இதிகாசக் காலம் முதல் இன்று வரை மந்தை மந்தையாக பார்ப்பனியத்துக்கு அடியாட்களும், அவர்களுக்கு தளபதிகளும் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அன்று குரங்குக் கூட்டமாக, அனுமானாக, விபிசணனாக. இன்று பெரியரை மறுக்கும் தமிழ்த் தேசியவாதிகளாக, நாம் தமிழர் கட்சியாக, சீமானாக, மணியரசனாக…

Seeman and maniyarasan 467திருடனுக்குத் தேள் கொட்டியது போல இந்துத்துவத்திற்கு, பச்சை சனாதனத்திற்கு கூலிப்படையாக இருந்து ஆள் சேர்க்கும் சீமானும், மணியரசனும் வெளிப்பட்டு மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள். இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் சைவ சமயத்திற்கு திரும்பச் சொல்லும் சீமான் முதலில் இந்து மதத்திலிருந்து சைவத்தை மீட்க வேண்டியதுதானே. முருகனை பார்ப்பானுக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் அறுபடை வீடுகளில் இருக்கும் பார்ப்பனரை வெளியேற்றப் போராடலாமே? முருகனின் பெயரை மாற்றி சுப்பிரமணியன் (பார்ப்பானுக்கு நல்லவன்) என்று வைத்திருக்கும் முருகன் என்னும் தமிழை மீட்கப் போராடலாமே?

உண்மையான தமிழ்த் தேசியவாதியாக இருந்தால், சாதியால் பிளவுண்டு ஒன்று பட முடியாமல் உட்பகை நோயில் சிக்கிச் சீரழியும் தமிழகத்தை மீட்க “தமிழர்களே இந்து மதத்திலிருந்து வெளியேறுங்கள்” என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்! அதை விடுத்து, தம்மீது காலங்காலமாக அப்பியிருந்த சாதி இழிவைக் கழுவி, தூய்மையான இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் மீண்டும் இந்து மதத்திற்கு (சைவமும் இந்து மதத்தின் ஒரு பிரிவே) அழைக்கும் குடிகேடிகள் எவ்வளவு பெரிய அயோக்கியர்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரிந்து விட்டது இப்போது.

இன்னும் சொல்லப் போனால் சைவமும் தமிழர்கள் மதமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், தமிழ் நாட்டில் எந்தச் சிற்றூர்களிலும் சிவனுக்கும் முருகனுக்கும் கோயில் கிடையாது. அது பெருந்தெய்வ வழிபாட்டில் அடக்கம். தமிழர்களின் நடுகல் வழிபாட்டில் இருந்த முருகனை சிவனுக்கு மகனாக்கி தெய்வானைக்கு கணவனாக்கி காசு பணம் பார்க்க பார்ப்பனர்கள் திருடிக் கொண்டு போய் விட்டார்கள். பட்டி தொட்டியெல்லம் வழிபடக்கூடிய இசக்கி அம்மனும், சுடலை மாடனும், முனியும், ஐயனாரும்தான் தமிழ்க் கடவுள்கள். இவர்களுக்கு அவதாரங்கள் கிடையாது. தேவலோகம் கிடையாது. மக்களைப் போல் மழையிலும் வெயிலிலும் காய்ந்து கிடக்கும் காட்டுத் தெய்வங்கள். இவை அனைத்தும் முன்னோர் வழிபாடே. இவர்களை வழிபட பூசாரிகளும் தேவையில்லை. பூசை பொருள்களும் தேவை இல்லை. வேலைக்குப் போகும்போதும், வரும்போதும் வணங்கி விட்டுப் போகலாம்.

தமிழர்கள் வழிபட்ட அந்தக் கால கோயில்களில் உண்டியல் கிடையாது. தெய்வத்தின் பேரைச் சொல்லி பணம் பறிக்கும் எண்ணம் அவர்களிடம் இருந்ததில்லை. வருடத்தில் ஒருநாள் கொடை கொடுக்க வேண்டுமென்றால் ஊரில் அனைவரிடமும் பணம் பிரித்து, கிடா வெட்டி பொங்கல் வைத்து படையல் இட்டு கொடை முடிந்ததும் இருக்கும் அனைத்தையும் பங்கிட்டு சாப்பிட்டு முடித்து, மீதி இருக்கும் பணத்தை அங்கேயே பிரித்து அனைவருக்கும் கொடுத்து விடுவார்கள். உண்டியல் வைத்து பண வசூல் வேட்டை செய்வதைத் தொடங்கி வைத்தவர்கள் பார்ப்பனர்களே.

தான் கெட்டது போதாதென்று தனக்குப் பின்னால் ஒரு பெருந்திரளாய் இளைஞர்களைத் திரட்டி தமிழ் இனத்திற்கு எதிராக, சனாதனத்திற்கு அடிமை சேவகம் செய்யும் கோடாரிக் காம்புகளை இதுவரை வரலாறு கண்டதில்லை. கருணா கூட துரோகியான பின்பு வெளிப்படையாக எதிரியுடன் நின்றான். பார்ப்பன எச்சிக் கஞ்சி குடித்த ம.பொ.சியும் வெளிப்படையாக நின்றார். இன்று ‘நாம் தமிழர்’ வேடமிட்டு களம் இறங்கி நிற்கும் சீமானும், மணியரசனும் போட்டிருக்கும் வேசம் ஆபத்தானது. அமுதம் என்னும் புட்டியில் நிரம்பி வழியும் நஞ்சே இருவரும்.

காலா காலத்திற்கும் தமிழகத்தை அழிக்க வேண்டி வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தும் பார்ப்பனியம் இன்று கையில் எடுத்திருக்கும் போர்க்கருவி ‘நாம் தமிழர் கட்சி’. நாம் தமிழர் கட்சியே அன்றே முளைத்த விசம் என்பது வரலாற்றை நுணுகி ஆய்ந்தவர்களுக்கு இமயமாகத் தென்படும். “உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என்று முழங்கிய ஆதித்தனார் தாம் நடத்திய ‘தினத் தந்தி’ நாளிதழ் மூலம் தமிழ்த் தேசிய கருத்துகளை மக்களிடையே கொண்டு சேர்த்தாரா? என்று பார்த்தாலே உண்மை விளங்கி விடும். (இன்று அது சனாதன சலுகை மூலம் சீமானுக்குக் கிடைத்தது)

அன்று ஆன்மீக வழியாக, பண்பாட்டு வழியாக கேடுகளை விதைத்தவர்கள், புறவாசல் அரசியல் மூலமாக நம்மைச் சிதைத்தவர்கள், இன்று முற்றும் அழித்தொழிப்பதற்கு படை திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். குமரி முதல் இமயம் வரை ஆண்ட பாண்டியன் நெடியோன் குடிகளை சிறுகச் சிறுக சிதைத்து இன்று தமிழ் நாடு மாநில அளவுக்கு குறுகச் செய்த பார்ப்பனியம் அந்தத் தமிழ் நாட்டையும் விழுங்கிச் செரிக்கத் துடிக்கிறது.

சீமானுக்கும் மணியரசனுக்கும் பின்னால் திரளும் தம்பிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்த்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் தமிழீழத் தேசிய விடுதலைக்கான தலைவர். அவர் தனக்கு முன்மாதிரி என்று சொன்ன இந்தியத் தலைவர் சுபாஸ் சந்திர போஸ் அவர்கள். அந்த சுபாஸ் சந்திரபோஸ் இந்திய விடுதலைக்கு படை அமைத்து ஆயுதங்களோடு களத்தில் நின்றவர். அவரைப் போல தலைவர் பிரபாகரனும் படை அமைத்து களத்தில் நின்று தன் குடும்பம் முற்றும் இழந்தவர். அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற தலைவர் பிரபாகரனே என் தலைவர் என்று ஊளையிடும் சீமான் ஏன் அரசியல் களத்தில் நின்று முதல்வர் கனவு காண்கிறார்? இந்திய தேசியத்தை எதிர்த்து தமிழ்த் தேசிய விடுதலைக்கு படை கட்டவில்லையே? மேதகு தலைவர் பிரபாகரன் படத்தைப் போட்டு, அவரது கூட்டாளி மணியரசன் சொல்வதுபோல, இந்திய கங்காணி வேலைக்கு ஏன் அணி திரட்டுகிறார்? தலைவர் படத்தைப் போட்டு போர்க்களத்தில் நிற்காமல் கோமாளி மாதிரி பல்லை இளித்துக் கொண்டு இனத்தைக் காட்டிக் கொடுக்கும் இழி செயலை ஏன் செய்கிறார் சீமான்?

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழத் தேசிய விடுதலைக்காகப் போராடியவர். அவர் படத்தைப் போட்டு அரசியல் செய்வதிலேயே தெரிய வேண்டாமா சீமான் போலி தமிழ்த் தேசியவாதிதான் என்று. நம்மிடம் தனித் தமிழ்நாடு கோரிக்கையை முன் வைத்து களமிறங்கிய தோழர் தமிழரசன், அய்யா பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள் போன்றவர்கள் படத்தைப் போட்டு ஏன் அரசியல் செய்யவில்லை? அவர்கள் முன் வைத்த முழக்கத்தை சீமானும் மணியரசனும் ஏன் முன் வைக்கவில்லை? அய்யா பாவலரேறு பெருஞ்சித்திரனார் முன் வைத்த….

“‘இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கும். இந்து மதம் இருக்கும்வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாத வரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாத வரை, தமிழ் மொழி தூய்மையுறாது; தமிழினம் தலை தூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே, இந்து மதத்தினின்றும், மதப் பூசல்களினின்றும், ஆரியப் பார்ப்பதினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடியினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே, தமிழக விடுதலைதான் நம் முழு மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்” என்ற தூய தமிழ்த் தேசத்தின் வித்தான சொற்றொடரை என்றேனும் மணிரசனும் சீமானும் முழங்கினார்களா? அல்லது முனங்கியாவது இருப்பார்களா?

தமிழ்த் தேசியம் என்பது தனிநாடு கோரிக்கையை உட்கொண்ட கருத்தியல். அதில் எள்ளளவும் பயணிக்காமல் நாக்பூரில் தைத்துக் கொடுத்த நாம் தமிழர் கட்சிக் கொடியை பிடித்துக் கொண்டும், கோவணத்தைக் கட்டிக் கொண்டும் இங்கே களமிறங்கினால் மக்களுக்குத் தெரியாமல் போய் விடுமா என்ன?

இங்கே ‘தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய பெரியார்தான் பற்றுக் கோடு. அவர் போட்ட பாதைதான் தூய தமிழ்த் தேசியப் பாதை. அதை விடுத்து பார்ப்பனியத்துக்கு பல்லக்கு தூக்குவதெல்லாம் தமிழ்த் தேசியம் ஆகிவிடாது.

தமிழ்நாட்டில் இருக்கும் பார்ப்பனர்களுக்குப் பொருளாதாரப் பாதிப்பு என்றால் கூட நாக்பூர் பார்ப்பான் குறி அறுந்தது போல அலறுகிறான். கோவில் சொத்தெல்லாம் பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஊளையிடுகிறான். வட நாட்டுக் கொள்ளையர்களும் தென்னாட்டுக் கொள்ளையர்களும் ஒன்று கூடுகிறார்கள். இந்தக் கட்டமைப்புதான் இந்தியாவின் பிற தேசிய இனங்களையும் சீர்குலைத்து அடிமைப் படுத்தும் கட்டமைப்பாகும். ஆனால் தமிழ் நாட்டு கன்னடர்கள் கர்நாடக கன்னடர்களோடும், தமிழ் நாட்டுத் தெலுங்கர்கள் ஆந்திரா தெலுங்கர்களோடும், தெலுங்கானா தெலுங்கர்களோடும் தொடர்பு வைத்து தமிழ் நாட்டு மக்களுக்கு எதிராக அரசியல் செய்கிறார்களா? செய்ததாக செய்தி உண்டா? இதையெல்லாம் ஆராயாமல் திராவிடக் கருத்தியலை எதிர்ப்பது, தமிழருக்காகப் பாடுபட்ட தலைவர்களை தெலுங்கன், கன்னடன் என்று கொச்சைப் படுத்துவது எல்லாம் வருங்கால தமிழினத்திற்கு பேராபத்தாக முடியும்.

தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து இனத்தவரும் சேர்ந்து சமூக நீதிக்காகப் போராடினால்தான் நாம் இப்பொழுது இருக்கும் நிலையைக் கூட தக்க வைக்க முடியும். இல்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகும். உத்தரப் பிரதேசம் போலவும் பி.ஜே.பி ஆட்சி செய்யும் பிற மாநிலங்களைப் போலவும் நாம் நம் உரிமையை இழந்து அல்லலுற நேரிடும்.

உலகெல்லாம் பனிரெண்டு கோடித் தமிழர்கள் இருந்தும் அவர்களுக்கென்று இந்த பூமியில் கால்படி மண் கூட சொந்தம் கிடையாது. நம் மண்ணும், மொழியும், பண்பாடும் அடிமைப் பட்டுக் கிடக்கிறது. அது இந்தியாவில் பார்ப்பனர்களிடமும் இலங்கையில் சிங்களவரிடமும் தான் கிடக்கிறது.

யார் நம்மை அடிமையாக வைத்திருக்கிறார்களோ அவர்களே எதிரிகள். அவர்களை நோக்கியே நம் போராட்டம் முன்னெடுக்கப் பட வேண்டும். அதை விடுத்து சீமானும், மணியரசனும் செய்யும் அரசியல் நம்மிடம் இருக்கும் இந்த மாநில மண்ணையும் இழக்க வழிவகை செய்யும். நம்மை இந்தியத் தெருக்களில் நாயாக அலைய விடவே இருவரும் வேலை செய்கிறார்கள்.

- இறை.ச.இராசேந்திரன்

Pin It