சட்டப் புத்தகங்கள் கழிவறைக் காகிதங்களாகப் பயன்படுத்தப்படும் நாட்டில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு, முடியாட்சியின் செங்கோலால் இனி நீதி வழங்கப்படும். நீதிமன்றங்கள் வழக்கொழிந்த காலத்தில், மன்னனே இனி நாடாளுமன்றத்தில் நீதி வழங்கும் வேலையையும் செய்வான்.

துதிபாடிகள் மன்னனின் தீர்ப்புகளை வானாளவாகப் புகழ்வார்கள். "குஜராத் படுகொலை வழக்கு தீர்ப்பு ஆகா மன்னா! மலோகன் குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு ஓகோ மன்னா! நீதிபதி லோயா மரணத்தின் தீர்ப்பு அட்டகாசம் மன்னா! காஷ்மீரை துண்டு துண்டாக உடைத்தது அருமை மன்னா!" என்று புகழ்மொழிகளால் நாடாளுமன்றம் இனி அதிர்ந்து கொண்டு இருக்கும்.

2024 தேர்தலுக்குப் பிறகு இனி இந்தியாவில் தேர்தலே கிடையாது என்பதை செங்கோலின் மீது ஆணையிட்டு மன்னர் நாட்டு மக்களுக்கு விரைவில் அறிவிப்பார்.

மீலேச்ச மதக்காரர்கள் தங்களை இந்துவாக அறிவித்துக் கொள்ளவில்லை என்றால் மனுநீதிப்படி சிரச் சேதம் செய்யப்படுவார்கள்.

அல்லா ஹூ அக்பர் சொல்லும் நாக்குகள் வெட்டப்படும். பாரத் மாதா கி ஜெய் அல்லது ஜெய் அனுமான் என்ற இந்துமத வெறியூட்டும் சொற்கள் மட்டுமே வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படும்.modi with sengolமுடியாட்சியில் மன்னனின் நலனுக்காக பிழிந்தெடுக்கப்பட்ட அடிமையின் உழைப்பும், முதலாளித்துவ ஜனநாயகத்தில் பிழிந்தெடுக்கப்பட்ட கூலி அடிமையின் உழைப்பும் ஒரே ரத்தவாடை என்று சுரண்டல்வாதிகளின் ஏவல்நாய்கள் கண்டு கொண்டதால் இனி இலவச உழைப்பை தன்நாட்டு மக்கள் அதானிக்கும், அம்பானிக்கும் தர வேண்டும் என சட்டம் செய்யப்படலாம்.

முடியாட்சி கால தேவதாசிகளின் பிணக்குழிகள் தோண்டி எடுக்கப்பட்டு விபச்சாரத்தை எப்படி ஆன்மீகப்படுத்துவது என ஆலோசனைகள் கேட்கப்படலாம்.

பார்ப்பன சேரிக்கும் பறச்சேரிக்கும் இடையிலான குறைந்துபோன ஆயிரமாண்டு தூரங்கள் மறு வரையறை செய்யப்பட்டு தீட்டுப்படும் தூரங்கள் ஒழுங்குபடுத்தப்படலாம்.

ஒரு சொங்கோல் இதை எல்லாம் செய்யுமா என நீங்கள் கேட்கலாம். ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்து கைப்பற்றப்பட்ட அதிகாரத்தின் அடையாளம், ஏற்கெனவே இனப்படுகொலையில் ரத்தம் குளித்தவர்களின் கையில் சேரும் போது அது முன்பைவிட இன்னும் மூர்க்கமாக தாக்கி உங்களை முடமாக்கலாம்.

அதை செய்து காட்டத்தான், செய்து காட்டும் வல்லமை படைத்த வல்லூறுகளிடம் அது ஒப்படைக்கப்படுகின்றது.

சில மூளை செத்த மூடர்கள் இதை சோழர் கால செங்கோல் என்கின்றார்கள். ஆனால் செங்கோல் உலகம் முழுவதும் முடியாட்சியின் அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடமும் ஒரு செங்கோல் இருந்தது. செய்யாத தவறுக்காக கோவலனைத் தண்டித்தமையால் அறம் வழுவிய பாண்டியனின் செங்கோல் வளைந்தது. பின்னர் தன் உயிரைக் கொடுத்து வழுவிய செங்கோலைப் பாண்டிய மன்னன் நிமிர்த்தினான் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.

ஆனால் இன்று மோடியின் கையில் கொடுக்கப்பட்ட செங்கோல் அனாமதேய அல்லக்கைகளால் கொடுக்கப்பட்ட செங்கோல்.

இந்த அனாமதேய அல்லக்கைகள் இதற்கு முன்பும் ஒருமுறை இந்த செங்கோலாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்தியா சுதந்திரம் அடைய இருந்த நிலையில் திருவாவடுதுறை ஆதீன மடத்தின் குருமகா சந்நிதானமாக அப்போது இருந்த அம்பலவாண தேசிகரிடம் ராஜாஜி, செங்கோல் செய்து தரச் சொல்லிக் கேட்டதாகவும் ஆணைக்குப் பணிந்த ஆதீனம் உடனே சென்னையில் இருந்த உம்மிடி பங்காரு செட்டியார் நகைக் கடையில் சைவச் சின்னம் பொறித்த தங்கத்திலான செங்கோல் ஒன்றைத் தயாரித்துத் தரும்படிக் கேட்டுக்கொண்டதாகவும், உம்மிடி பங்காரு செட்டியாரும் 100 சவரன் தங்கத்தில் ஐந்து அடி நீளத்தில் அதைச் செய்து அதன் உச்சியில் ரிஷபச் சிலையும் கைப்பிடியில் லட்சுமியின் உருவத்தையும் பொறித்துத் தந்ததாகவும் வரலாற்று உருட்டுகள் இருக்கின்றன.

இன்று சங்கிகள் சொல்லும் சோழர் கால செங்கோலுக்கும், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் குருமகா சந்நிதானமாக இருந்த அம்பலவாண தேசிகருக்கும் என்ன சம்மந்தம் என்று அவரிடம் சென்று செங்கோல் செய்யச் சொல்லி கேட்ட புளுகன் ராஜாஜிக்கு மட்டுமே தெரியும்.

உம்மிடி பங்காரு செட்டியாரிடமே நேரடியாகக் கேட்டிருந்தால் அவரே செய்து கொடுத்திருப்பார். ஒருவேளை சந்நிதானத்திடம் குவிந்து கிடந்த பண மூட்டைகளை பயன்படுத்திக் கொள்ள குல்லுகப் பட்டர் ராஜாஜி நினைத்திருக்கலாம்.

ஆனாலும் டெல்லிக்குச் சென்று தொந்தி சரிந்த சைவர்கள் கொடுத்த செங்கோலை நேரு வாங்கி தனது வீட்டிலேயே வைத்துவிட்டார். நாடாளுமன்றத்தில் விளக்கமாறு வைக்கும் இடத்தில் கூட அதை வைப்பதற்கு நேரு இடம் தரவில்லை.

75 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே உம்மிடி பங்காரு செட்டியார் கடையில் முன்பு செய்தது போலவே இரண்டு புதிய செங்கோல்கள் செய்யப்பட்டிருக்கின்றது. ஒன்று தங்கத்திலும், இன்னொன்று வெள்ளியாலும் செய்யப்பட்டுள்ளது. கைராசி நாணயம் இன்னும் செட்டியார் கடையில் மாறாமல் இருப்பதைத்தான் இது காட்டுகின்றது.

இந்த முறையும் செட்டியாருக்கு ஆர்டர் கொடுத்தது திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தான்.

என்னடா செத்துப்போன அம்பலவாண தேசிகன் பெயரும், உயிரோடு இருக்கும் அம்பலவாண தேசிகன் பெயரும் ஒன்று போலவே உள்ளது என குழப்பம் அடையாதீர்கள். உயிரோடு இருக்கும் சந்நிதானம் தன் பெயரின் பின்னே பரமாசாரிய சுவாமிகள் என்ற அடைமொழியை சேர்த்திருப்பார்.

அப்போதாவது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் கொடுக்கப்பட்டது என உருட்டிய சைவ மற்றும் பார்ப்பனப் புளுகர்களால் இந்த முறை அப்படி உருட்ட முடியவில்லை. அதனால் தமிழர் பாரம்பரியம், சோழர்கால செங்கோல் என கூசாமல் கோள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்கள் தமிழை வளர்த்ததாக இன்றும் கூட பாட நூல்களில் வரலாற்று புரட்டர்கள் எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் ஒருபோதும் தமிழை வளர்த்தவில்லை என்பதும், அவர்கள் வளர்த்தது எல்லாம் சைவம் என்ற பெயரில் பார்ப்பனியத்தையும், சாதிவெறியையும், தமது சொத்துக்களையும், தமது தொந்திகளையும்தான். அதனால்தான் இன்று பாசிசத்தை வளர்க்க விமானம் ஏறி சென்றிருக்கின்றார்கள்.

சாதி வெறியர்கள் இயல்பாகவே பார்ப்பனிய பாசிசத்துடன் எப்போதும் கைகோர்த்தே செயல்படுவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள திருவாடுதுறை ஆதீனம், காஞ்சி ஞானப்பிரகாசர் மடம், திருவையாறு செப்பறை மடம், வேளாக்குறிச்சி மடம், தருமபுரம் மடம், திருப்பனந்தாள் மடம், துழாவூர் மடம், திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி ஆதினம், மயிலம் பொம்மபுர ஆதீனம், மதுரை ஆதீனம் போன்றவற்றில் இன்றும் சில குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆதினங்களாக வர முடியும்.

சைவம் என்பது சாதி அடையாளம். அது பார்ப்பனியம் பெற்றெடுத்த குழந்தைதான். ஆனால் இங்கிருக்கும் சைவ உருட்டர்கள் பலர் இன்றும் சைவத்தை தமிழர் மதம் என்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த சைவ சந்நிதானங்களையும் சங்கிகள் டெல்லிக்கு துக்கிக்கொண்டு போய் மோடி புகழ்பாட வைத்திருக்கின்றார்கள். அதிலும் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிகர தேசிக சுவாமிகள் “இதுவரை 14 பிரதமர்கள் பதவி வகித்துள்ளனர். ஒருவர் கூட எங்களை அழைத்ததில்லை. நாங்களும் வந்ததில்லை. எம்.பி ஆகாமல், எந்தக் கட்சியிலும் நிற்காமல், ஆன்மீகவாதியாக எங்களை அழைத்த ஒரே பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான்" என்றும்,

“உலகமே போற்றும் வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். எனவே 2024ஆம் ஆண்டிலும் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விஷயமாக இன்றைய நிகழ்வு அமைந்தது" என்றும் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 2022 அன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நடைபெற்ற கீதாமிர்தம் 2022-சம்ஸ்கிருத பாரதி தமிழ்நாடு அமைப்பின் கீதை ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மதுரை ஆதீனம் “எத்தனையோ கவர்னரை பார்த்துள்ளேன்; இவரைப் போல் பார்த்தது இல்லை. ஒரு மனிதன் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது... வல்லவராகவும் இருக்க வேண்டும் அதில் நம்பர் ஒன் இவர்” எனவும்,

“கவர்னருக்கு எத்தனையோ எதிர்ப்பு; என்னையும் எத்தனையோ பேர் எதிர்க்கிறார்கள்... இவர் உறங்கிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்கிறார்கள்... இவர் ஓடவும் இல்லை... உறங்கவும் இல்லை.. ஆன்மீகத்தில் உறைப்பான சிங்கக்குட்டி" எனவும் ரவிக்கு புகழ்மாலை சூட்டினார்.

அவர் மட்டுமல்ல ஏப்ரல் 2022 தருமபுரம் ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைக்க வந்த போது தருமபுரம் ஆதீனம் “தமிழக ஆளுநரின் பெயர் ரவி. ரவி என்றால் சூரியன். தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்களின் சின்னம் உதயசூரியன். எனவே, தமிழகத்துக்கு 2 சூரியன்கள் உள்ளன. பசுக்களை சரியாக பராமரிக்காததால்தான் கொரோனா போன்ற கொடிய தொற்றுகளுக்கு ஆளாகி உள்ளோம். எனவே, பசுக்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால்தான் பண்பாடு, கலாச்சாரம் சீர்கெட்டுப் போய்விட்டது. எனவே, கல்வி நிலையங்களில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளைத் தொடங்க வேண்டும்" என்று அடிவயிற்றில் இருந்து பார்ப்பன வாந்தியை எடுத்தார்.

பல வருடங்களாகவே இங்கிருக்கும் சாதிச் சங்கங்களுடனும் சைவ மடக் குண்டர்களுடனும் சங்கிக் கும்பல் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தங்களின் அடியாட்களாக வென்றெடுத்துள்ளது.

சுயசாதி வெறியர்களால் ஒரு போதும் பார்ப்பனியத்தைத் தவிர்த்துவிட்டு வாழ முடியாது என்பதைத்தான் இன்று சங்கிகளின் கூலிப்படையில் இணைந்திருக்கும் சைவ மடத்தவரின் செயல்பாடுகள் காட்டுகின்றன.

மோடி என்னதான் ஆதீனங்கள் புடைசூழ, திருமறை முழங்க செங்கோலை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைத்தாலும் செங்கோல் முன்பாக நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து வணங்கினாலும் அதனால் ஒரு பத்து பைசாவுக்குக் கூட பிரயோசனம் இல்லை.

மோடியின் கையில் சைவர்களால் கொடுக்கப்பட்ட செங்கோலுக்கும், தமிழ் மக்களுக்கும் எந்த ஒரு சம்மதமும் இல்லை. உண்மையில் அந்த செங்கோல் உழைக்கும் மக்களை ஏமாற்றி பிடுங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களை அந்த உழைக்கும் மக்களுக்குத் திருப்பித் தராமல் அந்த சொத்தில் உழைக்காமல் உடல் வளர்க்கும் ஊளைச்சதை பேர்வழிகளுடைய கழிவுகளின் திரண்ட வடிவமாகும்.

- செ.கார்கி

Pin It