உலக வரைபடத்தில் அமெரிக்காவின் கீழ் பகுதியில் இருக்கும் ஒரு குட்டி நாடு க்யுபா. அந்த நாட்டு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை 638 முறை அமெரிக்க கொலை செய்ய முயற்ச்சித்தது. அப்படியான பிடல் காஸ்ட்ரோ சாவில் கூட மர்மம் இல்லை.

அதே போன்று மறைந்த பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமும் கூட பல்வேறு கட்ட விசாரணைகள், வழக்குகள் நடத்தப்பட்டு தண்டனைகள் கொடுக்கப்பட்டு இருப்பினும், இன்னும் ஜெயின் கமிஷனால் விசாரணை செய்ய பரிந்துரைக்கப்பட்ட நபர்களை இதுவரை விசாரிக்காமல் மர்மம் நிறைந்ததாகவே வைத்திருக்கிறது. இப்படி தமிழக மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மூன்று முறை முதலமைச்சரான ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பது இந்திய உளவுத்துறை மேலே இந்த நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் சந்தேகங்கள் வருவது என்பது இயற்கை.

arumugasamy commissionஇவ்வாறான சந்தேகத்திற்குரிய மரணமாக செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணத்தை மக்கள் பார்த்ததோடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே அவரது பணிகளை கவனித்து வந்தவரான, முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை செய்வதற்கு பொறுப்பாக இருந்த திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு எழுந்தது தான் மிகப்பெரிய கேலிக்கூத்து. இப்படி அவரது சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு அதிமுக ஆட்சி காலத்தில் 24-09-2017 அன்று அமைக்கப்பட்ட ஆணையம் தான் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம். அது ஐந்து ஆண்டுகாலங்கள் விசாரணை மேற்கொண்டு அந்த அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறது.

இந்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வந்த பின்னர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் இருக்கும் சந்தேகத்தை விட ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையின் மேல் சந்தேகம் வலுக்கிறது.

இந்த விசாரணை அறிக்கையை படித்து பார்த்தபின்னர், குறிப்பாக திருமதி சசிகலா நடராஜன் அவர்களின் 85 பக்க வாக்குமூலம் சிறையில் இருந்த காலத்தில் கொடுத்து இருக்கிறார்.

முழுக்க முழுக்க அந்தகால சூழலில் அதிமுக, பாஜக கட்சிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் மற்றும் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் திருமதி சசிகலா அவர்களின் நடவடிக்கை இருந்து இருக்கிறது.

காலமாற்றத்தில் OPS EPS TTV என்று பல அணிகள் உருவாகி இருந்தது.

அவரது வாக்குமூலத்தில் எங்கேயும் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஒரே ஓரிடத்தில் சோ சொன்னதாக குருமூர்த்தி ஒரு கருத்தை சொல்கிறார். அதற்கு சசிகலா வழக்கறிஞர் எதிர்ப்பை பதிவிடாததால் அந்த கருத்தை ஒப்புக்கொண்டதாக பொருள் கொள்வதாக நீதி அரசர் ஆறுமுகசாமி குறிப்பிடுகிறார்.

இறுதியில் விசாரிக்கப்பட வேண்டியவர் பட்டியலில் சசிகலா அவர்களை இணைத்து இருக்கிறார்.

சந்தேகம் இருப்பின் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் சசிகலா அவர்களை அழைத்து இன்னும் ஒரு முறை விசாரித்து இருக்கலாம். அதை செய்யாதது சந்தேகத்தைக் கிளப்புகிறது.

அடுத்ததாக, ஆஞ்சியோ செய்வதற்கு பரிந்துரைத்த பின்னரும் செல்லவில்லை, செய்யவில்லை அதற்கு சசிகலா மேல் பழி சுமத்தி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சசிகலா மருத்துவ படிப்பு படித்தவர் அல்லர். அப்போல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், AIIMS மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள், அரசு சுகாதாரத்துறை அமைச்சர் (மருத்துவர்) அரசு சுகாதாரத்துறை செயலாளர் (மருத்துவர்) இவர்கள் அனைவரும் ஆஞ்சியோ செய்திருந்தால் இவர் என்ன தடுக்கப் போகிறாரா?

அமெரிக்காவிலிருந்து பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சமின் சர்மா வரவழைக்கப்பட்டு 25.11.2016 அன்று அவர் நோயாளியை பரிசோதித்தார். உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என அவர் பரிந்துரைத்தார். நோயாளியும் அதற்கு ஒப்புக் கொண்டார் என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நாளில் ஆஞ்சியோகிராம் செய்ய அந்த மருத்துவர் முன்வந்தார். ஆனால், ஆஞ்சியோகிராம் செய்ய அவரை R.2 அப்போல்லோ மருத்துவமனை அனுமதிக்கவில்லை. தொலைபேசியில் டாக்டர் ரிச்சர்டு பீலே ஆஞ்சியோகிராம் செய்ய பரிந்துரைக்கவில்லை என்று R.2 விளக்கமளித்தது. ஆனால், இது குறித்து டாக்டர் பீலேயிடமிருந்து எந்த அறிக்கையும் இல்லை.. மேற்குறிப்பிட்டபடி 01.10.2016-அன்று டாக்டர் பீலே தான் ஆஞ்சியோகிராம் செய்ய பரிந்துனரத்தார்.

குறிப்பிட்ட மருத்துவம் செய்ய வேண்டாம் என்று மறுத்துவிட சசிகலா யார்? எந்த அதிகாரத்தின் அடிப்படையில் சசிகலாவிடம் ஆலோசனை பெறப்பட்டது. ஜெயலலிதா கூறியபடி அம்மாவிற்கு உடன் பிறவா சகோதரியிலே இருந்து சருங்கி உதவி செய்யும் வேலைக்காரி. ஒரு பணிப்பெண்ணுக்கு எப்படி இத்தனை அதிகாரங்கள், பொறுப்புக்கள்? எந்த கடமையின் அடிப்படையில் சசிகலா இந்த குற்றச்சாட்டுக்கு பொறுப்பாவார்?

சசிகலாவை விட மூத்த பொறுப்புள்ள அமைச்சர்கள், அதிகாரிகள், படித்த மருத்துவர்கள் அனைவரையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு இவரை குற்றம் சுமத்துவது எந்த உறவின் அடிப்படையில்?

NSG எல்லாம் என்ன செய்தார்கள்? பொதுவாக VVIP க்களை பாதுகாக்கும் இவர்களது செயல்களுக்கு எந்த சட்டமும் குறுக்கே நிற்க முடியாது. குறிப்பாக சசிகலா தான் இப்படி முடிவெடுத்தார் என்ற ஒரு முடிவை இந்த ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

NSG அமைப்பு 50 பேர்களைக் கொண்ட குழு. அவர்கள் பாதுகாக்கும் நபரை பற்றிய அசைவுகள் உடல்நிலை உடன் இருப்போர் பற்றிய விபரங்களை காலை மாலை என்று உள்துறைக்கு தகவல் கொடுக்கும். அவர்கள் பாதுகாக்கும் நபருக்கு ஏதேனும் இடையூறு என்றால் பாதுகாக்க எந்த விதியையும் உடைத்து பாதுக்காக்கும் உரிமை உள்ளவர்கள்.

மாயாவதி இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தவர். உபி சட்டசபையில் ஏற்பட்ட அமளி காரணமாக சட்டசபையை உள்ளிருந்து பூட்டிவிட்டார்கள். அவரது மேய்க்காவலாளர்களால் கூட காப்பாற்றி கொண்டுவர முடியாத சூழலில் தகவல் அறிந்து அந்த கதவை உடைத்து உள்ளே புகுந்து மாயாவதியை வெளிக்கொண்டது இந்த ஒன்றிய அரசு கொடுக்கும் NSG தான்.

இப்படி இருக்க, ஒன்றிய அரசுக்கும் உள்துறை அமைச்சகத்திற்கும் கொடுத்த தகவல்களை பற்றி அல்லது அந்த துறையை சேர்ந்த யாரையும் விசாரிக்காதது அல்லது அந்த அறிக்கையை கேட்டு பெறாமல் இந்த ஆணையம் எதோ ஒரு புள்ளியை நோக்கி இதை எல்லாம செய்து இருக்கிறதா?

நேற்றுவரை ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் என்ற நிலையில் இருந்த நாம் இப்போது சந்தேகம் எல்லாம் ஆறுமுக சாமி அறிக்கையில் தான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். காரணம் ஒன்றுக்கு ஒன்று முரணாக எதோ கதை அளப்பது போன்று கொஞ்சம் கூட மருத்துவ அறிவே இல்லாது ஆணையம் அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணான ஓர் அறிக்கையாக பார்க்க முடிகிறது.

ஜெயலலிதா உடல்நலமின்றி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டவுடன் புற்றீசலாய் கிளம்பி வந்தவர்கள் மோடி-அமித்சா கும்பல் அனுப்பிய ஆட்கள் தான். அந்த மோடியா இந்த லேடியா என்று முழங்கிய பிறகு மோடி கும்பல் ஓடோடி வந்து நின்றது என்றால் ஆதாயம் இல்லாமலா?

ஜெயலலிதாவின் மரணம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை. அப்பல்லோவில் அனுமதிக்கப்படும் முன்பு ஜெயலலிதாவுக்கு இருந்த உடல்நிலை குறித்து பேசும் அறிக்கை, அதற்கு முன்னர் அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டதும் அதனால் ஏற்பட்ட உடல்நிலை சீர்கேடு குறித்தும் எவ்வித ஐயத்தையும் வைக்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மோடி போயஸ்தோட்டம் வந்து ஜெயலலிதாவை சந்தித்து சென்ற பின், ஜெயலலிதாவை பார்த்துக்கொள்ள குஜராத்திலிருந்து மோடி அனுப்பிய நர்ஸ் குறித்தும் அதன்பிறகு ஜெயலலிதா எடுத்துக்கொண்ட மருந்துகள் குறித்தும் ஆணையம் எதுவும் பேசவில்லை.

அப்பல்லோவில் ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்தாலும், அவர் என்ன சாப்பிட வேண்டும் என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை முழுமையாக கட்டுப்படுத்தியது மருத்துவமனையே. உடன் நின்று அனைத்தையும் பார்த்துக்கொண்டது முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன். மருத்துவமனையுடன் நேரடி தொடர்பில் இருந்தது அப்போதைய சுகாதாரச் செயலாளர் இராதாகிருஷ்ணன் மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இவர்கள் மூவரும் நேரடித் தொடர்பில் இருந்தது வெங்கையா நாயுடுவுடன்.

தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் தலைமைச் செயலகத்திலேயே ரெய்டு விடப்பட்டது கட்டுப்படுத்தப்பட்டார். ஜெயலலிதா இறக்கும் வேளையில் (இறந்த பின்பு) முழு கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்ட வெங்கையா நாயுடு, ஜெயலலிதா புதைக்கப்பட்ட பின்னரே சென்னையை விட்டு நகர்ந்தார்.

நடுவில் மருத்துவமனைக்கு ஒரு முறை அமித்சா வந்திருந்த போதும், ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கே மோடி தலையை காட்டினார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகான அதிமுகவை, தமிழ்நாடு அரசை மோடி கும்பலே முழுமையாக கட்டுப்படுத்தியது. எஸ்வி சேகரின் அண்ணி கிரிஜா வைத்தியநாதனை தலைமை செயலாளர் ஆக்கி, தமிழ் நாட்டின் உரிமைகள் அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டனர். அதிமுக அதிகாரம் சசிகலாவிடம் செல்வதை தடுத்து, அவரை சிறையில் அடைத்து, பன்னீர்-எடப்பாடியை வைத்து அதிமுகவை பிளவுபடுத்தி இன்று கட்சியையே கரைத்துவிட்டனர்.

ஜெயலலிதாவின் மரணம் யாருக்கான லாபம் என்று யோசித்தால், ஜெயலலிதாவின் மரணம் கொலை என்றால், அதன் பின்னால் யார் இருந்திருப்பார்கள் என்பது அப்பட்டமாக தெரியும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முழுக்க முழுக்க லாபமடைந்தது என்றால் அது மோடி-அமித்சா கும்பல் தான்.

சசிகலாவை வேலைக்காரி, கொலைகாரி என்று பிராண்ட் செய்து சிறைக்கு அனுப்பிய கூட்டம், இன்று அவர் கட்சியை அதிமுகவுடன் இணைக்க முயல்கிறது. பன்னீரை வைத்து அன்று கட்சியை பிளந்த கூட்டம், இன்று அதே பன்னீரை வைத்து ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க நினைக்கிறது. எடப்பாடியின் முரண்டு காரணமாக சசிகலா கூட்டத்தை கழட்டிவிட பாஜக முடிவெடுத்துவிட்டது. அதற்கு தான் இந்த அறிக்கை, 2024 தேர்தல் அரசியல் கணக்கு தான் எல்லாம்.

ஆறுமுகச்சாமி ஆணையத்தை அமைத்தது பாஜக. அதன் நோக்கம், ஜெயலலிதா மரணத்தின் உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதே. உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைத்து சசிகலா உள்ளிட்ட சிலரை பலிகடவாக்குவது. அதற்கான சூழல் இன்று வந்ததும், அறிக்கை வெளியே வருகிறது.

திமுகவை பொறுத்தவரை தனக்கான அரசியல் லாபத்தை பார்க்கும் அதே வேளையில் பாஜகவின் லாபம் என்ன என்பதை பார்க்க தவறிவிட்டது. சசிகலா கும்பல் மோடி-அமித்சா சதிவலையில் விழுந்ததை போல, தற்போது திமுகவும் அவர்களது சதிவலையில் விழுந்துள்ளது.

திமுக காரணம்னு எங்கேயும் சொல்லலியே! ஜெயலலிதா ஜெயிலுக்கு போனத குறையாவும் சொல்லல. ஜெயிலுக்கு போனதுக்கப்புறம் தொடர்ச்சியா ஏற்பட்ட உடல்நிலை குறைவு சந்தேகத்துக்குறியதே! ஜெயாவை கடவுள் ரேஞ்சுக்கு பேசும் அறிக்கை, இதை கணக்கில் எடுக்காமல் விட்டது ஏன் என்ற கேள்வி தான்.

ஆறுமுக சாமி ஆணையத்தின் வழக்கறிஞராக செயல்பட்டுள்ள நிரஞ்சன் ராஜகோபாலன் ஒரு பாஜக / ஆர்.எஸ்.எஸ் நபர் என்பதிலிருந்து பார்க்க துவங்கினால் இந்த அறிக்கையை திட்டமிட்டு ஒரு தலைப்பட்சமாக குற்றம் சுமத்தி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர். “2014லிருந்து அதிமுகவில் பொதுசெயலாளர் பதவிக்கு கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து தேர்தல் நடைபெறவில்லை என்று திண்டுக்கல்லை சேர்ந்த சூரிய மூர்த்தி அவர்கள் தொடர்ந்த வழக்கில் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜராகி OPS, EPS அதிமுகவிற்காக பேசியவர்.

தமிழக அறநிலைத்துறை கோவில் நிதிகளை கார்கள் வாங்குவதற்கும் தனியாக தொலைக்காட்சி துவங்குவதற்கும் பயன்படுத்தபடுகிறது என்று பொதுநல வழக்கை முகமது இம்ரானுல்லா என்பவர் தொடர்ந்த வழக்கில் அவருக்காக தமிழக அறநிலைத்துறைக்கு எதிராக வழக்கு நடத்தியவர்.

இவரது Twitter பதிவுகளில் நுபுர் ஷர்மா, குருமூர்த்தி, சுப்ரமணிய சாமி, நரேந்திர மோடி, ரஜினிகாந்த் ஆதரவு பதிவுகள் தான் அதிகம் காணப்படுகிறது. காவிப்படம் கொண்ட வள்ளுவர் படங்களை வைத்து இருக்கிறார்.

இப்படி இருக்கும் இவர் விசாரிக்க வேண்டியவர்களை விட்டுவிட்டு மற்றவர்களை எல்லாம் விசாரித்து இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

நாம் எழுப்பும் கேள்விகள்:

  1. செல்வி ஜெயலலிதா அவர்களின் சிகிச்சையின் பொது முக்கிய முடிவெடுக்க வேண்டியவர்கள் யார் யார்?
  1. செல்வி ஜெயலலிதா அவர்களின் வீட்டில் மயக்கமடைந்ததும் சிகிச்சைக்காக அப்போல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த காணொளி காட்சிகள் இல்லாதது, அதை அகற்ற உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கை மற்றும் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தாது ஏன்?
  1. செல்வி ஜெயலலிதா அவர்களின் மருத்துவமனை சிகிச்சையின் பொது அவருக்கு வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறையை விசாரிக்காதது ஏன்?
  1. அன்றைய ஆளுநராக ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருந்தவரை விசாரிக்காதது ஏன்?
  2. வா.புகழேந்தி கொடுத்த வாக்குமூலத்தை இந்த விசாரணைக்கு உரியதாக இல்லை என்று சொல்லி புறம் தள்ளியது ஏன்?
  1. ஒவ்வொரு நாளும் முதல்வரின் உடல்நிலை, நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஒன்றிய அரசின் உளவுத்துறை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும். அந்த அறிக்கையை பெற்று விசாரணை நடத்தாதது ஏன்?
  1. சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் சசிகலாவை குற்றம் சாட்டுவதற்கு முன்னர் மீண்டும் ஒரு குறுக்கு விசாரணை நடத்தாதது ஏன்?

இப்படி பல்வேறு கேள்விகள் நமக்கு எழுந்த வண்ணமே இருக்கிறது. இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியாமல் இந்த மர்மத்தை உடைக்க இயலாது என்பதோடு இதை ஓர் அரசியல் ஆயுதமாக தான் இந்த ஆணையம் மாற்றி அமைத்து இருக்கிறது.

- ஆர்.எம்.பாபு

Pin It