முதல்வருக்கான இல்லத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் எந்திரத் துப்பாக்கிகளை வைத்து ஆயுத பூஜை செய்துள்ளார்.

இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தப்பூஜையில் கத்திகள், திரிசூலங்கள்,கோடாரிகள் போன்றவையும் வைக்கப்பட்டிருந்தன. தனக்குப் பாதுகாப்புக்காக நிற்கும் அதிரடிப்படை வீரர்களின் ஆயுதங்களையும் வாங்கி பூஜைக்கு வைத்துக்கொண்டார் மோடி. அவர் கேட்டதால் வேறுவழியின்றி ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு பூஜையைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள் அதிரடிப்படை வீரர்கள்.

கேட்டால், 2002 ஆம் ஆண்டிலிருந்து, நாங்கள் இந்த பூஜையைச் செய்து வருகிறோம் என்று மோடியின் செய்தித் தொடர்பு ஆலோசகர் ஜகதீஷ்தாக்கர் கூறியுள்ளார். தான் ஒரு வீரர் என்று முன்னிறுத்த விரும்பும் மோடியின் இந்த நடவடிக்கை கேலிக் கூத்தாகவே அமைந்துள்ளது என்று எதிர்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அதோடு, தங்கள் ஆயுதங்களை யாரிடமும் கொடுக்கக்கூடாது என்பது அதிரடிப்படை வீரர்களுக்கு எழுதப்பட்ட சட்டமாகும். அதையும் மீறி அவர்கள் இவ்வாறு மோடியின் பூஜைக்காகக் கொடுத்தது அவர் களுக்கே நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. தனது பாதுகாவலர்களுக்கே மோடி நெருக்கடியை உருவாக்கியிருக்கிறார்.

அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் வேத் மார்வா கூறுகையில், பூஜை செய்வதற்காக தங்கள் ஆயுதங்களை அதிரடிப்படைவீரர்கள் வழங்குவதை சட்டம் அனுமதிக்கவில்லை. தல்வர் கேட்டதால் முடியாது என்று அவர்களால் சொல்ல முடியவில்லை, என்றுதான் நான் நினைக்கிறேன் என்று சுட்டிக் காட்டுகிறார்.

Pin It