election 596

அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராகத் திரு சசிகலா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இது ஒன்றும் எதிர்பாராத திருப்பம் இல்லை. ஆனால் அடுத்தடுத்து நாடு என்ன திருப்பங்களை எதிர்கொள்ளப் போகிறது என்பது எண்ணத்தக்கது.

ஒரு கட்சியின் பொறுப்புக்கு யார் தேர்ந்தெடுக்கப்பட்டால் நமக்கென்ன என்பது சரிதான். ஆனால் அ.தி.மு.க. என்பது ஆளும் கட்சியாகவும் இருப்பதால், அதன் பின் விளைவுகள் அந்தக் கட்சியோடு மட்டும் நின்றுவிடாது. அது நாட்டையும் பாதிக்கும். எனவே அது குறித்துக் கவலை கொள்ள நமக்கும் உரிமை உள்ளது.

இன்றைய ஆளும் கட்சியின் சட்ட திட்டங்களின்படி, பொதுச் செயலாளர் பதவியே அனைத்து அதிகாரங்களையும் உடையது. எனவே அந்தப் பொறுப்பிற்கு வரும் ஒருவர் அடுத்து தமிழக முதலமைச்சராக வருவதற்கும் வாய்ப்புள்ளது. அவ்வாறில்லை எனினும், முதலமைச்சரையே கட்டுப்படுத்தும் அதிகாரம் அந்தப் பதவிக்கு உளது. ஆதலால் இது கட்சிப் பிரச்சினையன்று, நாட்டின் பிரச்சினை என்பதாக நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

சரி, முதலமைச்சராகத்தான் யார் வந்தாலென்ன என்று நாம் இருந்துவிட முடியாது. அப்படி ஒருவரைத் தேர்ந்தடுக்கும் சட்ட அடிப்படையிலான உரிமை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத்தான் இருக்கிறது என்றாலும், அதிலும் பல வினாக்கள் உள்ளன. சட்டத்தைத் தாண்டி, பொது அறத்தின் அடிப்படையில் பார்த்தால், அந்தப் பதவிக்கு அடுத்து வருகின்றவர், ஒரு பொதுத் தேர்தலைச் சந்தித்து, பொது மக்களின் ஆதரவைப் பெற்று அங்கு வருவதே நியாயம்.

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அனைவரும் பொதுத் தேர்தல்களைச் சந்தித்தவர்கள். சசிகலா இன்றுவரையில் எந்த ஒரு தேர்தலையும் சந்திக்காதவர். அவர்கள் கட்சிக் கூட்டத்தில் கூட இதுவரையில் பேசாதவர். கட்சி நடவடிக்கைகள் எதிலும் கலந்து கொள்ளாதவர். அரசியல் போராட்டங்களில் கலந்துகொண்டு அதற்காகச் சிறை செல்லாதவர். அவருடைய குணம் என்ன என்பதை மட்டுமின்றி, அவர் குரல் எப்படியிருக்கும் என்பதைக் கூடத் தமிழகம் அறியாது. இந்த நிலையில் அவர் இத்தனை பெரிய பொறுப்புக்கு வருவது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது.

தங்களின் கட்சித் தலைவியாக அவரை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஆனால் நாட்டின் தலைவியாக வருவது குறித்து மக்களே முடிவெடுக்க வேண்டும். முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று கட்சி சொல்லலாம். முதலமைச்சர் யாரென்று மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் வீரமணி அவர்கள் சசிகலாவை ஆதரித்து எழுதியிருப்பது குறித்துச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். பிறப்பின் அடிப்படையிலும், அவர் செய்த வீடியோ வணிகம் என்னும் தொழிலின் அடிப்படையிலும் அவரைப் பார்ப்பனர்கள் சிலர் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர். துக்ளக், தினமலர் போன்ற ஏடுகள் சசிகலாவுக்கு எதிரான எழுத்துப் போரைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். அவற்றுக்கு எதிராகவே, ஓர் எதிர்வினையாக ஆசிரியர் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும், அ.தி.மு.க.வை வீழ்த்திவிட்டு அல்லது விழுங்கிவிட்டு பா.ஜ.க அந்த இடத்திற்கு வர முயலும் நிலை கண்டும், எச்சரிக்கையாக அவர் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கக்கூடும்.

அந்த எதிர்வினையையும், அந்தப் பார்வையையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், அதனைத் தாண்டி நமக்குச் சில ஐயங்கள் உள்ளன. சசிகலாவைப் பின்னிருந்து ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் வழி நடத்தாது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.

இல. கணேசன் போன்றவர்கள் சசிகலாவை ஆதரிப்பதையும் இங்கு நாம் நினைவு கூர வேண்டும். அவர் தலைக்கு மேல் உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொங்கிக் கொண்டுள்ளது. அதனை வைத்தும் மத்திய அரசு சசிகலாவை அச்சுறுத்த முடியும். சசிகலா மடியில் கனம் இல்லாதவர் என்றும் சொல்லிவிட முடியாது. எனவே வழியில் பயம் இருந்தே தீரும்.

இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, தமிழகத்தில் உடனடியாக ஒரு பொதுத்ததேர்தல் நடத்துவது என்பதே சரியானது. ஒரே ஆண்டில் மீண்டும் பொதுத் தேர்தல் என்றால் மக்களின் பணம் வீணாகாதா என்று சிலர் கவலைப்படக்கூடும். ஆம், வீணாகத்தான் செய்யும். ஆனால் ஒரு நாடு வீணாவதை விட, பணம் வீணாவது அப்படி ஒன்றும் பிழையில்லை.