முன்னெப்போதைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறும் அடிப்படை மருத்துவம் (PHC)
170க்கும் மேற்பட்ட உலக நாட்டு அரசாங்கங்களுக்கு மருத்துவ ஆலோசனைûயும், வழிகாட்டுதலையும் வழங்கி வருவது உலக சுகாதார நிறுவனம். இதில் அங்கம்வகிக்கும் நாடுகளின் சுகாதாரத்துறை தலைமைப் பொறுப்பிலுள்ளோர் ஆண்டுதோறும் கூடி முக்கிய முடிவுகளை மேற்கொள்ளுமிடம் உலக சுகாதாரப் பேரவை. இப்பேரவையின் முடிவாக அந்தந்த காலத்திற்கேற்ப உலக சுகாதார அறிக்கைகள் வெளிவருகின்றன. நடப்பு ஆண்டு பேரவை “முன்னெப்போதைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறும் அடிப்படை மருத்துவம்” என்ற தலைப்பில் இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இது கி.பி. 2000க்குள் எல்லோருக்கும் மருத்துவ நலம் என்ற இலக்கை முன்வைத்த அல்மா அட்டா அடிப்படை மருத்துவ மாநாட்டின் 30-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளிவந்துள்ளது.
ஆறு பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஆவணம் முதல் பகுதியில் மாறிவரும் உலகம் மருத்துவத்துறையின் முன் எழுப்பியுள்ள சவால்களைப் பட்டியலிடுகிறது. அவற்றில் முக்கியமானது மூன்று. முதலாவது வளர்ச்சி என்ற பெயரால் உலகெங்கும் நடந்துள்ளவை மக்களிடையே ஏற்பட்டிருக்கிற சமச்சீரற்ற வளர்ச்சியின் பின்விளைவுகள் மற்றும் மருத்துவ நலச் சிக்கல்கள். இரண்டாவது மூத்த குடிமக்கள் நவீன நகர்மயமாதல் சூழலில் எண்ணிக்கையில் பெருத்து எதிர்கொள்ளும் சிக்கல்கள். மூன்றாவது புதிய வளர்ச்சிகளால் எழுந்துள்ள உணவுப் பாதுகாப்பின்மை, உலகளாவிய தொற்று நோய்கள் போன்றவை.
இப்படியாக விவாதிக்கத் தொடங்குகிற இந்த அறிக்கை அடிப்படை மருத்துவ நலம் புறக்கணிக்கப்படுவதே அடுத்த கட்ட நோய்களின் 70% பெருக்கத்திற்கு காரணம் என எடுத்துரைக்கிறது. அடிப்படை மருத்துவத்தில் மறுமலர்ச்சியைக் கோரும் இந்த ஆவணம் எழுத்திடை வரிகளில் இனிப்புத்தடவி அகக் காட்சியில் வர்ணஜாலங்களை வரவழைத்து பட்டாசாய் நொடியில் மறையும் வடிவமையான சர்வதேசிய ஆவணங்களில் ஒன்றாக ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வதில் நமக்கும் பங்குண்டு.

இனிய வாழ்வு உங்கள் கையில்
நூல் மதிப்புரை
கோவை மாவட்டம், கணியூரில் பிறந்த டாக்டர். நாகராஜன் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மனநலம் தொடர்பான உயர் பட்டயமும் பெற்றவர். அரசு பணி நிமித்தம் நாகர்கோவிலுக்கு இடம் பெயர்ந்தவர் அங்கு புகழ்பெற்ற மனநல மருத்துவராய்த் திகழ்கிறார்.
டாக்டர்.நாகராஜன் இலக்கிய ஆர்வலர். ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் உடையவர். சிறுகதைகள் கூட எழுதுவாராம். 2004 முதல் 2008 வரை அமுதம் எனும் உள்ளூர் பத்திரிக்கையில் டாக்டர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு அமுதம் பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. தரமான தாளில் 111 பக்கங்களைக் கொண்ட இந்நூல் அழகிய பல்வண்ண அட்டையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருப்பது நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதி டாக்டர் கு. சிதம்பர நடராஜன். ஐ.எம்.ஏ. யின் மேனாள் தேசியத் தலைவர் டாக்டர். ஜெகசீலன் மேத்தீஸ் அவர்களும் அறிமுகவுரை எழுதியுள்ளார்கள். காலை உதயம், உறக்கம், மனம், மனம் என்பது, கோபம், சந்தேகம், விரக்தி, பயம், 45க்கு மேல், ஆரோக்கியமாக வாழ, ஆளுமை, மேலாண்மை, எண்ணமும் செயல்பாடும், தனதாக்கும் குணம், திருமணத்தேர்வு, மணவாழ்வு, மகிழ்ச்சியான வாழ்வைத் தேடி, வாழத்தேவையானது, ஆணா? பெண்ணா?, மனச்சோர்வு, சில காரணங்கள், மதமா? மனிதமா? - இத்தகைய சுவாரசியமான தலைப்புகளில் சின்னச்சின்ன கட்டுரைகளை யாருக்கும் புரியும் வண்ணம் அழகிய தமிழில் டாக்டர் நாகராஜன் எழுதியுள்ளார்.
விரிந்த வாசிப்பறிவை மருத்துவப் புலமையோடு கலந்து கடினமான மனநல மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வை எளிதாகச் சொல்லமுடியும் என்பதற்கு முன்மாதிரியாக, மருத்துவர்களுக்கு பயிற்சி நூலாகவும் மக்களுக்கு பாடநூலாகவும் அமைந்துள்ளது. இதனை எழுதிய மூத்த மருத்துவர் டாக்டர் நாகராஜன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வெளியீடு : அமுதம் பதிப்பகம், நூல் விலை : ரூ. 60/-
519, பிரதான சாலை,
கிறிஸ்து நகர்,
Pin It