periyar karunanidhi veeramaஅண்மைக் காலமாக தமிழக அரசியலில் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக திராவிடம் நிறுத்தப்படுகிறது என்றும் தமிழ்த் தேசிய ஓர்மைக்கு எதிராக தகவமைக்கப்படுகின்ற திராவிடத்தை வீழ்த்துவதுதான் தமிழ்த் தேசிய அரசியலின் இலக்கு என்றும் பரப்புரை செய்யப்படுகிறது.

மறுபுறம், திராவிடம் நீங்கிய தமிழ்த் தேசியம் மீண்டும் ஆரியத்தின், பார்ப்பனியத்தின் புகலிடமாக அமையும் என்ற எச்சரிக்கைக் குரலும் எழுப்பப்படுகிறது.

திராவிடம் என்பது ஒரு மொழிக் குடும்பத்தை குறிக்கிறது என்று மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழ் மொழியிலிருந்த கிளைத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளை உள்ளடக்கிய மொழிக் குடும்பமே திராவிடம் என்று விரித்துரைக்கின்றனர்.

ஆனால் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணமாக அடையாளப்படுத்த நிலப்பரப்பில் பார்ப்பனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த சமூக வெளியில் இந்த ஆதிக்கத்திற்கு எதிராக பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றும், ஜஸ்டிஸ் என்னும் பெயரில் நாளிதழ் நடத்தியதால் நீதிக்கட்சி என்றும் பின்னர் சுயமரியாதை இயக்கமாக தொடங்கி திராவிடர் கழகம் என்றும் பரிணமித்தது வரலாறு.

பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது சாதிய அமைப்பு முறை; ஆகவே, சாதிய அமைப்பு முறைக்கு முட்டுக்கொடுத்து நியாயப்படுத்துகின்ற இந்து சமயத்தை தீவிரமாக விமர்சித்து எழுந்ததுதான் திராவிடம் என்னும் கருத்தியல்.

வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகக் கிளம்பிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமையில் அமைக்கப்படும் ஆட்சி பார்ப்பனிய - பனியா சமூகத்தினரின் ஆதிக்க அரசாகத்தான் அமையும் என்ற காரணத்தால் "திராவிட நாடு திராவிடருக்கே" என்றும், "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற அரசியல் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் இம்முழக்கங்கள் ஒருங்கிணைந்த அரசியல் விடுதலை இயக்கமாக மலர்வதில் தடையாக இருந்த முழுமையான அரசியல் காரணங்கள் விவாதிக்கப்படுவதில்லை.

திராவிடர் கழகம் என்னும் சமூக பண்பாட்டு இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியாக உருப்பெற்று தேர்தல் வழி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றினால் போதும் என்று சுருங்கியது.

"வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது" என்று அரசியல் - பொருளாதார முழக்கங்களை முன்வைத்த திமுக பின்னர் வட இந்தியப் பெருமுதலாளிகளோடு சமரசம் செய்யத் தளைப்பட்டனர்.

"Hindhi Never; English ever" என்றும் "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்றும், "வாழ்வோம்; வாழவிடுவோம்" என்றும் முழக்கங்கள் சுருங்கியது.

ஆனால் திராவிட இயக்கம், ஒரு முழுமையான தமிழக விடுதலையாக முகிழ்ப்பதற்குத் தடையாக திராவிட இயக்கத்தின் தமிழரல்லாத தலைமையே காரணம் என்று மேலோட்டமான இனவழிக் காரணத்தை முன்வைத்து "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று பறைசாற்றப்பட்டது.

இது உள்ளார்ந்த அரசியல் - பொருளியல் காரணிகளை மறுத்த நிலைப்பாடாகும்.

திராவிடம் ஒரு மொழிக்குடும்பம் என்றாலும் திராவிட இயக்கம் தென்னிந்தியாவில் பிற மொழி இன மக்களிடம் கால்கொள்ளவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வகையில் திராவிட இயக்கம் என்பது அடிப்படையில் தமிழர் இயக்கமாக மட்டுமே தழைத்தோங்கியது.

ஆனால் தமிழ்த்தேசிய இயக்கம் இந்திய துணைக்கண்டம் புதுக்காலனிய வேட்டைக்காடாக மாறிய நிலையில் வல்லரசின் எதிர்ப்பை முகாமையாளர் இலக்காகக் கொண்டு சாதியால் ஒடுக்கப்பட்டவரின் உழைக்கும் மக்கள் தலைமையிலான பேரியக்கமாக கட்டமைக்கத் தவறிய காரணத்தால் தமிழ்த்தேசிய விடுதலை வேட்கை வெற்றுக் கனவாக சுருங்கியது.

இதனைப் புரிந்து கொள்ளாமல் திராவிடக் கோட்பாடுதான் தமிழ்த்தேசியத்திற்குப் பகை என்றும், தமிழரல்லாத திராவிடத் தலைமைதான் இந்த சீரழிவிற்குக் காரணம் என்றும் பாடம் படிப்பது சமூகப் பொருளியல் மற்றும் அறிவியலுக்கு முரணானதாகும்.

சுருங்கச் சொன்னால் திராவிடம் என்னும் கருத்தியல் அற்ற தமிழ்த்தேசியம் குருட்டுத்தனம். அதேபோல் தமிழ்த்தேசியம் என்னும் அரசியல் இலக்கின்றி திராவிடக் கருத்தியலை மட்டும் முன்வைப்பது மலட்டுத்தனமாகும்.

குருட்டுத்தனத்திலிருந்தும் மலட்டுத்தனத்திலிருந்தோம் விடுபடுவோம்!

தமிழ்த்தேசிய விடுதலையை மார்க்ஸிய லெனினியப் பார்வையில் முன்னெடுப்போம்!

- பொன்.சந்திரன், கோவை

Pin It