வரலாறு ஒரே திசையில் செல்லாது. அவ்வப்போது திருப்பங்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கும். அது இயல்பானது தான் என்றாலும், இப்போது வரலாறு விசித்திரமான காட்சிகளைத் தமிழ்நாட்டில் கண்டு வருகிறது. ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் இயற்கை எய்துகின்ற நேரத்தில், அவரின் அடியொற்றிக் கொள்கைவழி நடக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே போட்டி நடைபெற்றால் அதில் வலிமை வாழும். பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைவுற்றபோது அவரது அன்புத் தம்பிகள், கலைஞருக்கும், நாவலருக்குமிடையே போட்டி ஏற்பட்டது. பெருமளவில் கழகத்தவரின் ஆதரவு பெற்று இருந்த கலைஞர் வெற்றி பெற்றார். நாவலரை, தந்தை பெரியாரும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் தேற்றினர். தலைவர் கலைஞர் ஆயிரம் சோதனை சூறாவளிகளையும், சுனாமிகளையும் எதிர்கொண்டு வென்று இன்றளவும் கழகத்தை இமயமெனக் காத்து நிறுத்தி வைத்துள்ளார். நாவலரோ மக்கள் தி.மு.க. எனத் தனிக்கட்சி தொடங்கி அதை அதிமுகவுடன் இணைத்து தன் இயலாமையை வெளிப்படுத்தினார்.
அதுபோலவே, முதல்வராக இருந்த நிலையில் எம்.ஜி.ஆர். காலமானார். அப்போது அவருடைய இடத்துக்கு அவரது கொள்கை வழித் தொண்டர்கள் அல்லது தலைவர்கள் யாரும் போட்டியிடவில்லை. 1969இல் கலைஞரோடு போட்டியிட்ட நாவலர் கூட 1987இல் எம்.ஜி.ஆரின் இடத்துக்குப் போட்டியிட முடியாமல் ஓரங்கட்டப்பட்டார். எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையாரும் ஜெயலலிதாவும் முன்னிறுத்தப்பட்டு முடிவில் ஜெயலலிதா அந்த இடத்தைப் பிடித்தார்.
இப்போது ஜெயலலிதா மறைந்து விட்டார். அவரது இடத்துக்கு போட்டியிடுபவர்கள் - அவரது கொள்கை (?) வழித் தலைவர்களா என்றால் ஆம்! தமிழ்நாட்டைச் சுரண்டுவதும், கொள்ளையடிப்பதும் சொத்து சேர்ப்பதும் தானே ஜெயலலிதாவின் கொள்கையாக இருந்தது.
அவரது வழியில் அவரைப் போலவே தமிழ்நாட்டை சுரண்ட, கொள்ளையடிக்க ஒரு அதிகாரப் போட்டி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா “ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு” சிறை செல்லும் போதெல்லாம் முதல்வராக - ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் என்ற தகுதியோடு (?) ஓ.பன்னீர் செல்வம் அவர்களும், ஜெயலலிதாவோடு 33 ஆண்டுகாலம் தோன்றாத் துணையாக தோழியாக இருந்தவர் என்ற தகுதியோடு சசிகலா அவர்களும் போட்டியிட்டனர்.
வி.கே. சசிகலா என்ற பெயரே அதிமுகவின் தொண்டர்கள் மத்தியிலும், வெகு மக்களின் பொதுப்புத்தியிலும் வேப்பங்காயாகக் கசந்தது. அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்திற்கே சசிகலாவின் குடும்பம் தான் காரணம் என்பது வெகுமக்கள் கருத்து. எனவே ஜெயலலிதாவுக்குப் பின் சசிகலா அவரது இடத்துக்கு வரக்கூடாது என்று கருதிய அதிமுக தொண்டர்கள், எந்தவித அரசியல் அனுபவமும் இல்லாத, ஜெயலலிதாவின் “இரத்த உறவு” என்ற ஒரே தகுதியின் அடிப்படையிலும், “ஜெயலலிதா மாதிரியே இருக்கிறார்” என்பதாலும் “தீபாவைத் தலைமை யேற்றிட அவரது வீடு தேடிச் சென்று கோரிக்கை வைத்தார்கள். ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவின் அடிமையாகச் செயல்படுகிறார் என்று மக்கள் கருதிய போது தீபாவுக்கான ஆதரவு பெருகிறது.
ஜெயலலிதா மரணம் அடைந்ததில் வெகு மக்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள். ஜெயலலிதா சாதாரண காய்ச்சல் - மற்றும் நீர்சத்துக் குறைபாட்டுக்காகத் தானே அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். ஓவ்வொரு நாளும் அவர் குணமடைந்து வருவதாகத் தானே அ.தி.மு.க. பிரமுகர்களும், கூறுகின்றனர்; மருத்துவ அறிக்கைகளும் கூறின. ஆனால் அவர் இறந்து விட்டார் என்று பல நாள்களுக:கு முன்பாகவே “வதந்தியாக” சொல்லப்பட்டவை தானே முடிவில் உண்மையானது. சிகிச்சையில் இருக்கும் ஜெயலலிதாவின் படங்கள் எவையும் இன்று வரை வெளியிடப்படவில்லையே ஏன்? அவரைக் காணவந்த ராகுல்காந்தி, தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும், சசிகலாவும், மருத்துவர் குழுவும் சொன்னதைக் கேட்டுவிட்டுத் திரும்பினார்களே தவிர சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சரைக் கண்ணால் கண்டவர்கள் யாருமே இல்லை என்பது பெரும் மர்மமாக இருக்கிறது.
முதலமைச்சர் நீண்ட சிகிச்சையில் இருப்பதால் அவரது ஒப்புதலோடு பொறுப்பு முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். உண்மையில் ஜெயலலிதா ஒப்புதலோடு தான் ஓபிஎஸ் நியமிக்கப்பட்டாரா என்கின்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கிறது.
தஞ்சாவூர் - அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்க - கையெழுத்திட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவின் இடது கைப் பெருவிரல் ரேகையை வைத்தார். சர்ச் பார்க் கான்வென்டில் படித்தவரை கைநாட்டுப் பேர்வழி ஆக்கிவிட்டார்கள். முந்தைய நாள்களில் அவர் குணமடைந்து விட்டார். வேண்டியதைக் கேட்டு விரும்பி சாப்பிட்டார் செவிலியரோடு பந்து விளையாடினார். அவர்களை வீட்டுக்கு அழைத்தார் என்றெல்லாம் சொன்னவர்கள், இப்போது “கைநாட்டு” வாங்கியது மர்மமாக இருக்கிறதே என்பது மக்களின் சந்தேகம். கைநாட்டு வாங்கிய போது அவர் (சுய) “உணர்வோடு” இருந்தாரா? என்பதும் மக்கள் சந்தேகம்.
இந்த கபட நாடகங்களுக்கெல்லாம், மத்திய மோடி அரசு உறுதுணையாக இருந்தது. அதனால் தான் எய்ம்ஸ் மருத்துவர் குழுவும் அப்போலோ மருத்துவர் குழுவோடு ஒத்துழைத்தது. இதற்குச் சீமையிலிருந்து வந்த டாக்டர் பீலேவும் உடந்தை. அவர் வரவழைக்கப்பட்டதே உயிரற்ற உடலை பலநாள் கெடாமல் பாதுகாக்கத் தானே தவிர சிகிச்சை அளிக்க அல்ல என்று வெகுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
இந்த நிலையில் பொறுப்பு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியைக் கொண்டு வரத்தான் சசிகலா விரும்பி இருக்கிறார். ஆனால் இவரைப் போலவொரு கொத்தடிமை நமது கட்டசியிலே கூட கிடைக்க மாட்டார் என்பதால்தான் மோடி - ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தார். அப்போலோ தகிடுதித்தங்கள் தொடர்ந்து கொண்டு இருந்தாலும், அதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவைப்பட்டதாலும், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர இருப்பதாலும் அன்றைய நிலையின் சசிகலா -மோடியின் விருப்பத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார். ஓ.பி.எஸ் முழுக்க முழுக்க மோடியின் தேர்வு - பொறுப்பு முதல்வரே. ஜெயலலிதா மரணத்தின்பின் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்வுகளைக் கண்காணிக்கத் தான் ஜெயலலிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய பின் டெல்லி திரும்ப வேண்டிய வெங்கையா நாயுடு ராஜாஜி ஹால் புளிய மரத்தடியில் காத்துக் கிடந்தார். இழவுக்கு வந்தவர் பந்தலில் தொங்கும் பாகற்காயின் மீது கண் வைத்தது போல் பாஜக தமிழகத்தைப் பார்த்தது.
முதல்வர் பதவியைத் தற்காலிகமாக இழந்த சசிகலா திட்டமிட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றினார். கட்சி சகிகலாவிடம்; ஆட்சி ஓபிஎஸ் இடம் என்று முதலில் போக்குக் காட்டிவிட்டு ஆட்சியும் கட்சியும் ஒரே தலைமையிடம் இருக்க வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லி முதல்வர் பதவியையும் கைப்பற்ற சசிகலா காய் நகர்த்தினார். அதற்கு அவர் தேர்வு செய்த காலகட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது, மோடியும், பாஜகவும் - பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலத் தேர்தலில் மும்முரமாக இருந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டை விட அவர்களுக்கு உ.பியும், பஞ்சாப்பும் முக்கியமாக இருக்கும் என்று கருதி, சசிகலா முதல்வர் பதவியைக் கைப்பற்ற நினைத்தார். அதற்கென சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி ஓபிஎஸ்-சின் விலகல் கடிதத்தைப் பெற்று, சசிகலாவை முதல்வர் பொறுப்புக்கு தேர்வு செய்தனர். அப்போது தனக்கென எந்தக் கருத்தும் இல்லாமல், எஜமானர்கள் சொற்படி நடக்கும் ஓபிஎஸ் எஜமானர்கள், வடமாநில தேர்தல் களத்தில் தீவிரமாக இருந்த காரணத்தாலும், எஜமானர்களின் ஆலோசனையைப் பெறமுடியாததாலும், சசிகலா நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு விலகல் கடிதத்தைக் கொடுத்ததோடு, சசிகலாவை முதல்வர் பொறுப்புக்கு முன்மொழியவும் செய்தார்.
அதன்பின், பாஜக.வினர்; - தமிழ்நாட்டின் மாற்றங்களை அறிந்து உரிய ஆலோசனை வழங்கிய பின்னால் - ஓ.பன்னீர் செல்வம் - பிப்.7ம் நாள் இரவு 9 மணிக்கு திடீரென வீறு கொண்டு எழுந்து ஜெயலலிதாவின் கல்லறையில் “தியானப் புரட்சி” நடத்தினார். எஜமானர்களின் ஆலோசனைப்படி செய்தியாளர்களுக்குப் பேட்டியும் கொடுத்தார். வெறுமனே அவர் விருப்பப்பட்டு ஜெயலலிதா கல்லறையில் தியானம் செய்யச் சென்றிருந்தால் அது கவனிப்பாரற்றுப் போயிருக்கும். ஆனால் அதை ஊடக வெளிச்சம் போட்டுக் காட்டும் பொறுப்பினை பாஜக எடுத்துக் கொண்டது. ஓ.பன்னீர் செல்வம் - இப்படி கல்லறைத் தியானம் செய்ய போகிறார் என்கின்ற தகவலை பாஜக வட்டாரங்கள் செய்தியாளர்களுக்கு சொன்னதால்தான் பன்னீர் செல்வத்திற்கு முன்பே சில ஊடக செய்தியாளர்கள் மெரினாவுக்கு வந்து விட்டனர். எனவே கல்லறை தியானம் பாஜக-வால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம். இப்படிப்பட்ட “தியானம்” எல்லாம் பாஜக பாணி. “திராவிட அரசியல்” அல்ல. அடுத்தடுத்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.
ஓ.பன்னீர் செல்வம் வாய் மலர்ந்ததும் முன்னதாகச் சென்று ஆதரவு அளித்தவர். முன்னாள் பா.ஜ.க. இன்னாள் அதிமுக எம்.பி. மைத்திரேயன்.
அடுத்து ஆதரவு தெரிவித்தவர் நாடறிந்த பாஜக நடிகர் எஸ்.வி.சேகர்.
அடுத்து ஆதரவுக் கரம் நீட்டியவர் முன்னாள் ஸிஷிஷி இந்நாள் அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராசன். அடுத்து நள்ளிரவென்றும் பாராமல் இரவு 1 மணிக்குத் தொலைக்காட்சியில் ஆதரவு தெரிவித்தவர் எச்.ராஜா.
இப்படியாகத் தொடர்ந்து ஆதரவில் கடைசியாக ஆதரவு தெரிவித்தவர் மயிலை சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அய்யர்.
ஆக பன்னீர் செல்வம் வெறும் பொம்மைதான். அவரை முழுக்க முழுக்க ஆட்டிப் படைப்பவர்கள் ஸிஷிஷி பாஜக சக்திகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பன்னீர் செல்வம் - சசிகலாவின் அடிமையாகச் செயல்பட்ட வரையில் - தீபா முன்னிறுத்தப்பட்டார். ஆனால் பன்னீர் செல்வம் முழுமையாகக் களமிறங்கப்பட்டவுடன் தற்செயலாக - தீபாவும் - கல்லறைக்குச் சென்று பன்னீர் அணியில் இணைகிறார். இதுவும் எஜமானர்கள் சொற்படியும் - விருப்பப்படியும் தான் (இப்போது அதிலும் ஒரு மாற்றம் நடந்துள்ளது).
பன்னீர் செல்வம் - ஜெயலலிதாவின் பழைய அடிமை என்றாலும் இன்று பா.ஜ.க. வின் கைப்பாவை. அதனால் தான் ஜெயலலிதா நிராகரித்த திஷிஸி உதய் திட்டம் போன்றவற்றிற்கு ஒப்புதல் வழங்கினார்.
டில்லியில் தன்னை சந்திக்க நேரம் கேட்ட 50 அதிமுக எம்பிகளுக்கு நேரம் வழஙகாத பிரதமர் மோடி ஓபிஎஸ் ஐ மட்டும் சந்தித்தார்.
ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போட்டிருந்த ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை தீர்க்காமல் ஓபிஎஸ்ஸால் தமிழ்நாடு திரும்ப முடியாது என்ற நிலை ஏற்பட்டதும், ஒரே நாளில் அவசரச் சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் என்று தீர்வு கண்டனர்.
தீபா, - பன்னீர் செல்வம் இருவரும் இரு கரங்களாக செலய்படுவோம் என்று தீபா - அறிவித்தார். நாங்கள் இருவரும் பாஜகவின் இரு கரங்களாகச் செயல்படுவோம் என்பது தான் பொருள். அப்போதே அதிமுகவின் இரட்டை இலை முடக்கப்பட்டு இரு கரங்களையோ - மெழுகு வர்த்திகளையோ சின்னமாக்கச் சதிவலை பின்னப்பட்டு விட்டது.
தீபா-, பன்னீர் செல்வத்தின் கீழ் செயல்படுவதா என்ற கேள்வி எழும்போது பன்னீர் செல்வத்தின் கீழ் அல்ல - பன்னீர் செல்வத்துக்கு துணையாகவும், இணையாகவும் செயல்படுவார். அதுவும் தீபா ஒரு பயிற்சியாளராக சிறிது காலம் செயல்படுவார். உண்மையான தமிழக அரசியலைப் புரிந்து கொள்ள சிறிது கால அவகாசம் தீபாவுக்குத் தேவைப்படுகிறது. அப்பயிற்சியைப் பன்னீர் செல்வத்திற்கு துணையாக இருந்து பெறுவார். பயிற்சி முடிந்ததும் முழுப்பொறுப்பேற்க முன்னிறுத்தப்படுவார் என்பதே களநிலவரம்.
முன்பு ராஜாஜிக்குப் பிறகு ஜெயலலிதா, இப்போது ஜெயலலிதாவுக்குப்பிறகு தீபா. எப்படியாவது தமிழகத் தலைமையிடம் அக்கிரகாரமாகத் தான் இருக்க வேண்டும் என்பது பாஜக ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டம்.
எந்தக்காலத்திலும், பாஜக - நேரடியாக தமிழக அரசியலில் வேர் பிடிக்க முடியாது என்பது உண்மை. திமுக - அதிமுக வோடு கூட்டணி அமைத்து சில நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றாலும், அடுத்து வந்த தேர்தல்களில் படுதோல்வியைத் தான் பாஜக பெற்றது. தன்னால் நேரடியாக இயலாத ஒன்றைத் தனது ஏஜெண்டுகள் மூலம் சாதித்துக் கொள்ளவே பாஜக பன்னீர் செல்வத்தையும் தீபாவையும் முன்னிறுத்துகிறது.
பன்னீர் - தீபா ஒரு பேராபத்து.
தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்.