர் செய்யலாம். எப்பன்னு சொல்றே ன்னு கிளம்பிட்டாரு,
பிறகு ஒன்னு ரெண்டு நாள்ல ‘தோழர் ஒரு பிரச்சாரம் இயக்கம் இருக்குது நோட்டீஸ் கொடுக்குறதுக்கு வர்றீங்களா’ ன்னு அழைப்பு வரும். ம்...சரி தோழர் வர்றேன் ன்னு அந்த "புரட்சிகர" உலகத்துக்குள்ள அடியெடுத்து வைப்போம்.
பிரச்சாரத்துக்கு திட்டமிட்ட நாள்ல ஒரு தோழர் கால் பண்ணி கூப்பிவார். முன்ன பின்ன தெரியாத அந்த தோழரை அன்னைக்கு தான் பார்ப்போம். சிறு அறிமுகத்தோட எதாவது ஒரு பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக்குவார். எப்படியும் அது உண்மையான பேரா இருக்காது. சரின்னு அவர் கூடப் போனா பேருந்தோ அல்லது வீடுகளுக்கோ கடைகளுக்கோ சில தோழர்களோட கூட்டிப் போவாங்க. எல்லாரும் ஒரு பேரோட அறிமுகமாகி நமக்கும் ஒரு பொய் பேர் வச்சு கூட கிளம்புவோம்.
தோழர் ஏன் தோழர் இப்படி பொய்யா பேர சொல்லனும்னு கேட்டா நம்மல எளிதா அடையாளம் கண்டுக்காம இருக்க தான்னு ஒரு பதில் வரும்... செய்றது ஒரு சாதாரண நோட்டீஸ் கொடுக்குற வேலை, இதுக்கு ஏன் வேற பேர சொல்லச் சொல்லுறாங்கன்னு யோசிச்சிக்கிட்டே பெட்டிக்கடையில வாங்குன அந்த பழைய ப்ளாஸ்டிக் டப்பா உண்டியல அவங்க கையில இருந்து வாங்கிட்டு கூடவே போவோம்.
நாம கூட போன அந்த தோழருங்க உழைப்பு இருக்கே முதல் முறையா நேர்ல பாக்குற நமக்கு வியப்பா இருக்கும். தொடந்து பல மணி நேரமா கடுமையான வெயிலக் கூட பொருட்படுத்தாம "அன்பார்ந்த உழைக்கும் மக்களே" ன்னு தொண்ட தண்ணி வத்த பஸ்ல ஏறி பிரச்சாரத்த ஆரம்பிப்பாங்க.
நோட்டீஸ் கொடுத்து மக்கள்கிட்ட பேசி நிதி வசூல் பண்ணிட்டே இருப்பாங்க. 5,10 ன்னு பல மக்கள் நிதி கொடுப்பாங்க. சிலர் எதிர்த்து பேசுவாங்க. சிலர் உதாசினப்படுத்துவாங்க. சிலர் திமிராக்கூட நடந்துப்பாங்க. ஆனா எந்த அவமதிப்பையும் மூளைல ஏத்திக்காம “புரட்சி ஒன்றே லட்சியம்”னு பிரச்சாரத்துல தீவிரமாக இருப்பாங்க.
அந்த அர்ப்பணிப்பு, தியாகம், அப்பாவி தனத்தையெல்லாம் பாத்து வியந்து போய் யாருன்னே தெரியாத அந்த தோழர்கள் மீது அன்பும் மரியாதையும் ஏகத்துக்கும் வரும். எல்லாரையும் ஒருங்கிணைக்கும் பொருப்பாள "பாண்ட்" ங்க மேலயும் சேர்ந்தே அந்த மரியாதை அதிகரிக்கும். தமிழ்நாட்டுல நிறைய பேர் இப்படி இருப்பாங்க போலயே, அப்டினா இந்த புரட்சி சாத்தியம் தான் போலன்னு இன்னும் கொஞ்சம் நம்புறதுக்கு ஆரம்பிப்போம்.
வாழ்க்கையில் முதல் முறையா பிரச்சாரப் பயணத்தை முடிச்சு வீட்டுக்கு வந்ததும் அடுத்த ஒன்னு ரெண்டு நாட்களில் சந்திக்கும் நம்ம "பாண்ட்", பிரச்சாரம் குறித்து அனுபவம் என்ன என்று கேட்பார். நாமும் நாம் பார்த்த வியந்த விஷயங்களை சொல்லி அடுத்த பிரச்சாரம் எப்போ தோழர் நானும் கூட போறேன்னு சொல்லும்போது தான் நமக்கான வேலைத்திட்டமெனும் 'அங்குசம்' வந்து விழும்.
வேலைத்திட்டத்தை ஏன் அங்குசம்னு சொல்றோம்? அப்டினா ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக திட்டமிட்டு வேலையே செய்யக்கூடாதா? அமைப்புக்கு கட்டுப்படக்கூடாதா? நாம அதைத்தான் சொல்ல வர்றமா?அது தான் இந்த தொடரின் நோக்கமா?. அதான் இல்ல .இந்த வேலைத்திட்டம் மதயானையா இருக்குறவங்கள புடிச்சு போருக்கு பழக்குறதுக்கான வேலைத்திட்டம் இல்ல. இந்த ஜேம்ஸ் பாண்டுகளோட நோக்கமும் அது இல்ல. இது நம்மல கோவில் யானையாக்கி வசூல் மட்டுமே பண்ண பழக விடுற நோக்கம் கொண்ட வேலைத்திட்டம். அதுக்குள்ள இன்னும் வேற என்னவெல்லாம் இருக்குன்றத பின்னால் பாப்போம்.
இப்ப கதைக்கு வருவோம். எந்த அரசியல் கொள்கையும் தெரியாத ஒரு மார்க்சிய நூல் கூட படிச்சு பழக்கம் இல்லாத, மார்க்சியம்னா என்னனே தெரியாத நாம - மார்க்சியவாதியா, கம்யூனிஸ்ட்டா, ஒரு தோழரா ஆகுறது என்ன லேசுப்பட்ட காரியமா. சிங்கம் படத்துல "யாருயா நீ இத்தனை நாளா எங்கயா இருந்த. ஒரு சின்ன கிராமத்துல பொறந்து இவ்வளோ பெரிய சிட்டிக்கு வந்து ஒரு கலக்கு கலக்கிட்டியேயா . உன்ன மாதிரி ஆளத்தான்யா தேடிக்கிட்டிருந்தேன். இன்ஸ்பெக்டரா இருக்குற உன்ன அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்"சா ப்ரமோட் பண்றேன்னு விஜயகுமார் சொன்னதும் சூர்யா முகத்துல வர்ற பெருமிதம் போல சுயநலவாதியா இருந்து 'புரட்சியாளாரா' சார்ஜ் எடுத்துகிட்ட நம்ம மூஞ்சில இந்த புரட்சிக்கான முதல் வேலைத்திட்டம் பெருமிதத்த வழிஞ்சு ஓட வைக்கும்.
தோழரே சொல்லுங்க மாசத்துக்கு எத்தனை நாள் உங்களால அமைப்பு வேலை அதாவது பிரச்சாரம் செய்ய வர முடியும்னு ஒரு கேள்வியப் போடுவாங்க ....ஆஹா என்ன ஒரு ஜனநாயகம் நம்மள கேட்டு நமக்கான வேலை நாள போடப் போறாங்கன்னு தான நீங்க நினைச்சீங்க ....அதான் இல்ல.
ஒரு வாரத்துக்கு 2 நாள், நான் வேலைக்குப் போயிட்டு வந்ததும் வர்றேன் இல்ல சண்டே அன்னைக்கு லீவ்ல வர்றேன்னு நீங்க சொன்னீங்கன்னா.... சொன்னீங்கன்னா ....அப்ப தான் ஆரம்பிப்பாங்க
என்ன தோழரே ரெண்டு நாள் போக மிச்ச நாள் என்ன செய்றீங்க... ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு மட்டும் பண்றதுக்கு இது என்ன சுற்றுலாவா ..ப்ளா...ப்ளா…ப்ளான்னு... உங்களுடைய சாய்ஸா (விருப்பமா) ஆரம்பிச்சது அந்தப் பக்கம் இருந்து மறைமுகமான கட்டளையா வேலைத் திட்டத்தில் கூடுதலான நாட்களை சேர்க்க ஆரம்பிப்பாங்க..
ஓகே தோழர் வந்துரலாம்.... அடுத்து என்ன.. அடுத்து என்ன போஸ்டர் ஒட்ட ரெண்டு நாள், மார்க்சிய நூல் படிக்க 2-3 நாள், அதை விவாதம் பண்ண ரெண்டு நாள்னு கிட்ட தட்ட முதல்வர் சுற்றுப்பயணத்துல கூட ஓய்வு இருக்கும் நம்ம 'புரட்சிகர' பயணத்துல ஓய்வே இருக்காது. ஓட...ஓட..ஓட..... தூரம் குறையல...பாட்டுத் தான்.
ஆமா ஆரம்ப வகுப்பு என்ன ஆச்சு
அப்படி ஒரு பாடம் ஒன்னு இருக்குதே....
இன்னடா அது ஆரம்ப வகுப்பு அப்டினுதான யோசிக்குறீங்க ..
இருக்குதே....இருக்குதே.... அதாவது என்னன்னா... ஒன்னும் பெரிய விசயமெல்லாம் ஒன்னுமில்ல. மேல சொன்ன எல்லா விசயத்தையும் ஒத்துக்க வைக்க உங்கள தலையாட்ட வைக்குற விசயம் தான். மக்கள் சந்திக்குற எல்லா பிரச்சனைக்கும் 'புதிய ஜனநாயகப் புரட்சி'தான் தீர்வுன்னு உங்கள ஏத்துக்க வைக்குறது தான் ... அப்படி னா என்னென்னு தான கேட்குறீங்க... அது தெரியாம ஒத்துகிட்டவங்க தான் பல பேரு.... அதாவது இப்ப இருக்குற தேர்தல் பாதையில தீர்வு இல்ல இந்தியாவுல பிறந்த முதலாளிங்க, சின்ன சின்ன முதலாளிங்க, நடுத்தர வர்க்கம், விவசாயிங்க, தொழிலாளிங்க எல்லாரையும் சேர்த்து புரட்சி செய்யப் போறாங்க. அத நாம ஒத்துக்குறமா இல்லையான்னு நம்ம கிட்ட கேட்குறது தான் அந்த ஆரம்ப வகுப்போட நோக்கம்... நமக்கு என்ன தெரியும் என்னத்த சொன்னாலும் புதுசா காதல்ல விழுந்திருக்கும் வயசுப் பசங்கள மாதிரி எல்லாத்துக்கும் ஆமாம் சாமி தான் போடுவோம்.
எவ்வளோ நல்ல கொள்கை, நல்ல கருத்து, நல்ல தத்துவம்... ல்ல.... மக்கள் பாவம் இதெல்லாம் தெரியாம இருக்காங்க. போய் சொன்னா போதும் உடனே அப்படியே கேட்டுகிட்டு கூட்டம் கூட்டமா வந்துருவாங்க ன்னு நினைச்சுட்டு நோட்டீஸ் எடுத்துட்டு கிளம்புவோம்.... சிங்கம்…சிங்கம்… நீ துரைசிங்கம் ன்னு ....
அங்க போய் அன்பான உழைக்கும் மக்களே னு ஆரம்பிக்கும்போது தான் தெரியும், தன்னால கேட்ட கதை எல்லாம் மறந்து போய் தத்தக்கா பித்தக்கா என்னத்தையாவது உளறிக்கிட்டு இருப்போம். அப்புறம் கூட வந்த தோழர் பேச, அப்புறம் நாம பேசன்னு ஒரு வழியா பிரச்சாரம் எனும் மாபெரும் முதல் 'வேலைத் திட்டத்தை' முடிச்சிருப்போம். (மக்கள் நம்மள பெருசா கண்டுகிட்ட மாதிரியே தெரியலயேன்னு மூளைல லைட்டா ஒரு கேள்வி தட்டும். அத பின்னாடி பாப்போம்)
தோழர் பசிக்குது சாப்பிடலாமா அப்படின்னு கூட இருக்கிற அந்த அப்பாவி தோழரைக் கேட்டா... இல்ல தோழர் இது மக்கள்கிட்ட இருந்து வசூல் பண்ண காசு இதுலெல்லாம் சாப்பிடக்கூடாது அப்படின்னு சொல்றத கேட்டு நாமளும் கொஞ்சம் சில்லறையை சிதற விட்டுறுப்போம் . ஓகே தோழர் நான் வாங்கித் தர்றேன், வாங்கன்னு கூப்பிட்டா கூட டீ மட்டும் போதும் தோழர்ன்னு சொல்லுவாரு. அவருக்கு தெரிஞ்ச கொஞ்சம் அரசியல் கருத்தை பேசி நம்மள அனுப்பி வைப்பாரு. உலகத்துல எவ்ளோ நல்லவங்கெல்லாம் இருக்காங்க, நம்ம சொந்தக்காரப்பயலுகளும் இருக்கானுங்களேன்னு நினைச்சுட்டு சரி தோழர் போயிட்டு வரேன் ன்னு அடுத்த பிரச்சாரம் செய்ற வேலை நாள் திட்டத்தோடு கிளம்புவோம்.
அங்க தான் விதி விளையாட ஆரம்பிக்கும். வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தா குழந்தைக்கு உடம்பு சரி இல்லை, ஹாஸ்பிடல் போலாம்னு பொண்டாட்டி கூப்பிடுவா ..... இந்தப் பக்கம் தோழரோடு போட்ட வேலை திட்டம் மறு பக்கம் நம்ம கையைப் பிடிச்சு இழுக்கும்.
நமக்கு புள்ள தான் முக்கியம்ன்னு மனசுக்குள்ள இருந்தாலும் நம்ம ஏத்துகிட்ட 'புரட்சிக்கான வேலையை' செய்ய ஒருத்தர வரச் சொல்லிட்டு நாம போகாம இருக்கமே, நாம ரொம்ப சுயநலமா யோசிக்குறமோ ன்னு தோழர்கள் சொன்ன மார்க்சின் வாழ்க்கை அவர் பட்ட கஷ்டமெல்லாம் நம்ம கண்ணு முன்ன ஓட ஆரம்பிக்கும். தயக்கத்தோட தோழருக்கு போன் பண்ணி "தோழர் இன்னைக்கு என்னால வர முடியாது"ன்னு விஷயத்தை சொல்லுவோம். பிறகு சில நிமிசத்துல பொருப்பாளர் 'பாண்ட்' போன் பண்ணுவார்.
'புரட்சி'க்கும் சொந்த வாழ்க்கைக்குமான போர் அங்க தான் ஆரம்பிக்கும். இவ்ளோ மனவேதனைப்பட்டு போன் பண்ற நமக்கு. அங்க இருந்து ஒரு தயாரான பதில் வரும். ஏன் தோழர் ஹாஸ்பிடல் அவங்களே போய்க்க மாட்டாங்களா....? ஊசி போட்டு வீட்டுல விட்டுட்டு வரமுடியாதான்னு ஓய்வு ஒழிச்சல் இல்லாம புரட்சிக்காக வேலை செய்ற மயிராண்டிட்ட இருந்து ஒரு கேள்வி வரும் பாருங்க.... அய்யய்யோ ப்ளோல நம்ம பொறுப்பாளார திட்டிட்டேன் போலயே....மன்னிச்சூ......நம்ம தோழர்கள்ட்ட இருந்து 'புரட்சிகர' ஒரு கேள்வி வரும். சரி தோழர் ஊசி போட்டுட்டு வீட்டுல விட்டுட்டு வர்றேன்னு சொல்லுவோம்.
நீங்க என்ன நினைக்குறீங்க தோழரே. குழந்தைக்கு ஓகேவா? நீங்க அவங்களோட இருக்கனும்னு நினைக்குறீங்களா? கூட இருந்து இன்னைக்குப் பாருங்க. நம்ம வேலைய நாளைக்கு தள்ளி வச்சுக்கலாம்... ம்ஹீம்....அதெல்லாம் இல்ல. அடுத்த மாசம் கல்யாணத்த வச்சுகிட்டு.... இல்ல....இல்ல... புரட்சிய வச்சுகிட்டு இப்படியெல்லாம் வேலைய தட்டிக் கழிக்கலாமான்ற கேள்வி தான் வரும்.
நமக்கும் சரி தான். தோழர் என்ன அவர் நல்லதுக்கா பேசுறாரு, மக்கள் நலனுக்காக தான பேசுறார்னு ACP யா ப்ரமோசன் வாங்குன சிங்கம் சூர்யா உள்ளயிருந்து சொல்லுவாப்பல… நோட்டீச தூக்கிட்டு வேட்டைக்கு வசூல் வேட்டைக்கு கிளம்புவோம்.
சும்மா பிரச்சாரம் பண்ணா போதுமா? மார்க்ஸ்சிய தத்துவ நூல்களைப் படிக்க வேண்டாமா ...இருக்கே...திட்டத்துல இருக்கே... கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை படிச்சு விவாதிக்கலாம்னு அதுக்கும் ஒரு தேதி இருக்கும். அந்த நாளும் வரும். ரெண்டு மூணு தோழகளோட உட்கார வைச்சு அறிமுகம் செஞ்சு நூல் விவாதம் ஆரம்பிக்கும். அது விவாதம் இல்ல, நல்லாயிருக்குற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை நாய் பராண்டுன மாறி கடிச்சு கொதறி வைக்க நடக்குற சண்டை....
திட்டத்துல இருக்குற மாதிரி படிக்க நம்மோட குடும்ப, வேலைச் சூழல் இடம் தராது. படிச்சு குறிப்பு எடுத்தாச்சா தோழர்னு, கேட்ட கேள்விக்கு, 'இல்லன்னோ அரை குறையாகவோ' பதில் வரும், தனியா படிச்சா புரியவும் செய்யாது. சரி அங்கயே வாசிச்சு விளக்கலாம்னு முயற்சி பண்ணி அத்தனை பேரும் அரை பெடல் அடிச்சு கிட்டு கிடப்போம். பக்கத்துல கீதா உபதேசம் செய்யும் பரமாத்தமாவா அமர்ந்திருப்பார் நம்ம பாண்ட் – 'ஜேம்ஸ் பாண்ட்'. அவர் சில விளக்கம் கொடுப்பார். வாய பொழந்து கிட்டு கதை கேட்ப்போம். ஆனா அவருக்குமே அந்த புக்குல இருக்குறது சரியா தெரியாது, புரியாது ன்னு நமக்கு தெரியவே பல வருசம் ஆகும்.
இப்படியாக ஒத்துக்க வைக்கப்பட்ட சில பல வேலைத் திட்டத்தை அரைகுறையா முடிக்க அதுக்குள்ள ஒரு மாசம் ஆகிரும்,
இப்ப நீங்க அதாவது நாம ஒரு 'புரட்சியாளாரா' எந்தளவுக்கு மாறியிருக்கோம்னு உரசிப் பாக்க வேண்டாமா அப்படி நம்மல உரசிப் பார்க்கத்தான் மாசக்கடைசில இதோ வருகிறது 'மாதாந்திர வேலை திட்டத்தை பரிசீலனை' செய்யும் நாள். காத்திருங்கள்… .
(தொடரும்.....)
பாகம் 3 விரைவில்.
{இந்த தொடர் வெறுமனே விமர்சனம் மட்டுமல்ல,
மார்க்சிய தத்துவத்தின் வழியில் சரியான மாற்றை முன்வைப்பதற்கும் தான்}
- டோனி ஸ்டார்க்