கொரோனா நெருக்கடியை இந்தியப் பார்ப்பனிய அரசு தன் அரசதிகார வெறியை நிலைப்படுத்திக் கொள்ள முழு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.. கொரோனாவை ஒழிப்பதற்கு அது திட்டமிட்டதாகத் தெரியவில்லை.
மாறாக, இந்தச் சூழலைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராக, ஆரியப் பார்ப்பனிய அதிகாரத்திற்கு எதிராக உள்ள அனைத்து இருப்புகளையும், முயற்சி களையும், கருத்துகளையும் அழித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது..
மொழித்தேசங்களை அழிக்க ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே வாழ்வியல், ஒரே வரலாறு, ஒரே ஓர் ஆட்சி, ஒரே ஒரு கட்சி - என்று மக்க ளாட்சி முறைக்கு மாறான முற்றதிகார ஆட்சிமுறைக்கு வழிவகுக்கும் ஆர்எஸ்எஸ் - இன் திட்டத்தைப் படிப் படியாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
கல்விக்கூடங்கள், கல்வி முறைகள், ஊடகத் துறைகள், ஆட்சித் துறைகள், ஞாய(நீதி)த் துறைகள் வழிபாடு, வாழ் வியல் முறைகள், வரலாற்றியல், தொல்லியல் துறைகள் - என அவற்றிற்கான எல்லாவகை அடித்தளங்களையும் எப்படி அமைத்துக் கொள்ளலாம் என ஏற்கனவே ஆர்எஸ்எஸ் உள் ளிட்ட ஆரியச் சார்புக்கட்சிகள் அமைத்துவிட்டிருப்பதால் பாஜக அரசு ஆட்சிக்குவந்து அவர்கள் கோடுபோட்ட பாதை யில் மிக எளிதாக சாலை போட்டுக்கொண்டிருக்கிறது.
இவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ளவும், அவற்றிலிருந்து தங்களை மீட்டு உரிமைப்படுத்திக் கொள்ளவும் அடிமைப்பட்டுள்ள ஒவ்வொரு மொழியின மக்களும் செயல்பட்டாக வேண்டும். அவ்வகையில் ஒவ்வொரு தேசத்திலும் என்னென்ன நடந்தன, நடக்கின்றன என்பது குறித்தும், தமிழகத்தில் ஆரிய அதிகார வகுப்பின் உள்ளடி வேலைகள் என்னென்ன நிலையின என்பது குறித்துமான ஆய்வே இக்கட்டுரை.
ஏற்கெனவே, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட அரசியலும் நடைமுறைகளும் வெவ்வேறு வழித் தடங் களில் சென்று கொண்டிருக்கிற நிலையில் பல்வேறு குழப்பங்கள்...
தமிழ்நாடு விடுதலையா? தமிழீழ விடுதலையா? அல்லது இரண்டையும் இணைத்து ஒன்றாக முயற்சி செய்வதா? இரண்டையும் சேர்த்தா? தனித்தனியாகவா? அது முதலிலா, இது முதலிலா? ... இப்படி ஒரு வகைக் குழப்பம்..
தமிழ்நாட்டின் விடுதலைக்குரிய முதன்மை எதிரி யார்? இந்தியமா? திராவிடமா? திராவிடத்தை ஒழிக்காமல் இந்தியத்தை ஒழிக்க முடியுமா? திராவிடமே இரண்டகம் இழைத்தது. அதனால் அதையே முதலில் ஒழிக்க வேண்டும்! இரண்டையும் ஒரே இலக்கில் எதிர்த்திட வேண்டும்... இப்படியாக ஆரியத்திற்கெதிராக நூற்றாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் அடையாளச் சொல்லான ‘திராவிடம்’ என்பதை, ‘திராவிட நாடு’ என்று இப்போது இல்லாத ஒன்றையும், யாரும் இப்போது சொல்லாத ஒன்றையும் பொய் உருவாய்க் காட்டி அதை எதிர்ப்பதான இன்னொரு வகைக் குழப்பம்...
தமிழ்நாட்டிற்குக் காவிரிநீரைத் தரமறுப்பவர்கள் கன்னட இனவெறியர்களே... முல்லைப்பெரியாற்று நீரைத் தடுப் பவர்கள் மலையாள இன வெறியர்களே; அவர்களே தமிழர் களின் முதற்பகைவர்கள்... இப்படியாக அவர்களையே உடனடி எதிரிகளாகக் காட்டிச் செயல்படும் வழித்தடக் குழப்பம்...
தமிழ்நாடே அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலையில், அதை மீட்பதற்கான இலக்கின்றி, தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் தமிழர் ஒருவரையே முதலமைச்சராக்க வேண்டும்... பிறப்பால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர் ஒருவர் முதலமைச்சராக இல்லாததால் தான் தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய இழப்புகளும் ஏமாற்றங்களும்... என்று தமிழ்த்தேச விடுதலை அரசியலையே தடம் மாற்றித் தன்னை முதலமைச்சராக்கிக் கொள்ள முனையும் சிலரின் திசைவழியிலான இன்னொரு வகைக் குழப்ப வழித்தடம்...
இப்படியாகக் குழப்பப்படும் நிலையில், தமிழக மக்களிடையே தமிழ்த்தேச இயக்கங்களும், பொதுவுடைமை இயக்கங்களும், சாதி ஒழிப்பு இயக்கங்களும் செய்கிற களப் பணிகளைவிட வைதீகப் பார்ப்பனியச் சார்பிலான ஆர்எஸ்எஸ்-சின், அதன் பரிவார அமைப்புகளின் களப்பணிகளே அதிகமாகி வருகின்றன... அவற்றுக்குச் சார்பாக இயங்கும் கட்சிகளும், இயக்கங்களும் தனி யாட்களும் அவற்றுக்குக் களம் அமைத்துத் தருகின்றனர்...
தமிழ் உணர்வைச் சிதைப்பதற்கும், சாதிய உணர்வுகளை அதிகப்படுத்துவதற்கும், சாதி சார்ந்த மக்களிடையே உள்ள பகைப் போக்குகளை வளர்ப்பதற்கும், மதவியல் மூடநம்பிக்கைகளை அதிகப்படுத்துவதற்கும், தமிழகம், தமிழ்நாடு என்பதான அடையாளங்களே இல்லாமல் செய்வதற்கும் அத்தகைய வைதீக இயக்கங்கள் திட்ட மிட்டுச் செயலாற்றி வருகின்றன.
தமிழகத்தில் உள்ள தேர்தல் கட்சிகளுக்குள் தொடங்கி, இயக்கங்கள் பலவற்றுக்குள்ளும், உள்ளூரில் இருக்கும் சிறுசிறு மன்றங்களுக்குள் வரையிலும் நுழைந்து அவற்றைத் தன்வயப்படுத்துவது அல்லது கூறுபடுத்துவது, அவற்றின் குறிகோள்களை, கொள்கைகளை மாற்றுவது, அவற் றிடையே இந்துத்துவ வெறியை ஊட்டி அவர்களின் அறிவை நஞ்சாக்குவது போன்ற எண்ணற்ற வேலைகளே இப்போது அதிகமாக நடந்து வருகின்றன.
அவ்வகைப் போக்குகள் எவ்வாறெல்லாம் நடை பெற்றன, நடைபெற்று வருகின்றன அவற்றையெல்லாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பதான செய்திகளைக் குறிப்பாகவாவது தமிழர்கள் அறிந்தாகவேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை சில விளக்கங்களைத் தருகின்றது.
பிற கட்சிகளைப் போல பா.ஜ.க.வும் ஒரு கட்சியா?
திமுக போல, அதிமுக போல, மதிமுக போல இன்னும் பிற கட்சிகளைப் போல... பாஜகவும் ஒரு கட்சி தானே! அதை மட்டும் ஏன் கடுமையாக எதிர்க்கவேண்டும்..? அதில் சேர்வது மட்டும் என்ன வகையில் தவறு..? என்ப தாகவும், ஆர்எஸ்எஸ் அப்படி என்ன பெரும் கொடுமை களைச் செய்துவிட்டது..? அதன்மீது எதற்காக இவ்வளவு கடுமையான எதிர்ப்புகளைச் செய்ய வேண்டும்..? என்றும், பார்ப்பனச் சாதியினரா தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் பிற்படுத்தப்பட்டவர்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர்..? சாதி வெறியோடு, வன்முறை செய்பவர்கள் இடைநிலைச் சாதி வெறியர்கள்தாமே அவ்வாறு செய்கின்றனர்..
அவர்களை எதிர்க்காமல் பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டும் என்கிறீர்களே..! என்றும் அறியாத பலரும் இப்போதும் கேள்வி எழுப்பி வருகின்றனர்...
குமுகச் சூழல் காரணமாக நடைமுறை அளவில், மற்ற கட்சிகள் சாதியைப் பயன்படுத்தித் தங்கள் கட்சியை வளர்த்துக் கொள்ளவும், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றும், தங்கள் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கருதுகின்றனவேயன்றி, சாதி இருக்க வேண்டுமென்றோ, வர்ண வேறுபாடுகள் இருக்கவேண்டும் என்றோ, மூடநம்பிக்கைகள் பரப்பப்பட வேண்டும் என்றோ, அப்போக்குகளைத் தங்கள் கோட்பாடாகக் கொள்கையாகவோ அவை வைத்திருக்கவில்லை.
ஆனால், ஆர்எஸ்எஸ் - சிற்கும், பாஜக - விற்கும் அவை தாம் கொள்கையும் கோட்பாடும். எனவே அக் கோட் பாட்டைத் தாங்களாகவும் அல்லது கூலிக்கு ஆட்களை வைத்தும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
காந்தியைக் கொலை செய்தது தொடங்கி எனத் தொடர்ந்து காலம் நெடுகிலும் கொலை செய்ததும்; கல்புர்கி, தாபோல்கர், கௌரி லங்கேஷ் எனத் தொடர்ந்து செய்து வருவதும்; மண்டைக்காடு கலவரம், குஜராத் கோத்ரா வண்டி எரிப்பு - தொடர்ந்த கலவரங்கள், கோவைக் கலவரங்கள், மும்பைக் கலவரம் எனப் பன்னூறு மத, சாதிக் கலவரங்களை நேரடியாக ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களே செய்யாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் கூலிப் படைகள்தாம் செய்தன என்பது அனைவரும் அறிந்ததே.
நாடார், முக்குலத்தோர், வன்னியர், கவுண்டர் என்கிற ஒரு குறிப்பிட்ட சாதி என்பது ஒரு கோட்பாடு இல்லை. அவற்றின் ஆண்டைகள் சிலர் அவர்களின் வகுப்பு (சாதி-வர்க்க) அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்வதற்கான வகையில் தூண்டி, கூலி ஆட்களை வைத்துக்கொண்டு வெறிச்செயல் செய்துவருகின்றனர். ஆனால், ஒவ்வொரு சாதிக்குள்ளும் அச்சாதியின் பெரும்பான்மை மக்கள் ஏழை அடித்தட்டு மக்களாகவே உள்ளனர்; அவர்கள் தங்கள் வாழ்நிலையிலிருந்து விடிவைக் காண வேண்டு மான நோக்கம் உடையவர்கள்.
மார்க்சியம் தங்கள் வாழ்நிலை விடுதலைக்கு வழி சொல்வதாக அவர்களுள் சிலரும், பெரியாரியம் தங்கள் விடுதலைக்கு வழி சொல்வதாகச் சிலரும், வள்ளலார் வழி செயல்படுகின்றவர்கள் ஒரு பகுதியினரும், வைகுண்டர் வழி, பசும்பொன் முத்துராமலிங்கனார் வழி செயல்படுகின்றவர் என்று ஒரு பகுதியினரும் என்று அவரவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கையை நோக்கிச் செயல்படுவதோடு மேற்படி அந்தந்தச் சாதிகளுக்குள்ளான வெறிப் போக்குகளை எதிர்க்கவும் கண்டிக்கவுமான நிலைப்பாடு கொண்டுமிருக்கின்றனர்.
ஆனால், பார்ப்பனியத்தைக் கோட்பாடாக ஏற்றுக் கொள்பவர் எவரும் சாதி ஒழிப்பை ஏற்பதில்லை, (தீண்டாமையை ஒழிக்கவேண்டும் எனப் பசப்பு மட்டுமே பேசுபவர்கள்) வர்ண ஒழிப்பை ஏற்பதில்லை; முதலாளிய ஒழிப்பை ஏற்பதில்லை; மத மறுப்பை ஏற்பதில்லை; மூடநம்பிக்கை எதிர்ப்பை ஏற்பதில்லை.
எனவே, பார்ப்பனியமே சாதிக்கு, வருணத்திற்கு, மதத்திற்கு, மூடநம்பிகைகளுக்கெல்லாம் பக்க வலுவாய் இருந்து காத்து வருவதை அறியமுடியும். அதன் வழியில் பார்ப்பனிய அதிகாரத்தை ஒழிப்பது என்பதும் மேற் சொல்லப்பட்ட அதிகாரங்களை ஒழிப்பது என்பதும் பிரிக்க முடியாதவை. அவை அனைத்தோடும் பார்ப்பனியம் ஒன்றைஒன்று சார்ந்ததாகவே இயங்குகிறது.
பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்கள் மட்டுமே அன்று. பார்ப்பனர்களில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பனிய அதிகாரங்களைக் கொண்டவர்கள் என்பதால் இயல்பாகவே அவர்களின் அதிகாரமும் எதிர்க்கப்பட வேண்டிய நிலையிலாகின்றது. பிற சாதிகளைச் சார்ந்த சிலரும் பார்ப்பனிய அடிவருடிகளாகச் செயல்படுவதால் அந்த அடிவருடிகளும் அந்த அரங்குக்குள் இருப்பதன் வழி எதிர்க்கப்பட வேண்டியவர்களாகின்றனர்.
எனவேதான், இந்தியப் பார்ப்பனியத்தின் கருவாக இயங்குகிற அனைத்துக் கட்டமைப்புகளையும், குறிப்பாக ஆர்எஸ்எஸ்-சையும், அதன் ஆக்டோபசுக் கைகளாக இருக்கிற பாஜக உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட சங்பரிவார் அமைப்புகளையும் எதிர்க்கவேண்டியுள்ளது.
அவ்வகையில், முதலில் ஆர்எஸ்எஸ் கொள்கைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் பற்றி (அவை குறித் தெல்லாம் விரிவாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன என்றாலும், அவற்றின் சாரத்தைப் பற்றி)ச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.
ஆர்.எஸ்.எஸின் கொள்கை கோட்பாடுகள்
பல்வேறு மொழித் தேசிய இனங்கள் இந்தியாவிற்குள் இருக்கக் கூடாது என்கிறது ஆர்எஸ்எஸ்... அதாவது ‘இந்தியா’ என்பது ‘இந்து நாடு’; ‘இந்து’ என்பது ஓர் இனம்; அதற்கென்று ஒரு தனித்த பண்பாடு வாழ்க்கை முறைகள் உண்டு; அந்த வாழ்க்கை முறைக்குள் உட்பட் டவர்கள்தாம் சமணர்களும் புத்த சமயத்தவர்களும், சிவனியர்களும், வைணவர்களும், கடவுள் இல்லை - மதம் இல்லை என்பவர்களும்கூட... அதாவது, இந்தியாவிற்குள் பிறந்து சில காரணங்களால் மதம் மாறிப் போனவர்களும் அவர்கள் இங்குள்ள வாழ்முறையை ஏற்கிறபோது அவர் களும் இந்துக்கள்தாம் என்கிறது, ஆர்எஸ்எஸ்.
கல்வியில், வைதீகக் கல்வி முறைதான் இருக்க வேண்டும் என்கிறது; சமற்கிருதமும் இந்தியுமே கல்வி மொழியாகக் கட்டாயப்படுத்த வேண்டும் என்கிறது; (சமற்கிருதம் இந்தியாவின் பொதுமொழியாக ஆட்சி மொழியாக ஆக்கப்படுகிற வரை, இந்தியே இருக்கலாம் என்பதே அவர்களின் கொள்கை) ஆங்கிலமோ பிற மொழிகளோ கூடாது என்பதும்; வேண்டுமானால், தாய் மொழியை மொழிப்பாடமாக மட்டும் படிக்கலாம் என்பதும்; இந்துப் பண்பாடு வாழ்முறைகள் மட்டுமே கல்வியாகக் கற்பிக்கப்படவேண்டும் என்றும்; வேத, வைதீக, புராண சாஸ்திரங்கள் மட்டுமே வரலாறாக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வேலைகளைச் செய்கிறது.
கல்வி அனைவருக்குமாக, இலவயமாகத் தரப்பபட வேண்டும் என்பதற்காகவோ, வெளிநாட்டினர் பலரும் இங்கு வந்து கல்விக்கூடங்கள் அமைத்து இண்டர் நேஷனல் பள்ளிகள் நடத்துவதை மறுத்தோ, சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயாவில் ஆங்கிலக் கல்வியை மட்டும் முதன்மைப்படுத்தப்படுவதை மறுத்தோ, இங்குக் கல்வி கற்றவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு உழைத்திடுவதைப் பற்றியோ, இங்குள்ள வெளிநாட்டு ஐடி நிறுவனங்கள் வழியும், பிற கனிம வளங்கள் உள்ளிட்ட சொத்துக்களையும், மண்ணின் மக்களின் உழைப்பையும் வெளிநாடுகள் சூறையாடுவதைப் பற்றியோ, ஆர்எஸ்எஸ் கேள்வி கேட்பதும் இல்லை; அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவதும் இல்லை. திரைமறைவில் அவர்களோடெல்லாம் கூட்டுச் சேர்ந்து பங்கு வாங்கிக் கொண்டு ஆரியக் கருத்தியலுக்குச் சார்பாக அவர்களை வளர்க்கவே செய்கிறது...
சமற்கிருதமே உயர்ந்த மொழி என்றும், மாந்தர்கள் வாழும் இந்த உலகத்தில் மட்டுமல்லாமல் அவர்கள் மறைந்த பிறகு சென்றடைவதாகப் புளுகுகிற தேவலோகம் முழுக்க சமற்கிருதமே மொழி; அதையே அனைவரும் போற்றிக் கொள்ள வேண்டும்; எனவே, அதற்கு அதிகப் படியாகச் செலவு செய்வது தவறு இல்லை என்றும் கூறுகிறது, ஆர்எஸ்எஸ்.
சாதிகள், வருண வேறுபாடுகள் இருந்தால்தான் சமூகத்தில் மேலிருந்துகீழ் வரையான அனைத்துத் தரப்பு வேலைகளும் ஆச்சார ஒழுங்கு முறைகளும் செப்பமாக இருக்கமுடியும் என்கிறது ஆர்எஸ்எஸ்.
ஒவ்வொரு மொழி இன மக்களுக்கும் தனித்தனி வரலாறுகள் என்றெல்லாம் இல்லை; பாரதத்தின் வரலாறே. பழமையான வரலாறு; அதற்குள் உள்ளடக்கப்பட்டவையே பிற வரலாறுகள் எல்லாம்; எனவே, ஒவ்வொரு மொழித் தேசத்திற்கும் தனித்தனிவரலாறுகள் உண்டு என்பதும், குமுக வாழ்முறைகள், பண்பாடுகள் உண்டென்பதும் அப்பட்டமான பிரிவினைவாதம் என்கிறது ஆர்எஸ்எஸ்..
சுதேசி என்று முழக்கமிட்டாலும் அமெரிக்காவுடனும், பிற வல்லரசு நாடுகளுடனும் கூட்டுச்சேர்ந்து, அந்நாட்டு முதலாளிகளை அழைத்துவந்து இங்குள்ள வளங்களை எல்லாம் சூறையாடிக் கொண்டுசெல்ல வழி அமைத்துத் தருகிற இந்திய அரசே ‘தேசிய அரசு’ என்றும், மாறாகச் ‘சுதேசி’ என்கிற வகையில் முதலாளியச் சுரண்டல் கருத் துடைய வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களை எதிர்ப் பதும், வெளியேற்றச் சொல்வதும், அல்லது அதற்காகப் போராடுவதும் தீவிரவாதம் என்கிறது ஆர்எஸ்எஸ்.
மேலும் ஆர்எஸ்எஸ், வைதீகப் பார்ப்பனியக் கோட் பாடுகளுக்கு எதிரான மொழித்தேசங்களைச் சிதைக்கிறது.. பொதுவுடைமைக் கருத்துகளை எதிர்க்கிறது. மொழித் தேசங்களை இரண்டாக மூன்றாகப் பிளவுபடுத்த வேண்டும் என்று கூறுகிறது; அப்படிச் செய்தும் வருகிறது; சமற் கிருதம் இந்தி தவிர்த்த பிற மாநில மொழிகளை இழிவு படுத்திப் புறக்கணிக்கிறது. கோயில்களில் பார்ப்பன அதிகாரங்களைச் செலுத்தி சமற்கிருதத்தில் மட்டுமே வழிபாடு, குடமுழுக்குகளைச் செய்ய வலியுறுத்துகிறது..
அனைத்துக் கோயில்களிலும், அனைத்துச் சாதியினரையும் பூசாரிகளாக ஆக்கவேண்டும் என்றோ, திருமணம் உள்ளிட்ட வாழ்க்கைச் சடங்குகளை அனைத் துச் சாதியினரும் செய்யலாம் என்றோ ஆர்எஸ்எஸ் வலியுறுத்துவது கிடையாது.
தீண்டாமையை எதிர்ப்பதாக மேலோட்டமாகப் பேசியும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் எனச் சாதியக் கண்ணோட்டத்தோடு குமுகத்தை இயக்கி வருவதும், சாதிய உணர்வுகளும் வெறித் தனமும் குமுகத்தில் நீங்கிடாதபடி கவனித்துத் தூண்டிவிடுவதும், எந்த நிலையிலும் இடஒதுக்கீட்டை ஏற்காமல் மறுப்பதும் ஆர்எஸ்எஸின் திட்டமிட்ட தொடர் வேலையாக இருந்து வருகிறது... மதங்களுக்கு இடைப்பட்ட முரண்களை உருவாக்கி இந்து - வைதீகவெறி உணர்வைத் தூண்டி, குமுகத்தில் உள்ள எல்லா வகைச் சிக்கல்களுக்கும் வைதீக - இந்து அல்லாத பிற சமயத்தினர்களே காரணம் என்பதாகக் காட்டி வருகிறது.
சமணம் தொடங்கி புத்த சமயத்தினரையெல்லாம், அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு கொலை செய்ததும், தீயிட்டதுமான வெறித்தன வைதீக வெறியால் அழித்த கடந்தகால வரலாறும்.. அதன் தொடர்ச்சியாய்ப் பின்னர்க் கிறித்தவர்களை, இசுலாமியர்களை என அனைவரையும் எதிர்ப்பதன்மூலம், கலவரம் நடத்தி அழித்ததுடன், அவர்களை எதிர்த்து அடக்கித் தங்களை மட்டுமே கொண்டதான பாரத நாட்டை உருவாக்கினால் தான் எல்லாச் சிக்கல்களும் தீரும் என்பதாகக் கதை கட்டியது; இப்போதும் கதைகட்டி வருகிறது, ஆர்எஸ்எஸ்.
மொத்தத்தில் கடந்தகாலப் பார்ப்பனர்களின் வெறித்தனங்களை, வேத, மனுதர்ம, அர்த்தசாத்திரக் கொடுமைகளை - வன்முறைகளையே கொள்கையாக, கோட்பாடாக நடைமுறை யாக உள்ளடக்கத்தில் கொண்டிருப்பதே ஆர்எஸ்எஸ்...
இப்படியான நோக்கங்களுக்காக 1925-இல் தொடங்கப் பட்ட ஆர்எஸ்எஸ், அதை வளர்த்துக்கொள்வதற்காகவும் வைதீக பாரதத்தை உருவாக்கிக் கொள்வதற்காகவும் செயல்படுத்தும் தில்லுமுல்லுகள், அடாவடித்தனங்கள் கொஞ்சநஞ்சமல்ல..!
ஆர்எஸ்எஸ் தொடங்கப்படுவதற்குமுன் ஏறத்தாழ நூறாண்டுகள் அளவில் வைதீகப் பார்ப்பனியத்தின் கீழ் இந்துக்களை அணி திரட்டிட வேண்டுமான நோக்கத்தில் வங்காள, குசராத்திய, மராட்டிய, கொங்கனிய பிராமணர்கள் பல்வேறு இயக்க, செயல் முயற்சிகளைச் செய்தனர்.. அவற்றின் தொடர்ச்சியின் இறுதியாகவே ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டது.
மூஞ்சே, பாஞ்சிசடெ, எட்கேவர், தபல்கர், சாவர்க்கர் என ஐவரால் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டிருந்தாலும், முதல் ஒருங்கிணைப்புத் தலைவராக இருந்தவர் எட்கேவர்.
எல்லா மொழித்தேச மக்களையும் தங்களின் கொள்கை, கோட்பாடுகளுக்கு அடிமைகளாக்கி ஆள்வதற்காக அது எடுத்துக்கொண்ட வேலைத்திட்டங்கள் விரிவானவை.
ஒவ்வொரு மொழித் தேசங்களுக்குள்ளாகவும் அதன் கொள்கைகளையும் அமைப்பையும் கட்டமைத்துக் கொள்வதற்காக அது செய்த சூழ்ச்சிகள் கட்டாயம் அறியப்பட வேண்டியவை.. மிக விரிவானவை..!
அவ்வகையில் தமிழ்நாட்டிற்குள் அது நுழைந்ததும், நுழைந்து காலூன்றுவதற்கு அது எடுத்துக்கொண்ட முயற்சிகளும் மிகப்பெருமளவில் கவனிக்கப்பட வேண்டியவை..!
ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிராக இயங்கிக் கொண்டிருந்த தமிழ் உணர்வாளர்களை, தமிழ்த்தேச உணர்வாளர்களை, பார்ப்பனிய எதிர்ப்பு உணர்வாளர்களை, சாதி ஒழிப்பு நோக்க உணர்வாளர்களை, சமன்மை இலக்கு நோக்கிய உணர்வாளர்களை எல்லாம் கடந்து ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டிற்குள் எப்படி நுழைந்தது? தனது பரிவாரங்களுடன் எப்படி நுழைந்து கொண்டிருக்கிறது? என்பதைக் கூர்ந்து கவனித்திடாமல், அதை நாம் தடுத்து விடவோ, எதிர்த்துவிடவோ இயலாது..!
எனவே, ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டிற்குள் நுழைந்த வரலாற்றையும், அது தமிழ்நாட்டிற்குள் நிலையாய்க் காலூன்றுவதற்காக நடத்திக் கொண்டிருக்கக்கூடிய சூழ்ச்சியான உள்ளடி வேலைகளையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.
பார்ப்பனிய வெறிக் கருத்துகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து ஆயிரமாண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. வைதீகம் எனும் பெயரை உருவாக்கிக்கொண்டு அப் போதைய அரசர்களையும், நிலவுடைமை ஆண்டை களையும் அண்டித் தங்களைத் தக்கவைத்துக்கொண்டனர்.
சமற்கிருதத்தைத் ‘தேவமொழி’ என்று உயர்த்திக் கூறிக் கொண்டனர்; தங்களைத் ‘தேவ உலகத்தினர்’ என்று கூறிக்கொண்டனர்; மனுதர்மங்களும், வேதங்களும் அவ்வாறே சொல்வதாகக் கூறினர்.
பிரம்மா என்பவரே ‘படைப்புக் கடவுள்’ என்று கதை கட்டிவிட்டனர். அந்தப் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவர்களே பிராமணர்கள் என்றனர் (இரிக்கு வேதம் எட்டாம் கட்டளை). பிராமணர்கள்தாம் பிற வர்ணத் தவர்களுக்குத் தெய்வம் என்றனர் (பத்தாம் சுலோகம் - மனுதர்மம் - அத்தியாயம் 1 சுலோகம் 100).
பார்ப்பனர்கள், அரசர்கள் வழியாகவும், நிலவுடைமை யாளர்கள் வழியாகவும் நிலத்தையும் பொன்னையும் பொருளையும் கொடையாகப் பெற்றனர்.
தமிழர்களின் அறிவைப் பறித்து சமற்கிருதத்தில் எழுதிக் கொண்டபின், தமிழ் இலக்கியங்கள் பலவற்றை அழித்துவிட்டனர். குறிப்பாக மருத்துவம், வானியல், கணக்கியல், மெய்யியல் என அவர்களால் திருடப் பட்ட துறைசார்ந்த இலக்கியங்கள் பல.
ஆளவந்த வந்தேறி அரசர்களுடனெல்லாம் உறவாடி, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அவர்களுக்குக் காட்டிக் கொடுத்ததோடு, அவர்களுக்குத் துணை நின்று பார்ப்பனியச் சார்புடைய அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொண்டனர்.
அதே தொடர்ச்சியில்தான் ஆங்கிலேயர்கள் வணிகத் திற்காக நுழைந்தது தொடங்கி, அவர்கள் ஆட்சியை உரு வாக்கிக் கொண்டபின், ஒருபுறம் அவர்களின் அதிகார அணிகளுக்குத் துணையாக இருந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும், இன்னொருபுறம் ஆங்கிலேய எதிர்ப்புக்குரிய விடுதலைப் போராட்டங்களைத் தங்கள் தலைமையில் ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் வைதீகப் பார்ப்பனியம் இருதலைப் பாம்பாகச் செயல்பட்டது.
பார்ப்பனியச் சார்பு நிலைக்கு அல்லாத தலைமை களிடம் விடுதலைக்குப் பின் இந்திய அதிகாரம் போய் விடப் போகிறது எனும் அச்சத்தில், முழுக்கமுழுக்கப் பார்ப்பனிய அதிகாரத்தை நிறுவும்படியான அதிகாரம் வாய்ந்த ஓர் அரசை உருவாக்கும் நோக்கத்திலேயே பார்ப்பனர்கள் 1925-இல் ஆர்எஸ்எஸ்-சை உருவாக்கினர்.
(தொடரும்)
- பொழிலன்