நமக்கும் எதிரிக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் பகையுள்ள முரண்பாடுகள். மக்கள் மத்தியில், உழைப்பாளி மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகள் பகையற்ற முரண்பாடுகள், சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும் சுரண்டு வர்க்கங்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் பகையாக இருக்கும் அதே வேளையில் பகையற்றவையாகவும் இருக்கின்றன.
– தோழர் மாவோ.
கடைசிய எங்க நிறுத்துனோம்.
நாம புரட்சியாளரா மாறிட்டு வர்றோமான்னு நம்பள உரசிப் பாக்குற வேலைத்திட்டப் பரிசீலனை பற்றி…. வாங்க பாக்கலாம்.
ஒவ்வொரு மாசமும் வீட்டு வாடகை, EMI, CREDIT CARD— ன்னு பில் கட்டுற நாள்ல கைல காசில்லன்னா வர்ற கவலைக்கும் பதட்டத்துக்கும் இணையானது தான் இந்த வேலைத்திட்டத்தை பரிசீலனை செய்யும் நாள். நம்ப தோழர்கள் பெரும்பாலும் EMI -Credit card அவஸ்த்தையை அனுபவிக்கலன்னாலும் விதிவிலக்கு இல்லாம இந்த வேலைத்திட்ட அவஸ்தையை அனுபவிச்சிருப்பாங்க.
ஒரு திட்டமிடலும் அது பற்றிய (பரிசீலனையும்) ஆய்வும் அணிகளை (3 முதல் 5 நபர்களை அடங்கியது ஒரு குழு) நடைமுறை, அரசியல், தத்துவத் துறையில இருக்குற நிலையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவதாக இருக்கனும். நம்ம தோழர்களுக்கு இந்த வேலைத்திட்டமும் பரிசீலனையும் எதனால எப்படி பதட்டத்துக்கும் வெறுப்புக்கும் சலிப்புக்கும் உன்டானதா மாறுது.?
அரசு உழியராக, தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளியாக, சிறு அளவில் கடை வைத்திருக்கும் வியாபாரியாக, மாணவராக, விவசாயியாக, எதாவது ஒரு வேலைய செஞ்சு தான் வாழ்க்கையை நடத்த முடியும்ற நமக்கு,
எல்லாருக்குமே ஒரே மாதிரியான வேலைத் திட்டத்தை எந்த முட்டாளாவது போடுவானா.... நாங்க போடுவோம். ஏன்னா நாங்க தான் உண்மையான ஒரே ஒரு 'புரட்சிகர அமைப்பு’.
சரி அப்ப மத்தவெங்கெல்லாம் யாரு? அப்டின்னு தான கேட்குறீங்க. கேட்டுத்தான் ஆகனும். நீங்க கேட்கலன்னாலும் நாங்க சொல்லுவோம்.
எங்களைத் தவிர மத்தவனெல்லாம் 'போலி கம்யூனிஸ்ட்கள்', ஓடுகாலிகள், லட்டர் பேட் அமைப்புகள்.
இந்த மாடுலேசன எங்கையோ கேட்ட மாதிரி இருக்கா…. இருக்கும் எங்க கேட்டுருப்பீங்க தெரியுமா .. நான் சொல்லவா?
”என் அன்பு உடன்பிறந்தார்களே தம்பி தங்கைகளே” ன்னு கைய விரிச்சுகிட்டு கத்துவான் பாருங்க தாத்தா சீமான் அங்க கேட்டுருப்பீங்க. நாம் தமிழர் நாங்க மட்டும் தான் தமிழர் எங்களுக்கு ஓட்டு போட்டவங்க எங்க கட்சில இருக்குறவங்க மட்டும் தான் தமிழர், மத்தவங்கெல்லாம் வந்தேறின்னு பேசுவானே அதோட ஒரிஜினில் “கம்யூனிச வெர்சன்” இதான். சீமானே இதோட கார்பன் காஃபி தான். சீமான் தமிழனா இல்லயான்றது அடுத்த துயரம் அதுக்குள்ள நாம் இப்ப போக வேண்டாம். நாம முதல்ல நம்ம பட்ட துயரத்தப் பற்றி பேசுவோம்.
நம்ம எல்லாருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கையும், பொருளாதார சூழலுமா இருக்குது? இல்லையே.
வேலைக்குப் போயிட்டு சீக்கிரம் வர வாய்ப்பு இருக்குற பிரிவினருக்குக் கூட மாலைல வீட்டுக்கு வந்தா உடல் சோர்வு, வாரத்துக்கு ரெண்டு நாள் வர்ற நல்ல தண்ணிய புடிச்சு வைக்குறது, மளிகைச்சாமான் வாங்குறது, புள்ளைங்கள மனைவிய வெளில எங்கயாவது கூட்டிப் போறது, அவங்களுக்கு துணி எடுக்கப் போறது, ஹாஸ்பிடல் போறதுன்னு எத்தனையோ தவிர்க்க முடியாத வேலை இருக்கும். இருக்குமா இல்லையா? கண்டிப்பா இருக்கும். அதைப் பற்றியெல்லாம் இந்த 'மண்ணுளிப் பாம்புகளுக்கு' எதாவது கவலையிருக்கும்னு நினைக்குறீங்க.... ம்ஹீம்.
அங்களுக்கு அதுபற்றி கவலையில்லன்றது மட்டுமில்லை, புரட்சியின் பெயரால் சமூக மாற்றத்தின் பேரால் இப்படிப்பட்ட எந்த எதார்த்த தேவையின் அவசியத்தையும் ஏற்று அங்கீகரிக்கத் தெரியாத 'தற்குறிகள்' தான் நம்ம 'பாண்டுகள்' (திட்டமிட்டு செய்யலன்னாக்கூட)
அங்களுக்கு தெரியலன்றது மட்டுமில்லை, நம்ம குடும்ப பராமரிப்புக்காக செய்ற வேலையையும் குடும்ப உறுப்பினர்களுக்காக ஒதுக்குற நேரத்தையும் கூட ஏதோ 'தேசத்துரோக' குற்றம் போல நம்மையே பீல் பண்ண வைக்குறது தான் இதுல உள்ள கேவலமான தந்திரம்.
"புரட்சிக்கு செய்ற துரோகம்" ன்னு மனம் நொந்து பல தோழர்களும் நாமும் கூட இப்படியாப்பட்ட வெங்காய விமர்சனங்களை, சுய விமர்சனங்களை ஏற்றிருப்போம். ”என்னைய நானே அடிச்சுக்றேங்க”ன்னு தன்னை தானே அடிச்சுக்கக்குற வடிவேலைப் பாத்தா நமக்கு காமெடியா இருக்கும்ல.
ஆனா இது அப்டியில்ல சுய விமர்சனம் என்கிற பெயரில் தன்னைத்தானே நொந்து கொண்டு நான் சுயநலமாக இருந்துட்டேனு ஒரு சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணிப்பதற்காக வந்த அந்த தோழர்கள் சுயபரிசீலனை செய்றதப் பார்க்க அவ்வளவு பரிதாபமாக கொடுமையாக இருக்கும். 4, 5 தோழர்களுக்கு முன்னால் நம்மோட சுயமரியாதையை எப்டியெல்லாம் சிதைக்க முடியுமோ அத்தனையும் நடக்கும். கூனிக்குறுகிப் போற அளவுக்கு இந்த வீண் விமர்சனங்கள் நம்மை சிதைக்கும்.
சரி வாங்க:
மாசக்கடைசில ஒரு நாள் ஏதோ ஒரு தோழர்கள் வீட்டுல சீக்கிரம் புரட்சியை சாதிச்சுறனும்ற நப்பாசைல நாம ஒன்னு கூடியிருப்போம். அங்க ரெண்டு மூனு தோழர்-ங்க வந்து சேருவாங்க.
கூட்டத்தை ஆரம்பிக்கலாமா தோழர்ன்னு எல்லாரும் எழுந்துருங்கன்னு ‘பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதம்’ பாட எழுந்திருக்கச் சொல்லிட்டு ஒரு தோழர் பாட ஆரம்பிப்பார்.
பட்டினி கொடுஞ்சிறைக்கு பதறுகின்ற மனிதர்காள்...
பாரில்கடையரே எழுங்கள் வீறு கொண்ட தோழர்காள்....
கொட்டுமுரசு கண்டன முழக்கங்கள் குமுறிட .
கொதித்தெழு புது உலகு வாழ்வதில் திளைத்திட ..
பாடுபட்டு உழைத்தவர் நிணத்தத் திண்ற கழுகுகள் பறந்தொழிந்து போதல் திண்ணம் பாரும் சில நாளதில்,
பாடுபட்டு மலையுடைத்து கட்டங்கள் எழுப்புவோம். கவலையற்ற போக சகலருக்கும் உண்டாக்குவோம்.
கவலையற்ற போக வாழ்வை சகலருக்கும் உண்டாக்குவோம்.
தியாகிகளுக்கு வீரவணக்கம்.✊✊✊
வீரவணக்கம் ✊✊✊
என்ன ஒரு உணர்ப்பூர்வமான சர்வதேசிய கீதம் …ல்ல….ம்….
இத கேட்டதும் கிர்…..ன்னு ஒரு போத ஏறும் பாருங்க அடுத்து நாம வாங்கப் போற அடி தெரியாம இருக்க போடப்படுற போதையா தான் இந்த சர்வ தேசிய கீதம் பயன்படப் போகுது.
மக்களுக்காக போராடி மடித்த தியாகிகளுக்கு வீர வணக்கம் சர்வதேசிய கீதம் எல்லாம் சொல்வது சரி தான். நாம் இப்பவும் அதையெல்லாம் மிக உயர்வா தான் மதிக்குறோம்.
ஆனா இந்த வீரவணக்கத்தின், சர்வ தேசிய கீதத்தின் நோக்கம் நம்மை உயர்த்துவதற்க்கு அல்ல. நம்ல வச்சு நம்ம புரட்சிகர அண்ணன்கள் மான்கொம்பு ஃபைட் போடுறதுக்கு போடுற பாட்டு தான் இந்த சர்வதேசிய கீதம், வீரவணக்கம் இந்த பாட்டெல்லாம். ('புரியாத தோழர்கள்'; இப்டி ஒரு சந்தானம் காமெடி இருக்கு கலகலப்புன்ற படத்துல. அத பாத்து தெரிஞ்சுக்கங்க. பாவம் சினிமா படம் பாத்தா, பாட்டு கேட்டா கூட ‘மண்ணுளிப் பாம்பு' செத்துரும் அதுக்கு சத்தம்னா ஆகாது. புரட்சியே நின்றும். புரட்சிக்கும் சினிமா பாக்குறதுக்கும், பாட்டு கேட்க்குறதுக்கும் என்னையா சம்பந்தம் 'பாண்ட்'ங்க பண்ண போதனையால் தான் பல வருசமா சினிமா கூட பாக்க விடாம, பாக்காம தான் பல தோழர்கள் இருக்காங்க)
ஏற்கனவே பொதுக்கூட்டத்துல கேட்ட "கோடானு கோடி மக்களுக்காக குருதி சிந்திய தோழர்களே" பாட்டே நமக்கு நினைக்கும் போதெல்லாம் புல்லரிக்க வச்சுறுக்கும். இதுல இந்த ‘பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம்’ வேற.
ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு மாசம் வேலை செஞ்சுட்டு அந்த திட்டத்தை அரைகுறையாவோ முழுசாவோ நிறவேத்திட்டு அதை பரிசீலனை செய்யும் நாள் இந்த கீதம், தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் இந்த பாடல் நம்ம உணர்வை எங்கயோ கொண்டு போயிறும். எங்கயோனா எங்க? வேற எங்க ப்ரோமோசன் வாங்குன 'ACP சிங்கம் சூர்யா'வ தட்டி எழுப்பிரும். நமக்குத் தான் நழுங்கு வைக்கப் போறாங்கன்னு தெரியாம புரட்சிகர உணர்வோட வெடப்பா உட்காந்துகிட்டு இருப்போம்.
எல்லா வகையிலும் சமத்துவமற்ற, அநீதிகள் நிறைந்த இந்த உலகில், எத்தனையோ நபர்கள் சுயநலமாக வாழ்ந்து மடிந்த இந்த உலகில், தங்களுடைய சொந்த சந்தோஷம், துயரம், குடும்பம், வாழ்வுன்னு எல்லாவற்றையும் ஒதுக்கி வச்சுட்டு உலக மக்களின் நன்மைக்காக உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த கோடிக்கணக்கான மக்களின், கம்யூனிசத் தோழர்களின் தியாகமும் வீரமும் நினைக்கும் போதெல்லாம் நம்மை கண்ணீர் சிந்த வைக்கும்.
அப்பேர்ப்பட்ட தியாகத்திலிருந்து நமக்கு ஊட்டப்படுவது, நம்முடைய சூழலையும் அறிவு, அரசியல், சித்தாந்த, தத்துவ, வளர்ச்சி நிலையையும் முறையாக புரிஞ்சுகிட்டு, உயிர் வாழ்வதற்கான நம்முடைய வாழ்க்கை சூழலையும் தேவையும் புரிஞ்சுகிட்டு நம்மை முன்னே நகர்த்துவதற்கான முன்னெடுப்பாக இல்லாமல், நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்கி குற்ற உணர்வுக்கு ஆளாக்கி நம்மள தோழர்களா பாக்காம இவர்களுக்கு ஏவல் ஆட்களாக, அடிமை நாய்களாக (தோழர்கள் மன்னிக்கவும்) மாற்றுவதற்கான தந்திரமாக தான் இந்த தியாகங்கள் கையாளப்படுதுன்றது தான் இங்க வேதனையிலும் வேதனையான உண்மை.
உணவுக்காக குடும்பத்திற்காக ஏதாவது ஒரு வேலையில் நாம் ஈடுபட்டே ஆக வேண்டும் என கட்டாய சூழ்நிலை தான் எல்லாருக்கும். வேலையை விட்டு வெளியேறினால், உழைப்பை விட்டு நாம் வெளியேறினால் நம் குடும்பத்தின் கதை என்ன? நம் பிள்ளைகளின் கதை என்ன? அவர்களுக்கான மாற்று பொருளாதார திட்டம் என்ன? இப்படி பல 'என்ன?'-களுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் எந்தப் புரிதலும் இல்லாமல் ஒவ்வொரு தோழரும் தங்கள் சொந்த குடும்பத்திற்காகவும், வாழ்க்கைத் தேவைகளுக்காகவும் தாங்கள் ஒதுக்கிய நாட்களை குற்ற உணர்ச்சியோடு அணுக வைப்பது என்பது கேவலமான ஒரு பரிசீலனை முறை இல்லையா? ஆம் நிச்சயமாக அது கேவலமானது தான்.
அப்படிப்பட்ட ஒரு கேவலம் தான் மாதம் மாதம் அரங்கேறுகிறது.
வேலைக்குப் போனால் தான் கடனை அடைக்க முடியும், குடும்பம் நடத்த முடியும், குழந்தைகளைப் படிக்க வைக்க முடியும், வாழ முடியும் என்று இருக்கக்கூடிய ஒரு தோழரை வேலையை விட்டு வெளியேறு ன்னு சொல்லுறதுக்கு முன், முன் வைக்க வேண்டிய மாற்றுப் பொருளாதாரம் திட்டம் என்ன? அவர் பிழைப்புக்கு 5000 அல்லது அதுக்கும் கூடுதலாக சிறிய தொகையைக் கொடுத்து விட்டு பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டு ரேசன் அரிசியை அந்த குடும்பத்தையே சாப்பிடச் சொல்லிட்டு குடும்ப செலவுக்கோ குழந்தைகளுக்கோ எதும் வாங்கவோ இல்ல வேற ஒரு அவசரத் தேவைக்கோ கூட வேறு ஒருவரிடம் கையேந்த வைக்கும் கண்கலங்க வைக்கும் சூழ்நிலையை உருவாக்குவதும், அத ஏத்துக்குறதும் தான் புரட்சிகர உணர்வா? அதுதான் புரட்சிகாக செய்யுற தியாகமா? அதுதான் புரட்சியை சாதிக்குமா?
கணவனை விட்டு மனைவியும், குழந்தைகளை விட்டு குடும்பத்தையும், சொந்த பந்தங்களையும் நண்பர்களையும் விட்டு நம்மையும் ஒருவரிடம் இருந்து ஒருவரையும் பிரிப்பதைத்தான் நம்முடைய கம்யூனிச முன்னோர்கள் புரட்சி என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை.
ஒரு அறையில மூனோ அஞ்சோ தோழர்களை உட்கார வைச்சு ஒரு மாசத்துல செய்த வேலையைப் பற்றி பரிசீலிச்சு அதுல அந்த தோழர்கள் கற்றுக்கொண்டது பரிசீலிக்கப்பட்டு தங்களுடைய சொந்த தேவைகள் குறித்து அது தவிர்க்க முடியாதது எப்படி என்பது குறித்து விளக்குவது அல்லாமல் ஒவ்வொரு தேவைக்கும் நேரம் எடுத்துக் கொண்டதற்கு ஒவ்வொரு நாளுக்கும் வர முடியாததற்கெல்லாம் தங்களுடைய "புரட்சிகர உணர்வு குறைபாடு உள்ளது தான் காரணம் என்றும்", "தாங்கள் சுயநலவாதியாக இருப்பது தான் காரணம்" என்றும் கேவலமான முறையில் சமூகத் தேவையை புரிந்து கொள்ளாமல் உயிர் வாழ்வதற்கு தேவையான சூழலை புரிந்து கொள்ளாமல் தோழர்களையே குற்றவாளிகளாக ஒப்புக்கொள்ள வைப்பதும், நம்மை குடும்பத்தை விட்டும் சமூகத்தை விட்டும் மொத்தமாக பெயர்த்து எடுத்து தனிமைப் படுத்துவது தான் இந்த வேலைத் திட்ட பரிசீலனையின் இலட்சணம். அதைத் தான் இந்த பரிசீலனை முறை இதுவரை பெரும்பாலும் சாதித்திருக்கிறது.
இது ஒவ்வொருவரையும் குற்றவாளிகளாக ஒப்புக் கொள்ள வைப்பதோடு நின்று விடுவதில்லை. இந்த 'பாண்டு'களும் அதற்கு மேலே உள்ள தலைமைகளும் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று நம்மையே மனக்கோட்டை கட்ட வைப்பதற்கும் இவர்களுக்கு அடிபணிய வைப்பதற்கும் மெல்ல மெல்ல நம்மை பழக்கப்படுத்துவதற்கான செயல்முறை தான் இந்த பரிசீலனை.
நம்மை நாமே குற்றவாளிகள் என ஒப்புக்கொள்ள வைப்பது. இவர்களை விட நாம் உணர்வு குறைந்தவர்கள், செயல்பாட்டில் குறைந்தவர்கள், இவர்களுக்கு நாம் கீழ்படிய வேண்டியவர்கள் என்பதையும் நம் தலையில் ஏற்றத்தான் இது அத்தனையும்.
அப்படினா தலைமைக்கு கட்டுப்படக் கூடாதா? தலைமையை மதிக்கக் கூடாதா? பகுதி பொறுப்பாளர்களை மதிக்கக் கூடாதா? அவர்களுக்கு கட்டுப்படக் கூடாதா? சமூக மாற்றத்திற்கு நேரம் ஒதுக்க வாழ்க்கைய அர்ப்பணிக்கக் கூடாதா? அதைத்தான் நாம் சொல்கிறோமா? அதுதான் நம்முடைய நோக்கமா? நிச்சயமாக இல்லை.
உங்கள் வேலைத் திட்ட பரிசீலனை இதயமற்றது. நிலவக்கூடிய இந்த சமூக அமைப்பில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடிப்படையாக உயிர் வாழ்வதற்கான தேவைகளை, வாழ்க்கைத் தேவைகளை கண்மூடித்தனமா சிறுக சிறுக மறுப்பது. குடும்ப தேவை குடும்ப உறுப்பினர்கள் மனநிலை இது எதையும் கணக்கில் எடுத்துக்காம, நேர்மையாக பரிசீலிக்காம, அந்த குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை வறுமையில தள்ளுறது. சத்தான உணவு, நல்ல உடை, நல்ல இருப்பிடம் ன்னு அடிப்படை தேவையைக் கூட மறுப்பது. பல நல்ல மனிதர்களின் வாழ்க்கையை சிதைத்து உங்கள் ஏவாலாளியாக மட்டுமே ஒருத்தனை மாற்ற நினைப்பது. ஒத்துக்கொண்டால் அந்த குடும்பத்தின் உழைப்பையும் எதிர்காலத்தையும் சுரண்டுவது; இல்லையென்றால் அந்த குடும்பங்களை சிதைத்து அந்த நபரை மட்டும் வெளியேற்றி உங்களுக்கான அடிமைகளாக மாற்றுவது. இது தான் இதுவரை நீங்க செய்த சாதனையின் ஒரு பகுதி. (இது குறித்து விரிவாக பிறகு பார்க்கலாம்)
நூல் விவாதம்கிற பேரில் நடப்பது என்ன? ஒவ்வொரு தோழர்களின் தத்துவ கண்ணோட்டத்தை வளர்ப்பது அல்ல இந்த தத்துவ நூல் விமர்சனம், விவாதம். உங்களை விட நாங்கள் அறிவாளிகள், நீங்கள் எவ்வளவு முட்டாள்கள் என நிறுவ உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு. உங்கள் தலைமையை நாங்கள் (அணிகள்) தலைவணங்கி ஏற்றுக் கொள்ள நீங்கள் செய்யும் தந்திரம். மார்க்சிய நூல்களைப் படித்து விளக்குவதற்குத் திராணியற்ற நபர்களை பகுதி பொறுப்பாளர்களாக நியமிப்பது மட்டுமல்ல. அந்த முட்டாள்களுக்கு கட்டுப்படும் நபர்கள் மட்டுமே அமைப்பில் நீடிக்க முடியும் என்ற நிலைமையை 50 ஆண்டு காலமாக வைத்திருப்பது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா. இதெல்லாம் தெரியாமல் நடந்த தவறா? கட்சித் தலைமையும் பொறுப்பாளர்கள் அனைவரும் முட்டாள்களா? இல்லவே இல்லை. புரட்சியை நடத்த நீங்க தீட்டிய செயல் திட்டத்தின் ஒரு பகுதியா இது? இல்லை இல்லவே இல்லை. இது புரட்சிக்கானது அல்ல, உங்கள் சுயநலத்திற்கானது, அதிகாரத் திமிருக்கானது.
கடந்த 50 ஆண்டுகாலமாக எத்தனையோ இளைஞர்களும் பெண்களும் மாணவர்களும் தொழிலாளர்களும் விவசாயிகளும் இந்த அமைப்பு முறைக்குள் ஒரு சமூக மாற்றத்திற்காக ஏங்கி உள்ளே நுழைவதும் இந்த வேலைத் திட்டம், வேலைத் திட்ட பரிசீலனை என்ற இந்த முறையின் அழுத்தம் தாங்காமல் (வடிவம் தாங்காமல் அல்ல) எத்தனையோ ஆயிரம் தோழர்கள் நல்லவர்கள் குற்ற உணர்ச்சியுடன் வெளியேறி இருப்பார்கள் என்று நினைத்துப் பார்ப்பதற்கே வேதனையில் நெஞ்சு கொதிக்கிறது.. அவர்கள் வெளியேறியது மார்க்சியத்தின் மீதான முரண்பாடுகளாலோ தனக்கு அரசியல் வேண்டாம் என்பதாலோ அல்ல; சொந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு நம்மால் இந்த அரசியலில் ஈடுபட முடியாது போல என்று உங்களால் தவறாக நினைத்து குற்ற உணர்ச்சியோடு தான் பலர் வெளியேறியிருக்கிறார்கள். இது போன்ற மாதம் முழுவதுமாக போடப்படும் திட்டங்கள் எத்தனையோ தோழர்களின் அரசியல் வாழ்க்கையும் பங்களிப்பையும் உணர்வையும் குழிதோண்டிப் புதைத்ததற்கு காரணமாக இருந்திருக்கிறது.
இப்படியாக ஒரு மாதவேலை பரிசீலனைன்ற பேருல குற்றவுணர்ச்சி ஏற்படுத்தி விட்டு 7, 8 நாளைக்கு போடப்பட்டிருந்த வேலைத்திட்டம் புரட்சிக்கான பங்களிப்பு பத்தல, கூடுதலா நாளை ஒதுக்கனும், கூடுதலா படிக்க, பிரச்சாரம் செய்ய நாள் ஒதுக்கனும் ன்னு 8, 10 ன்னு இருந்த நாட்கள் படி படியா உயர்ந்து 20 நாட்களுக்கு மேல் உயர்த்தி கடைசில ஒரு மாசத்துல இருக்குற அத்தனை நாளுக்குமான வேலைத்திட்டமா மாறி இருக்கும். ஒன்னு ரெண்டு நாள் தவிர்க்கவே முடியாதுன்னு சொல்லி “புரட்சிகர வேலைத்திட்ட நாள்”ல இருத்து லீவு வாங்க கெஞ்சுறது இருக்கே அது முதலாளித்துவ நிறுவனங்கள்ல கெஞ்சுறத விட கொடுமை.
புரட்சிக்காக அப்பப்ப போறதுன்னு இருந்த நம்ம வாழ்க்கை மாசம் முழுமைக்குமா மாறும். சரி நாம மாசம் முழுவதும் சோற்றுக்காக வேலை செய்றதோட புரட்சிக்காகவும் வேலை செய்றோம். நம்மள மாதிரி கஷ்டப்படுற பல குடும்பங்களினுடைய நிலை நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தெரியுது. நம்மள எல்லாம் ஒருங்கிணைக்க வர்ராறே இந்த 'பாண்ட்' ஜேம்ஸ்பாண்ட் அவர் யாரு? அவர் வாழ்க்கை சூழ்நிலை என்ன? அவர் எப்படி சாப்பிடுகிறார்? எங்க வாழ்கிறார்? இதெல்லாம் ஏதாவது நமக்குத் தெரியுமா? தெரியாது .ஏன்னா அவர் ரொம்ப ரகசியமானவரு…
ரகசியமா… ஆமா ரகசியம் தான்.
அது என்ன ரகசியம்-னு தான கேக்குறீங்க அது ஒரு ஊர் அறிந்த ரகசியம்ங்க. அத அவங்க வாயாலயே கேட்ப்போம்.காத்திருங்கள்.
(தொடரும்.)
- டோனி ஸ்டார்க்