இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மா-லெ மாநில அமைப்பு கமிட்டி என்கிற கட்சியிலிருந்து வெளியேறிய தோழர்களில், சில இளம் தோழர்கள் ஒன்றிணைந்து 'இளம் கம்யூனிஸ்ட் கழகம்' என்கிற பெயரில் இந்திய சமுதாய பொருளாதார படிவம் குறித்த ஆய்வுக்கான தளத்தை துவங்கியது பற்றி கடந்த மே மாதம் 5ம் தேதி கீற்றுத் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அப்போதைய ஒன்றுபட்ட கட்சியின் செயலர் தரப்பு சதிக்கோட்பாடு என்கிற கோயபல்ஸ் பாணியிலான பிரச்சார உத்தியை கையிலெடுத்து, கட்சியை இரண்டாக பிளந்ததோடு ஊழல் குற்றச்சாட்டு விசாரணை வளையத்திலிருந்தும், ஆய்வு பணிகளை கைகழுவியது குறித்து அணிகளுக்கு பதில் அளிப்பதிலிருந்தும் தந்திரமாக தப்பித்து ஓடியது. இது குறித்து அந்த செய்தியில் குறிப்பிட்ட அளவிலேயே எழுதியிருந்தோம்.
செயலர் தரப்பின் பிளவுக்கான திட்டத்தை உணர்ந்திருந்த இடைக்கால கமிட்டியினர் கட்சி அணிகள் மற்றும் அதன் மக்கள் திரள் அமைப்புகளில் திரட்டப்பட்டிருந்த கணிசமான தோழர்களை ஒருங்கிணைத்து தனிப்பிளீனம் நடத்தி தங்களை தனிக்கட்சியாகவும் அமைத்து கொண்டனர்.
இளம் கம்யூனிஸ்ட் கழகமாக நாங்கள் உருவாவதற்கு முன்பாகவே அவர்களோடு சித்தாந்த ரீதியான ஐக்கியத்திற்கான உரையாடலை ஒரு குறிப்பிட்ட அளவு முன்னெடுத்திருந்தோம். எனினும் அடுத்த கட்ட நகர்வுகளில் அவர்கள் அக்கறை காட்டாமல் ஒதுங்கிச் சென்றனர்.
எனவே அந்த முதல் முயற்சியில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லாமல் போயிற்று. எனினும் அந்த விவாதங்களில் இந்திய சமுதாய பொருளாதார படிவம் குறித்த ஆய்வை மேற்கொள்வது குறித்த குறிப்பான திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை என்பதாகவே நாங்கள் புரிந்து கொண்டோம்.
எங்களது ஆய்வு தொடர்பான முயற்சியை அவர்கள் வரவேற்றாலும் தங்களது கட்சியமைப்பை ஒழுங்கமைத்து தக்கவைத்துக் கொள்வதையே முதன்மை இலக்காக அவர்கள் வகுத்து செயல்பட்டு வந்ததால் இந்த ஐக்கியத்திற்கான முயற்சியில் அவர்கள் உரிய கவனம் செலுத்தி அக்கறை காட்டவில்லை.
இதே காலகட்டத்தில் ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழுவினருடனும் நாங்கள் சித்தாந்த ரீதியான விவாதம் நடத்தி வந்தோம். புரட்சிகர உத்வேகத்துடனும் அக்கறையுடனும் அவர்கள் மேற்கொண்ட விவாதங்கள், நேரடி சந்திப்புகள், அணிகளின் விழிப்புணர்வு மிகவும் குன்றிப் போயிருந்த காலத்திலேயே தாங்கள் நடத்திய உட்கட்சி போராட்ட அனுபவங்கள் உள்ளிட்டவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்த விமர்சனப் பூர்வமான விவாதங்களின் தொடர்ச்சியாக இன்று இளம் கம்யூனிஸ்ட் கழகமும் ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழுவும் ஒன்றாக இணைந்து செயல்படுவதென்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
இந்த புரட்சிகர ஒற்றுமையின் அடிப்படையில் இந்திய சமுதாய பொருளாதார படிவம் மற்றும் இன்றைய சர்வதேசிய நிலைமைகள் குறித்த ஆய்வுப் பணிகளை இனி இருதரப்பும் இணைந்து மேற்கொள்வதென்ற முடிவை பொது வெளியில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இனி ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் தனித்து இயங்குவது அவசியம் இல்லை என்ற முடிவுக்கும் வந்துள்ளோம். இதற்கு முன்பாக ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழு சார்பாக கடந்த காலங்களில் பல்வேறு கட்டுரைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, அந்த கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் ஏதேனும் ஏற்பட்டால் அதனை ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழுவின் பெயரிலேயே வெளியிடுவதெனவும் தீர்மானித்துள்ளோம். இன்றிலிருந்து இளம் கம்யூனிஸ்ட் கழகத்தின் செயல்திட்டத்தின் அடிப்படையிலேயே அனைத்து பணிகளையும் இணைந்து மேற்கொள்வோம்.
நாங்கள் சிரமேற்கொண்டிருக்கும் இந்த பணி எவ்வளவு கடினமான பாதை என்பதை நாங்கள் உணர்ந்திருப்பதால் சமூக மாற்றத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் எங்களின் இந்த முயற்சிக்கு உதவுமாறு கேட்டு கொள்கிறோம். www.yclindia.wordpress.com என்ற இணையப்பக்கத்தை எங்களது அன்றாட செயல்பாடுகளை வெளிப்படுத்திக் கொள்ளும் தளமாக மட்டுமே தற்போது முன்னெடுத்துள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக விரைவில் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிடவிருக்கிறோம். இந்த பணிகளுக்காக இந்திய புரட்சிகர இயக்க வரலாற்றில் நேர்மறையாக ஏதேனும் ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் எந்த ஒரு கட்சி அல்லது தனிப்பட்ட தோழரிடமும்கூட விவாதிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
முதுகு இருப்பவன் ஒவ்வொருவனும் ஏதேனும் ஒரு முத்திரையை சுமந்தே ஆக வேண்டும் என்ற வகையில் வலது இடது என்று முத்திரை குத்தி மனம் மகிழ்வதையோ, ஐக்கியத்திற்கான முன்நிபந்தனையாக அமைப்பு வலிமையை சித்தாந்த வலிமைக்கு மேலான ஒன்றாக கருதி அணுகுவதையோ நாங்கள் கறாராக நிராகரிக்கிறோம்.
பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை கற்பித்து சமூக ஒற்றுமைக்கு உலைவைக்கும் ஆதிக்கசாதியினர் கட்டியெழுப்பும் தீண்டாமை சுவர்களைப் போல, "அவனோடு பேசாதே, இவனோடு தோழமை பாராட்டாதே" என்று தனது அணிகள், உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு கட்சிகள் உருவாக்கி வைத்திருக்கும் தீண்டாமைச் சுவரைத் தகர்த்தெறிந்து புதியதொரு விவாதக்களத்தை படைக்க விரும்புகிறோம்.
அரசியல் சித்தாந்த கோட்பாடுகளில் தெளிவில்லாமலும் கட்சி மற்றும் அமைப்பு விசுவாசத்தின் அடிப்படையில் மட்டுமே கட்சிக் கட்டமைப்புகளை உருவாக்கி புதிய பண்ணையடிமைகளை உருவாக்கி வளர்த்தெடுப்பது எப்பேற்பட்ட கேடுகெட்ட நிலை என்பதை எங்களது பட்டறிவின் மூலம் புரிந்து வைத்திருப்பதால் ஆள்பிடிக்கும் வேலையில் ஒருபோதும் நாங்கள் ஈடுபடப் போவதில்லை.
புரட்சிக்கான அரசியல் பேசுவதில் அனைவருக்குமான தோழமைத்தளமாக நாங்கள் இருக்க வேண்டும் என்பதையே விழைகிறோம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பினையும் விரும்பி அழைக்கிறோம். வாருங்கள்.
தோழமையுடன்,
இளம் கம்யூனிஸ்ட் கழகம் (YCL)