அந்தோணியோ கிராம்ஷி (1891 - 1937) இத்தாலியில் வாழ்ந்த ஒரு சிந்தனையாளர். கம்யூனிஸ்டான இவரை சர்வாதிகாரியான முசோலினி சிறையில் அடைத்தான். சிறையில் இருந்து இவர் எழுதியக் குறிப்புகள் பாசிசத்துக்கு எதிரான சமரில், இப்போதும் பொருத்தமுடையவையாக கருதப்படுகின்றன. வ.கீதா , எஸ்.வி.ராஜதுரை இருவரும் இணைந்து 'கிராம்ஷி : புரட்சியின் இலக்கணம்' என்ற நூலை எழுதியுள்ளனர். பொதுப்புத்தி, குடியுரிமைச் சமூகம் (civil society), கருத்து மேலாண்மை (hegemony) போன்ற கருத்தாக்கங்கள் மூலம் இன்றைக்கும் உலகம் முழுவதும் செல்வாக்கு செலுத்திவருபவராக கிராம்சி இருக்கிறார். என்சிபிஎச் வெளியிட்டுள்ள இந்த நூல் அந்தோணியோ கிராம்சி குறித்த முழு சித்திரத்தை தருகிறது.

gramci puratchiyin ilakkanamரஷ்யப் புரட்சி 1917 ல் ஏற்பட்டது. இதனால் உலகம் அதுகாறும் கண்டறியாத, உழுபவனுக்கு நிலம், எட்டுமணி நேர வேலை, ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு என்ற உரிமைகளை, ரஷ்யாவில் உள்ள தொழிலாளர்கள் பெற்றனர். இதன் தாக்கம் இத்தாலி, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்டது. தொழிலாளர்கள் எழுச்சி பெற்றனர். தொழிற்சாலைகளில் போராட்டங்கள் வெடித்தன. அந்த எழுச்சியின் விளைவாக உருவானவர்தான் கிராம்சி. இவர் காலத்தில்தான் முசோலினி, ஜனநாயக சக்திகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்து, பிறகு தேர்தல் விதிகளை மாற்றி, தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டவுடன் இத்தாலியின் சர்வாதிகாரியாக தன்னை மாற்றிக்கொண்டான். ரஷ்யப் புரட்சி போல தங்கள் நாட்டிலும் நடைபெற்றுவிடக் கூடாது என்று விரும்பிய நிலப்பிரபுக்களும், முதலாளிகளும் முசோலினி, ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளை ஆதரித்தனர்.

கிராம்சி முதலில் சோசலிஸ்டு கட்சியிலும், பிறகு கம்யூனிஸ்டு கட்சியிலும் இருந்தார். இத்தாலி பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தார். அக்கால நடப்புகள் குறித்து தொடர்ந்து எழுதி வந்த பத்திரிகையாளராகவும் இருந்தார்.

பாசிசம் என்பது 'சங்கம்' (league) என்னும் பொருள் தரும் 'பாஸ்சி' என்ற இலத்தீன் சொல்லில் இருந்து பிறந்தது. பாசிஸ்ட் இயக்கம் முசோலினியால் 1919 ல் தொடங்கப்பட்டது. சர்வாதிகாரியான முசோலினி கிராம்சியை 1926 ஆண்டு சிறையில் அடைத்தான். கைது செய்யப்பட்டபோது அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். எனவே அப்போதைய சட்டவிதிகளின்படி கைது செய்யப்படுவதிலிருந்து அவருக்கு விலக்கு உண்டு. ஆனாலும் அவருக்கு நீண்ட கால சிறைத்தண்டனையை முசோலினி விதித்தான். வர்க்க வெறுப்பைத் தூண்டுதல், உள்நாட்டுப் போரை தூண்டுதுதல், அரசுக்கு எதிராக சதிச் செய்தல் என்று குற்றம்சாட்டப்பட்டார்.

பாசிசத்தின் வளர்ச்சியை கண்கூடாகப் பார்த்தவர் கிராம்சி. அவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர். தனிமைச் சிறை, தணிக்கை முறை, நோய்கள், தன் சொந்தக் கட்சியினராலேயே சரியாக புரிந்து கொள்ளப்படாத நிலை என பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், சிறையில் தொடர்ந்து எழுதினார். அவரது சிறைக்குறிப்புகள் நான்கு தொகுதிகளாக, அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாயின.

பொதுப்புத்தி, குடிமைச் சமுதாயம், மேலாண்மை, நிலை பதிந்த போர் போன்ற கருத்தாங்கங்களை அவர் உருவாக்கினார். இதனால் சமூகவியல் அறிஞர்களால் அவர் இன்னமும் நினைவுகூறப்படுகிறார்.

தமிழ்நாட்டின் முக்கிய எழுத்தாளர்களான வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை ஆகிய இருவரும் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளனர். முதலில் அலைகள் பதிப்பக வெளியீடாக வந்த நூல், தற்போது நியூ செஞ்சுரி புத்தக நிலைய வெளியீடாக வெளிவந்துள்ளது. அவருடைய முக்கியமான எழுத்துக்கள் அப்படியே தரப்பட்டுள்ளன. இதற்கான விளக்கங்களை, நூலாசிரியர்கள் கொடுத்துள்ளனர். அவருடைய எழுத்துக்கள், அக்காலத்திய இருந்த நிலமை, தற்போது அதன் பொருத்தப்பாடு என்ற என அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த நூல் உள்ளது. மொழி நடையும் இயல்பாக உள்ளது. எளிய வார்தைகளில், நல்ல ஓட்டத்தோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

சாதாரணமாக கிராம்சி என்றே அனைவரும் எழுதுவார்கள். ஆனால் கிராம்ஷி என்று இந்த நூலில் உள்ளது. அதேபோல முசோலினி என்றுதான் நாம் படித்து இருப்போம். இதில் முஸ்ஸோலினி என்று எழுதியுள்ளனர்.

'பொருளாதார நெருக்கடியே புரட்சியைத் தீர்மானிக்கிறது என்னும் வறட்டுத்தனமான மார்க்ஸிய விளக்கத்திற்கு மாறாக பண்பாடு, கருத்துநிலை மேலாண்மை ஆகியன புரட்சியை உருவாக்குவதில் முக்கியப் பாத்திரத்தை வகிக்கின்றன' என்றார் கிராம்சி. மார்க்சிய மூலவர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்றவர்கள் வரிசையில் கிராம்சியும் இப்போது மதிக்கப்பட்டு வருகிறார்.

'சட்டத்தின் மூலமாகவும், அரசு யந்திரத்தின் நிர்ப்பந்தம் மூலமாக மட்டுமே ஓர் அரசு தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில்லை. கருத்துகள் மூலம் மக்களிடம் இருந்து பெறப்படும் சம்மதம்' வழியாகவும் அரசு மக்களை ஆட்சி செய்கிறது. எனவே மக்கள் கருத்தை உருவாக்கும் வகையில் பண்பாட்டுத் தளத்திலும் பணிபுரிவது அவசியம்' என்று கிராம்சி வலியுறுத்தினார். இந்த கருத்தாக்கம்தான், வெறும் பொருளாதாரத்தை மட்டுமே பேசிய மார்க்சியர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டியது.

புனிதராக்கப்பட்ட புரட்சியாளர், தென் இத்தாலியப் பிரச்சினை, கிராம்ஷியின் வர்க்கப் பார்வை, பண்பாடு பற்றிய கருத்துகள், முஸ்ஸோலினியுடன் மோதல், கட்சியும் அகிலமும், கிராம்ஷியும் இந்தியச் சூழலும் என்ற 17 அத்தியாயங்களில் இந்த நூல் உள்ளது. கிராம்சிபற்றிய முழுமையான பார்வையை இதன் மூலம் பெற இயலும்.கடுமையான உழைப்பைக் கோரும் இப்பணியை செய்ததன் மூலம், தமிழுலகம் நூலாசிரியர்களுக்கு கடன் பட்டுள்ளது.

'தொடர்கதைகள், துப்பறியும் நாவல்கள், சாகச கதைகள் ஆகியவற்றின் வாசகர்களிலிருந்துதான் மக்கள் சார்பான இலக்கியத்திற்கான வாசகர்களை உருவாக்க வேண்டும், உருவாக்க முடியும்' என்று ஜனரஞ்சக இலக்கியம் குறித்து கிராம்சி கூறுகிறார். 'சாகசக் கதைகள் சிலமணி நேரமாவது சாகசம் நிறைந்த செயற்கை உலகில் அவர்களை வாழ வைக்கின்றன; தாங்களும் 'அதிமானுடர்கள்' தான் என்னும் உணர்வை ஏற்படுத்துகின்றன; தஸ்தாயேவஸ்கி போன்ற இலக்கியவாதிகள் ஜனரஞ்சக இலக்கியங்களில் இருந்துதான் உருவாகிறார்கள்' என்கிறார் கிராம்சி. 'இலக்கியவாதி, அரசியல்வாதிகளைப் போல கறாரான, திட்டவட்டமான நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஆயினும் அவனுக்கும் குறிப்பிட்ட நிலைபாடு இருக்க வேண்டும்' என்று பண்பாடு குறித்த அத்தியாயத்தில் பேசப்படுகிறது.

'பாசிசம் தனக்கு சமமாக யாரையும் கருதுவதில்லை; அதற்குத் தேவை கொத்தடிமைகள்தாம்'. 'முசோலினியின் வழக்கம் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கும்.' என்று சரியாகவே கணிக்கிறார். 'வரலாற்றில் முதலாளி வர்க்கத்திற்கும் நிலவுடமை இயக்கத்திற்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக நாடாளுமன்ற முறை வந்தது' என்று 1921 ல் கிராம்சி எழுதுகிறார். பாசிசம் குறித்து இவர் எழுதியவை இன்றளவும் பொருத்தமானதாக உள்ளன. 'பாசிஸ்டு இயக்கம் வலுவானதாகவும், மற்றவர்களுக்கு பீதி ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் வரை, அவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விடுவார்கள்'. 'ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகளும், பாசிசத்திற்கு ஆதரவு அளிப்பார்கள்' என்கிறார். 'பாசிசத்தின் நிதிக் கொள்கையும், வர்த்தகக் கொள்கையும் ஒரு சில பூர்ஷ்வா முதலாளிகள், நிலச்சுவான்தார்கள் ஆகியோரின் செல்வத்தைப் பெருக்கவே வழிவகுத்துள்ளன'. நூலாசிரியர்கள் சமகாலத்தில் வாழ்ந்து வரும் செயற்பாட்டாளர்கள். எனவே இக்கால அரசியலை மனதில் வைத்து இந்த நூலை வடித்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அரசு, கட்சிகள், பண்பாடு, பாசிசம், கருத்துருவாக்கம் போன்றவைகளில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நூலை ரசித்துப் படிப்பார்கள். கம்யூனிஸ்டு அகிலம், சோசலிஸ்ட் கட்சிகளுக்குள் நடந்த உட்கட்சி பூசல்கள் குறித்தும் இந்த நூல் பேசுகிறது.

இராணுவச் சட்டம் அமலானதால் கருத்துச் சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம், சங்கம் வைக்கும் சுதந்திரம் முதலியன நசுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மார்க்சியத்தை சொல்லிக் கொடுக்க அஞ்சல்வழிக் கல்வியைக் கட்சித் தொடங்கும்படி செய்தார். கட்சி உறுப்பினர்கள் வர்க்க உணர்வைப் பெறவில்லை என்றால் மக்களை வழிநடத்துவதற்குப் பதிலாக, அவர்களால் இழுத்துச் செல்லப்படுவார்கள் என்றார்.

இத்தாலியில் கத்தோலிக்க மதம் முதன்மையானது. எனவே மக்கள் விடுதலையில் அதன் பாத்திரம் குறித்து கிராம்சி பேசுகிறார்.' தென் இத்தாலியில் கான்வெண்டுகளும், திருச்சபைகளும் அசையும், அசையாச் சொத்துகளை அதிக அளவு வைத்துள்ளன. எனவே அங்குள்ள விவசாயிகளுக்கு குருட்டு நம்பிக்கைகள் இருந்தபோதும் மத உணர்வு அதிகம் இல்லை என்கிறார்.

குடிமைச் சமுதாயம் என்பது தனிப்பட்ட அமைப்புகள் என்று சொல்லப்படும் திருச்சபைகள், தொழிற்சங்கங்கள், அரசியல் காட்சிகள், கலாச்சார அமைப்பு கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகும். குடிமைச் சமுதாயம் என்பது வர்க்கப் போராட்டக்களம் மட்டுமல்ல; பெண்ணுரிமை இயக்கம், சுற்றுச்சூழல் இயக்கம், மனித உரிமை இயக்கம் போன்ற பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெறும் இடம் என்கிறார். அங்கு உருவாகும் கருத்து, அரசின் எண்ணவோட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறுகிறார்.

'ஆதிக்க வர்க்கம், தனது ஆட்சியை நிலைநிறுத்த வன்முறை, பலவந்தம் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்துவதில்லை. மாறாக அந்த வர்க்கத்தின் உலகப் பார்வையை பரந்துபட்ட மக்கள் ஏற்றுக்கொண்டு, அந்த வர்க்கத்தின் மேலாண்மைக்கு அவர்கள் விருப்பத்துடன் இசைவு (சம்மதம்) தருவதாலுமே அதனுடைய ஆட்சி நிலை நிறுத்தப்படுகிறது' என்கிறார் கிராம்சி.

அப்போது இருந்த பத்திரிகைகள், மொழி, இலக்கியங்கள், மதம் என பலவற்றை குறித்தும் கிராம்சிக்கு தீர்க்கமான கருத்துகள் உண்டு. 'நமது கடமை 'பொதுப்புத்தியை' விமர்சனத்திற்கு உட்படுத்துவதும், அதிலுள்ள ஆக்கபூர்வமான கூறுகளை - வளர்க்கும் ஆற்றலை வெகுமக்களுக்கு வழங்குவதும் ஆகும்' என்ற கூற்று இப்போதும் பொருத்தம் உடையதே.

கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம்,
நியூ செஞ்சுரி புத்தக நிலையம்,
ஸ்பென்சர் பிளாசா,
சென்னை/
638 பக்கம்/ ரூ.525/
044- 28490027.

- பீட்டர் துரைராஜ்

Pin It