ஒன்றிய பாஜக அரசின் 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (2019) மூலம் புதிதாக இணைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 15(6), 16(6) கல்வி நிறுவங்களிலும் அரசு வேலைகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதிப் பிரிவினருக்கு 10% EWS இட ஒதுக்கீட்டை வழங்குகின்றன. இந்த சட்டத் திருத்தம், 1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கபட்ட 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பை மீறுகிறதென்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுகிறதென்றும் தொடுக்கப்பட்ட 40 எதிர் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இச் சட்டத்திருத்தம் செல்லுமென நவம்பர் 7, 2022 தேதியன்று தீர்ப்பளித்தது.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 15 மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடைசெய்கிறது. எனினும், "சமூக ரீதியாகவும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கான" சிறப்பு ஏற்பாடுகளையும் சட்டப் பிரிவு 15 அனுமதிக்கிறது.

இதேபோல், பிரிவு 16, மதம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறந்த இடம், வசிப்பிடம் அல்லது அவற்றில் ஏதேனும் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவதை தடைசெய்கிறது. எனினும் அரசின் கீழ் உள்ள துறைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பின்தங்கிய குழுக்களைச் சார்ந்த குடிமக்களுக்கு அரசுப்பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அனுமதிக்கிறது.ews reservationதற்போது பாஜக அரசு இயற்றிய 103 ஆவது அரசியலமப்புச் சட்டத் திருத்தம் 15(6), 16(6) எனும் இரு புதிய உட்பிரிவுகளை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய உட்பிரிவுகள் அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசு உதவி பெறும் அல்லது உதவி பெறாத தனியார் உயர் கல்வி நிறுவனங்களிலும் அதிகபட்சமாக EWS இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை அரசுகளுக்கு அளிக்கிறது.

மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் பல நூற்றாண்டுகளாக சாதி அமைப்பின் அடிப்படையில் பாகுபாடுகளுக்கும் சமூக களங்கத்திற்கும் ஆளாகியுள்ளனர். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட நல்ல வாழ்க்கைத் தரத்தை அடைவதற்கு அவர்களின் சாதி பெரும் தடையாக இருந்து வருகிறது. மறுபுறம், சமூக ரீதியாகவும் கல்வியிலும் முன்னேறிய உயர் சாதியினர் உயர்கல்வியிலும், பொது வேலை வாய்ப்பிலும் தங்கள் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட கூடுதலான இடத்தை பெற்றுள்ளனர். ஒரு வகை குடிமக்கள் மற்றொரு வகுப்பை விட மரபியல் ரீதியாக உயர்ந்தவர்கள் என்பதற்கான எவ்வித அறிவியல் ஆதாரமும் அறிவியலில் இல்லை. இருப்பினும், பல ஆண்டுகளாக அவர்கள் பெற்ற சமூக, கலாச்சார மூலதனத்தின் காரணமாக, இந்த சாதிகள் சமூகத்தில் உயர்ந்த நிலையை அனுபவித்துவருகிறார்கள். இது மிகவும் சமத்துவமற்ற சமூகக் கட்டமைப்பிற்கு வழிவகுத்தது.

எனவே, ‘சமத்துவக் கோப்பாட்டை’ வரையறுப்பதன் மூலம் உயர்கல்வியிலும் பொது வேலைவாய்ப்பிலும் உள்ள அநீதியை போக்கி, ஏற்றத்தாழ்வை சரிசெய்வதை அரசியலமைப்புச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனச் சொல்லும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14, சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிரிவினருக்கு வேலைவாய்ப்பிலும், உயர்கல்வி நிறுவங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் (15, 16), அத்துடன் அரசியலைமைப்புச் சட்டத்தின் மற்ற பிரிவுகள் சிலவும் இணைந்து, இந்த வரலாற்று ரீதியான சமூகக் கட்டமைப்பு அநீதியை சரிசெய்வதற்கு வழிவகை செய்கிறது. மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியதின் மூலம் 1990-ல்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இட ஒதுக்கீடு கிடைத்தது. பின்னர் அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வான சமூகக் கட்டமைப்பையும், வரலாற்று அநீதியையும் அகற்றுவதே இட ஒதுக்கீட்டின் அடிப்படை.

பொருளாதார நிலை அடிப்படையிலான இட ஒதுக்கீடு புதியதல்ல. இந்திரா சஹானி வழக்கில் (16 நவம்பர் 1992) உச்ச நீதிமன்றம் நரசிம்ம ராவ் அரசாங்கத்தின் உயர்சாதியினருக்கான 10% EWS இட ஒதுக்கீடு அரசாணை உத்தரவை ரத்து செய்தது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் அப்போது இடமில்லாததாலும், 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை மீறியதாலும் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசாங்கத்தால் பொருளாதார நிலையின் அடிப்படையில் 10% EWS இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த முடியாமல் போனது.

ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் சின்ஹோ தலைமையில் 2010 ஆம் ஆண்டு UPA அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான ஆணையத்தின் (CEBC) மூலம் பொருளாதார நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முயற்சி தொடர்ந்தது. ஒன்றிய, மாநில அரசாங்க கொள்கைகளில் EWS பிரிவின் நலனுக்காக பரந்த விதிகளை அறிமுகப்படுத்த சின்ஹோ ஆணையம் பரிந்துரைத்தது. EWS பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க சின்ஹோ ஆணையம் நேரடியாகப் பரிந்துரைக்காவிட்டாலும், 2019 இல் EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 103 வது திருத்த மசோதாவை நரேந்திர மோடி அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

யார் 10% EWS இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள்?

மொத்த ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பொதுப் பிரிவினர். அதாவது வேறு எவ்வித இட ஒதுக்கீட்டின் கீழ் வராதவர். SC, ST, OBC தவிர்த்த உயர்சாதியினர்.

யாருக்கு 10% EWS இட ஒதுக்கீடு கிடையாது?

  • 5 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் அதற்கு மேல் வைத்திருப்பவர்கள்
  • 1,000 சதுர அடி அல்லது அதற்கும் பெரிய வீடு வைத்திருப்பவர்கள்
  • அறிவிக்கப்பட்ட நகராட்சிகளில் 900 சதுர அடி அல்லது அதைவிடப் பெரிய வீட்டு மனை வைத்திருப்பவர்கள்
  • அறிவிக்கப்பட்ட நகராட்சிகளைத் தவிர மற்ற பகுதிகளில் 1800 சதுர அடி அல்லது அதைவிடப் பெரிய வீட்டு மனை வைத்திருப்பவர்கள்

10% EWS இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. 103வது அரசியலைமைப்பு சட்டத் திருத்தம் உயர் சாதி இந்துக்களுக்கு நேரடியாக இட ஒதுக்கீடு அளிக்கிறது. உயர்சாதியினர் ஏற்கனவே பெரும்பான்மையான அரசாங்க வேலைகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் பதவிகளையும் பெற்றுள்ளனர். விகிதாச்சாரத்தில் தங்கள் மக்கள் தொகையை விட கூடுதலான பிரதிநிதித்துவத்தை பிடித்துள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 15, 16 ஆவது பிரிவுகள் வரலாற்று ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சிறப்பு வாய்ப்புகளை வழங்கலாம் எனக் குறிப்பிடுகின்றன. இந்த பிரிவுகளைத் திருத்தி, 15(6), 16(6) ஆகிய உட்பிரிவுகளை புகுத்தி பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டைஅறிமுகப்படுத்தியதன் மூலம், இட ஒதுக்கீட்டு கோட்பாட்டு அடிப்படையை ஒன்றிய பாஜக அரசாங்கம் தவறாகப் புரிந்து கொண்டதாகத் தெரிகிறது.

நாகராஜ் வழக்கு (2006) உள்ளிட்ட பல தீர்ப்புகளில் 50% உச்சவரம்பை இட ஒதுக்கீடு தாண்டக் கூடாது என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உறுதி செய்துள்ளது. ஆனால் பாஜக அரசு அறிவித்துள்ள உயர் சாதியினருக்கான 10% EWS இட ஒதுக்கீடு இயற்கையாகவே இந்த வரம்பை மீறுகிறது என்பதால், இதன் அடிப்படையை ஏற்றுக்கொள்வது சற்றுக்கடினம். மேலும், இந்திரா சஹானி வழக்கில், பொருளாதார நிலை ஒரு சமூகத்தின் பின்தங்கிய நிலையைப் போதுமான அளவில் விளக்காததால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையாக பொருளாதார நிலை மட்டும் இருக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

மேற்குறிப்பிட இச்சிக்கல்கள் EWS இட ஒதுக்கீட்டின் அரசியலமைப்புச் சட்ட செல்லுபடித் தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றன.

10% EWS இட ஒதுக்கீட்டின் விலக்கல் கொள்கை:

10% இடங்கள் மற்ற இட ஒதுக்கீடுகளால் பயனடையாத EWS பிரிவினருக்கு ஒதுக்கப்படும் என்று EWS இட ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தம் தெளிவாகக் கூறுகிறது. அந்த அடிப்படையில் மக்கள் தொகையின் ஒரு பிரிவை மட்டும் சேர்த்து, மற்றவர்களை அதன் வரம்பிலிருந்து விலக்குவதன் மூலம் 'விலக்கலின் கொள்கை'யை உருவாக்குகிறது.

முந்தைய இட ஒதுக்கீட்டு அளவுகோல்கள் சாதி அடிப்படையிலானதல்ல. மாறாக சாதி அடிப்படையிலான படிநிலை அமைப்பு காரணமாக ஏற்பட்ட சமூக, கல்வி ரீதியான பின்தங்கிய நிலையை அடிப்படையாகக். பொதுப் பிரிவு இடங்கள் (General Category), பெயருக்கு ஏற்றாற்போல், அனைத்துப் பிரிவிலிருந்தும் வரும் அனைத்துத் தகுதியுள்ள மாணவர்களுக்கும் திறந்திருக்கும். எனவே, இதற்கு முந்தைய இட ஒதுக்கீடு முறையில் ஒருபோதும் விலக்கல் கொள்கையின் அடிப்படையில் அமையவில்லை. அதை மாற்றி, EWS இட ஒதுக்கீடு விலக்கல் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இட ஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவத்திற்கானது

மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அரசு வேலைகளிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் போதிய பிரதிநிதித்துவம் பெறவில்லை என்ற உண்மையே இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுத்தது. மேல்தட்டு சாதியினர் போதுமான பிரதிநிதித்துவத்தை விட அதிகமாக இடங்களைப் பெற்றுள்ளனர். எனவே, EWS பிரிவினருக்கு, குறிப்பாக உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு என்பது சரியான திட்டம் அல்ல. எனவே அத்தகைய இட ஒதுக்கீடு, நாம் தகர்க்க போராடிக்கொண்டிருக்கும் சமத்துவமற்ற, சமூக கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தவே உதவும்.

EWS இன் அளவுகோல்கள்

EWS இட ஒதுக்கீடு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 8 லட்சம் வருமான அளவுகோல் உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கப்பட்டது. OBC பிரிவில் கிரீமிலேயரை அடையாளம் காணவும் அதே 8 லட்சம் ரூபாய் வருமான அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. எனவே 8 லட்சம் ரூபாய் வருமானம் கொண்டவர்கள் OBC இட ஒதுக்கீட்டிற்கு தகுதியற்றவர்கள் என சொல்லப்பட்டது. எனவே, ஒரு சமூகத்தின் (OBC) முன்னேற்றத்தைத் தீர்மானிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட வருமான அளவுகோல், இன்னொரு சமூகத்தின் (EWS பிரிவு உயர்சாதி) பின்தங்கிய நிலையைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இத்தகையை முரணை உச்ச நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியது. நவம்பர் 2021 இல் EWS இட ஒதுக்கீட்டிற்கான 8 இலட்ச பொருளாதார அளவுகோளை மறு ஆய்வு செய்ய ஒன்றிய பாஜக அரசாங்கம் அஜய் பூஷன், வீகே மல்ஹோத்ரா, சஞ்சீவ் சன்யால் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவும் பாஜக அரசு ஏற்கனவே அறிவித்த 8 இலட்சம் வருமான வரம்பை EWS இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்தது. 8 லட்ச ஆண்டு வருமான அளவுகோல் என்பது அதிக எண்ணிக்கையிலான, இட ஒதுக்கீடு தேவையில்லாத பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினரை EWS இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றவர்களாக மாற்றிவிரும் ஆபத்தைக் கொண்டுள்ளது. எனவே, 8 இலட்ச ஆண்டு வருமான அளவுகோல் சரியே என்ற குழுவின் பரிந்துரை இருந்தபோதிலும், EWS பிரிவுக்கான 8 இலட்ச ரூபாய் வருமான அளவுகோலின் செல்லுபடியாகும் தன்மை மிகவும் கேள்விக்குரியது.

EWS பிரிவைத் தீர்மானிக்க தேவையான பொருளாதார அளவுகோல்

2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் "முந்தைய ஒரு வருடத்தின் ஆண்டு வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு EWS இட ஒதுக்கீட்டிற்கான தகுதி நிர்ணயிக்கப்படும்" என்று குறிப்பிடுகிறது. பொருளாதார நிலை அடிக்கடி மாறக் கூடியதென்பதால் அதனை இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படையான அளவுகோலாக பயன்படுத்த முடியாது. இந்திரா சஹானி வழக்கில், OBC இட ஒதுக்கீட்டிற்கான கிரீமி லேயர் அளவுகோலை உறுதிசெய்த நீதிமன்றம், சமூக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் வகையில் பொருளாதார முன்னேற்றம் இருக்க வேண்டும் என்று கூறியது.

வருமான வரி வரம்பிற்கு குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களை மட்டுமே EWS பிரிவில் சேர்க்க வேண்டுமென சின்ஹோ ஆணையம் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்தந்த ஆண்டின் வருமான வரி வரம்பை அடிப்படையாக கொண்டு EWS பிரிவினரை அடையாளம் காணும் அளவுகோல் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. அந்த அடிப்படையில் தற்போதைய வருமான வரி விலக்கு 2,50,000 ரூபாய். இருப்பினும் பாஜக அரசு அமைத்த குழு 8 இலட்சம் ஆண்டு வருமானம் கொண்டவர்களை EWS இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள் என ஏற்றுக் கொண்டது. மேலும் அஜய் பூஷன், வீகே மல்ஹோத்ரா, சஞ்சீவ் சன்யால் குழுவின் கூற்றுப்படி, போதுமான நிதித் திட்டமிடல் இருந்தால், 8 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்தப்பட தேவை இல்லை. அதாவது வருமான வரி விலக்குப் பெறலாம். ஒன்றிய அரசின் 2015-2016 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு உள்ளிட்ட பல ஆய்வுகளின்படி, 95% மக்கள் ரூ. 8 லட்சம் வருமான வரம்பிற்கு கீழே உள்ளனர். எனவே, 8 இலட்சம் ஆண்டு வருமானத்தை EWS இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படையாக வரையறுத்ததின் மூலம், 95% விழுக்காடு மக்களுக்கு வேலைவாய்ப்பிலும், கல்வியில் இட ஒதுக்கீடு தேவை என்று அரசாங்கம் கருதுகிறது கருதுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

பொருளாதார நிலையை சமூகப் பின்தங்கிய நிலைக்குச் சமன் செய்ய முடியாது

சமூகப் பின்தங்கிய நிலை என்பது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் சமூக அநீதியின் விளைவாகும். ஒரு தலித் குடும்பம் பொருளாதாரத்தில் முன்னேறினாலும், ஏதோ ஒரு வகையில் சமூக புறக்கணிப்பை எதிர்கொள்கிறது. இட ஒதுக்கீடு பொருளாதார அளவுகோலை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது, ஏனெனில் பொருளாதார முன்னேற்றத்தால் சாதி அடிப்படையிலான இந்திய சமூகத்தின் ஏற்றத் தாழ்வான சமூக கட்டமைப்பை தகர்க்க முடியாது.

இந்த 103 ஆவது சட்டத் திருத்தம் பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துகிறது. கல்வி அல்லது வேலைவாய்ப்பில் போட்டியிடுவதற்கான வலு ஒரு உயர்சாதி குடும்பத்தை சார்ந்த ஏழையிடம் இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், அவருக்கு இருக்கும் சமூக, கலாச்சார மூலதனத்தின் உதவியுடன் ஏழ்மையின் அழுத்தத்தை சமாளிக்க முடியும். உயர்சாதியினரின் சமூக, கலாச்சார மூலதனம் பல நூற்றாண்டுகளின் படிநிலை சமூக அமைப்பின் விளைவாக சம்பாதிக்கப்பட்டதே தவிர குடும்ப வருமானம் போன்ற மாறக்கூடிய பொருளால் சம்பாதிக்கப்பட்டதல்ல. அதேசமயம், ஒரு SC அல்லது ST குடும்பம் அத்தகைய சமூக, கலாச்சார மூலதனங்களை கொண்டிருக்கவில்லை, எனவே அவர்களின் நலனை பாதுகாக்க இட ஒதுக்கீடு வடிவத்தில் ஒரு உறுதியான நடவடிக்கை தேவை. சுருங்கச் சொன்னால், பொருளாதாரப் பின்தங்கிய நிலையையும் சமூகப் பின்தங்கிய நிலையையும் ஒப்பிடுவது சரியன்று.

EWS பிரிவினருக்கான நலத்திட்டங்கள்

ஒன்றிய, மாநில அரசுகள் EWS பிரிவினருக்கு கல்வி உதவித்தொகை வடிவத்தில் பொருளாதார நன்மைகளை வழங்க முடியும். அரசிடம் இருந்து இத்தகைய ஆதரவுடன் கல்வியும் உதவியும் பெற்ற ஒருவரால் சிறந்த வேலைவாய்ப்பைப் பெற இயலும். சாதியால் பின்தங்கிய சமூகங்களை இத்தகைய அரசின் நலத்திட்டங்களால் மட்டுமே உயர்த்த முடியாது என்பது தெளிவு.

மருத்துவப் பட்டப்படிப்பில் EWS பிரிவினருக்கான இட ஒதுக்கீடு

MBBS படித்த மருத்துவருக்கு பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தவர் அரசுடன் வேலை உறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நல்ல சம்பளம் பெறும் வாய்ப்பை பெற முடியும். போதுமான நிதி ஆதாரங்களைக் கொண்ட ஒருவர் தான் பெற்ற எம்பிபிஎஸ் தகுதியின் அடிப்படையில் பொதுப் பிரிவு மாணவர்களுடன் போட்டியிட முடியும். இந்த நிலையில் EWS பிரிவினருக்கு ஒரு தனி ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவது, MBBS படித்தாலும் வேலை கிடைக்காது. MBBS படித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்ற அனுமானத்தை உருவாக்க வழிவகை செய்யலாம். அவ்வகையில் EWS இட ஒதுக்கீடு ஒரு மோசமான கணிப்பு.

போதிய விவாதம் இல்லாமை

103 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மிக விரைவாக நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 15, 16 வது பிரிவுகளின் அடிப்படையை மாற்றுவதற்கு விரிவான விவாதங்களும் ஆய்வுகளும் தேவைப்பட்டன. நாடாளுமன்றத்தில் போதுமான அளவு விவாதிக்கப்படாததால் சிவில் சமூகத்திலும், நீதிமன்றத்திலும் விரிவான ஆய்வுக்கு வழிவகுத்தது.

வெளிப்படையாக, இது புதிய இட ஒதுக்கீடு பெரும்பான்மை மாணவர்களின் வாய்ப்புகளைப் பாதிக்கிறது. MD, MS போன்ற முதுகலை பட்டதாரி இடங்களின் எண்ணிக்கை ஏற்கனவே குறைவாகவே உள்ளது. புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு EWS ஒதுக்கீடு மற்றொரு தடையை உருவாக்குகிறது.

ஸ்ரீநிதி

நன்றி: newsclick.in (2022, நவம்பர் 7 இல் வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: லோகநாயகி

Pin It