பிள்ளை பெறுவது மட்டுமல்ல பெண்ணின் வாழ்க்கை. அதைத் தாண்டி, பல உணர்ச்சிகள் பெண்ணுக்கு உள்ளது. பெண்ணை பிள்ளை பெறும் இயந்திரமாக சுருக்குவது, மனித குல விடுதலைக்கு எதிரானது என்ற பரந்த நோக்கில் தான் அந்த கேள்வியைக் கேட்டார் பெரியார்.

பெண்ணை பிள்ளை பெறும் இயந்திரமாக சுருக்கி, அதற்கு தாய்மை எனப் பெயரிட்டு, (உலக) மதமும் (இந்திய) சாதியும் பெண்ணை ஒன்றுமில்லாதவளாக மாற்றி வைத்திருந்தன. எனவே பெண்களின் விடுதலைக்கு கர்ப்பம் விரோதியாக இருப்பதால் பெண்கள் பிள்ளை பெறுவதை அடியோடு நிறுத்தி விட வேண்டும் என்றார் பெரியார்.surrogacy 584மக்கள் தொகையில் பாதி உள்ள பெண்களை சாதியும் மதமும் சமமாக நடத்தாமல், கணவனுக்கு பணிவிடைகள் செய்வதற்கும், ஆணின் சொத்துக்களை கைமாற்றி விட ஓர் ஆண் குழந்தையைப் பெற்றுத் தந்து, அதை வளர்ந்து ஆளாக்கும் அடிமையாக பெண்களை நடத்தியதால், பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரமா எனக் கேள்வி கேட்டார் பெரியார்.

அதை முதலாளித்துவம் வேறு வகையில் டீல் செய்கிறது. பிள்ளை பெறும் அனுபவம் கொடுமையானது. ரத்தமும் சதையும் வலியும் நிரம்பிய அந்தக் கொடுமையை பணத்தை வைத்து சமாளிக்கலாம் என்கிறது. பணமிருந்தால் அந்தக் கொடுமையை நீ அனுபவிக்க வேண்டியதில்லை, உனக்குப் பதில் இன்னொரு பெண் குழந்தை பெற்றுத் தருவாள் என்கிறது முதலாளித்துவம். கருணையைக் காசாக்கும் NGO க்கள் போல பிள்ளை பெறும் கொடுமையைப் பணமாக்கும் ஐடியாவே வாடகைத் தாய்.

தாய்மை என்ற உணர்ச்சியை வைத்து பெண்ணை இந்த சமூகம் அடிமைப்படுத்துகிறது என்றார் பெரியார். பணம் கொடுத்து தாய்மை உணர்ச்சியை ஏழைப் பெண்ணிடம் தள்ளி விடலாம் என்கிறது முதலாளித்துவம். குழந்தை பெறுவதற்காக மட்டும் பெண்ணைப் பயன்படுத்துவதற்காகவே தாய்மை, பெண்மை என பல பெயர்களில் பெண்ணை பழக்கப்படுத்தி இருக்கிறது நம் சமூகம். எனவே தான் கர்ப்பப் பையை அறுத்து விடு பெண்ணே என்றார் பெரியார்.

இனப்பெருக்கம் மனித வாழ்வில் ஓர் அங்கமே அன்றி, குழந்தை பெறுவதற்காக மட்டுமே இந்த மனித வாழ்க்கை பயன்படக்கூடாது. அதைத் தாண்டி, பல உணர்ச்சிகள், தேவைகள் பெண்களுக்கு உள்ளன என்று கருதியதாலேயே பெண் பிள்ளை பெறும் இயந்திரம் இல்லை என்றார் பெரியார். 

கர்ப்பப் பையை அறுக்க வேண்டியதில்லை. இருப்பினும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். பிள்ளைப் பேறில் இருந்து தப்பிக்க எங்களுக்கு பணம் தந்துவிடு, வேறு பெண்ணின் வயிற்றில் உன் கருவை வளர்த்து, உன்னைத் தாயாக்குகிறோம் என்கிறது முதலாளித்துவம். பிள்ளை பெறாவிட்டால், பெண்ணின் வாழ்வு கேள்விக்குறியாகி விடுகிறது. குழந்தை பெற தகுதியற்ற பெண்ணை முழுமையான பெண்ணாக நம் பழம்பெரும் சமூகம் கருதுவதில்லை. பிள்ளை பெறுவதற்காக, பல தியாகங்கள் செய்ய நம் சமூக அமைப்பு பெண்ணை பல வழிகளில் நிர்பந்திக்கிறது.

பிள்ளை பெறுவதால் உனக்கென்ன லாபம் என்று பெண்களைப் பார்த்து பெரியார் கேட்ட கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. வாடகைத் தாய் முறையில் பிள்ளை பெற்றால் எங்களுக்கு லாபம் உள்ளது என்கிறது முதலாளித்துவம்.

கருத்தரிப்பு அறிவியல் வளராத காலத்தில், திருமணம் முடிந்தவுடன் குழந்தை பெறாவிட்டால் மனைவியை மலடி என்று சொல்லிய கணவன்கள், வேறு பெண்ணை மறுமணம் செய்து கொண்டனர். அப்படியானால் முதல் மனைவியை என்ன செய்ய? விருப்பப் பட்டால் வேலைக்காரியாக வாழ்ந்து கொள் என்ற வாய்ப்பை பழைய உலகம் தந்தது. அறிவியல் இந்தப் பிரச்சினையை எளிதில் தீர்த்து விட்டது. கணவன், மனைவி இருவரையும் மருத்துவமனைக்கு கூப்பிட்ட நவீன மருத்துவ அறிவியல், கணவனையும் மனைவியையும் சோதித்து, யாருக்குப் பிரச்சினை இருக்கிறது, என்ன பிரச்சினை இருக்கிறது எனச் சொல்லி விடுகிறது. அதோடு நின்றுவிடாமல், கணவன் - மனைவி இருவரில் யாருக்கேனும் அல்லது இருவருக்கும் உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்குமாயின் அதைத் தீர்க்க முயற்சிப்போம் என்றது அறிவியல்.

மனிதருக்கு ஆசையும் பிரச்சினையும் இருந்தால் போதும். அந்த ஆசையையும் பிரச்சினையையும் காசாக்கும் வித்தையை முதலாளித்துவ நிறுவனங்கள் கற்றுள்ளன. அதற்குத் துணையாக அறிவியலைப் பயன்படுத்தும் கொடூரத்தை நிகழ்த்தி வருகின்றன. "பெர்டிலிட்டி சென்டர் (கருத்தரிப்பு மையம்)" என்ற பெயரில் தாய்மை விற்பனை நிலையங்களை தெருவுக்கு ஒன்றென கட்டி, மனித வாழ்வை மேம்படுத்த வந்த அறிவியலை வைத்து மருத்துவ வணிகர்கள் கல்லா கட்டுகின்றனர். அத்திமரம், ஆலமரம், பிள்ளையார், பெருமாள் என, சேலை மடியில் குங்குமம் - தீருநீற்றோடு, கோயில் கோயிலாக சுற்றிய பெண்களை அங்கிருந்து கிளப்பி, பெர்டிலிட்டி சென்டருக்கு வரவைத்து கல்லா கட்டுகிறது முதலாளித்துவம்.

எப்படி கருத்தரித்தாலும், எப்படி பிள்ளை பெற்றாலும், அது பெண்ணுடலைப் பொருத்தவரையில் சுக அனுபவம் இல்லை. பெண் என்பவள் வலியும் ரத்தமும் சதையும் கலந்த கலவை. தாய்மை என்ற உணர்ச்சிக்காக, சமூகத்தின் நிர்பந்தத்திற்காக, ஆணின் ஆசைக்காக, பல ஆண்டு வலியைக் கடந்தே குழந்தை பெறுகிறாள் பெண். தாய்மை உணர்வு என்ற பெயருக்காக வலியைப் பொறுத்துக் கொள் எனப் பெண்களை தயார் செய்து வைத்துள்ளோம். இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற வாழ்க்கை கட்டாயம் இருந்தாலும், அறிவியல் வளராத காலத்தில் குழந்தைப் பேறு நிச்சயம் இல்லாத கனவாகவே இருந்தது. குழந்தை பெற்றால், தாயின் உயிருக்கே கேடாய் முடியும் சூழலும் இருந்தது. இப்போது பணமும் வந்து விட்டது, அறிவியலும் வளர்ந்து விட்டது. பணத்தை வலிக்கு பதிலீடாக்கி, வாடகைக்கு இன்னொரு பெண்ணின் கருப்பையை, அதாவது பணம் கொடுத்து தாய்மை உணர்வை சரிக்கட்டும் வித்தையே வாடகைத் தாய்.

இலாபத்தை குறிவைக்கும் முதலாளித்துவத்திற்கும், மக்கள் நலன் சார்ந்து அறிவியலுக்கும் பாரிய வேறுபாடு உண்டு.

தாய்மை வேணுமா? அதுக்கு ஒரு பில், வாடகைத் தாய் வேணுமா? அதுக்கு ஒரு பில் என வரிசையாக பில்களை கணவன் - மனைவி தலையில் கட்டுகிறது முதலாளித்துவம்.

கரு உருவாகவில்லையா? அதன் காரணத்தை ஆராய்வது அறிவியல். உருவான கரு, நீடித்து நிற்கவில்லையா? அதன் காரணத்தை ஆராய்வது அறிவியல். குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கிறதா? அதன் காரணத்தை ஆராய்வது அறிவியல். பிறந்த குழந்தை இறந்து விடுகிறதா? அதன் காரணத்தை ஆராய்வது அறிவியல். இது போன்று மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அதைக் களைய முற்படுவதும், மாற்று ஏற்பாடுகளைக் கண்டறிவதும் அறிவியலின் பிரதான பணிகள்.

பணம் செலவழித்து, உடலை வருத்தி, பெர்டிலிட்டி சென்டரில் பிள்ளை பெறும் துன்பத்தை அனுபவிக்க விரும்பாத கொழுத்த பணக்காரர்களுக்கு முதலாளித்துவம் சொல்லும் மாற்று வழியே வாடகைத்தாய். உடல் வலியில்லாமல் குழந்தை பெற விரும்பும் பணக்காரர்களை ஒரு புறம் நிறுத்தி, பணம் வசூல் செய்து, அதில் கொஞ்சத்தை ஏழைப் பெண்ணுக்கு தந்து வலியைப் பொறுத்துக் கொண்டு, பிள்ளையை பெற்றுக் கொடு என்கிறது வாடகைத்தாய் எனும் கொடூரம்.

உன்னுடைய குழந்தையை உன் வயிற்றில் வளர்ப்பதால், உனக்குத் தீங்கு எனில் அந்த குழந்தையைப் பெறாதே என்பது தான் பெரியார் கூக்குரல். தாய்மை உணர்வு பெண்ணை அடிமைப்படுத்துகிறது, எனவே தாய்மை உணர்வை ஒழிக்க வேண்டும் என முழங்கினார் பெரியார்.

கருத்தரிப்பு எனும் கொடுங்கனவு இல்லாமல், வலி இல்லாமல், தாய்மை எனும் இனிய கனவை நனவாக்க வேண்டுமெனில், எங்களிடம் காம்போ பேக்கேஜ் உள்ளது என்று சொல்லி தாய்மை உணர்வை காசாக்குகிறது முதலாளித்துவம். ஏழைப் பெண்ணிடம் நீ உன் கருப்பையை வாடகைக்கு விற்று பணம் சம்பாதிக்கலாம் என பிஸினஸ் டீல் பேசுகிறது. வீடு புரோக்கர் போல் தாய்மை புரோக்கர். அதற்குத் துணையாக அறிவியலைப் பயன்படுத்துகிறது முதலாளித்துவ நனவுலகம்.

- சு.விஜயபாஸ்கர்

Pin It