அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து தங்களோட மேலாதிக்கத்துக்காக ஈரான் நாட்டின் மீது போர் தொடுத்த போது இங்குள்ள பெரும்பான்மை மக்கள் நினைச்சது என்ன?

போர் எங்கயோ நடக்குது நாம ரொம்ப தூரத்துல இருக்குறோம். அதனால நமக்கும் நம் குடும்பத்துக்கும் நம் புள்ளைகளுக்கும், உணவுக்கும் எந்த பிரச்சனையும் பாதிப்பும் இல்லன்ற மனநிலையில் தானே இருந்தோம்‌. ஆனா நடந்தது என்ன? அந்த போர் தொடங்கிய சில நாட்களிலேயே நம்ம எல்லார் வீட்டு அடுப்படி வரை பாதிப்பை ஏற்படுத்திச்சு. தமிழ்நாட்டுல மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பல பேரோட தொழிலை, வேலையை வருமானத்தைப் பாதிக்கக்கூடியதா நிறுத்தக்கூடியதா மாறிடுச்சு.

இந்த போரின் ஆரம்பத்திலேயே விளைவுகள் குறித்து பலருக்கும் தெரியாம இருந்ததின் காரணம் என்ன?

1) அரசியல், பொருளாதாரம் குறித்த அறியாமை மட்டுமல்ல

2) போருக்குப் பின்னே உள்ள வணிக நலன்கள், உலகமயத்தால் ஒவ்வொரு நாடும் பிற நாடுகளைச் சார்ந்துள்ள பொருளாதாரப் பின்னணி பற்றியும் நமது அறியாமை.

மார்க்ஸ் கண்டறிந்து கூறிய இயக்கவியல் விதிகளில்,

ஒவ்வொன்றும் மற்றொன்றைச் சார்ந்துள்ளது.

ஒன்றின் தன்மை மற்றொன்றின் தன்மையைப் பாதிக்கின்றது என்கின்ற விதிகளுக்கு எடுத்துக்காட்டாகவும் உள்ளது.

இப்ப இத ஏன்‌ இங்க சொல்லுறோம்னா… இந்த கட்சிகளின் கொள்கையும், நடைமுறையும் அது போலத்தான் பல்வேறு வரலாற்றுக் கட்டங்களோடு தொடர்புடையது. அதுக்காக அதை பெருவெடிப்பு நிகழ்ந்த காலத்துக்குப் போய் அங்க இருந்து விளக்கப் போறதில்லை. ஆனா குறைஞ்சது ஒரு நூற்றாண்டுக்கு முன்னவாவது போய் கொஞ்சமா பார்க்கவேண்டியது இருக்கு.

கடந்த கால கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேலைத்திட்டம், கட்சி அமைப்பு விதிகளில் இருந்து அதன் அனுபவம் மற்றும் செயல்திட்டம் என எடுத்துக்கிறது எந்த வகையிலும் தப்பில்லை. அதைத் தான் எல்லாக் கட்சிகளும் அமைப்பும் செய்யுது. இப்ப நாம் பாக்கப்போறது கட்சி அமைப்பு விசயத்துல என்னென்ன செஞ்சாங்க என்பதைத் தான். அரசியலா இருக்கக் கூடிய பிரச்சனை, முரண்பாடுகளை அடுத்தடுத்து பார்ப்போம்‌‌. முதல்ல அமைப்பு விசயத்துல என்ன செஞ்சாங்கன்றதப் பார்ப்போம்‌.

அதுக்கு முன்ன ஒரு விசயத்தை சொல்லிக்குறேன்.

இந்தத் தொடர் பொதுவா இருக்குறதாலயும் இப்ப மூன்று பிரிவா அதாவது

1) மக்கள் அதிகாரம்

2) மக்கள் அதிகாரக் கழகம்

3) புரட்சிகர மக்கள் அதிகாரம்னு‌

இருக்குறதால இந்த தொடருக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லன்னு சிலர் சொல்லிக்குறாங்க. இதெல்லாம் SOC ம.க.இ.க பற்றிய பொதுவான விசயம் தான். இந்தத் தொடர் மூன்று குழுக்களுக்கும் பொருந்தும். குறிப்பா தனித்தனியா வருங்காலத்தில் விபரங்கள் விமர்சனங்கள் வரலாம், வரும். எங்க அண்ணனுக்கு நாங்க தான்டா செய்வோம்னு விஜய்-க்கு அட்லி சொன்ன மாதிரி, எங்க தோழர்களை நாங்க தான் செய்வோம். (விமர்சிப்போம்.)

சரி விசயத்துக்கு வருவோம். சும்மா விமர்சனம் தான பண்றீங்க மாற்ற முன்வைக்கிறது இல்லையேன்னு கேக்குற தோழர்களுக்கு நாம சொல்லுறது என்னென்னா… முதல்ல நாம என்ன செஞ்சோம், எப்படி தவறு பண்ணோம், அந்த தவறு தோன்றுவதற்கான காரண காரியம் என்னன்னு ஆராய்ந்தா தான் அடுத்து அந்தத் தவறு தோன்றாம தவிர்க்க முடியும் என்கின்ற தோழர் லெனினோட வார்த்தையிலிருந்து தான் இந்தத் தொடரை எழுதுறோம். அதனால நாம எப்படி கட்சி நடத்ததுவதுனு சொல்லுறது இரண்டாவது விசயம் தான். முதல்ல நாம் இருந்த கட்சி எப்படி நடந்துக்கிட்டது, என்னென்ன தவறு செய்தது, அதுக்கான அடிப்படை என்னென்னு சொல்லுறது தான் நம்ம முதல் கடமை. ஒரு மார்க்சிய கட்சி, இயக்கம் எப்படியெல்லாம் நடத்தக்கூடாதுன்னு சொல்லுறது தான் முதன்மையானதும் கடந்த காலத்திடமிருந்து கத்துக்க வேண்டியதும். வாங்க 5-வது பகுதிக்குள்ள போகலாம்.

ஏற்கனவே சொல்லிருந்தோம் மக்கள் திரள் அமைப்புகளை இயக்குவது SOC ‘சிதம்பர ரகசிய கட்சி’ தான்னு. மக்கள் திரள் அமைப்பு அதன் தலைமைகள் எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையா எடுத்துற முடியுமான்னா கண்டிப்பா முடியாது‌.

“மக்கள் திரள் அமைப்புல” உள்ள அனைவரும் கட்சி உறுப்பினராக முடியாது. அதுக்கு “தகுதி” ரொம்ப முக்கியம். கல்வித் தகுதியோ மக்கள் திரள் அமைப்பில் வேலை செய்ற தகுதியோ மார்க்சியம் பற்றிய புரிதலோ கட்சியில் இணைவதற்கான தகுதியில்லை. மாறாக பொறுப்பாளர்கள் என்ன சொன்னாலும் எதிர்த்து கேள்வி கேட்கத் தெரியாத, கேள்வி கேட்க முடியாத, கட்சிக்கு ஜால்ரா போடுற தகுதி மட்டுமே முதன்மையானது.

நம்ம பொறுப்பாளர் “ஜேம்ஸ்பாண்டு”கள் கண்டதே கொள்கை, சொன்னதே கோட்பாடுனு அவங்க சொல்லுற எல்லாத்தையும் நாம முழுமையா ஏத்துக்கனும். சில நாட்களில் நம்ம வீட்டுக்குள்ள நுழையும் “பாண்டுகள்” நம்மையும், நம்முடைய அன்றாட எளிமையான வாழ்க்கையையும் தான் முதல்ல விமர்சனம் செய்ய ஆரம்பிப்பாங்க.

பெண்கள் தலையில் பூ வைப்பது அடிமைத்தனம்னு தொடங்கி காப்பி குடிப்பது குட்டி முதலாளித்துவ பண்பாடுன்ற என அத்தனையையும் விமர்ச்சிப்பது வரை வந்து நிற்கும். “புரட்சிகர விமர்சனம்”. தனியார் பள்ளிக்கு போகும் குழந்தைகளை அரசு பள்ளிக்கு மாற்றச் சொல்லுவது, அரசுப் பணிக்கு முயற்சி பண்றவங்களை “அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி” (இது உண்மை தான்னாலும் எதார்த்தத்தில் அப்படி தவிர்க்க முடியுமா என்பது பற்றி தனியா பார்க்கலாம்) என‌‌ அந்த வேலைக்கு முயற்சி செய்றதக் கூட குற்றமா உணர வைக்குறதுன்னு எவ்வளவோ நடக்கும்.

எத்தனையோ தோழர்கள் தனியார் துறையில் வேலை செய்றாங்க, சொந்தமாக வியாபாரம் செய்றாங்க… அப்படி இருக்கிற தோழர்களைக் கூட அவர்களுடைய அன்றாட வேலைகளையோ, அது அவர்கள் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையோ கொஞ்சம் கூட கணக்கில் எடுத்துக்காம முழு நேர ஊழியர்களுக்கான வேலைகள் வாங்கப்பட்டு அவர்களுடைய தொழிலும் வேலையும் முற்றிலுமாக அழிந்து போகும் படி நாசம் செய்வார்கள் நம்ம “புரட்சியாளர்கள்” (பாண்டுகள்).

வேலைக்குப் போற தோழர்களை அடிக்கடி லீவ் போட வச்சு வேலையக் காலி பண்ண வைக்குறது, தொழில் செய்யுறவங்க கடை நடத்துறவங்களை கடை திறக்க விடாம வேலைத்திட்டம் போட்டு காலி பண்றது. “முழு நேரமா வாங்க தோழர்… உலக மக்களின் நன்மைக்காக இதெல்லாம் செய்யனும் தோழர்”, “கட்சி உங்களைப் பாத்துக்கும் பராமரிப்பு பண்ணும் தோழர்னு” நம்பிக்கை ஏற்படுத்துவாங்க. அப்படி ஏற்படுத்துன நம்பிக்கைக்கு உண்மையாகவும் இருக்க மாட்டாங்க.

முழுநேர ஊழியர்களுக்கு 5000 ரூ அல்லது அதற்கும் குறைவான தொகையை கொடுத்து குடும்பத்தை நடத்தச் சொல்லுறது… அந்தக் காசையும் அவர்களையே வசூல் செய்து எடுத்துக்கச் சொல்லுறது... ரேசன் அரிசி, அரசுப் பள்ளி, உடல் நலம் சரியில்லையா நோய் வந்தா அரசு மருத்துவமனை, காசு இல்லையா அங்கையே செத்துப்போ, இப்படி உடல் நலனை கவனிக்காம நோய்வாய்ப்பட்டு சரியான மருத்துவமும் பராமரிப்பும் இல்லாம பல தோழர்கள் இறந்தும் போய்ட்டாங்க. இது தான் ‘புதிய ஜனநாயகம்’ கண்டெடுத்த தோழமை உணர்வு, ‘புரட்சிகர ஊழியர் கொள்கை’. அப்போ நமது ஆசான்கள் எழுதி வச்ச ஊழியர் கொள்கை? அத தூக்கி குப்பைல போட்டு பல யுகம் ஆகுது.

இது மட்டும் இல்லாம புரட்சிகரமா இருக்கனும்ற பேர்ல தோழர்களை இப்படி வாட்டி எடுக்குறதோட விளைவு என்ன ஆகுது தெரியுமா? நேர்மையா இருக்கிற பல தோழர்கள் தாக்குப் பிடிக்க முடியாம கடன்காரன் ஆகுறாங்க. குடும்பம் சொந்தகாரங்ககிட்ட மதிப்பை இழக்குறாங்க. பாத்துகிட்டிருந்த “வேலையும் தொழிலையும் விட்டு முழுநேரமா வாங்க தோழர்னு” கூட்டிவந்த தோழரையே கடனை அடைக்க “மறுபடியும் வேலைக்குப் போங்க தோழர்னு” சொல்லுறது… கட்சிக்காக எல்லாத்தையும் இழந்து நிக்கும் தோழர்களை கைவிடுவது ஒரு பக்கம் என்றால் பல தோழர்களை திருட்டுக் கணக்கு எழுத வைக்குறது, பணத்தைக் கையாடல் செய்ய வைக்குறது இன்னொரு பக்கம். இவங்க கொடுக்குற சம்பளம் போதாம பல இடங்களில் இருக்குற தோழர்கள் ஆயிரக்கணக்குல வாங்குற கட்சிக்கான மாதாந்திர (நிதி) “லெவி”யையும் (இதுக்கு இந்த பேரு ஒன்னு தான் கேடு) சில நன்கொடைகளையும் தனக்கு கூட இருக்குற தோழர்கள் மற்றும் மேல இருக்குற நிர்வாகிகளிடமும் மறைச்சிருக்காங்க.

இது அந்த சம்பந்தபட்ட தோழர்கள் பகுதி மாறும் போது சில இடங்கள்ல தெரியுது. இப்படி எத்தனை நபர்களோட தொடர்பு இல்லாமையே போச்சோ அந்த புண்ணியவான்களுக்குத் தான் வெளிச்சம். இன்னொரு பக்கம் இல்லாத குழுக்களை இருக்குறதா பொய்க் கணக்கு காட்டுறது. அதாவது 3-5 பேர் இருக்குறது ஒரு குழுன்னு சொன்னோம்ல… அது போல புதுசா வர்றவங்களை குழுவாக்கி இயக்குறதா காட்டுற மோசடி வேலையும் நடக்குது. விவாதக்குழு, கட்சிக் கருக்குழு, கட்சி துணைக்குழுன்னு விதவிதமா பேர் இருக்கும். அதை இயக்குறதா வேற கணக்கு காட்டி தலைமையை ஏமாற்றுவதும் நடக்கும்.

ஒரு கட்சியோ இயக்கமோ இயங்கும் முறை என்ன? தலைமை முதல் மாவட்டம் தொடங்கி ஆதரவாளர் மட்டம் வரை அத்தனை பேரோட உழைப்பும் சேர்ந்து தான கட்சி. ஆனா இங்க அப்படி ஒரு‌ சிந்தனை கூட பொறுப்பாளர் “பாண்டு”களுக்கு இருப்பது இல்லை. தெருத்தெருவா அலைஞ்சு இரவுல நாய் துரத்த, போலீஸ் மிரட்டன்னு எல்லாத்தையும் தாண்டி போஸ்டர் ஒட்டுறது. காலை மாலை வெயில்னு பாக்காம வேலைக்கு, கடைக்கு லீவ் போட்டுட்டு வீட்டுல இருக்குறவங்கட்ட திட்டுவாங்கி பெத்த புள்ளைகளோட இருக்க முடியாம ஒரு நல்லது கொட்டதுக்குக் கூட போகாம கட்சிக்காக உழைக்குறாங்க தோழர்கள்.

பிரச்சாரத்துக்குப் போனா பேருந்துல ஓட்டுனர் நடத்துனர்கிட்ட திட்டு வாங்கி சில நேரம் பஸ்ல இருக்குற சங்கிகள்ட திட்டு வாங்கி சண்டை போட்டு, வாதம் பண்ணி “அன்பார்ந்த உழைக்கும் மக்ககளே” ன்னு பேச ஆரம்பிச்சா பிச்சைகாரங்க வசூல் பண்ண ஆரம்பிப்பாங்க அல்லது திருநங்கைகளோ, கடலை பொரின்னு விக்குறவங்களோ உள்ள நுழைவாங்க. “நாம காசு கொடுக்குறது பிரச்சாரம் பண்றங்களுக்கா இல்ல பிச்சக்காரங்களுக்கா”ன்னு மக்களே குழம்பி போயிடுவாங்க. அதையும் மீறி அவங்களோட போட்டி போட்டு நோட்டீஸ் கொடுத்து நிதி வசூல் செய்யனும். இது பேருந்து பிரச்சார நிலைமை. ரயில் பிரச்சாரத்துலயும் இதான் நிலைமை, அங்க கூடுதலா அரசுகிட்ட வழக்கும் சேர்த்து வாங்க வேண்டியது இருக்கும்.

கடை வீதில நோட்டீஸ் கொடுக்குறதுக்குப் போனா இதே போல வேற சில பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியது வரும். கல்லூரி அல்லது கம்பெனி வாசல்ல தொழிலாளர்கள் மத்தியில் நோட்டீஸ் கொடுக்கப் போனா ஒரு நாளைக்கு ஒரு கம்பெனி வாசல்ல தான் நிற்க முடியும். சரி இதுல தான் இந்த துயரம்னு நினைச்சா ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம்னா போலீஸ்ட்ட அனுமதி, மைக்செட் ஏற்பாடு, அனுமதியின்றி ஆர்ப்பாட்ட வழக்கு, போஸ்டர் ஒட்டிய வழக்கு, தொழிற்சங்க வழக்கு, டாஸ்மாக் உடைச்ச வழக்கு, அரசியல் வழக்குன்னு பெரிய பட்டியலே போகும். இவ்வளவு வேலை செஞ்ச தோழர்கள் எதாவது மாற்றுக் கருத்தோ கேள்வியோ கேட்டா அதும் அமைப்பின் நலன், மக்கள் நலனிலிருந்து கேட்டால் நம்ம ‘பாண்டுங்க’ திருப்பி என்ன கேட்பாங்க தெரியுமா? ஆமா அமைப்புக்கு நீங்க என்னங்க செஞ்சீங்க? எத்தனை பேரங்க நீங்க வென்றெடுத்தீங்க? எத்தனை குழுவை கட்டுனீங்கன்னு நம்மயே “கிடுக்குப்பிடி கேள்வி” கேட்பாங்க.

மேல சொன்ன ஒரு கூட்டுழைப்புல தான் ஒரு தொடர்பு வரும். யாராவது நானும் இந்த அமைப்புக்கு வர்றேன்னு தொடர்பு கொள்வாங்க. அப்படி தொடர்பு கொள்றவங்களையும் சந்திக்குற பொறுப்பு நம்ம “பாண்டு”களோடது. அது பாண்டுகளோட உழைப்பு கணக்குல மட்டும் வரும் போல. மேல சொன்ன உழைப்புக்கும் பிற தோழர்களுக்கும் சம்பந்தம் இல்லன்னு நினைக்குற நம்ம “பாண்டு”களுக்கு இருக்குறது மூளையா இல்ல களிமண்ணான்னு பாண்டுகளுக்கு தான் வெளிச்சம். (எப்புடி வந்து சிக்கி இருக்கோம் பாத்தியாப்பா — வடிவேலு ஸ்லாங்ல படிங்க)

இப்படி ஒரு கூட்டுழைப்பின் மூலம் சமூகத்துக்கு எதாவது செய்யனும்னு வந்த புது நபர்களை தன் மனம் போன போக்குல கையாண்டு வேலை வாங்கி வேலைச்சுமையின் அழுத்தம் தாங்காமல், தாக்குபிடிக்க முடியாமல் ஓட வச்சுட்டு நம்ம பாண்டுங்க பேசுற வீர வசனம் என்ன தெரியுமா?

”அவன் போனா போறான் விடுங்க தோழர்”.

“கோடிக்கணக்கான மக்கள் இருக்காங்க தோழர்”.

”நீங்க அந்தப் பகுதிக்கு போய் பிரச்சாரம் பண்ணி ஆள் புடிங்க தோழர்ன்னு” சொல்லுவாங்க.

கஷ்டப்பட்டு வேலை செய்த தோழர்களின் உழைப்பை இவ்வளவு கேவலமாக வீணடிக்குறது நம்ம “பாண்டுக” தான். புதிதாக வந்த நபர்களை தக்க வைக்கவும் தெரியாம, வென்றெடுக்குவும் தெரியாம விரட்டி விட்டதோடு வெளியேறிய புதிய தோழர்களை லும்பன், உதிரிப்பாட்டாளி, ஓடுகாலி, குட்டி முதலாளித்துவப் பண்பாடு உள்ளவர்னு தங்களுடைய அணுகுமுறைத் தவறை மறைக்க துருப்பிடித்த 50 வருட ரெடிமேட் ரப்பர் ஸ்டாம்பை குத்துவார்கள். நமக்கோ சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாமன்னு ஒரு நிலைமையைச் சொல்லுவாங்களே அப்படி ஒரு நிலைமைல தான் இருப்போம்.

ஒவ்வொரு முறையும் தொடர்பு பார்க்க ஆதரவாளர்களைப் பார்க்க, சொந்தக் காச செலவு பண்ணி போறதும் இல்லாம ஒவ்வொரு முறையும் நோட்டீஸ், போஸ்டர், மையப் பிரச்சார இயக்கம், மாநாடுனு வரும் போது அந்த பகுதிகளுக்கு சொந்த காச செலவு பண்ணி போய் வேலைக்கு லீவ் போட்டு சில நாள் அரசியல் வேலையும் செய்வாங்க நம்ம அப்பாவித் தோழர்கள். “ஒரு நாள் லீவ் போட்டு வாங்க தோழர்”னு வெளியூருக்கு வரச் சொல்லிட்டு 3, 4 நாள் கட்டாய லீவ் போட வைச்சிருவாங்க. இதற்கு தன்னுடைய பணத்தை செலவு செய்துவிட்டு குடும்பச் செலவுக்கு கடனாளியாகிற தோழர்கள் பலர்.

இதில்லாம அவங்க வாழும் பகுதில் நடக்குற ஆர்ப்பாட்டம் கூட்டங்களுக்கும் நோட்டீஸ் கொடுத்து செய்த நிதி வசூல் போதாமல், பகுதில உள்ள தோழர்கள் தான் கடனும் வாங்கனும். யாராவது ஒரு இளிச்சவாய் தோழர் தலையில மொத்தத்தையும் கட்டுவதும் நடக்கும்.

இது போக “புதிய ஜனநாயகம்”, “புதிய கலாச்சாரம்” உட்பட அமைப்போட பத்திரிகைகள் வெளியீடுகள் வேற ஏற்றும் கடன்சுமையோ கூடுதலா அழுத்தும். பேரு தான் “புதிய ஜனநாயகம்”. அந்த பத்திரிக்கை விற்பதுல ஜனநாயகமே இருக்காது. சொந்த‌ வேலைக்கும் போய்கிட்டு, குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு, இடையில இருக்குற நேரத்துல இந்த பத்திரிக்கை விற்பனை செய்ற தோழர்கள் தான் அதிகம் இருக்காங்க. அவங்களால இந்த பத்திரிக்கை விற்பதற்கு மற்ற அமைப்பு வேலைகளோடு சேர்த்து போதுமான நேரம் ஒதுக்க முடியாது. பத்திரிக்கை விற்பனையாகுதோ இல்லையோ அதுக்கான காச அமைப்புல முன்னாடியே மொத்தமா கொடுத்துரனும். இப்படி எல்லாத் தோழர்கள் வீட்டுலயும் விற்பனையாகாத புதிய ஜனநாயகம்–புதிய கலாச்சாரம் வெளியீடுகள் ஏராளமா இன்னைக்கும் நீங்க பாக்கலாம். தோழர்கள் கஷ்டப்பட்டு சொந்த காச செலவு பண்ணி அலைந்து வாங்கிய மாத இதழுக்கான ஆண்டு சந்தா கட்டிய வாசகர்களுக்குக் கூட முறையா புத்தகத்தை போஸ்ட்ல அனுப்ப மாட்டாங்க‌. அந்த அவமானத்தையும் அணிகளில் உள்ள தோழர்கள் தான் சுமக்கனும்.

என்னைக்காவது ஒரு நாள் “தோழர் இந்த வெளியீடுலாம் விற்பனையாகாம கிடக்குது” அப்படின்னு பொறுப்பாளரிடம் தயக்கமா கேட்டா, அதுக்கும் மறுபடியும் ஒரு வேலைத் திட்டம் போட்டு மாசமே முடிந்து போன பத்திரிகைகளைக் கொண்டு போய் விற்பதற்கு அனுப்பி விடுவாங்க. நாம போய் யாருகிட்டயாவது பேசி விற்றா “இது என்னங்க இது பழைய பத்திரிகையை கொண்டு வந்து கொடுக்கிறீங்க”னு நம்ம மூஞ்சியப் பாப்பாங்க‌. நமக்கோ தர்ம சங்கடமா இருக்கும். பெரும்பாலும் அப்படி விற்கவும் முடியாது. இந்த சங்கடத்தில் போய் விற்கவும் மனசு வராது. அது அவ்வளவுதான்.

நேர இழப்பும் மனவுளைச்சலும் தான் மிச்சம்‌‌. அணிகள் தோழர்கள் உழைத்து சம்பாரிக்கக்கூடிய அற்பத் தொகையைக் கூட இப்படி விற்க முடியாத எண்ணிக்கையில் மொத்தமாக புத்தகம் வாங்க வைத்து வீணடிப்பது அவர்கள் நேரத்தையும் உழைப்பையும் மீண்டும் மீண்டும் சுரண்டுவது என்ன வகையான அமைப்பு முறை? கரும்புச் சாறு எடுக்க கரும்பை மீண்டும் மீண்டும் மடக்கி மெஷினில் விட்டு பிழிவதைப்போல தோழர்களை மீண்டும் மீண்டும் பிழிவது மனிதாபிமானமற்ற சுரண்டல் இல்லையா?

இந்த நிலைமையை முதலாளித்துவ அரசுகிட்ட சொன்னாக்கூட பாவப்பட்டு மனம் இறங்கி உதவித்தொகை கொடுக்க கூட வாய்ப்பு இருக்கு. எங்க அப்பாவித் தோழர்கள் நிலைமையை அவங்க பட்ட கதையைக் கேட்டா கல்லுக்கு கூட மனசு இறங்கும்; எங்க ‘பாண்டுக’ மனுசு எதுக்கும் இறங்காது.

இந்த துயத்துரக்கு இடையில், “அந்த கட்சியோட மாவட்டக்குழு” நம்ம கிட்ட பேச்சுவார்த்தையில இருக்காங்க, “இந்த கட்சியோட குழு” வரப் போறாங்கன்னு அணிகள்ட்ட அப்பப்ப அடிச்சு விடுவாங்க‌. இதுல உச்சமா “செந்தளப்பிரதேசம்” கூட தயாராகிருச்சுனு பொய்யா அளந்து விடுவாங்க. சீனாவுல மாவோ நெடும் பயணம் போன மாதிரி நம்ம கட்சியும் சீக்கிரம் ஒரு நாள் “நெடும்பயணம்” போய் புரட்சி பண்ணிடும்னு நம்பு வைப்பாங்க. வெளிப்படையான அமைப்பு முறை இல்லன்றதால எல்லாத்தையும் நாமும் நம்புவோம். எத்தனை பேர் அமைப்பு, கட்சில இருக்காங்கன்னு தெரியாம என்ன எண்ணிக்கை சொன்னாலும் நம்புவோம். நாமளும் லட்சக்கணக்குல இருக்காங்க போலன்னு மனக் கோட்டை கட்ட ஆரம்பிப்போம்.

அடுத்தது பேரு. எல்லாத்துக்கும் ஒரு பேர் இருக்கும். அதுல என்ன பிரச்சனைன்னு தான கேக்குறீங்க. அதுல ஒரு பிரச்சனையும் இல்ல. வீட்டுல ஒரு பேர் பள்ளில, அலுவலகத்துல வெளில ஒரு பேருன்னு சிலருக்கு இருக்கும். ஆனா இங்க அத்தனை பேருக்கும் பொய்யா சம்பந்தமே இல்லாம எதாவது பேர் வச்சு விட்டுறுவாங்க. எதுக்குன்னா ரகசியத்துக்கு, யார்க்கு? வேற யாருக்கு (எங்களுக்கு) தோழர்களுக்கு தான். தோழர்களுக்கு தான் ஒருத்தருக்கு ஒருத்தர் ரகசியம். சரி நாம தான் புரட்சிகரக் கட்சினு நம்பி fire விட்டுக்குறோம் அரசுமா இந்த உருட்டுக்கு ஃபயர் விடும்? செவிட்டுல தான் விடும். அரசுகிட்ட போகும் போதாவது உண்மையச் சொல்லனும்ல.

ஏதாவது ஒரு ஆர்ப்பாட்டம் பண்ணி கைது பண்ணா அன்று மாலையே விட்டுறுவாங்க. இல்ல பிரச்சாரம் பண்ணும் போது தகராறு போலீஸ் விசாரணைன்னா உண்மையான பேரச் சொல்லாம பொய்யான பேரக் கொடுக்குறது. உண்மையான பேரச் சொன்னாக் கூட பிரச்சனையும் சாதாரணமா முடியும். பொய்யான பேரச் சொல்லி மாட்டுனா அதுக்கும் வழக்கு வாங்கனும், தாயினும் கிடைக்காது. போலிஸ்காரங்ககிட்ட ஏத்தும் வாங்கனும்.

இது ID Card–ம் தொலைத் தொடர்பும் இல்லாத கற்காலமா என்ன? 7-8 ID-யும் ஒரே போன்ல எந்த எடத்துல இருந்தும் இன்னொரு இடத்துல தகவலை விசாரிச்சு சரிபாக்குற டிஜிட்டல் காலம்றது கூட தெரியாம கற்காலத்துல போட்ட ப்ளான இப்ப போட்டு, பொய்யான பேரக்கொடுத்து போலீஸ்கிட்ட வெட்டியா சிக்கி சின்னாபின்னமாகி அசிங்கப்பட்டு, வெட்கப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, துன்பப்பட்ட கதைகளும் ஏராளம். ஆதார் கார்ட் எடுக்கக் கூடாதுன்னு ஒரு சுற்றறிக்கை, பின்னர் எடுக்கச் சொல்லி ஒரு அறிக்கை. அம்புட்டு அறிவு எங்க தலைமைகளுக்கு.

பழனிச்சாமி தவழ்ந்ததை ஊடகம் படம் பிடிச்சதால இப்ப வரை எதிர்க்கட்சிகளும் ஊடகமும் கேலி செஞ்சு வச்சு செய்றாங்க. நல்ல வேலை நாங்க ஆதார் கார்ட் முதல் பல இடங்களில் தவழ்ந்ததை யாரும் பார்க்கல.

இதெல்லாம் நாம புரட்சிக்காக செய்ற தியாகம். கட்சிக்கு இப்படி அடங்கி இருக்குறது தான் பாட்டாளி வர்க்க கட்டுப்பாடு. ”ஜேம்ஸ்பாண்டு”களுக்கு விஸ்வாசமா அடிமையா இருக்குறது தான் உழைக்கும் மக்களுக்கும் புரட்சிக்கும் செய்ற தொண்டூழியம்னு நினைச்சு வாழ்ந்த காலம் அது. கம்யூனிஸ்ட் புரட்சியாளாரா வாழனும்னா அதுக்கு பாண்டுகளோட சர்ட்டிபிகேட் வேணும்‌. அவங்களை பகைச்சுக்கிட்டா சிங்கம் ACPயா நாம வாங்குன புரமோசன் அதாவது புரட்சியாளரா வாங்குன புரமோசன் போயிறுமோன்ற பயம் – அப்பாவித்தனம்.

கட்சி அதாவது நம்ம “ஜேம்ஸ்பாண்டுகள்” ஒரு வேலைத்திட்டத்தையோ அல்லது அரசியல் கருத்தையோ முன் வைக்கும் போது அதை அப்படியே ஏத்துக்கனும், இல்ல முடியாது “உங்க பாட்டில் பிழை இருக்குறது”ன்னு நக்கீரன் போல ஆரம்பிச்சா பின்ன “ஜேம்ஸ் பாண்ட்”களோட நெற்றிக்கண்ணைப் பார்க்க வேண்டியிருக்கும்‌.

ஒரு உதாரணத்துக்கு ‘தேர்தல் பாதை திருடர் பாதை’ அல்லது கட்சியின் ‘புதிய ஜனநாயகப் புரட்சி’ குறித்து உங்களுக்கு ஏதாவது மாற்றுக் கருத்து வருதுன்னு வைங்க… அது அப்டியே ரகசியமா உங்களுக்குள்ளேயே வச்சுக்கனும். மாறாக, நம்ம கட்சி ஒரு ஜனநாயகக் கட்சி, கட்சியின் கொள்கை முடிவுகளை மாற்றுக் கருத்துக்களை உள்ள வச்சு போராடலாம்னு நினைச்சு கட்சிக்குள்ள முன்வச்சம்னா உடனேவெல்லாம் வெளியேற்ற மாட்டாங்க.

முதல்ல “பாண்டு”ங்க என்ன தோழர்னு நைசா உருட்ட ஆரம்பிப்பாங்க. அதுல திருப்தி இல்லன்னா குழுவுல வச்சு விவாதிக்கச் சொல்லுவாங்க. குழுவுல நம்ம கூடயிருக்குறது மட்டுமென்ன தத்துவத்துல விழுந்து புரண்டு எழுந்து கட்சியோட மள்ளுகட்டுற தோழர்களா? பொறுப்பாளர் வர்றாரு வேலையறிக்கை பரிசீலனைனா பயந்து நடுங்குற LKG குழந்தைங்க தான பாதி பேரு.

மேல சொன்ன வேலையப் பாக்குறதுலேயே ஆயுசக் கழிச்சவங்க தான் பெரும்பான்மை தோழர்ங்க. படிக்க நேரம் ஒதுக்காத, நேரம் ஒதுக்க முடியாத, படிச்சாலும் புரியாத தோழர்களே அதிகம். கட்சி சொல்லுறதுல இருந்தும் தன்னோட அனுபவத்துல இருந்தும் சொந்த அறிவுல இருந்தும் முரண்பட்ட தோழர்கள் சிலர்‌.

அப்புறம் நாம கொஞ்சம் விவரமான ஆளா இருந்தா உட்கட்சி விவாதம் வரை போகும். அதையும் தாண்டி வாக்கெடுப்பு வரைக்கும் போன கருத்தும் இருக்குது. இது தானுங்க ஜனநாயகம் அப்டின்னு தான நினைக்குறீங்க. அங்க தான் இருக்கு ஒரு டுவிஸ்ட். இதுவரை நீங்க போகவே சில பல வருசம் ஆகிடும். மாற்றுக் கருத்தின் மீது விவாதிக்க 5, 6 வருஷத்துக்கு மேல காத்திருந்து விவாதம் நடந்த கதைகளும் இருக்கிறது. அதையும் மீறி போனாக்கூட ஏற்கனவே செட்டிங் நடந்துரும். முதலாளித்துவ சட்டமன்ற உறுப்பினர்கள் போடுற செட்டிங்குக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லாத செட்டிங் இது.

தனித்தனியா 3, 5 பேர் இருக்குற குழுல முன் வைக்கும் போதே சம்பந்தப்பட்ட நபர்களைத் தவிர அதுல இருக்குற பிற தோழர்களைத் தனியாக் கூப்பிட்டு “பொறுப்பாளர்கள்” இந்த விவாதத்தை கட்சிக்குள்ள எடுத்துட்டு போக விடக்கூடாதுன்ற நோக்கத்தோடு அவரோட கருத்துக்கு சாதகமாக கூட்டத்துல கருத்து சொல்ல முன்னாடியே செட் பண்ணி வச்சுடுவார்.

அதையும் தாண்டி கட்சிக்குள் சென்றாலும் அங்கேயும் இதே செட்டிங் தான். தனிப்பட்ட முறையில் தோழர்களை அணுகி அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கக் கூறுவதும் (உத்தரவிடுவதும்) நடக்கும்.

தி.மு.க, அதிமுக தலைமையோ அல்லது வேற எதாவது கட்சித் தலைமையோ கொண்டுவரும் ஒரு தீர்மானத்துக்கு எதிராக அதன் உறுப்பினர்கள் வாக்களிக்க முடியுமா? கட்சித் தலைமையைp பகைத்துக் கொண்டால் அவர்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஓரம் கட்டுவார்கள், வெளியேற்றி விடுவார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை தானே. அது தான் இங்கேயும் நடக்கும். தேர்தல் புறக்கணிப்பு வேண்டாம், நாம் தேர்தலில் பங்கு கொள்ளலாம் என ஒரு தோழர் தன்னுடைய கருத்தை முன் வைத்தால், அது பற்றிய பரிசீலனையே இல்லாமல் தலைமைக்கு சாதகமாக வாக்களிக்கும் தோழர்களே பலர்.

மாற்றுக் கருத்தை முன்வைப்பவர் மட்டுமல்ல அந்தக் கருத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் பின் நாட்களில் சந்தேகிக்கப்படும் நபராகக் கருதப்பட்டு கட்சியில் அவர்களுக்கான தகுதி குறைக்கப்பட்டு, கட்டம் கட்டப்பட்டு, பின் ஓரம் கட்டப்படுவார்கள். பின் அவர்களை நேரம் பார்த்து கட்சியை விட்டு தூக்கி எறிவார்கள் அல்லது அவரே வெளியேறும் படி நடத்துவார்கள் என்பது கட்சியின் எழுதப்படாத விதி.

இந்தக் கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரையில் இதன் தலைமைகள் முன்வைத்த கொள்கை கோட்பாடுகளை எதிர்த்தோ அல்லது அணிகளின் புதிய கருத்துக்களை முன் வைத்தோ ஏதாவது ஒரு செயல் தந்திரம், போர் தந்திரம் தொடங்கி ஒரே ஒரு கருத்து கூட ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று யாராலும் காட்ட முடியுமா? முடியாது.

கட்சி இந்த முடிவை எடுத்தது, ஆனால் தோழர்கள் இப்படி கூறியதால் கட்சியினுடைய இந்த கொள்கை, இந்த கோட்பாடு, இந்த கருத்து மாற்றப்பட்டது என யாராலும் காட்ட முடியாது. தலைமையில் இருப்பவர்கள் அவர்கள் மூளைக்கு எட்டிய அறிவின் படி முடிவெடுத்துக் கொள்ளலாம். அந்த முடிவுக்கு “உள்ளேன் ஐயா” மட்டும் தான் அணிகளால் போட முடியும். இதுதான் “உட்கட்சி ஜனநாயகம்”. மாற்றுக் கருத்துகளுக்கு இவர்கள் கொடுக்கும் மதிப்பும், மரியாதையும் இவ்வளவு தான்.

பாட்டாளி வர்க்கத்திற்கு கட்சி தான் முதன்மையான ஆயுதம், கட்சில இல்லன்னா நீங்க எதுவானாலும் ஆகலாம். ஆனா கம்யூனிஸ்ட் ஆக முடியாது. இது போன்ற ஆசான் லெனினோட கருத்துக்களை தன்னுடைய அதிகாரத்துவப் போக்குக்கு, துரோகத்தனத்திற்கு கட்சியின் தலைமை, ஆசான்களின் கோட்பாடுகளை கேடாக கேடயமாகப் பயன்படுத்தும்.

சரி தலைமை தான் இப்படி எந்த பரிசீலனையும் இல்லாம 50 வருசமா இருக்குது அதுக்கு கீழுள்ள (பாண்டுகள்) பொறுப்பாளர்களாவது சரியா இருக்காங்களான்னா அவங்களும் இல்லை. சரி நம்ம தோழர்களாவது மாற்றுக்கருத்தை பரிசீலிக்குறாங்களானு பாத்தா அது அத விடத் துயரம். சில தோழர்களைத் தவிர பலர் அப்படி இல்லை‌.

10 வருசத்துக்கு முன்ன என்கிட்ட இப்படி அமைப்பு பற்றி விமர்சனம் செஞ்சுருந்தா நானும் கூட அதைப் புறக்கணித்தோ அல்லது விமர்சிக்கும் அமைப்புகளையும் தனிநபர்களையும் முட்டாள்கள், ஓடுகாலிகள், மார்க்சிய விரோதிகள், அறிவற்றவர்கள் என்றோ அல்லது எதிரியாகவோ தான் பார்த்துருப்பேன். மாற்றுக்கருத்து நம்ம மூளைக்குப் போறது அவ்வளவு சிரமம். ஏன் என்றால்…

விமர்சனங்களை எதிர்கொள்ள நம்ம “பாண்டுங்க” நமக்கு கொடுத்த ட்ரைனிங் அப்படி. அந்த விளைவாக விமர்சனங்கள் குறித்து நம்ம தோழர்கள் எதிர்கொள்கிற விதம் இருக்கே… அது அழகோ அழகு. அந்த அழகுக் குறிப்பை அற்புதப் படைப்பை அடுத்த தொடரில் பார்க்கலாம்.

(தொடரும்….)

- டோனி ஸ்டார்க் 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.