மக்கள் அரசுத் தேர்தல் பாதையை - கம்யூன் பாதையை நோக்கி முன்னேறுவோம்!
மக்கள் அரசுப் பாதை என்ற சொல்லாடல் கம்யூன் என்ற சொல்லாடலை அடிப்படையாகக் கொண்டதாகும். வரலாற்றில் முதன்முதலாக பாரிஸ் நகரில் தொழிலாளி வர்க்கம் தனது அரசு அதிகாரத்தை - கம்யூன் அமைப்பை நிறுவியது. 1871 ஆம் ஆண்டில் 72 நாட்களே கம்யூன் அரசு இயங்கியது. 1871 ஆம் ஆண்டிலேயே முதலாளியம் பாட்டாளி வர்க்கத்தின் அரசை வீழ்த்தி தன்னை மீண்டும் பாதுகாத்துக் கொண்டது. இந்த வரலாறு சொல்லும் உண்மை கம்யூன் ஆட்சி முறை என்பதே உழைக்கும் மக்களின் - தொழிலாளி வர்க்கத்தின் முதல் ஆட்சி முறை. இந்த ஆட்சி முறையை பாரீஸ் கம்யூன் நிறுவியது. இந்த வரலாற்று உண்மையை 1917 ஆண்டில் சோவியத் வடிவத்தில் மாருஷ்ய பாட்டாளி வர்க்கம் பல்தேசிய இனங்களில் சோவியத் ஒன்றிய அரசை நிறுவியது. அடுத்து சீனாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் 1948 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக சீனாவில் கம்யூன்களை நிறுவியது. 1945-இல் வியட்நாமில் அந்த நாட்டின் மொழி தேசிய வடிவில் கம்யூன் அரசு அமைக்கப்பட்டது. பின்னர், குறிப்பாக 1945 க்குப் பிறகு பல நாடுகளிலும் கம்யூனிஸ்ட்களின் - கம்யூன் அரசுகள் அமைக்கப்பட்டன.
முதலாளியத் தேர்தல் பாதைக்கும் கம்யூன் அரசுப் பாதைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன?
முதலாளியத் தேர்தல் பாதை மக்களுக்கு அரசு அதிகாரத்தை வழங்குவதில்லை. மாறாக, முதலாளிகளின் எந்த கட்சி அரசு அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதை தீர்மானிக்கவே இந்த முதலாளியத் தேர்தல் பாதை பயன்படுகிறது. ராணுவம், நீதிமன்றம், கலெக்டர் முதல் அனைத்து நிர்வாக அமைப்புகளும் (STATE) தனித்தே இயங்கும். முதலாளியத் தேர்தல் பாதையில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு நிறுவனங்களில் தலையிடும் அதிகாரம் இல்லை. மக்கள் அரசு அதிகார அமைப்பான கம்யூன் முதலாளிய தேர்தல் அரசுக் கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நீதிமன்றத் தலைவர்கள், அதிகாரிகள், இராணுவ மற்றும் காவல் துறை அதிகாரிகளும் கம்யூன்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது, அதிகார வர்க்க அமைப்பும் (STATE) கம்யூன்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதலாளிய தேர்தல் பாதையில் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு அரசு நிறுவனங்களிலும் தலையிட முடியாது. அதே சமயம் முதலாளிகள் எல்லா நிறுவனங்களிலும் தனது பண அதிகாரத்தால் ராணுவம் மற்றும் நீதிமன்றம் உட்பட அனைத்து நிறுவனங்களிலும் அதிகாரம் செலுத்த முடியும். பண பலத்தால் மட்டும் அல்ல, பாலியல் உறவுகளை ஊக்குவித்தும், இலஞ்ச ஊழல்களை பயன்படுத்தியும் முதலாளியம் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும். நேர்மையான அதிகாரிகளை பணி நீக்கம் செய்தும், சிறைப்படுத்தியும், கொன்றொழித்தும் முதலாளியம் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும். தனது நிலைக்கு எதிராக மக்கள் அணியமாகும் நேரத்தில் முதலாளியத் தேர்தல் பாதையைக்கூட நீக்கிவிடும். இந்த நிகழ்வு 1975-ல் இந்திரா காந்தியால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சிலி நாட்டிலும் 17 ஆண்டுகள் தேர்தல் பாதை கைவிடப்பட்டது. பங்களா தேசத்திலும், பாகிஸ்தானிலும் பல முறை ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டதை அறிவோம்.
இதன் காரணங்களால்தான் பாட்டாளி வர்க்கம் - கம்யூனிஸ்ட் இயக்கம் இந்த முதலாளியத் தேர்தல் பாதையை முற்றாக நிராகரிக்கின்றன. இந்த முதலாளியத் தேர்தல் பாதை உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதற்கு உலக வரலாற்றில் எண்ணற்ற சான்றுகள் இருக்கின்றன.
சிலி நாட்டில் 1970 -ஆம் ஆண்டில் சோசலிச கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் இன்னும் சில மார்க்சிய கொள்கையை ஏற்ற கட்சிகளும் முதலாளியத் தேர்தல் பாதையில் ஆட்சியைக் கைப்பற்றின. மூன்று ஆண்டுகள் ஆட்சியும் நீடித்தது. முதலாளியம் தனது நிலையை உயர்த்த நிலவுடைமை போக்குகளில் சில முன்னேறிய வழிமுறைகளை உருவாக்க வேண்டியுள்ளது. தனி நபர்களின் கைகளில் செல்வாக்கில் இருந்த வட்டி முறைகளையும், வங்கிகளையும் சீர்படுத்த வேண்டியிருந்தது. வங்கிகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும், நிலச் சீர்திருத்தத்தை உருவாக்குவதும் முதலாளிய அரசின் தேவையாக இருந்தது. சிலி நாட்டில் மட்டுமல்ல இந்தியா மற்றும் பல நாடுகளிலும், இந்த மாற்றம் முதன்மையான தேவையாக முதலாளியத்திற்கு இருந்தது. நிலத்திற்கு தனி உடமை 15 ஏக்கர் அளவுக்குள் இருக்க வேண்டும் என்ற சட்டம் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது. அரசுக்கட்டுப்பாட்டில் வங்கிகளை நிறுவுவதும் 1970 களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
சிலி நாட்டிலும் இம்முறைகள் கம்யூனிச கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சோசலிச கட்சிகளால் நடைமுறைப் படுத்தப்பட்டது. அரை நில உடமை கொண்ட நாடுகளில் இந்த முதலாளிய முறை அமல்படுத்தப்பட்டது. இந்தப் பணிகள் முதலாளிய வளர்ச்சிக்கு அடிப்படைத்தேவைகளாக இருந்தன. அரசின் தலைமையில் பல பொது நிறுவனங்களை கொண்டு வருவது முதலாளியத்தின் அவசியத் தேவையாக இருந்தது. சிலியில் பெருமளவில் இருந்த செம்பு ஆலைகள் அமெரிக்க முதலாளிகளிடமே இருந்தன. சிலியில் அதிகாரத்தில் இருந்த சோசலிச - கம்யூனிச அரசு, அமெரிக்காவின் செம்பு ஆலைகளை அரசு உடமையாக்கியது. முதலாளியம் - குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளியம் 1973 ஆம் ஆண்டில் சிலியின் ராணுவத்தின் மூலம் சிலி நாட்டை கைப்பற்றியது. இராணுவம் கம்யூனிஸ்ட் தலைவர்களையும், சோசலிசத் தலைவர்களையும் படுகொலை செய்தது. பல்லாயிரக்கணக்கான மக்களையும், ஜனநாயக இயக்கங்களை சார்ந்தவர்களையும் சிறையில் அடைத்தது மட்டுமின்றி படுகொலைகளும் செய்தது. ஏறத்தாழ - 17 ஆண்டுகள் ராணுவ ஆட்சியே சிலியில் நடைபெற்றது.
சல்வா டோ அலெண்டே மார்க்சியவாதியாக இருந்தாலும் சோசலிஸ்ட் பார்ட்டி ஆப் சிலி என்ற அமைப்பிலேயே இருந்தார். சிலியின் ஜனாதிபதியாகவும் இருந்தார். அமெரிக்காவின் கையாளாக மாறிய இராணுவத் தலைவர் இராணுவத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். 17 ஆண்டுகள் ராணுவ ஆட்சியே நடந்தது. பிறகு மீண்டும் முதலாளியத் தேர்தல் பாதை இன்று வரை பின்பற்றப்படுகிறது.
CPI, CPIM, CPIML இயக்கங்கள் சிலி நாட்டின் வரலாற்றை தெளிவாக அறிவார்கள். CPI, CPIM கட்சிகள் முதலாளியத் தேர்தல் பாதையில் விழுந்து விட்டன. அதுவே அதன் நடைமுறை அரசியல் கொள்கையாக மாறிவிட்டது. தெலுங்கானா புரட்சிப் போரை இந்திய அரசு வீழ்த்திய பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதலாளியத் தேர்தல் பாதையையே ஏற்று சிலி நாட்டுக்கே வழிகாட்டிவிட்டது. இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் முதலாளியத் தேர்தல் பாதை மூலம் (நம்பூதிரி மூலம்) முதலாவது சட்டமன்ற ஆட்சியை 1953ல் கைப்பற்றி தேர்தல் பாதையே தனது அடிப்படைக் கொள்கை என முடிவு செய்து விட்டது. CPIM அதே வழியில் மேற்குவங்கத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தியது. திரிபுராவையும் 15 ஆண்டுகள் ஆட்சி செய்தது. CPIM தலைமையில் இன்று வரை பல ஆண்டுகள் கேரளாவில் ஆட்சி செய்து வருகிறது. முதலாளியத் தேர்தல் பாதையையே தனது கொள்கை என CPI, CPIM கட்சிகள் தங்களது நடைமுறை மூலம் நிருபித்து விட்டன.
CPIML நூற்றுக்கணக்கான குழுக்களாக சிதறுண்டு போய் விட்டன. பெரும்பாலான குழுக்கள் தேர்தல் பாதையை நோக்கிச் சென்று விட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாலெ குழுக்களில் சில தேசிய இனப் பாதையில் பயணிக்கின்றன. சில குழுக்கள் முதலாளியத் தேர்தல் பாதைக்குள் வீழத்தயாராகி வருகின்றன. மிகச்சில குழுக்கள் முதலாளியத் தேர்தல் பாதையை நிராகரிக்கின்றன. மக்கள் அதிகாரப்பாதையை, கம்யூன் வழியை, சோவியத் வழியைப் பரப்புரை செய்து வருகின்றன. மாவோயிஸ்ட் கட்சியினர் முதலாளியத் தேர்தல் பாதையை முற்றாக நிராகரிக்கின்றனர். அதே சமயம் தங்கள் அதிகாரத்தை நிறுவிய பகுதிகளில் கம்யூன் வழியில் மக்கள் ராணுவத்தையும், ஆட்சிமுறைகளையும் நிறுவி வழிநடத்தினார்கள். ஆயினும் தேசிய இன விடுதலைப் பார்வை இன்மையும், முதலாளியத் தேர்தல் பாதையைப் பயன்படுத்தி மக்களை தேர்தல் பாதைக்கு எதிராக பயன்படுத்தும் வேலை முறையும் அவர்களிடம் இல்லை. இந்தியக் கண்ணோட்டத்திலிருந்து அவர்கள் முழுமையாக விடுபடவில்லை. எனவே, இந்தியத் தேசியக் கண்ணோட்டம் புரட்சியை முன்னெடுக்க பெரும் தடையாக்க இருந்தது.
முதலாளியத் தேர்தல் பாதையை நாம் முற்றாகப் புறக்கணிக்கிறோமா?
அடிப்படையில் முற்றாகத் தேர்தல் பாதையை ஒழித்துக் கட்டி மக்கள் அரசு அதிகாரத்தை - கம்யூன்களை நிறுவுவதே முதன்மையான இலக்காகும். மிகத்திரளான உழைக்கும் மக்கள் இந்த முதலாளியத் தேர்தல் பாதையை நம்பி வீழ்ந்து கிடக்கின்றனர். மக்களை தேர்தல் பாதையிலிருந்து மீட்டெடுக்க நாம் இந்தப் பாதையில் பயணிப்பது மிக அவசியமானதுதான். இந்த தேர்தல் பாதையைப் பயன்படுத்துவதற்கு அடிப்படையான காரணங்கள்.
- இது மக்களுக்கு அதிகாரம் வழங்கவில்லை என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
- முதலாளியத் தேர்தல் அரசியல் நிலவுடைமை சக்திகளுக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும், முதலாளிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சேவை செய்யும் நோக்கம் கொண்டது என்பதை முதன்மையாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
- உழைக்கும் மக்களை தேசிய இன அடிப்படையில் ஒன்றுதிரட்டி முன்னேறச் செய்யவும் இந்த முதலாளியத் தேர்தல் பாதையை நாம் பயன்படுத்த வேண்டும்.
இந்திய வரலாற்றில் விடுதலைக்காகப் போராடிய பல தேசிய இனங்கள் இந்தத் தேர்தல் பாதையை பயன்படுத்தி இருக்கின்றன. காஷ்மீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்கள், நேபாளம், ஈழம், இலங்கை என எண்ணற்ற போராட்டங்கள் முதலாளியத் தேர்தல் பாதையைப் பயன்படுத்தியது நமக்கு பல செய்திகளை கற்றுத் தருகின்றன.
அ. 1976 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' தமிழீழப் போராட்டத்திற்கு வெகுமக்களின் ஆதரவைத் திரட்ட பாதை அமைத்தது. 1977-ல் இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈழத்தில் 18 தொகுதிகளில் 17 இடங்களில் TULF வெற்றி பெற்றது. இது புலிகள் உட்பட பல இயக்கங்கள் விடுதலைப் போரை முன் எடுக்க உதவின.
ஆ. பஞ்சாபில் 2024-ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறையிலிருந்து போட்டியிட்டு இரண்டு இலட்சத்திற்கும் கூடுதலாக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர் அமீர்தபால்சிங். இந்திரா காந்தியைக் சுட்டு கொன்றவரின் மகன் சுயேச்சையாக போட்டியிட்டு 2,98,062 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரது தந்தை பெயர் பியாத்சிங், இந்திரா காந்தி கொல்லப்பட்ட அதே நிமிடத்தில் இவரும் இந்திரா பாதுகாப்பு காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் பியாத்சிங்கின் மகன் சராப்ஜித்சிங் வெற்றி பெற்றார்.
இ. காஷ்மீர் விடுதலை போராட்ட வரலாற்றில் 2024ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எஞ்சினியர் ரஷித் சிறையிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இன்று முதல்வராக இருக்கும் ஓமார் அப்துல்லாவை வீழ்த்தி பாராளுமன்றத் தேர்தலில் 2,04,142 வாக்குகள் வித்தியாசத்தில் எஞ்சினியர் ரஷித் வெற்றி பெற்றார். இவர் UAPA சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டவர். 4,72,481 வாக்குகள் பெற்றார்.
ஈ. நேபாளத்தில் மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டியதில் முதன்மையான கட்சியாக இருந்தது நேபாள் மாவோயிஸ்ட் கட்சியே. நேபாளத்தில் தேர்தல் பாதையில் பங்கேற்கும் கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்தே நேபாளத்தில் ஆட்சியை கைப்பற்றினார்கள் நேபாள் மாவோயிஸ்ட்டுகள். தனது படைகளில் இருந்த பல பேரை ராணுவத்தில் சேர்த்தார்கள். பிரஜண்டா இன்றும் கட்சியின் தலைமையிலும், நாட்டின் பிரதமராகவும் இருக்கிறார்.
நாம் மேலே கூறிய இந்த உதாரணங்கள் தேர்தல் பாதையை தேர்வு செய்வதற்காக அல்ல. கட்சியின் வழிகாட்டுதல், கட்சியின் நடைமுறையை, முதலாளியத் தேர்தல் பாதை மக்கள் பாதை அல்ல, கம்யூன் பாதையே உழைக்கும் மக்கள் பாதை என்ற கருத்தை நமது தேசத்திற்கு மட்டும் அல்ல இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் உள்ள தேசிய இனங்களுக்கும், அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே. உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நம் நாட்டில் மட்டும் அல்ல, உலக அளவில் நமது கொள்கைகளைக் கொண்டு செல்ல வேண்டும். அனைத்து தேசிய இன உழைக்கும் மக்களுடன் நட்பைப் பேணி வாழ்வதும், போராட்டங்களுக்குத் துணை நிற்பதும் நமது அடிப்படைக் கடமையாக இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டைப் பொருத்தவரை மா.லெ. இயக்கத்தில் 30க்கும் மேற்பட்ட சிறு குழுக்கள் இயங்குகின்றன. இந்தக் குழுக்களில் ஊழியராகச் செயல்படுபவர்கள் மொத்தம் 1000 பேருக்கும் குறைவாகவே இருப்பார்கள் என்பது 30 குழுத் தோழர்களுக்கும் தெரியும். இந்த அவல நிலையில் இருந்து கொண்டு ஏன் முதலாளியத் தேர்தல் பாதையில் தீவிரம் காட்டுகின்றனர் என்பதே தோழர்களிடம் நாம் எழுப்பும் கேள்வி. நாம் ஒன்றுபடுவதற்கான வழிமுறையை நோக்கிப் பயணம் செய்வோம்.
முதலாளியம் எப்போதும் எல்லா நேரமும் தனது முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும், செயல்படும். அதன் சிந்தனையில் எப்போதும் தனது நண்பர்களான நில உடமையாளர்களுடன், ஏகாதிபத்திய சக்திகளுடன் எவ்வாறு உறவு கொள்வது என்பதே அதன் நோக்கமாக இருக்கும். அதைவிட உழைக்கும் மக்களை எப்படிப் பிரித்தாழ்வது என்பது அதன் இடைவிடாத செயலாக இருக்கும். குறிப்பாக சாதி, மத, இன சக்திகளைப் பிளவு படுத்துவதும், தேவை எனில் அவர்களை மோத வைப்பதும் முதலாளியத்தின் செயலாகும். அதற்கு முதலாளியத் தேர்தல் முறை அவர்களுக்குப் பேருதவி செய்யும். முதலாளியம் இடைவிடாது அதன் முன்னேற்றத்தைப் பற்றியே சிந்திக்கும். பாட்டாளி வர்க்கமாகிய நாம் முதலாளியத்தைப் எப்படி ஒழிப்பது என்றே சிந்திப்போம். புரட்சிப் பாதையில் முன்னேறுவோம். ஒன்றாய் இணைவோம்.
- முதலாளியத் தேர்தல் பாதையை விரட்டி அடிப்போம்.
- மக்களுக்கு அரசு அதிகாரம் அளிக்கும் கம்யூன் பாதையை முன்னெடுப்போம்.
- தமிழ்த்தேசிய இறையாண்மைக்கான பாதையை நோக்கி முன்னேறுவோம்.
- பிற தேசிய இனங்களுடன் ஒன்றிணைவோம்.
- கம்யூனிஸ்ட்டுகளாக ஒருங்கிணைவோம்.
- புரட்சிப்பாதையில் முன்னேறுவோம்.
- புரட்சிக்கு தலைமை ஏற்போம்.
- புரட்சி ஓங்குக.
- திருமொழி, தமிழ்த் தேச இறையாண்மை