அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் பிப்ரவரி 5, 2025 அன்று அமெரிக்காவில் வசித்து வந்த அங்கே பணியாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத இந்திய பிரஜைகளை போர் விமானத்தில் கொண்டு வந்து இறக்கியதை பார்த்தோம். பதறினோம்.

us deported indiansஅடுத்ததாக மியான்மரில் இருந்து செயல்பட்டு வரும் சைபர் மோசடி நிறுவனங்களில் பணிகளில் அமர்த்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட 550 இந்தியர்களை 12-03-2025 அன்று இந்திய அரசு மீட்டு வந்ததை செய்திகளில் பார்த்தோம்.

வேலையில்லா திண்டாட்டம், அவற்றோடு குறுகிய காலத்திலேயே அதிக பணம் ஈட்டிவிடவேண்டும் என்ற பேராசையுடன் இருக்கும் இளைய சமூகம், குறிப்பாக படித்த சமூகம் இப்படி ஏமாந்து நிற்பது வேதனை அளிக்கிறது.

அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் சட்டவிரோத குடியேறிகள் என்று வெளியேற்றியவர்கள் வேறு விதமானவர்கள்.

பொதுவாக ஒரு நாட்டின் குடிமகன் இன்னொரு நாட்டுக்குள் தரை, ஆகாயம், கடல் மார்க்கமாக நுழைய வேண்டுமெனில் அந்த நபர், தனது நாட்டின் கடவு சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருக்க வேண்டும். செல்ல இருக்கும் நாட்டுக்கான விசாவை முன்னரே விண்ணப்பித்து அந்த அனுமதியை தனது கடவுச்சீட்டில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

விசா என்பது ஒரு நாடு இன்னொரு நாட்டு குடிமகனுக்கு சில கால வரம்புடன், அந்த நபர் வரும் நோக்கத்தின் அடிப்படையில் STUDENT VISA, TOURIST VISA, BUSINESS VISA, EMPLOYMENT VISA, TRANSIT VISA, DEPENDENT VISA என்று வழங்கப்படும்.

அதன் பின்னர் அந்த குடிமகன், தனது நாட்டில் இருந்து செல்ல வேண்டிய நாட்டுக்கு புறப்படும்போது, அவரது நாட்டில் இருக்கும் குடியேற்ற அதிகாரிகள், பயணத்திற்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று பார்த்த பின், அவரது பாஸ்போர்ட்டில் அந்த நாட்டில் குடியேற்ற அதிகாரிகளால் (IMMIGRATION OFFICERS) EXIT வெளியேற்ற முத்திரை குத்தப்படும்.

அதன் பின்னர் அடுத்ததாக எந்த நாட்டுக்குள் நுழைகிறாரோ, அந்த நாட்டில் இறங்கியதும், அந்த நாட்டின் குடியேற்ற அதிகாரிகளால் (IMMIGRATION OFFICERS) ஆவணங்களை சரி பார்த்த பின்னர் ENTRY நுழைவு முத்திரை அவரது பாஸ்போர்ட்டில் குத்தப்படும்.

எல்லாம் முறையாக தானே செய்து இருக்கிறார்கள். எப்படி சட்ட விரோத குடியேறிகள் (ILLEGAL IMMIGRANTS) என்று திருப்பி அனுப்பினார்கள் என்ற ஐயம் எழலாம்.

இந்த நபர்கள், அந்த நாட்டில் விசா குறிப்பிட்ட கால வரம்புக்கு காலாவதி ஆன பின்னர் முன் அனுமதி பெறாமல், கால நீட்டிப்பு செய்யாமல் இருப்பது. விசாவின் தன்மை மாறி அங்கே பணியில் இருப்பது போன்றவை தான் சட்ட விரோத குடியேறிகள். இது தவிர்த்து நாட்டின் அண்டை நாட்டிலிருந்து எல்லை வழியாக முறையின்றி சட்டவிரோதமாக குடியேறி வருபவர்களும் சட்டவிரோத குடியேறிகளாக அமெரிக்க அறிவித்து இருக்கிறது.

அக்டோபர் 2023 முதல் ஜனவரி 2025 வரை 53,000 க்கும் மேற்பட்டோர் மியன்மரில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் படித்தவர்கள் மற்றும் ஆங்கிலம் நன்றாகப் பேசுபவர்கள்,

வெளிநாடு வேலை என்பதில் பெரும்பாலும் நல்ல வேலைகள் கிடைக்கிறது என்றாலும் கூட மோசடிகள் அரங்கேறத்தான் செய்கிறது. இந்த மோசடிகள் நாட்டுக்கு நாடு வித்தியாசமாக இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு உலகத்திற்கே சவால் விடும் அளவுக்கு சில ஆண்டுகளாக மியான்மரில் மோசடி செய்வதற்காகவே கால் சென்டர்கள் இயங்கி வருகிறது. இந்த கால் சென்டர்களின் வேலையே உலகம் முழுதும் இருப்பவர்களிடம் பணத்தை அபகரிப்பது மட்டுமே. இந்த பணிகளை நேர்த்தியாக செய்வதற்கு உலகம் முழுவதும் இவர்களுக்கு என்று ஏஜென்ட்கள் இருக்கிறார்கள். அவர்கள் இளைஞர்களை மிக நேர்த்தியாக தொடர்புகொண்டு, கவர்ச்சிகரமான வார்த்தைகளை பேசி மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக ஊதியம் கிடைக்கும் வேலைகள் என்று ஆசை கூறி கவர்கிறார்கள். அதன் பின்னர் சில வாரங்களிலேயே குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கான விமான டிக்கட் ஏற்பாடு செய்கின்றனர். இந்த ஏஜென்ட்கள் சென்னை - பேங்காக் (தாய்லாந்து), பேங்காக் – சென்னை என்று இரு வழி பயண டிக்கட், மற்றும் பேங்காக்கில் ஹோட்டலில் ஒரு வாரம் தங்குவதற்கான ஹோட்டல் முன் பதிவு இவற்றை கொடுத்து இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்வது போன்று பயணிக்க வைக்கிறார்கள்.

பேங்காக்கில் விமானத்தில் இருந்து இறங்கியவுடன், அங்கே இருந்து தரை வழியாக ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்ட தாய்லாந்து, மியான்மர் எல்லைகளில் உள்ள மலைகளின் வழியாக கரடு முரடான காட்டுவழிப்பாதையில் 12 மணி நேரம் வாகனங்களில் அழைத்து செல்கிறார்கள். மியான்மர் நாட்டுக்குள் செல்வதற்கு உரிய விசா எதுவும் எடுக்காமல், அங்கே இருக்கும் எல்லையில் இருக்கும் இராணுவத்தினருடன் சமரசம் செய்து அவர்களின் சம்மதத்துடனேயே அந்த நாட்டுக்கும் அந்நியர்கள் சட்ட விரோதமாக அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆக, இங்கே இருந்து வேலைக்காக பயணித்தவர், அவரே அறியாமல், தாய்லாந்து நாட்டிலே அந்த ஒரு வார சுற்றுப்பயண காலம் முடிந்த பின்னரும் சட்ட விரோதமாக இருப்பதாக தாய்லாந்து வெளியுறவுத்துறை பதிவிலே காட்டும். காரணம் தாய்லாந்து நாட்டிற்குள் நுழையும்போது பாஸ்போர்ட்டில் நுழைவுக்கான (ENTRY) முத்திரை குத்தப்பட்டு இருக்கும். அந்த நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வேறு நாட்டுக்கு வெளியேறியதால் வெளியேற்றத்திற்கான (EXIT) முத்திரை இடப்படவில்லை. இது முதல் குற்றம்..

அடுத்ததாக மியான்மர் நாட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைந்ததால் அந்த நாட்டிலும் நுழைவுக்கான முத்திரை இடப்படவில்லை. இது இரண்டாவது குற்றம். தன்னை அறியாமலேயே இந்த குற்றங்களுக்கு உள்ளாகிறார்.

இவை முடிந்ததும் அங்கே இருக்கும் வதை முகாம்கள் போன்ற இடத்தில் கூட்டமாக குறைந்த பட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லாது இந்த இளைஞர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இவர்களின் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்து இந்த மோசடி கால்சென்டர்கள் வைத்துக்கொள்ளும்.

உண்மையான வேலைகளுக்குப் பதிலாக, உலகெங்கிலும் உள்ள மக்களை குறிவைத்து ஆன்லைன் மோசடிகளை நடத்த அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் செய்ய வேண்டிய சில பொதுவான மோசடிகளில் காதல் மோசடிகள், முதலீட்டு மோசடிகள் மற்றும் கிரிப்டோ மோசடிகள், சட்டவிரோத சூதாட்டம் போன்றவை.. இந்த மையங்கள், போலி காதல் சலுகைகள், போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் சட்டவிரோத சூதாட்டம் போன்ற மோசடிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதிக்கின்றன. சென்ற ஆண்டு

இப்படி சென்ற இளைஞர்கள் மோசடி மையங்களில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வரை மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்பந்திக்க படுவார்கள். அவர்கள் வேலை செய்ய மறுத்தால், அவர்கள் அடிப்பது, மின்சார அதிர்ச்சி கொடுப்பது மற்றும் பட்டினி போடுவது போன்ற கடுமையான தண்டனைகளை எதிர்கொள்கின்றனர்.

சீன நடிகர் வாங் ஜிங் கடத்தப்பட்ட பிறகுதான் இந்தக் பகுதியில் நடைபெற்றுவந்த கடத்தல் உலகிற்கு தெரியவந்தது. அவருக்கு தாய்லாந்தில் நடிப்பு வேலை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது, ஆனால் ஜனவரி 2025 தொடக்கத்தில் மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதே மாதத்தில் அவர் மீட்கப்பட்டார்

பல்வேறு தரப்பட்ட சர்வதேச சட்டங்கள் ஒழுங்குமுறை ஆணையங்கள் இருந்தபோதிலும் , தாய்-மியான்மர் எல்லையில் உள்ள மையங்கள் இன்னும் இயங்கி வருகின்றன, மேலும் 100,000 பேர் வரை பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தரவுகள் வருகிறது.. பல ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டாலும் , நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது, மேலும் இந்த கடத்தல் நடவடிக்கைகளை நிறுத்தவும், பொறுப்பான குற்றவாளிகளைப் பிடிக்கவும் முயற்சிகள் தொடர்கின்றன

இந்திய அரசின் மியான்மர் தூதரகம் அங்கே நடக்கும் ஆள் கடத்தல், அடிமை வேலைகள் குறித்தும், அதை செய்துவரும் இந்திய, வெளிநாட்டு நிறுவனங்களை பற்றியும் பல்வேறு தொடர் எச்சரிக்கைகளை தெரிவித்தும் அதை பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இப்படி தொடர்ந்து நம் இளைஞர்கள் ஏமாறி வருகிறார்கள்.

https://embassyofindiayangon.gov.in/public_files/assets/pdf/Advisory-on-Job-Scam-dated-31May2024.pdf

பொதுவாக இப்படி மோசடி நிறுவனங்கள் பெரும்பாலும், இளைஞர்களை அவர்களது முகநூல், இன்ஸ்டாக்ராம் இவற்றின் மூலமாக தனிப்பட்ட தரவுகளை தொடர்ந்து கண்காணித்து அவற்றை புரிந்துகொண்ட பின்னர் தான் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். அனைத்து தகவல் தொடர்புகளும் அரட்டை செயலிகளிலேயே குறிப்பாக வாட்சைப், மேசசென்ஜர் மூலமாகவே நிகழ்த்துகிறார்கள்.

முறையான நிறுவனங்கள் பொதுவாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வழியாகவே தொடர்பு கொள்கின்றன, நிறுவனத்தை பற்றிய தரவுகளை இணையதளம் உள்ளிட்டவற்றை பார்வையிட கூறுவார்கள். வலைத்தளம் இல்லை, LinkedIn சுயவிவரம் இல்லை, சமூக ஊடகங்கள் இல்லை மற்றும் சரிபார்க்கக்கூடிய முகவரி இல்லை, LinkedIn-இல் குறைவான ஊழியர்கள் அல்லது ஊழியர்கள் இல்லை: ஆன்லைனில் பட்டியலிடப்பட்டுள்ள வேறு எந்த ஊழியர்களும் இல்லாத ஒரு நிறுவனம் சந்தேகத்திற்குரியது.

மின்னஞ்சல்கள் தனிப்பட்ட டொமைன்களிலிருந்து வருகின்றன: நிறுவன மின்னஞ்சலுக்குப் பதிலாக Gmail, Yahoo அல்லது பிற தனிப்பட்ட கணக்குகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களைப் பாருங்கள்.. அலுவலக இருப்பிடம் இல்லை: நிறுவனம் எங்கு செயல்படுகிறது என்பதைச் சரிபார்க்க வழி இல்லை என்றால், அது போலியாக இருக்கலாம். மோசமாக எழுதப்பட்ட மின்னஞ்சல்கள்: எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள் மற்றும் வித்தியாசமான சொற்றொடர்கள் ஒரு மோசடியைக் குறிக்கலாம். தெளிவற்ற வேலை விளக்கங்கள்: பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றால், அந்த வேலை உண்மையானதாக இருக்காது.

தொடக்க நிலைப் பணிகளுக்கு அதிக ஊதியம்: குறைந்த அனுபவத்துடன் நடைமுறைக்கு மாறான சம்பளத்தை உறுதியளிக்கும் சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அறிமுகம் இல்லாதவர் மற்றவர்களை வேலைக்கு பரிந்துரைக்க உங்களிடம் சொல்லும்போதும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நிறுவனத்தைப் பற்றி ஆராயுங்கள்: நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பாருங்கள்.

வலைத்தள பாதுகாப்பைச் சரிபார்க்கவும்: ஒரு உண்மையான நிறுவனத்தின் வலைத்தளம் “https://” உடன் தொடங்க வேண்டும். சில மோசடிகள் பாதுகாப்பான சேவையகங்களைப் பயன்படுத்துவதால், ஒரு நிறுவனம் சட்டப்பூர்வமாக இருப்பதற்கு இது போதுமான நிபந்தனையாக இருக்காது என்றாலும் கூட இது ஒரு அவசியமான நிபந்தனையாக இருக்கலாம்.

உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்: ஏதாவது தவறாக உணர்ந்தால், விலகிச் செல்லுங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்: அதிகாரப்பூர்வமாக பணியமர்த்தப்படுவதற்கு முன்பு உங்கள் வங்கி விவரங்கள், ஐடி அல்லது முக்கியமான தரவை ஒருபோதும் பகிர வேண்டாம். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் இதை முன்கூட்டியே கேட்பார்கள்.

இவை எல்லாவற்றையும் விட, நம்மை விட பின் தங்கிய நாடுகளுக்கு தீர விசாரிக்காமல் வேலைவாய்ப்பு வருகிறது என்று நினைத்து பயணிக்க வேண்டாம்.

ஆர் எம் பாபு

ஒருங்கிணைப்பாளர்

பிரவாசி லீகல் செல்

https://pravasilegalcell.in/

ஆப்பிரிக்க கண்டம்