ஒரு அரசியல் கட்சி சமூகத்தின் தேவைகளில் இருந்து கட்டப்படலாம், கொள்கையில் இருந்து கட்டப்படலாம், ரசிகர்களின் மோகத்தில் இருந்தும் கட்டப்படலாம், பொய்களில் இருந்து கட்டப்பட முடியுமா ? அப்படி பொய்களில் இருந்து கட்டப்பட்ட ஒரு மண் வீடு பற்றிய கதை தான் இது.
பொய் என்றதும் சீமானின் கதையாக இருக்கும் என நினைத்து ஏமாந்த அப்பாவிகள் மன்னிக்கவும். இது சீமானின் கதையல்ல. சீமானின் தம்பிகளுக்கு முன்பே கம்யூனிசத்தின் பேரால் ஏமாந்த பல அப்பாவி தம்பி- தங்கைகளின் கதை.
ஒரு வகையில் சீமானுக்கு நெருக்கமான கதையும் கூட.
இந்து மதவெறி அமைப்புகளுக்கும் சீமானுக்கும் சோடி போட்டு பாத்தால் எப்படி 10 பொருத்தம் சரியா இருக்குமோ, அப்படி சீமானுக்கும் SOC தலைமை மற்றும் அதன் பொறுப்பாள 'சீக்ரெட் ஏஜென்டு'களுக்கும் சோடி போட்டு பார்த்தால் 11 பொருத்தமும் பக்கவாகப் பொருந்தியிருக்கும்.
பீடிகை போட்டாலே முழுநீள கட்டுரையாக வரக்கூடிய அளவுக்கான 'புரட்சிகர அண்ணன்'களின் ஆமக்கறி, அரிசிக்கப்பல் வகை கதைகளில் சில, இதோ உங்களுக்காக....
இருக்கக்கூடிய கட்சிகளில் லஞ்சம், ஊழல் மக்கள் விரோத திட்டங்களால் அக்கட்சிகளை வெறுக்கும் மனம், மாற்றாக நேர்மையான மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொடுக்கும் ஏதேனும் கட்சி அமைப்பு இல்லையே என ஏங்கும் மக்களின் கண்களுக்குத் தட்டுப்படும் 'புரட்சிகர அமைப்பான' ம.க.இ.க., பு.ம.இ.மு., புஜதொமு உள்ளிட்ட புரட்சிகர நிறுவனங்களுடன் தொடர்பு கொள்கிறார்கள்.
அப்படி தொடர்பு கொள்ளும், அறம் சார்ந்து ஏதேனும் தேடலுடன் இருக்கும் நபர்கள் புதிதாக அமைப்புக்குள் வந்ததும் அந்த அப்பாவித் தோழர்கள் பட்ட பாடுகளும் அவங்கள் சந்தித்த துயரமும் அவலமும் தான் வரப்போகிற கதை.
சரி கதைக்கு வருவோம், அப்படி வந்த புதிய நபர்களிடம் நம்ம 'புரட்சியாளர்கள்' சொல்லுற பொய் இருக்கே... இதோ அடுத்த சில மாதங்கள்ல, ஆண்டுகள்ல புரட்சி வந்துரும்ன்ற ரீதில ஆரம்பிச்சு வரப்போற அந்தப் புரட்சிக்கு நம்மைத் தயார் செய்ற படலம் இருக்கே... அது KGF ராக்கி பாயா நம்ம மனசுக்குள்ள கற்பனை ஓடும். ஆனா அமைப்பு கட்டுப்பாடுன்ற மஞ்சப்பொடிய மூஞ்சில பூசுனத உணர்ந்த பிறகு தான் தெரியும், நாம ராக்கி பாய் இல்ல ஆட்டுக்குப் பதிலா நேந்துவிட்ட ஆளுகன்னு.
இப்படியாக பல புரட்சிக் கதைகளை கேக்கும் நம் தோழர்கள் இதுக்கு முன்ன எந்த இயக்கத்துலயும் கட்சிலயும் இருந்து அனுபவம் இல்லாதவர்கள், சதுரங்க வேட்டை நாயகனிடம் கதை கேட்கும் செட்டியாரின் நிலைக்கும், பின் மண்ணுளிப் பாம்பை காவல் காக்கும் மனநிலைக்கும் மாறிவிடுவார்கள்.
ஒருத்தன ஏமாத்துனும்னா முதல்ல என்ன செய்யனும்? ஆசையத் தூண்டனும், நம்ப வைக்கனும் -- சதுரங்க வேட்டை.
இந்த கட்சி, அமைப்பு, புரட்சியை இன்னும் சில ஆண்டுகள்ல சாதிச்சுறும்னு நம்ப வைக்குறது தான் 'ஜேம்ஸ்பாண்டுகளின்' முதல் வேலை. ரகசிய கட்சி, கைக்கு எட்டும் தூரத்தில் புரட்சின்னு கதையக் கேக்க ஆரம்பிக்கும் தோழர்கள் மூளையைக் கழட்டி வச்சுட்டு மண்ணுளிப் பாம்பை பராமரிக்க, காவல் காக்க ஆரம்பிக்கின்றனர்.
சதுரங்க வேட்டையில் பல கோடி லாபம் பெறத் துடிக்கும், சில லட்சங்கள் தேறும் பணக்காரர்கள் அங்கு இலக்கு என்றால், இங்கு வாழ்க்கையில் நொந்து நூடில்ஸ்சான அப்பாவிகள், சமூகம் நல்லாயிருக்கனும், ஒரு மாற்றம் வேணும்னு நினைக்குற நல்லுள்ளம் கொண்டவர்களே இலக்கு.
ரகசிய அமைப்பு என்ற இந்த சாகசக் கதையை வாழ்க்கையில் இது வரை கேட்காத நமக்கு ஆச்சரியமும் ஆவலும் பற்றிக் கொள்கிறது. காவியங்களில் கேட்ட திரையில் பார்த்த நாயகர்களின் பிம்பத்தோடு பகுதி பொறுப்பாளர்களின் பிம்பம் இணையத் தொடங்கி அவர்கள் பின்பக்கத் தலையில் ஒளிரும் சக்கரத்தை காணத் துவங்குகிறோம்.
அப்படிப்பட்ட நமது நாயகர்களின் “யாருடனும் பேசக்கூடாது” எனும் வழிகாட்டுதலில் கூட்டங்களுக்கு போகத் தொடங்குகிறோம்.
ஒரு நபரை இன்னெரு நபருடன் அறிமுகப்படுத்தாமல் தோழமையாக இருக்க விடாமல் எழுப்பப்பட்ட 'சீன மதில்கள்' குறித்து ஆரம்பத்தில் நமக்கு கேள்வி எழுவதில்லை. ஏனென்றால் இதில் ஏதோ சாதிக்க இருக்கிறது என நம்புகிறோம். ஆனால் பேச விடாமல் தடுக்கப்பட்டதுக்கான காரணமோ வேறு. சரி ஒரு வேலை பேசுனா என்னவாகியிருக்கும், வேறென்ன புரோ மண்ணுளிப் பாம்பு செத்துருக்கும் ப்ரோ.... இன்னுமா புரியல....
மாநாடு, பொதுக்கூட்டம், அரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்டம் இப்படி எந்த நிகழ்வுக்கும் வரக்கூடிய எந்த ஒரு தோழரும் இன்னொரு தோழரோடும் பேச அனுமதி இல்லை. புரட்சிகர ஒழுங்கு, புரட்சிகர கட்டுப்பாடுன்னு சொல்லி நாமும் அதை நம்புவோம்… சரி ஒரு வேள பேசுனா என்னாகும், அமைப்புக்குள் சந்திக்குற பிரச்சனை குறித்து பகிர்ந்துகிட்டா. .பேசிகிட்டா... பேசிகிட்டா .... 'புரட்சிகர ஒழுங்கு' ஒழுகிரும்.
அட அதே தான் “பேசுனாலே பாம்பு உடம்பு எளச்சு செத்துரும்”....
சரி இப்ப நாம் சந்திக்கும் கூட்டங்களுக்கு வருவோம். முதல் முறையாக ஒரு அரசியல் கூட்டம் அல்லது நாம் ஏற்கனவே பாத்து சோர்ந்து போன பிற அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் அல்லாது, வேற ஒரு புது மாதிரி கூட்டத்தை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறோம் எனில், மேடையில் ஒலிக்கும் கோடான கோடி மக்களுக்காக குருதி சிந்திய தோழர்களே பாடலும் அது முடியும் தருவாயில் "வர்க்கப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்"ன்னு ஒரு கையை உயர்த்தி நம்மைச் சுற்றியுள்ளவர்கள் முழக்கம் எழுப்பும் போது ...பப்பா... சான்சே இல்ல புல்லரிக்க வைக்கும் கூஸ்பம்ஸ் நிமிசமா இருக்கும். ச்சே... என்ன ஒரு கட்டுப்பாட்டு அர்ப்பணிப்பு மிகுந்த அமைப்பு! எப்படியும் நம்ம தோழர்கள் புரட்சிய நடத்திருவாங்கப்பான்னு புல்லரிக்க ஆரம்பிக்கும். இவங்களுக்காக உயிரையே கொடுக்கலாம். அப்டி செத்தாலும் அந்த தியாகிகள் லிஸ்ட்ல நம்மையும் சேர்த்து "வீரவணக்கம்" போடுவாங்கள்ள.... ப்பா.. இதான்டா புரட்சிகர அமைப்புன்னு ஏறுமே ஒரு போத அது இறங்க பல வருசம் ஆகும்.
அதே பீலோட வீட்டுக்கு வந்து பொண்டாட்டி, ஆத்தா அப்பன் சொந்தக்காரன்னு வரண்ட இழுக்காத தோழர்கள் கிட்ட தட்ட இருக்கவே மாட்டாங்க. போதைய போட்டு வந்து வேஸ்ட்டிய அவுத்து தலைல கட்டி வம்பிலுக்குற வடிவேலு பாணில அத்தனை பேருகிட்டயும் வம்பு இழுக்க ஆரம்பிப்போம். இந்த நாட்டுல ஜனநாயமே இல்ல தெரியுமா, புதிய ஜனநாயகம்னா என்னென்னு தெரியுமான்னு போத எறங்காம சலம்ப ஆரம்பிப்போம். அங்க தான் தொடங்கும் நம்மை தனிமைப்படுத்தும் படலத்தின் முதல் அத்தியாயம். கோவிட்டுக்கு போட்ட சமூக விலக்கமெல்லாம் பிச்ச வாங்கனும் எங்க கிட்ட... நாங்க போடுவோம் பாருங்க ஒரு கேட்..., சொந்தக்காரங்க என்னங்க சொந்தங்காரங்க கட்டுன பொண்டாட்டில இருந்து பெத்த புள்ள வரைக்கும் எங்க பக்கத்துலயே வரமுடியாத அளவுக்கு ஒரு பெரிய.... கேட்... டு முதல் முறையாக போட்டோம். சோசியல் டிஷ்டென்ஸ் அப்படின்ற வார்த்தைய நீங்க கொரோனா காலத்துல தான பாத்தீங்க அதுக்கும் பல வருசம் முன்னாடியே நாங்க சோசியல் டிஸ்டென்ஸ் ஆகிட்டோம்.
இந்த நாட்டுல நடக்கக்கூடிய கேடுகெட்ட பல விசயங்கள் நம்ம மூளையப் போட்டு கொடையும். சாதி, மதம், இனப் பிரச்சனை, ஏன் ஏழை ஏழையா இருக்கான் கஷ்டப்படுறான் உணவு இல்ல வீடு இல்ல நிரந்தர வேலையில்ல... பணக்காரனுக்கு அரசாங்கம் கடன் தள்ளுபடி, வரிச்சலுகைனு வாரிவழங்குது... மக்கள் எல்லாம் கஷ்டப்படுறாங்கனு பக்கத்துல இருக்குற ஈழப்படுகொலை மட்டுமில்ல பல ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி நடக்குற பாலஸ்தீனப் படுகொலையை நினைத்து கூட மனசு வருந்துற கண்ணீர் விடுறவங்களுக்கு இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு முழுசாவோ அரைகுறையாவோ தெரியாது... அப்டி இந்த உலகையே தன்னோட சொந்தமா நினைக்குற மனிதர்கள் இந்த MLM (SOC) நிறுவனத்தை அணுகியதும் என்ன நடக்குது ...
என்ன நடக்குதுன்னா முதல்ல இந்த பிரச்சனைகளுக்கான அரசியல் காரணங்கள் விளக்கப்படுது. விளக்கம் உண்மை தான் என்றாலும் என்ன நோக்கத்துக்காகன்றதுல தான் விசயமே இருக்கே.
இது ஜனநாயக நாடே இல்ல... இங்கிருப்பது போலியான ஜனநாயகம். உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகம் இல்ல உண்மையான ஜனநாயகம்னா என்ன புரட்சினா என்ன சோசலிசம்னா என்னனு விளக்கப்படுது .... யப்பாட அப்ப இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு தீர்வு இருக்குதுறா..ன்னு ஒரு நிம்மதியும் ஆசுவாசமும் ஏற்படுது... (ஆனா எந்த அரசியல் கருத்தும் மார்க்சிய நூல்களும் படிச்சு புரிஞ்சுக்க முடியாத நிலையில தான் பலரும் ஆதரவாளராகின்றனர்.) இவர்கள் சொல்லும் அத்தனையும் ஏற்கின்றனர்.
அப்டினா அப்டி ஒரு கொள்கைக்காக நம்மால முடிஞ்சதெல்லாம் செய்யலாம்னு நினைக்கும் தோழர்கள் போஸ்ட் நோட்டீஸ் ஆர்ப்பாட்டம் என களத்தில் இறங்கத் தாயாராகின்றனர். அமைப்புத் தோழர்களுக்கு நிதி கொடுப்பது, உணவு கொடுப்பதுன்னு உறவாக நினைக்கத் தொடங்குகின்றர்.
தோழரே, எல்லாரும் சுயநலவாதிங்க முட்டாப்பசங்க அயோக்கியனுகன்னு ஆரம்பிச்சு புரட்சிக்காக அர்பணிப்பு, தியாகம்ன்னு பூமி இன்னும் கொஞ்சம் வேகமா சுத்துற அளவுக்கு ஒரு உருட்டு உருட்டி... உருட்டி ... உங்களை மொத்தமா குடும்பத்தினருடன் மட்டுமல்ல மொத்தமா இந்த சமூகத்திடம் இருந்தே சமூக விலக்கம் செய்ய வைக்க உங்களையே ஒத்துக்க வைக்குறது தான் ரெண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பம். அதாவது உங்க மாதாந்திர வேலைத்திட்டம்.
(பகுதி 2 தொடரும்...)
- டோனி ஸ்டார்க்