ops at marina

அதிமுகவிற்கு இது போதாத காலமோ இல்லையோ, தமிழக மக்களுக்கு இது மிகவும் போதாத காலம். யாரு முதலமைச்சர் என்று தெரியாமல் ஒரே குழப்பத்தில் இருக்கின்றார்கள். காபந்து முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திடீரென ஜெயலலிதாவின் சமாதியின் முன் ஆழந்த தியானத்தில் ஈடுபட்டார். (இல்லை பத்திரிக்கைக்காரர்கள் அனைவரும் வரும் வரை தூங்கிக் கொண்டிருந்தார் என்றும் வைத்துக் கொள்ளலாம்) பின்பு ஜெயலலிதாவின் 'துர்'ஆத்மாவை அழைத்து அதனுடன் பேசியிருக்கின்றார். அந்த 'துர்' ஆத்மா கொடுத்த அசாத்திய தைரியத்தில் மன்னார்குடி மாஃபியா கும்பலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கின்றார். சசிகலா குடும்பத்தினர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக ஊடகங்கள் முன்னிலையில் குமுறி இருக்கின்றார். இது யாரும் எதிர்பாராத ஒன்றுதான். ஏன் என்றால் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் சசிகலா கும்பலுக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே பெரிய பிணக்கு இருப்பது போன்றும், எந்தச் சூழ்நிலையிலும் சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து வெளியேற்றிவிடுவார் என்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் அடிபட்டது. ஆனால் அப்படி எந்தக் கருமமும் நடைபெறவில்லை என்பதோடு தான் எப்போதுமே நல்ல அடிமை என்பதையும் ஓ.பன்னீர்செல்வம் நிரூபித்தே வந்தார். அந்த விசுவாசத்தின் வெளிப்பாடாக சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்து அந்தப் பதவியை அவர் ஏற்றுக்கொள்ளுமாறு போயஸ் கார்டனுக்கே சென்று வலியுறுத்தினார்.

சினிமா பாணியில் அனைத்தும் நடந்தது. சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் கண்ணீர் மல்க அழுது, தான் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என்பதை அவரும் நிரூபித்துக் கொண்டார். இன்று பன்னீரும் அதே வழிமுறையைத்தான் கடைபிடித்து இருக்கின்றார். “உனக்கு மட்டும் தான் அழுது சிம்பத்தி கிரியேட் பண்ணத் தெரியுமா? எனக்கும் தெரியும்” என்று அவர் காட்டியிருக்கின்றார். ஓ.பன்னீர்செல்வம் தனக்குப் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கின்றது என்கின்றார். அதே போல சசிகலாவும் நாங்கள் எல்லாம் ஒரே குடும்பமாக இருக்கின்றோம் என்கின்றார். பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் கூட்டத்தையும் கூட்டியிருக்கின்றார். அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பது சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கப் போகும் போதுதான் தெரியும்.

பெரும்பான்மை மக்களின் ஆதரவு சசிகலாவிற்கு சுத்தமாக கிடையாது என்பதற்கு பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. சசிகலா கும்பல் என்னதான் ரிச்சர்ட் பீலேவை அழைத்துவந்து விளக்கம் கொடுத்தாலும், எந்த ஒரு அதிமுக தொண்டனும் அதை நம்பும் மனநிலையில் இல்லை என்பது அவர்களுடன் பேசிப் பார்க்கும் போதே தெரிகின்றது. ஆனால் இதில் பிரச்சினை என்ன என்றால், அந்த மக்களின் குரலைத்தான் தாங்கள் பிரதிபலிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுதான். சசிகலாவின் மீது நடந்து கொண்டிருக்கும் ஊழல் வழக்குகளைப் பற்றியோ, இல்லை சசிகலா கும்பல் தமிழ்நாட்டின் வளங்களை ஒட்ட சுரண்டி ஒரு பெரிய ரவுடிக் கும்பலாக வளர்ந்துள்ளது பற்றியோ சிறிதும் பொருட்படுத்தாமல், சசிகலாவை ஆதரித்தவர்கள் இப்போது ஓ.பன்னீர்செல்வம், சசிகலா கும்பல் தன்னை மிரட்டியே ராஜினாமா கடிதத்தில் கையொப்பம் பெற்றதாகக் கூறியிருக்கும் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை. நிச்சயம் மன்னார்குடி கும்பல் இந்தக் காரியத்தை செய்திருக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. தன்னை ஆட்சி அதிகாரத்தில் தக்க வைத்துக்கொள்ள அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது அனைத்து அரசியல் நோக்கர்களுக்கும் நன்கு தெரியும்.

ஆனால் அதைப் பற்றி வாயே திறக்காதவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை பிஜேபி பின் நின்று இயக்குவதாகவும், திமுக பின் நின்று இயக்குவதாகவும் சம்மந்தம் இல்லாமல் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். ஓ.பன்னீர்செல்வம் பிஜேபி ஆதரவுடன் செயல்படுகின்றார் என்பது உண்மையானால், அதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை தான். காரணம் ஜெயலலிதா தான் வாழ்ந்த காலத்திலேயே பிஜேபியுடன் அப்படித்தான் இருந்தார். குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவை அருண்ஜெட்லி சந்தித்தது பற்றியோ, மோடிக்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள நட்பைப் பற்றியோ, வருமான வரி வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதற்கு பிஜேபியின் சதிதான் காரணம் என்பது பற்றியோ யாரும் பேச மறுக்கின்றார்கள். ஜெயலலிதா எப்போதுமே பிஜேபியை பகைத்துக் கொண்டது கிடையாது. பிஜேபியின் இந்துத்துவா கருத்தியலோடு முழுமையான உடன்பாடு கொண்டவர்தான் ஜெயலலிதா. பாபர் மசூதியை இடிப்பதற்கு கரசேவை செய்ய தமிழகத்தில் இருந்து ஆட்களை அனுப்புவேன் என்று சொல்லி தனது பார்ப்பன பாசிசத்தை வெளிப்படுத்தியவர்தான் ஜெயலலிதா. இன்று ஏதோ புதிதாக பிஜேபியுடன் பன்னிர்செல்வம் தொடர்பு வைத்திருந்தார் என்று சொல்வது அபத்தமாகும். பிஜேபியுடன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கம் இருந்தால் அதற்குக் காரணம் நிச்சயமாக ஜெயலலிதாவாகவே இருப்பார்.

sasikala and ops

இதிலே என்ன வேடிக்கை என்றால், சசிகலா ஏதோ பெரியாரின் பேத்தி போன்றும், பன்னீர்செல்வம் சவார்க்கரின் வாரிசு போன்றும் பேசும் அயோக்கியத்தனத்தைத்தான் சகிக்க முடியவில்லை. இரண்டு பேருமே பார்ப்பன கருத்தியலையும், ஊழலையும் ஏற்றுக்கொண்ட ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதுதான் உண்மை. இப்போது சசிகலாவிற்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் என்பது நன்மைக்கும், தீமைக்குமான போராட்டம் அல்ல. நீ பெரிய அப்பாடக்காரா, இல்லை நான் பெரிய அப்பாடக்கரா என்பதுதான். இதிலே யார் ஜெயித்தாலும் ஜெயித்த அப்பாடக்கருக்கு ஜெயலலிதா ஊரை அடித்து உலையில் போட்டு வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களை அனுபவிக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான் உண்மை.

ஓ.பன்னீர்செல்வத்தின் மூலம் தான் பிஜேபி தமிழ்நாட்டில் தனது கருத்தியலைப் பரப்ப வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அதைப் பரப்புவதற்கென்றே தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அமைப்புகளை அது வைத்திருக்கின்றது. அது திமுக ஆட்சியானாலும் சரி, அதிமுக ஆட்சியானாலும் சரி, சீரும் சிறப்புமாக தனது பணியைச் செய்தே வந்திருக்கின்றது. இன்று தமிழ்நாட்டில் பிஜேபி - ஆர்எஸ்எஸ் கும்பல் தனது இருத்தலை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது என்றால், அதற்கு திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளும் தான் காரணம். இது எல்லாம் இங்கிருக்கும் முற்போக்குவாதிகளுக்கு தெரியாத ரகசியமல்ல. இருந்தும் கேடுகெட்ட தங்களது பிழைப்புவாதத்திற்காக திட்டமிட்டே சசிகலாவை ஆதரிக்கின்றார்கள்.

அடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை திமுக பின் நின்று இயக்குவதாக அதிமுக தற்போது கூறி வருகின்றது. நிச்சயம் அப்படி செய்வதால் திமுகவிற்கு அரசியல் ரீதியாக எந்த அனுகூலமும் கிடையாது என்பதுதான் உண்மை. மக்களால் வெறுக்கப்பட்ட அதிமுக தலைமையை அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்திக்கும்போது, நிச்சயமாக திமுக பெரும்பான்மையாக வெற்றி பெறவே வாய்ப்பிருக்கின்றது. அப்படி இருக்கும்போது அது தனக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிட நினைக்காது. பொதுமக்களின் கருத்தை திமுக பிரதிபலிப்பதன் மூலம் தனது கட்சியின் செல்வாக்கை அது கூட்டிக் கொள்ள நினைக்கின்றது என்றுதான் இதைப் பார்க்க வேண்டி இருக்கின்றது. மற்றபடி திமுகவிற்கு அரசியல் ரீதியாக பெரிய பலன் எதுவும் இதனால் கிடைத்துவிடாது.

பார்ப்பனக் கருத்தியலை ஜெயலலிதா போன்று ஒரு அப்பட்டமான பாப்பாத்தியாக இருந்துதான் பரப்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அது தமிழிசை போன்ற சூத்திரச்சிகளை வைத்தே பாஜக- ஆர்எஸ்எஸ் கும்பலால் பரப்ப முடியும். எனவே நாம் தீபாவை ஒரு பாப்பாத்தி என்று எதிர்க்கும் அதே வேளையில், ஓ. பன்னீர்செல்வம், சசிகலா போன்ற சூத்திர பார்ப்பன அடிவருடிகளையும் சேர்த்தே எதிர்க்க வேண்டி இருக்கின்றது. என்னைக் கேட்டால் தமிழ்நாட்டில் இருந்து பிஜேபி - ஆர்எஸ்எஸ் கும்பலை ஒழிப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அதிமுகவை ஒழிப்பது. ஒன்று அப்பட்டமான பார்ப்பனியம், இன்னொன்று சூத்திர வேடமிட்ட பார்ப்பனியம். இரண்டுமே மிகவும் அபாயகரமானது. முற்போக்குவாதிகள் உண்மையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது உருப்படியாக செய்ய நினைத்தால், அவர்கள் செய்ய வேண்டிய முதல் பணி அதிமுகவையும், பிஜேபியையும் அம்பலப்படுத்தி ஒழித்துக் கட்டுவதாகத்தான் இருக்க வேண்டும்.

நாளை எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். ஓ. பன்னீர்செல்வமோ, இல்லை சசிகலாவோ முதல்வராக வரலாம். இல்லை என்றால் வேறு யாராவது கூட வரலாம். ஆனால் தமிழ்நாட்டில் வளங்கள் அதிகார வர்க்கத்தின் துணையோடு கொள்ளையடிக்கப்படுவதோ, இல்லை ஆட்சியாளர்களால் திட்டமிட்ட முறையில் பார்ப்பன கருத்தியல் பரப்பப்படுவதோ, இல்லை அனைத்து மட்டங்களிலும் நிறைந்திருக்கும் ஊழல் தடுக்கப்படும் என்றோ நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. அதனால் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு ,சசிகலாவிற்கு ஆதரவு என்று பேசுவதே கடைந்தெடுத்த பிழைப்புவாதத்தின் வெளிப்பாடுதான். ஓட்டுப் பொறுக்கி அரசியலில் அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அது.

- செ.கார்கி