பாஜக அரசின் EWS இட ஒதுக்கீட்டு கொள்கையை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு 3-2 என்ற பெரும்பான்மை விகிதத்தில் ஏற்றுக்கொண்டது பொருளாதார அடிப்படையிலான EWS இட ஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்த மூவரில் இரு நீதிபதிகள் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினர். இந்தியாவில் உள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் சாதிக்கும் பொறுப்பில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு எதிரான இரு நீதிபதிகளின் கருத்துக்கள் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ள நிலையில், நம்மிடையே உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அவற்றை ஆராய்வது பொருத்தமானது. 

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நல்ல கல்வியையும் தரமான வேலைவாய்ப்பையும் பெறுவதால், அவர்களை பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து அகற்ற வேண்டும். உண்மையில் உதவி தேவைப்படும் வகுப்பினரை நோக்கி நாம் கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறும் நீதிபதி ஜே பி பர்திவாலா நாடு சுதந்திரம் அடைந்தபோது பல்வேறு சமூகங்களிடையே இருந்த ஏற்றத்தாழ்வுகள் இப்போது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கிறார். இந்த கருத்தாக்கத்திற்கு பின் எவ்வித ஆதாரங்களும் இல்லை. உண்மையில், கிடைக்கக்கூடிய அனைத்து தரவுகளும், உயர் சாதியினருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையிலான இடைவெளி, சுதந்திரத்தின் போது இருந்த அளவுக்கு பெரியதாக இல்லாவிட்டாலும், சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நீடித்து வருகின்றன. 2018 ஆம் ஆண்டின் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி (NSSO Periodic Labour Force Survey Data), SC பிரிவைச் சார்ந்த பட்டதாரிகள் எண்ணிக்கை (18%), உயர் சாதியினரிடையே இருந்ததை விட (37%) 50 விழுக்காடு குறைவாகவே உள்ளது. இதேபோல், மொத்த ஒப்பந்தத் தொழிலாளர்களில் 33 விழுக்காட்டினர் SC வகுப்பினர். ஆனால் அவர்கள் மக்கள்தொகையில் 16% மட்டுமே உள்ளனர், மொத்த ஒப்பந்தத் தொழிலாளர்களில் உயர் சாதியினர் 15 விழுக்காடு மட்டுமே. இந்த விகிதாச்சாரங்கள் 1999 ஆம் ஆண்டு முதல் மாறவில்லை. constituion bench for ews reservationஇந்திய மனித வளர்ச்சிக் கணக்கெடுப்பின் (India Human Development Survey) மூலம் உருவாக்கப்பட்ட மாநில அளவிலான தரவுகளில் சிலவற்றைப் பார்ப்போம். 2011-12 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் SC வகுப்பினரின் (Rs. 26,172) தனிநபர் சராசரி வருமானம்  பார்ப்பனர்களை (Rs. 44,638) விட கிட்டத்தட்ட 50% குறைவாக இருந்தது. குஜராத் மாநில புள்ளிவிவரங்களை ஒப்பிட்டால் OBC வகுப்பினரின் (Rs. 23,692) ஆண்டு தனிநபர் வருமானம் படேல்களை (Rs. 51,045) விட 50% குறைவாக இருந்தது ஹரியானாவில் ஜாட்கள் (Rs. 63,679), OBC (Rs. 31,027), SC (Rs 20,566) ஆண்டு தனிநபர் சராசரி வருமானம் கொண்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தில், கம்மா (Rs 38,232), OBC (Rs. 21,172), SC (Rs.18,345) ஆண்டு தனிநபர் சராசரி வருமானம் கொண்டுள்ளனர்.  

மேற்கண்ட தரவுகள் சின்ஹோ கமிஷன் அறிக்கையின் தரவுகளை உறுதிப்படுத்துகின்றன. 82% ஏழைகள் SC, ST, OBC சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதை மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய ரவிந்தர் பட்டும், யு.யு. லலித்தும் சுட்டிக் காட்டினர். ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நிலைமைகளில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இட ஒதுக்கீட்டுத் திட்டங்களின் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தலித் மக்களுக்கு சாதி இழிவு ஒரு மிகப்பெரிய வாழ்வியல் தடையாக உள்ளது என்பதை பல ஆய்வுகள் நிறுவியுள்ளன. 

சுக்தேயோ தோரட் நடத்திய ஆய்வில், பார்ப்பனர், தலித் எனக் குறிப்பிடப்பட்ட வேலை விண்ணப்பங்கள் வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் முதலாளிகளுக்கு அனுப்பப்பட்டால், பார்ப்பனரை நேர்காணலுக்கு அழைக்கும் வாய்ப்பு தலித்களை விடக் கூடுதல் எனத் தெரிய வந்தது. ரிசர்வ் வங்கியில் 31 ஆண்டுகள் பணியாற்றிய, அம்பேத்கரிய கொள்கைவாதியின் மகனும் பொருளாதார நிபுணருமான நரேந்திர ஜாதவ், தனது சக ஊழியர்களின் பார்வையில் மஹராகத் திகழ்ந்ததாக தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார். இந்த சாதிய இழிவை போக்க சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அவசியம். சாதிய இழிவு ஏழை தலித்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்க தலித்துகளையும் பாதிக்கும். 

ஏழை தலித்கள் சாதிய இழிவை, சமூகக் களங்கத்தை வித்தியாசமான, வன்முறையான வழியில் அனுபவிக்கிறார்கள். SC, ST வகுப்பினருக்கு எதிரான குற்றங்களின் சமீபத்திய புள்ளிவிவரங்களை ஆராய்ந்தால், தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட ‘இந்தியாவில் குற்றங்கள்’ எனும் அறிக்கையின் படி, 2019 ஆண்டில் 45,961 குற்றங்களும், 2020 ஆம் ஆண்டில் 50,291 குற்றங்களும், 2021 ஆம் ஆண்டில் 50,900 குற்றங்களும் SC, ST வகுப்பினர் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன. 

நீதிபதி பேலா திரிவேதி சாதியற்ற சமூகத்தை உருவாக்க சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகளை படிப்படியாக அகற்ற வேண்டும் என்று தனது தீர்ப்பில் பரிந்துரைக்கிறார். இந்த வாதத்திற்கு நீண்ட வரலாறூ உள்ளது. முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரான காக்கா காலேல்கர், ஜாதிவெறி பரவுவது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இட ஒதுக்கீடு சாதியைக் கண்டுபிடிக்கவில்லை. சாதி இல்லையென மறைப்பது சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளையும் மோதல்களையும் குறைக்காது மாறாக, இட ஒதுக்கீடு போன்ற நேர்மறை பாகுபாடு தான் இந்தியாவில் சாதிகளுக்கு இடையேயான சமத்துவத்தை ஊக்குவித்துள்ளது. மேலும் சமூக ரீதியாக மட்டுமன்றி, பொருளாதார ரீதியாகவும் நாட்டின் வளர்ச்சிக்கு இட ஒதுக்கீடு பங்களித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் எழுச்சிக்கு அஞ்சும் உயர்சாதி குழுக்கள் தங்கள் ஆதிக்கத்தை காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்கின்றன. அதன் ஒரு வடிவம் தான் சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் எனும் வாதம். மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் உருவான எழுச்சியை "சூத்திரப் புரட்சி" என்று கருதிய இந்து தேசியவாத இயக்கம் இன்று உயர்சாதியினரின் எதிர்புரட்சியின் கருவியாக உள்ளது. ஒடுக்கப்பட்ட சாதியினரின் உண்மையான எதிரிகள் முஸ்லீம்களே தவிர உயர்சாதியினர் அல்ல என்று இந்து தேசியவாத இயக்கம் கூறுகிறது. முஸ்லீம்களையும் ஒடுக்கப்பட்ட இந்துக்களையும் எதிர் எதிராக நிறுத்துவதும், இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்வது இந்து தேசியவாதம் இயக்கத்தின் முக்கிய கருவிகள். 

இட ஒதுக்கீடு கொள்கைகள் பற்றிய விவாதம் தேவை என்பதில் சந்தேகமில்லை. சரியான பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தல், தேவைப்படும் இடத்தில் உள் ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட சில சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இட ஒதுக்கீட்டின் பயன்கள் அனைத்து ஒடுக்கப்பட்ட ஜாதிகளுக்கும் சமமான சென்று சேருவதற்கு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மேம்படுத்துவது அவசியம்.  இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் வாதிடுவது போல், பொருளாதார நிலை தான் இட ஒதுக்கீட்டின் பயனாளிகளைத் தீர்மானிப்பதற்கான அடிப்படையாக இருக்க முடியும் என்றால், ஏன் மதமும் இட ஒதுக்கீட்டின் அளவுகோலாக இருக்கக் கூடாது? முஸ்லீம்கள் எதிரான மத ரீதியிலான பாகுபாடு, தப்பெண்ணம், வன்முறை, வெறுப்பு போன்றவை மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்துள்ள நிலையில், மத ரீதியிலான இட ஒதுக்கீடு எனும் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

பிரணவ் தவான், கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட், கலையரசன்

நன்றி: Indian Express ஆங்கில நாளிதழ் (2022, நவம்பர் 18 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: விஜயபாஸ்கர்

Pin It