“உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள மாபெரும் சம்பவங்கள் அனைத்தும் இரண்டு தடவை தோன்றுகின்றன. மாபெரும் தலைவர்களும் இரண்டு சந்தர்ப்பங்களில் தோன்றுகிறார்கள் என்று ஹெகெல் எழுதியுள்ளார். அவர்களுடைய தோற்றம் முதல் சந்தர்ப்பத்தில் சோகக் கதையாகவும், இரண்டாவது சந்தர்ப்பத்தில் கேலிக் கூத்தாகவும் இருக்கிறது என்பதை எழுதுவதற்கு அவர் மறந்துவிட்டார்... ” - லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் நூலில் கார்ல் மார்க்ஸ், 1869.
1940-80 காலகட்டத்தைய இந்திய அரசியல் அரங்கில் தேசியப் பிராந்தியத் தலைவர்கள் வெகுஜன மக்களின் செல்வாக்கு பெற்ற கதாநாயகர்களாக கொண்டாடப்பட்டனர். காலனியாதிக்க ஆட்சியை ஒழித்து முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசை பிரசவிக்கிற கட்டத்திலும், அதன் வளர்ச்சி கட்டத்திலும் இத்தலைவர்கள் மக்களின் மனம் கவர்ந்தவர்களாகத் திகழ்ந்தனர். இன்றோ அதன் இரண்டாம் தலைமுறையின் காலகட்டத்தில், முதலாளித்துவ ஜனநாயகத்தின் இறுகிய வடிவில் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கான ஆளும்வர்க்கத்தின் அருவருப்பான போட்டிகளின் கேலிச்சித்திரமாக இரண்டாம் பதிப்பில் தோன்றியுள்ளனர்.
அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்குப் பதிலாக தற்போது சசிகலாவும் பன்னீரும்;காங்கிரஸ் கட்சியின் காமராஜர், சத்தியமூர்த்திக்குப் பதிலாக தற்போது திருநாவுக்கரசரும், ஈவிகேஎசும்; திமுகவின் அண்ணாதுரை, கருணாநிதிக்குப் பதிலாக தற்போது ஸ்டாலினும், கனிமொழியும்; திராவிடர் கழகத்தின் பெரியாருக்குப் பதிலாக தற்போது வீரமணி.
தமிழக அரசியல் வரலாற்றுச் சம்பவங்களின் தற்போதைய இரண்டாம் பதிப்பானது இரண்டாம் தலைமுறையின் தலைமையில் முழுமையான கேலிச் சித்திரமாக 7 ஆம் தேதி இரவின் ஜெயாவின் ஆவி எழுப்புதல் சம்பவத்தின் ஊடாக மக்கள் முன்னே தோன்றியுள்ளது.
1
7 ஆம் தேதி இரவு, மெரீனா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயாவின் கல்லறை ஆன்மா எழுப்பப்பட்டு, உத்தரவு வாங்கிய இந்நாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது நெருக்கடி காலத்தைய புதிய காட்சியை பழைய அதிகார மையத்தின் கல்லறையில் இருந்து இரவல் பெற்றுத் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் முதல் இந்நாள் வரையிலும் செத்த முதல்வரின் ஆவி பலமுறை மீண்டும், மீண்டும் அவராலும், அவரது சமகால அரசியல் எதிரியான சசிகலாவாலும் உயிர்த்தெழ வைக்கப்படுகிறது.
அண்ணாவை கருணாநிதியும், எம்ஜிஆரை ஜெயாவும் கடந்த காலங்களில் இவ்வாறுதான் கடன் பெற்றார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றவும், தக்க வைக்கவும் கடந்த கால பிம்பங்கள் அமுக்குப் பேய்ப் போல இவர்களின் மண்டையைப் பிடித்துக் கொண்டது. நிகழ்கால அதிகார மையத்திற்கான இப்போட்டியில், கடந்த கால அதிகார மையமான ஜெவின் கல்லறை ஆன்மாவை இவ்வாறாக பன்னீரும் சசிகலாவும் உதவிக்கு அழைத்து வருகின்றனர்!
7 ஆம் தேதி பன்னீரின் ஆவி எழுப்புதலும், பத்திரிக்கையாளர் சந்திப்பும் சமகால ஆளும்வர்க்க அரசியலின் இயல்பான முரண்பாடுகளை கோடி தமிழர்களின் நேரலைக்கு இட்டுவந்தது. சசி முகாம்-பன்னீர் முகாம்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகள், அதை வெளிப்படுத்துகிற போட்டி பேட்டிகள், மக்கள் பிரதிநிதிகள் கடத்தல் நாடகம், அதன் மீதான போலீஸ் விசாரணை, முகாம் தாவுதல், தாவியோர்களை நீக்குதல், தாவியோர்களின் பேட்டிகள், தாவியோர்களை நீக்கியோர்களின் பேட்டிகள் என சம்பவங்களின் தொகுப்பாக சமகால அரசியல் அதிகார சதிக் கவிழ்ப்பு நாடகங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.
சம்பவங்கள் அற்ற சரித்திரம்; ஆரவார வெற்றுரைகள்; உணர்ச்சிகள் அற்ற உண்மைகள்; உண்மைகள் அற்ற உணர்ச்சிகள்; மக்கள் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்துகிற அடுத்தடுத்த சம்பவங்கள்; பரபரப்பு உச்சமடைந்து தணிகிற நிலையில் மீண்டும் எழுகிற பரபரப்பு; சட்டமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த மக்களோ கோட்டை சர்வாதிகார ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளில் ஏதேனும் அதிசயம் நிகழாதா என்ற ஏக்கத்தில்; பின்பு சலிப்பாக மாறுகிற ஏக்கங்கள்; அதிகாரத்தைக் கைப்பற்ற முனைகிற கும்பலோ உலகைக் காப்பதாக கூறிக் கிளம்பி, தனது சொந்த நலனுக்காக அற்ப சூழ்ச்சிகளில் அனுதினமும் ஆழ்ந்துள்ளது. மக்கள் நலனுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தனிநபர் அதிகார பேர சூதாட்டத்தில் பகடைக்காய்களாய் உருள்கின்றனர். பிரதிநிதிகள்தானா, பகடைக்காய்கள்தானா என சட்டமன்றத்திற்கு அனுப்பிய மக்கள், பிரதிநிதிகளின் அலைபேசிகளுக்கு அழைத்து எச்சரிக்கை செய்கின்றனர். நடமாடுகிற சொத்து வடிவங்களான பிரதிநிதிகளோ, உல்லாச விடுதிகளின் கேளிக்கை மது விருந்துகளில் பூலோக சொர்க்கத்தை காண்பதில் மும்முரமாய் உள்ளனர். மறுபுறமோ, அமைச்சர்களைக் காணோம், பிரதிநிதிகளைக் காணோம் என நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. கிழக்கு கடற்கரை சாலையின் உல்லாச விடுதிகளில் மது போதையேறி, புரண்டு கிடக்கிற பிரதிநிதிகளின் உண்மை நிலையை எவ்வாறு சொல்வது எனத் தயங்குகிற அரசு வழக்கறிஞர், பதில் அளிக்க அவகாசம் கேட்கிறார்!
நிலவுகிற ஜனநாயக அரசு அமைப்பு வடிவங்கள், தனி நபர்களின் சாமர்த்தியமான அசட்டுத் தனங்களாலும், மக்களின் வாக்குரிமை நலனுக்கு எதிரான தான்தோன்றித்தன நடத்தைகளாலும் தனது சொந்த முரண் இயல்புகளால் அழிக்கப்பட்டு வருகிறது. தனது சொந்த வரலாற்றை உருவாக்க யதார்த்த சூழலுடன் மல்லுக்கு நிற்கின்றனர். அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான உணர்ச்சிகரமான வேகத்தில் உள்ளவர்கள், ஆளுநரின் இறுதித் தீர்ப்பிற்காக கோவில் பூசாரியின் அருள்வாக்கிற்கு காத்து நிற்கிற பக்தர்களாக தவித்து நிற்கிறார்கள். அருள்வாக்கு தாமதம் ஆக, ஆக நிதானம் இழந்து தடுமாறுகின்றனர்.
சட்டமன்றப் பிரதிநிதிகளை வாக்கெடுப்பின் மூலமாகத் தேர்ந்தெடுத்த மக்களோ, அலுப்பூட்டுகிற இந்த பரபரப்புகளால் சலிப்படைகிறார்கள். சட்டமன்றப் பிரதிநிதிகளோ மக்கள் மனங்களில் உடல்களற்ற நிழல்களாக, உண்மையற்ற உருவங்களாக வந்து போகின்றனர். மக்கள் பிரச்சனைகளில் இவ்வாறு தலைவர்களும் பிரதிநிகளும் அக்கறை காட்டினார்களா என தங்களுக்குள்ளாக குமுறிக் கொள்கின்றனர். அரை நூற்றாண்டு அரசியல் சாசனமும், சட்டமன்றமும், புனிதக் குடியரசு ஜனநாயகமும், உரிமைக்கான மக்கள் போராட்டங்களும் அரை நாளில், மந்திர உலகில் திடுமென காணாமல் போய்விட்டதைப் போன்றதொரு அரசியல் பிரம்மை பூதங்கள் மக்களை அச்சுறுத்துகிறது.
மாயவித்தை சம்பவங்களாக நிஜ உலகில் கண்முன்னே நிகழ்ந்து வருகிற இம்முரண்பாடுகளை, மோசடிக் கட்சிகளும் மோசடிக்காரர்களும் போட்டி போட்டுக் கொண்டு, எவ்வாறு சூழ்ச்சிகளின் ஊடாகவே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதை மக்கள் யதார்த்த உண்மையாகக் கண்டு வருகிறார்கள்.
அதிகார வர்க்கங்கள் வெற்றியடைவதற்காக நடத்துகிற அரசியல் சதுரங்க காய் நகர்த்தலால் தங்களது எதிராளியை மட்டும் இவர்கள் வீழ்த்துவதில்லை. முதலாளித்துவ ஜனநாயகத்தையும், அதன் உண்மை நடத்தைகளையும், தங்களுக்கு அறியாமலேயே துகில் உரிக்கிறார்கள். நாடகத் தன்மை வாய்ந்த காட்சிகளில், ஜனநாயக முகமூடிகள் கழண்டு விழுகின்றன.
திரைக்கதையின் அடுத்த திருப்பங்கள் ராஜ் பவனிலும், கோல்டன் பே ரிசார்ட்டிலும் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் சாசனமும், சட்டமன்ற உறுப்பினர் சபையும் கோல்டன் பே ரிசார்ட்டில் இளைப்பாறிக் கொண்டுள்ளது. முதலாளித்துவ ஜனநாயகம் காப்பற்றப் படவேண்டும் என எதிர்க்கட்சிகள் ஓலமிட்டு வருகின்றன. வகுப்புவாத சக்திகள் தமிழகத்தில் கால் ஊன்றக் கூடாது என காங்கரசும், திகவும் சசிகலா முகாமிற்கு ஆதரவு அளிக்கிறது. மாபியா கும்பல் ஆட்சிக்கு வரக் கூடாது என நல்லெண்ணவாதிகளான திரைத்துறையினர், தொண்டு நிறுவனங்கள், எதிர்க்கட்சிகள் சசி முகாமை எதிர்க்கிறது.
ஜனநாயகக் குடியரசின் முழக்கமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் தற்போது குதிரை பேரம், சதி, ஆட்சிக் கவிழ்ப்பு என பாஜக ஆட்சியில் குடியரசிற்கான புதிய விளக்கமாகியது! பன்னீர் வருவாரா, சசியை வருவாரா, ஸ்டாலின் வருவாரா, தேர்தல் நடக்குமா, பெரும்பான்மை நிரூபணம் செய்யச் சொல்வதா, குடியரசு ஆட்சி அமலாகுமா என்பதெல்லாம் குதிரை பேரத்தின் சாமர்த்தியத்தனத்தில் நிலைகொண்டுள்ளது!
அறுபதாண்டு கால முதலாளித்துவ ஜனநாயகத்தின் தமிழக எதிர்காலம் தற்போதைய குதிரைபேர சாமர்த்தியத்தனத்தையே சார்ந்துள்ளது! குதிரை பேர ஜனநாயகமாக வடிவெடுத்துள்ளது. இச்சூழலில் சம்பவங்களின் மேல் மட்டும் வினையாற்றாமல், சம்பவங்களுக்குப் பின்னாலுள்ள வர்க்க நலன் மீதிருந்து சம்பவங்களின் காரணங்களை அதன் போக்கை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த ஆய்வை நாம் 7 ஆம் தேதி பன்னீரின் ஆவி எழுப்புதல் நிகழ்வோடு தொடங்கக் கூடாது, மாறாக நிலவுகிற ஜனநாயக முறை, அதன் வடிவங்கள், அதன் பிரதிநிதிக் கட்சிகள், கட்சிகளின் சொத்து வடிவங்கள், தமிழகத்தில் ஆதிக்கம் செய்து வருகிற அரசியல் கருத்துக்கள், கட்சிகள் மீதான விமர்சனத்தில் இருந்து வரலாற்றுரீதியில் தொடங்க வேண்டும்.
2
காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஊடாக முதலாளித்துவ ஜனநாயக அரசியல் அரங்கிற்குள்ளாக ஈர்க்கப்பட்ட மக்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டம், சமூக நீதிக்கான போராட்டம், சேம நல அரசு என்ற கருத்தியல்களால் கவரப்பட்டு அரசியல் அரங்கிற்கு வருகின்றனர். அதே காலகட்டத்தில் அரசியல் ஜனநாயக உரிமையோடு, சமூக நீதிக்கான உரிமை கோரிக்கையும் தமிழகத்தில் தந்தை பெரியாரால் தொடங்கப்படுகிறது. அரசியல் உரிமை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு கட்டத்தில் வளர்ச்சி அடைந்த வடிவத்தில் தனித் தமிழ்நாடு என வெளிப்பட்டு, அரசியல் அதிகார இணக்கம் காரணமாக மாநில சுயாட்சி என சுருங்கியது. சமூக நீதி, இன, மொழி உரிமை செல்வாக்கால் முதல் திராவிடக் கட்சியின் ஆட்சி தமிழகத்தில் நிறுவப்படுகிறது.
இச்சூழலில், தமிழக அரசியலில் கடந்த அரை நூற்றாண்டாக ஆதிக்கம் செலுத்தி வருகிற இரு திராவிடக் கட்சிகளுக்கும் அடிப்படை வேற்றுமை என்ன ஒற்றுமை என்ன?
திமுகவிற்கும், அதிமுகவிற்குமான வேறுபாடானது கட்சிக் கொடியின் மாறுபாடின்றி வேறேதேனும் உண்டா? திமுகவானது நிலப்பிரபுத்துவ பின்புலத்தில் இறுக்கம் பெற்று, முதலாளியக் கும்பலுடன் உறவாடி, பெரும் பணம், வர்த்தகம், நாவன்மை மிக்க பேச்சாளர்கள், ஊடக பலம் கொண்டு ஆட்சியையும் கட்சியையும் நடத்தியதே. தமிழக அரசியலில் ஆதிக்கமும், செல்வாக்கும் செலுத்தியதே! தேவைப்படும் போதெல்லாம், தனது கட்சி அலுவலகத்தில் பத்திரமாக பாடம் செய்யப்பட்டு வைத்துள்ள மாநில சுயாட்சி, சமூக நீதி முழக்கங்களை அற்ப நலனுக்காக செயற்கை சுவாசம் வழங்குமே!
திமுகவில் இருந்து அதிமுகவைத் தொடங்கிய எம்ஜிஆர் தான், சொந்த அதிகார நலனுக்காகப் பிரிந்தாரே அன்றி கோட்பாட்டுப் பிரச்சினையாலா பிரிந்தார்? இவரின் அதிகார நலனுக்கு ஒரு பத்தாண்டு காலம் தமிழகம் சூறையாடப்பட்டதுவே, பின்னர் அதன் தொடர்ச்சியாக ஜெயாவின் சூறையாடலும் தொடர்ந்தனவே.
தனிபர் விரோதங்கள், தப்பெண்ணங்கள், வசைபாடல்கள், சொத்தின் வெவ்வேறு வடிவங்கள், அதிகாரக் கனவுகளும், நம்பிக்கைகளும் அச்சங்களும்தான் இவர்களிடம் ஒன்றுபோல இருந்தன. இதை மறுக்கிறவர்கள்தான் உண்டா? சமூக உற்பத்தியில் எந்தப் பங்கும் வகிக்காத அரசின் ஒப்பந்தங்கள், மணல் கொள்ளை, சாராயக் கொள்ளை, கல்விக் கொள்ளை, மருத்துவக் கொள்ளை, தாது மணல் கொள்ளை என சமூக வளத்தையும், இயற்கை வளத்தையும் சூறையாடிய கும்பல்தானே இக்கட்சிகளின் ஒன்றியச் செயலாளர் முதல் எம்எல்ஏக்கள், எம்பிக்களாக வலம் வருகின்றனர். இதை மறுப்பவர்கள் உண்டா? இந்தக் மோசடிக்காரர்களுக்கு போலீஸ், நிர்வாகம் என அரசுத் துறை அதிகாரிகளும் சேவை செய்தனரே? இதையும் மறுப்பவர்கள் உண்டா?
இந்தக் கும்பலுக்கு மாற்றாக, மாற்று அரசியல் பேசி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்த கட்சிகளும் கடந்த காலங்களின் இந்த கும்பலின் முதுகில் அமர்ந்துதானே சட்டமன்றம் சென்றார்கள்? மாற்று அரசியல் பேசுவது கூட மாற்றுத் தலைவர்களையும் மாற்றுக் கட்சிகளையும்தான் முன்வைத்தார்கள் அன்றி இந்த நாடாளுமன்ற, சட்டமன்ற வடிவங்களையும், அதன் வர்க்கச் சுரண்டல் பண்பையும் எங்கேனும் விமர்சித்தார்களா?
சுரண்டல் அமைப்பின் வடிவங்களை, அதன் செயல்பாடுகளை அம்பலப் படுத்த இயலாதவார்கள் பன்னீரை ஆதரிப்பதைத் தாண்டியும், சசியை ஆதரிப்பதைத் தாண்டியும் ஏதேனும் மக்கள் நலனுக்கான நிலைப்பாடுதான் எடுக்க இயலுமா? தற்போது மக்கள் மன்றத்தில் சசியும், பன்னீரும் மட்டும் அம்பலப்பட்டு நிற்கவில்லை. மாறாக நிலவுகிற ஜனநாயக அமைப்புகள், அதன் வடிவங்கள், அதைப் பிரதிபலிக்கிற கட்சிகள் அனைத்தும் அம்பலப்பட்டு நிற்கின்றன!
3
"முதலாளிய வர்க்கத்திற்காக ஒரு குடியரசை ஏற்படுத்தி, புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தை அரசியல் அரங்கத்திலிருந்து வெளியேற்றி, ஜனநாயகப் போக்குள்ள குட்டி முதலாளிகள் தற்காலிகமாக மௌனமாக இருக்கும்படிச் செய்த பிறகு, அவர்களே பெரும் திரளான முதலாளிகளால் இந்தக் குடியரசையே தங்களுடைய சொத்து என்பதாக நியாயமாக நினைக்கிறார்கள்" - லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் நூலில் கார்ல் மார்க்ஸ், 1869.
கடந்த அறுபதாண்டு காலமாக தேசிய அரசியலில் அன்றைய நேரு முதல் தற்போதைய மோடி, ராகுல் வரையிலும்; மாநில அரசியலில் அன்றைய ராஜாஜி முதல் தற்போதைய சசிசகலா, பன்னீர், ஸ்டாலின் வரையிலும், ஈஎம்எஸ் முதல் சீத்தாராம் எச்சூரி வரையிலும் இந்தக் குடியரசை, அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற வடிவங்களை முதலாளிகளின் பிரதிநிதிகளாகக் காப்பதற்கும், சொந்த சொத்தாக எண்ணி காப்பாற்றவுமே பாடுபடுகிறார்கள்.
சொந்த அரசியல், அதிகார நலன், சமூக ஆதிக்கம் என்ற உள்ளடக்திற்கு மேலே ஜனநாயகக் குடியரசு எனும் புனித நீரைத் தெளிக்கின்றனர். வாக்குரிமை என்ற உரிமை காட்டி அரசியல் அரங்கில் இருந்து தொடர்ந்து உழைக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். அந்தோ பரிதாபம், இன்று அதன் புனித நாடகம் அதன் சொந்த முரண் இயல்புகளால் அம்மணமாகி வருகிறது.
இந்தக் குடியரசில் மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பி அழைக்கிற முறை இல்லை, இந்தக் குடியரசு நமது பிரச்சனைக்குத் தீர்வாகாது, நாம் ஏமாற்றப் படுகிறோம் என மக்கள் கண்டுகொண்டார்கள்.
தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக முதல் மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக வரை இது பொருந்தும். அரசியல் சுதந்திரத்திற்குப் பிந்தைய சூழலில், நாடாளுமன்ற ஜனநயாக வடிவில் இவ்வகையான சூறையாடும் அரசியல்-முதலாளிய கூட்டுக் கும்பலே சமூகத்தை ஆட்சி செய்கின்றனர். தேசிய அளவிலும், மாநில அளவிலும் இதுதான் யதார்த்த உண்மை. இந்த முதலாளிகளும், அவர்களின் எடுபிடிகளான அரசியல் கட்சிகளும் மேற்கொண்ட மிதவாதக் கலகத்தால் இந்தியாவிற்கு விடுதலை கிடைக்கவில்லை. மாறாக, கோடான கோடி உழைக்கும் மக்களின் பாட்டாளி வர்க்கத்தின் வீரம் செறிந்த போராட்டங்களைக் கண்டு அஞ்சியே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பணிந்தது; அரசியல் சுதந்திரம் வழங்கியது.
சுதந்திரத்திற்குப் பின்பு அரசியல் தலைமை ஏற்ற காங்கிரஸ் முதலாளியக் கட்சியோ, கோடான கோடி பாட்டாளி மக்களுக்கும், விவசாயிகளுக்கும், பழங்குடிகளுக்கும், சிறுபான்மையினருக்கும் துரோகம் செய்தது, முதுகில் குத்தியது. அரசியல் அரங்கில் இருந்து உழைக்கும் வர்க்கத்தை வெளியேற்றியது.
இந்த துரோகம்தான் அறுபதாண்டு காலமாக தொடர்கிறது. உரிமைக்கான போராட்டங்கள் யாவும் துப்பாக்கி முனைகளிலே நசுக்கப்படுகிறது. மாநிலக் கட்சிகளோ மத்திய அரசின் சமூக ஜனநாயக சீர்திருத்தத் திட்டங்களை அமல்படுத்துகிற நிர்வாக அலகாக சுருங்கியது. இவ்வாறு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வர்க்கப் போராட்டமாக எழுந்த ஜனநாயக புரட்சிகர அலை, புனிதப் போலி குடியரசு ஆட்சியால், சமூக ஜனநாயக சீர்திருத்த கொள்கைகளால் இணக்கம் காணப்பட்டது.
பாட்டாளி வர்க்கத்தின் மீதான துரோகத்தின் மேல் எழுப்பப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசு, அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற வடிவங்கள் இன்று அதற்கெதிராகத் திரும்பியுள்ளது. சட்டமன்ற ஆட்சி முறைகள், தேர்தல் அரசியல் முறைகள், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அடமானம் வைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு செத்த மனிதர்களின் ஆன்மா உயிர்த்தெழ வைக்கப்படுகிறது. ஆளுநர் மாளிகையும், போயஸ் கார்டனும், கிரீம்ஸ் ரோடுகளும் அரசியல் சதிகளால் நிரம்பி வழிகிறது. அதன் நாற்றத்தை மக்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை!
தற்போது, முதலாளித்துவ நாடாளுமன்ற வடிவங்கள், சட்டமன்ற வடிவங்களின் அறுபதாண்டுகால தேன்நிலவுக் கட்டம் நிறைவை எட்டுகிற நிலைக்கு வருகிறது. உத்தராகண்டில், அருணாச்சலப் பிரதேசத்தில் தற்போது தமிழ்நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைகிற ஆளும்வர்க்கத்தின், அரசியல் கட்சிகளின் அருவருப்பான அரசியல் சதுரங்க ஆட்டத்தை மக்கள் யதார்த்த உண்மையில் கண்டுகொண்டார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அகழிகளுக்குள்ளே கமுக்கமாக மக்கள் அறியா வண்ணம் அரங்கேற்றப்பட்ட அரண்மனை சதிகள், தற்போதைய நவீன முதலாளித்துவ குடியரசு கட்டத்தில் வெட்ட வெளிச்சமாக காட்சி மற்றும் சமூக ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. வாக்கு உரிமையால் மட்டுமே நிலவுகிற முதலாளித்துவ ஜனநாயகத்தை மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை.
நாம் எவ்வாறு ஓட்டுபோட்டு பின், மோசடிக்காரர்களின் இந்தப் புனித குடியரசு ஆட்சிமுறையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளோம் என சமகால நிலைமைகளில் வைத்து மக்கள் பொருத்தி புரிந்து கொள்கிறார்கள் என்பதை அவதானிக்க ஆளும் வர்க்கம் மறந்துவிட்டது! ஆளும் வர்க்கத்திற்குள்ளாக நடைபெறுகிற அதிகாரத்திற்காக இப்போட்டியை உழைக்கும் மக்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பதில்லை. வருங்கால மக்கள் குடியரசு ஜனநாயகத்திற்கான புரட்சிகர சேமிப்பு சக்திகளாக மக்களின் மனங்களிலே இம்முரண்பாடுகள் பதியப்படுகிறது!
உழைப்பிற்கும், மூலதனத்திற்கும் இணக்கம் காண முடியாத சூழலிலும், ஏமாற்றப்படுவதாக உணர்கிற சூழலிலும் உழைக்கும் வர்க்கத்தின் கோபம் வெளிப்படும்; அறுபதாண்டு கால துரோகத்திற்கு பாட்டாளி வர்க்கம் பழி தீர்க்கும்; மக்கள் குடியரசை கண்டுகொள்ளும்!
- அருண் நெடுஞ்செழியன்