27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் தரக் கூடாது என்று டெல்லியில் பார்ப்பன, உயர்சாதி மாணவர்கள் கலவரத்தில் இறங்கிவிட்டனர். சோனியாவின் இல்லத்தை நோக்கிச் சென்று ரகளை செய்துள்ளனர். இந்த நிலையில் அரசு நியமித்த மொய்லி குழுவின் பரிந்துரையே - இடஒதுக்கீட்டுக்கு துரோகமிழைப்பதாகவே இருக்கிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பார்ப்பனர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன், மத்திய அரசு இது பற்றி பரிசீலிக்க வீரப்ப மொய்லி தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் 27 சதவீத இடதுக்கீட்டை படிப்படியாக அமுல்படுத்த அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்து - ‘பெரியார் முழக்கம்’ ஏற்கனவே கடும் கண்டனத்தை, தலையங்கத்தில் பதிவு செய்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. இராசாவும், இது பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தப் பிரச்சினையில் மத்திய கூட்டணி அரசு, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் கருத்துகளுக்கு எதிராக ஆபத்தான வழியில் செயல்படுகிறது என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு செய்வதற்காக, அதே அளவு பொதுப் போட்டிக்கான இடங்களையும் அதிகரிக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? தாமாகவே முன் வந்து, இடஒதுக்கீடுகளை அமுல்படுத்தும், எந்த நாட்டிலும், இப்படிக் கூடுதல் இடங்களை உருவாக்கியதாக வரலாறே இல்லை. 93வது அரசியல் சட்டத் திருத்தமே இதனால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. உயர்சாதிக்காரர்களும் ஊடகங்களும், தங்களிடம் அரசை மண்டியிடச் செய்துவிட்டன.
இப்படிக் கூடுதல் இடங்களை உருவாக்குவதால், அய்.அய்.டி., எய்.எம்.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஆதிக்க சாதியவாதிகள் தங்கள் நிறுவனத்துக்கு மேலும் மேலும் நிதியைப் பெறுவதற்கு கிடைத்த வாய்ப்பாகவே இதைக் கருதி செயல்படுவார்கள். அனைவருக்கும் சம வாய்ப்பு தரும் திட்டமாக இதை அவர்கள் பார்ப்பதில்லை. இதனால், தொடக்கக் கல்வி வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்களுக்கான நிதிகூட, இந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கு திருப்பிவிடப்படலாம்.
தாழ்த்தப்பட்ட மாணவர்களைப் பொறுத்தவரை இப்போது, இரண்டு வகை இழப்புகளை சந்திக்க வேண்டி யிருக்கிறது. சிறுபான்மை கல்வி நிறு வனங்களில் இவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று, அரசியல் சட்டம் 15(5)வது பிரிவு கூறுகிறது. ஆனால், சிறுபான்மை நிறுவனங்கள் இந்த இடஒதுக்கீட்டை அமுல் படுத்துவது இல்லை. அதோடு, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்பதற்கான விளக்கமும் வரையறுக்கப் படவில்லை - இரண்டாவதாக சிறப்பு மேற்படிப்புகளில் இடஒதுக்கீடு இல்லை என்று அறிவித்தாகிவிட்டது. இது மற்றொரு இழப்பு.
இதே போல் பிற்படுத்தப்பட்டோருக்கும் இழப்புகள்தான். இட ஒதுக்கீட்டை தவணை முறையில் அமுலாக்கலாம் என்கிறார் மொய்லி. அப்படியானால், ஒவ்வொரு ஆண்டிலும் முழுமையாக இடஒதுக்கீட்டை அமுலாக்காமல், தவணை முறையில் மட்டும் ஒதுக்கப்பட்டால் சமவாய்ப்பு எந்த காலத்தில் உருவாகும்? அடுத்து, ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார அளவுகோலை புகுத்துவதால் பிற்படுத்தப்பட்டோருக்கு மற்றொரு இழப்பு.
வீரப்ப மொய்லி குழுவின் அறிக்கை சட்டத்துக்கு விரோமானது. இவரை இந்தக் குழுவின் தலைவராக நியமித்ததே தவறு, இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் பிரதிநிதியாகவே அவர் செயல்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் அரசுக்கு மிகப் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது என்று, அக்கட்டுரையில் சுட்டிக் காட்டியிருக்கிறார் து.இராசா.