(“தி.மு.க-வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல்!” என்ற புதிய ஜனநாயகம் அக்டோபர் இதழில் வந்த கட்டுரையை முன்வைத்து)

வலைதளத்தில் யூ-டியூப் பார்ப்பவர்கள் வடிவேலின் இந்த காமெடியை கேட்டிருப்பீர்கள், “நாம ரொம்ப ஓவராத்தான் போய்க் கொண்டிருக்கோமோ! என்னா செய்திடுவாங்க!! அதையுந்தான் பாத்துடுவோம்!!! என்று தொடங்கும் கிண்டல், கேலி - அப்புறம் வடிவேலின் காமெடி தொடரும். இதை அப்படியே புதிய ஜனநாயகத்தின் கட்டுரையாளருக்கும் பொருத்தலாம். எப்படி எனக் கேட்கிறீர்களா? பார்ப்போம், வாருங்கள்.

தி.மு.க.ஆட்சிக்கு வந்து 150 நாட்கள் ஆகின்றன. இந்த குறுகிய காலத்துக்குள் விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ள கட்டுரையாளருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. சீமான், மணியரசன் போன்ற தமிழ்த் தேசிய சங்கிகள், மதவெறி பி.ஜெ.பி சங்கிகள் ‘வாண்டனாக’ (வேண்டுமென்றே) வந்து வண்டியில் ஏறி திராவிடத்தை எதிர்த்து அரசியல் செய்வதுபோல் “புதிய ஜனநாயகம்” குழுவுக்கும் ரத்த அழுத்தம் ஏறிவிட்டது போலத் தெரிகிறது. ஆளும் கட்சியான தி.மு.க-வை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் பெரியாரின் சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை போன்ற கொள்கைகள் அடங்கிய திராவிடம் என்ற கருத்தியலை எதிர்த்து அரசியல் செய்கின்றனர். அதேபோல் இந்த சங்கிக் கூட்டத்துடன் புதிய ஜனநாயகம் இதழும் சேர்ந்து கொண்டதோ என்ற சந்தேகம் எழுகிறது..

stalin cyclingஉருமாறிய கொரனாவுக்கு புதிய பெயர் சூட்டுவதுபோல், பிழைப்புவாதிகள், போனபார்டிஸ்டுகள், பொறுக்கி அரசியல்வாதிகள் என 40 ஆண்டுகளுக்கு முன் தங்களால் அழைக்கப்பட்ட திராவிடக் கட்சிகளுக்கு (தி.மு.க., அ.தி.மு.க) கவர்ச்சிவாத அரசியல்வாதிகள் என்ற புதிய பெயர் சூட்டுகிறதா புதிய ஜனநாயகம்?. முதலாளித்துவ ஜனநாயகத்தின் இழிந்த நிலையாம் கவர்ச்சிவாத அரசியல். இது புதிய கண்டுபிடிப்பென நம்ப வைக்கப் பார்க்கிறது புதிய ஜனநாயகம்.

“திராவிடம், தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், தலித்தியம், கம்யூனிசம்” ஆகிய கொள்கைகளைப் பேசி அரசியல் செய்து அமைப்பைக் கட்டி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பதெல்லாம் எப்போதோ கேலிக்கூத்தாக்கப்பட்டு விட்டது என முன்வைக்கிறது புதிய ஜனநாயகம். பெரியாரிசம் - அம்பேத்கரிசம் ஆகியவற்றை தனது கேலிக்கூத்துப் பட்டியலிலிருந்து நீக்கி விட்டது ஏனெனத் தெரியவில்லை.

 கட்டுரையாளர், அவரது கற்பனையில் உழலும் அம்சங்களையே ஆதாரமாக்கி, கேலிக்கூத்தான வாதங்களை முன்வைக்கிறார்.

கேலிக்கூத்து 1

“திராவிடம், தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், தலித்தியம், கம்யூனிசம்” ஆகியவை அனைத்தும் இவர்கள் கூறுவது போல காலாவதியாகி விட வில்லை. தமிழகத்தில் “திராவிடம், தலித்தியம், கம்யூனிசம்” இன்று வேரூன்றி வளர்ந்து, முன் எப்போதையும் விட ஆலமரம் போல விழுது விட்டு வளர்ந்து நிற்கிறது. கூடவே பெரியாரின் சமூகநீதி கொள்கையும், அம்பேத்காரின் கருத்துகளும் பொதுமக்களிடம், லட்சகணக்கான மாணவர்கள் - இளைஞர்கள் மத்தியில் வேரூன்றி வருகிறது. அம்பேத்கர், தலித்துகளின் தலைவர் என்ற தவறான பிம்பம் மாறி, அவர் அனைத்து சமூகங்களின் தலைவர் என்றும் இவர்கள் உணர்ந்துள்ளனர். இந்த மாற்றம் தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியாவெங்கும் வளர்ந்து வருகிறது. “திராவிடம், தலித்தியம், கம்யுனிசம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியன தமிழகத்தில் வளர்ந்து வரும் புதிய தலைமுறையினரிடம் மேலோங்கி நிற்கிறது.

கேலிக்கூத்து 2

கிராமப்புறங்களில் ஓட்டாண்டியான விவசாயிகள், நகர்ப்புற உதிரித் தொழிலாளர்கள் இவர்களை ஏமாற்றி ஒட்டுப்பொறுக்க கவர்ச்சிவாத அரசியலை ஓட்டுப் பொறுக்கும் கட்சிகள் ஆயுதமாக பயன்படுத்துகின்றனவாம். 40 ஆண்டுகளுக்கு முன் வாசித்த அதே வாத்தியத்தை கட்டுரையாளர் இசைக்கின்றார். நிலைமை மாறியுள்ளது. ஒவ்வொரு கிராம விவசாயிகள் வீட்டிலும் சாதி-மத-பொருளாதார பலத்தைத் தாண்டி பெரும்பான்மையோர் பட்டப் படிப்பு முடித்தவர்களாக இருக்கிறார்கள். நகர்ப்புறத்திலும் இதே நிலைதான். அரசியல் தீர்மானங்களை பெரும்பாலும் படித்த இளைஞர்கள் - மாணவர்கள், படித்து வேலையில் இருக்கும் மக்கள் தீர்மானிக்கிறார்கள். இவையெல்லாம் திராவிடம் - சமூகநீதி அளித்த அளப்பரிய பங்காகும். கடந்த 50 ஆண்டு தமிழகத்தின் அரசியல் - பொருளாதார நிலைமைகைளை ஆய்வு செய்தவர்கள் கருத்தும் இதுதான்.

மாறியுள்ள அரசியல் – பொருளாதார - கலாச்சார சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுரையாளர் மாறிக் கொள்ள வேண்டும். தேஞ்சிப் போன பழைய பாட்டை திரும்பத் திரும்ப போட்டு மக்களை கேவலப் படுத்த வேண்டாம். கவர்ச்சிவாதம் என்ற “கண்டுபிடிப்பை” எப்படியாவது கடைவிரித்து விட வேண்டும் என்ற துடிப்பு எதார்த்த நிலையைக் காணத் தவறுகிறது.

கேலிக்கூத்து 3

                  இலவச அரிசி, மளிகைப் பொருட்கள், பொங்கல் - தீபாவளி இனாம் தொகை, மிக்சி, கிரைண்டர், செருப்பு, மடிக்கணிணி,... இப்படியே பல நூறு பொருட்களைக் கொடுத்து மக்களை ஒட்டுக் கட்சிகள் ஏமாற்றுகிறார்களாம். தனி மனித துதி, புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, தானைத் தலைவர், தளபதி, பொன்மனச் செம்மல், ரத்தத்தின் ரத்தங்கள், உடன் பிறப்புகள், போன்ற சொற்களை மக்கள் மனதில் நிறுத்த ஊடகங்களை கையில் போட்டுக் கொண்டு தனிமனித துதிபாட வைக்கிறார்களாம். கலைஞர் கருணாநிதி கவர்ச்சிவாத அரசியல் முன்னோடி எனலாம் என்கிறது கட்டுரை. அவரைத் தொடர்ந்து ஸ்டாலின், கார்பரேட் பாணியில் தன்னை கவர்ச்சித் தலைவராக காட்டிக் கொள்கிறாராம். தனிமனித துதிபாடும் நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் கூட மக்களிடம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட வில்லை. இதுவும் 40 ஆண்டுகள் கடந்த உங்களின் தேஞ்ச ரிக்கார்டுதான்.

கேலிக்கூத்து 4

                  கவர்ச்சிவாத அரசியலுக்கு துணையாக இன்றைய நவீன முறைகள் அனைத்தையும் பயன்படுத்துகிறார்களாம். தகவல் - தொழில் நுட்பம், இணைய வசதி, ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர், தகவல் பகுப்பாய்வு, இவையெல்லாவற்றையும் பயன்படுத்தி மக்களின் தேவைகளை, அரசியல் விருப்பங்களை, அறிந்து கொண்டு தேர்தல் வியூகங்களை வகுத்து வெற்றிகளை அடைகிறார்களாம். இவையெல்லாம் இன்றைய உலகில் சாதாரணமானவை. இவைகளை பயன்படுத்தத் தெரியாதவனை முட்டாள் என்றுதான் அழைப்பார்கள். ஐ-பேக் என்ற டீமை பயன்படுத்துகிறார்களாம். மோடி, நிதிஷ் குமார், ஜனார்த்தன் ரெட்டி, அமிருந்தர் சிங், போன்றோரெல்லாம் பயன்படுத்தினார்களாம். இவற்றையெல்லாம் பயன்படுத்தித்தான் சமூகங்களின் அனைத்து அசைவுகளும் நடந்தேறுகின்றன என்பது கட்டுரையாளருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.

கேலிக்கூத்து 5

                  ஐ-பேக் நிறுவனம் தி.மு.க.விற்கு செய்த சிறப்பு என்னவென்றால், தமிழகத்தின் அரசியல் சூழலுக்குப் பொருத்தமாக தேர்தல் பிரசார உத்திகளை வடிவமைத்துக் கொடுத்ததுதான். தமிழகத்தில் உள்ள பல்வேறு மக்களின் தேவைகள், விருப்பங்கள் மற்றும் அவர்களின் அரசியல் கருத்துகளை தகவல் பகுப்பாய்வு (data analysis) செய்து மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டதுதான் தி.மு.க.-வின் பிரச்சாரங்களும் தேர்தல் அறிக்கையும். கட்டுரையாளரே, திமுக.வின் “சாதனைகளை” உங்களுக்கும் தெரியாமல் கூறுகிறீர்கள். ஆனால், எல்லா விசயத்தையும் கவர்ச்சிவாதம் என்ற உங்களின் 40 ஆண்டுகள் பழைய தகரப் பெட்டியில் போட்டு பூட்டி விடுகிறீர்களே! சரியா?

தேர்தல் பிரச்சார உத்திகள், முழக்கங்கள், தேர்தல் வியூகங்கள், விளம்பரங்களை திட்டமிட்டு செய்ததை கார்பரேட் பாணியில் செய்ததாக கூறுகிறீர்களே, அவர்கள் அப்படி செய்ததால்தான் வெற்றி அடைந்துள்ளார்கள். சாதாரணமாக எடுத்துக் கொள்வதுதான். இதை விமர்சிப்பவர்கள் பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மை ஆதரவைப் பெற இவையெல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக நடைமுறை வாய்ப்புகளை, வழிகாட்டுதல்களை கட்டுரையாளர் தொகுத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

கேலிக்கூத்து 6

68 வயதான மு.க.ஸ்டாலினை வயதானாலும் இளமை குன்றா நாயகன் போல முடியையும், முகத்தையும் அழகு படுத்தியதற்கு கவர்ச்சிவாதம் -தான் காரணம் என கட்டுரையாளர் கூறுகிறார். கிராமப் புறங்களில் ஒரு சிலேடை மொழியில் இதுபோன்ற நையாண்டிகளுக்கு பெண்கள் இப்படி கலாய்ப்பார்கள், “கூந்தல் உள்ளவள் அள்ளி முடிஞ்சிக்கிறா! அழகுபடுத்தட்டுமே, உனக்கு என்னடி வந்தது” என பேசிக் கொள்வார்கள். வார நாட்களில் ECR கானத்தூர் தொடங்கி மாமல்லபுரம் வரை ஸ்டாலின், சைக்கிளில் பயணம் மேற்கொள்ளுவதை கட்டுரையாளர் கவனிக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. இதற்கு என்ன சொல்லப் போகிறாரோ என தெரியவில்லை. பொதுவாக சங்கிகளும் அவர்களின் வழித்தோன்றல்களான சாதி வெறியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பார்த்து இப்படித்தான் கதைப்பார்கள். எதை உடுத்த வேண்டும், எதை சாப்பிட வேண்டும், இப்படி எல்லாவற்றுக்கும் மனம் போன போக்கில் கிண்டல்-கேலி செய்வார்கள்.

கேலிக்கூத்து 7

தனக்குப் பின்னணியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவை பயன்படுத்திக் கொண்டு தனக்கு எதிராக வரும் கருத்துகளை கவனமாக கையாள்வது, இந்து அறநிலையத் துறையில் பக்தி இயக்கம் போல சீர்திருத்தம் செய்வது; இன்னொருபுறம் சமூகநீதி, திராவிட பாரம்பரியம் என விளம்பரப்படுத்திக் கொள்வது, பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்தது; பாரதி, வ.உ.சி.,கட்டபொம்மன், அயோத்திதாசர், ஆகியோருக்கு சிலை வைப்பது போன்ற செயல்களை செய்து நற்சான்று பெறுவதுடன் இந்த தலைவர்களை முன்னிருத்தி வரும் சாதிச் சங்கங்களை ஊக்குவிப்பது, வன்னியர்களுக்கு 1௦.5% இடஒதுக்கீடு, 20% இடஒதுக்கீட்டிற்காக போராடி உயிர்நீத்த 21 வன்னியர்களுக்கு மணிமண்டபம் கட்டுவது, அவர்களின் சாதி ஆதரவைப் பெறுவது; இப்படி தி.மு.க., - வின் “சாதனைகளைக்” கூறி இறுதியில் கவர்ச்சி அரசியல் என மூடுதிரை போடுகிறார் கட்டுரையாளர்.

ஈழ அகதிகள் பிரச்சினைகளைக் களைய திட்டங்கள், “இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்” என்பதை மாற்றி “இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்” என பெயர் மாற்றம், இலங்கைத் தமிழர்களின் நலத்திட்டங்களுக்காக 317.45 கோடி ஒதுக்கியது; ஆகிய செயல்களின் மூலம் “ஈழமக்களின் துரோகி கலைஞர்” என்ற கெட்டப் பெயரை போக்க முயற்சி; இவையெல்லாம் கவர்ச்சி அரசியலின் அடையாளங்களாம்.

கேலிக்கூத்து 8

பள்ளி மாணவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்காமல் இருந்த ஜெயா படம் போட்ட பைகளை, ரூபாய் 13,௦௦௦ கோடி மதிப்புள்ளவைகளை, தாராள மனம் கொண்டு ஜெயா படத்தை அகற்றாமல் அப்படியே ஸ்டாலின் கொடுத்தார். இதையும் கவர்ச்சிவாதத்துக்கு ஆதரவாக ஊடகங்கள் கண்பித்தன, காண்பிக்க தி.மு.க., தூண்டியது என்கிறது கட்டுரை. “பார்ப்பனர்களுக்கு மூளை ஜாஸ்தி” என்று கூறி ஊடகங்களில் வெளியான செய்தியால் வாங்கி கட்டிக்கொண்ட மதுவந்தி, 8000 கோடி மக்களுக்கு 5000 கோடியை மோடி கொடுத்தார் என்று உளறினார். அதுபோல் 13 கோடி ரூபாய்க்கு பதில் 13,000 கோடி என கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். திராவிடத்தை அழிக்க வேண்டும் என்ற பதற்ற உணர்வுதான் புள்ளிவிவர தவறுக்கு காரணம் என நினைக்கிறன்.

மேலும், தி.மு.க.- வின் வெற்று சவடால்களாக இன்னும் பலவற்றைக் கட்டுரையாளர் கூறுகிறார். “இந்தக் கவர்ச்சிவாத நடவடிக்கைகள் எதிர்காலத்தில் விரைவில் அம்பலப்பட்டுப் போவதை தி.மு.க.-வால் தடுக்க இயலாது. இப்போது தி.மு.க.-விற்கு ஆதரவு கொடுத்து வருகின்ற கூட்டணிக் கட்சிகளும், பார்ப்பன ஊடகங்களும் ஒருசேர தி.மு.க.-விற்கு எதிராகத் திரும்பி, “குடும்ப அரசியல்”, “ஊழல் ஆட்சி”, “துதிபாடிகளின் கட்சி” என்று தூற்றும் நாள் வெகுவிரைவில் வந்துசேரும்.

அப்போது, மோடி அரசின் காவி-கார்பரேட் பாசிச எதிர்ப்புப் போராட்டங்களை 2021-ல் தி.மு.க.ஆட்சி அமைவதற்கு முன்பு, நாம் விட்டுச் சென்ற இடத்திலிருந்து மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும்” என கட்டுரையாளர் முடிக்கிறார்.

கட்டுரையாளரிடம் நமது கேள்வி, “கடல் வற்றிய பின் மீன் பிடிக்கப் போகிறேன்”, என்பது போல் “மக்களிடம் தி.மு.க., அம்பலப்பட்டு, செல்வாக்கு இழக்கும்” காலம் வரை பார்ப்பன - கார்ப்பரேட் பாசிச எதிப்புக்கு விடுமுறை அளிப்பது ஏன்? மோடி ஆட்சிக்கு எதிராக 2014 - க்கு முன்பிருந்தே காவிப் பாசிச - கார்பரேட் பாசிச எதிர்ப்பு தீவிரம் அடைந்து விட்டது என்பது புதிய ஜனநாயகத்துக்கும் தெரியும்; அப்படியிருந்தும், பார்ப்பனியத்தை விட திராவிடத்தை அழிப்பதுதான் முதல் வேலை என்பது போல் கட்டுரையாளர் சொல்கிறார். பார்ப்பன சங்கிகளுக்கும், தமிழ் தேசிய சங்கிகளுக்கும் முதல் எதிரியாக இருப்பது திராவிட அரசியல்தான்.

 “பிற்போக்கு சித்தாந்தங்களை (உ.ம் திராவிடம், தலித்தியம், கம்யூனிசம்) வைத்து பரந்துபட்ட மக்களை இனிமேலும் ஈர்க்க முடியாது என்கிற அரசியல் ஓட்டாண்டித்தனம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படும் போது, பாமர மக்களின் அன்றாடத் தேவைகள், விருப்பங்கள், சுவைகளுக்கு ஏற்ப தமது கொள்கைகளை வகுத்துக்கொண்டு அரசியல் நடத்துவதே கவர்ச்சிவாதமாகும்”, என கட்டுரையாளர் கூறுகிறார். இவரே நம்பிக்கை வைக்கும் கம்யூனிசத்தை பிற்போக்கு சித்தாந்தங்களில் வகைப்படுத்தியது, கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டிய கருத்தாகும்.

 திராவிடம் என்ற சொல்லுக்கு தி.மு.க.--வை மட்டுமே கவனத்தில் கொள்ளும் கட்டுரையாளர், அ.தி.மு.க--வை பட்டியலில் சேர்த்துக் கொள்ளவில்லை. படுபாதக பாசிச பா.ஜ.க., RSS –ன் தொங்கு சதையாக, அடிமையாக இருந்ததை வெளிப்படுத்தவே இல்லை. தமிழ் சங்கிகள் மற்றும் பா.ஜ.க. மதவெறி சங்கிகளின் வழித்தடத்தில் கட்டுரையாளர் செல்கிறாரோ என்ற சந்தேகம் இருந்து கொண்டேயுள்ளது.

 பெரியாரின் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம், சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பார்ப்பனீயத்தின் சனாதன எதிர்ப்பு, இப்படி பல்வேறு சமூக சீர்திருத்தக் கருத்துகளின் தொகுப்பான கருத்தியலே திராவிடம். தி.மு.க. மட்டுமே கண்டு பிடித்தக் கொள்கை அல்ல. திராவிடக் கொள்கையை சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டு அதன்படி சாத்தியமானதை சட்ட மன்ற, நாடாளுமன்ற அதிகார சட்ட வரம்புகளுக்குள் நின்று செயல் படுத்த தி.மு.க. முயல்கிறது.

 திராவிடத்தை கோடானு கோடி மக்கள் நேசிக்கின்றனர், பின்பற்றுகின்றனர். எல்லா கட்சிகளிலும், இயக்கங்களிலும், கட்சி சார்பற்றவர்களும், கடவுள் மறுப்பாளர்களும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், பிற மதத்தினரும், இன்ன பிற மக்களும் பெரியாரின் திராவிடக் கொள்கை மீது பற்று உள்ளவர்களாக இருக்கின்றனர்.

 திராவிடத்தை எதிர்க்க நீங்கள் முனைந்தால் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை சீண்டுகிறீர்கள். பார்ப்பன சனாதன வாதிகள், தமிழுணர்வு பேசும் சங்கிகள் திராவிடத்தை பகை முகாமாக பார்க்க அவர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது. தி.மு.க—வின் ஆட்சி அதிகாரத்தின் மீது, திட்டங்களின் மீது, மாற்றுக்கருத்து இருந்தால் அதனை எதிர்த்துப் போராட அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர்கள் நட்பு சக்தியா, எதிரி சக்தியா என வகை பிரித்துக் காட்டுங்கள். திராவிடத்தை எதிர்க்கிறோம் என்று பட்டவர்த்தனமாக, சீமான் – மணியரசன் போல அறிவித்து விட்டு திராவிடத்தை எதிர்த்துப் போராடுங்கள்.

- குணசேகரன்

Pin It