கடந்த 21 ஆம் தேதி தமிழகம் வந்த அமித்ஷாவை வரவேற்க வழியெங்கும் கட் அவுட்டர்களும், வாழைமரங்களும் வைக்கப்பட்டிருந்தன. அமித்ஷாவை வாழ்த்தவும் கூழைக்கும்பிடு போடவும் ஒரு கூட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்படி அமித்ஷாவின் பாதம் தொட்டு அவரின் பாதாரவிந்தங்களைத் தொழுதவர்கள் பிஜேபினர் மட்டுமல்ல அதில் அரைசதவீததிற்கும் மேல் அதிமுக கரைவேட்டிக் கட்டியிருந்த அடிமைகளும் அடக்கம் என்று சொல்கின்றார்கள் களத்திலிருந்தவர்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 40.8 சதவீதம் வாக்கு வங்கியை வைத்திருந்த அதிமுக 2.8 சதவீதம் வாக்கு வங்கியை மட்டுமே வைத்திருக்கும் அன்னக்காவடி பிஜேபியை இன்று தாங்கிப் பிடிக்கின்றதென்றால் அதிமுகவை இன்று கையில் வைத்திருக்கும் கும்பலின் யோக்கியதையை நாம் தெரிந்துகொள்ளலாம்.
ஏ1 குற்றவாளி இறந்துவிட ஏ2 குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டபின் இந்த இரண்டு ஊழல் பேர்வழிகளாலும் ஊட்டி வளர்க்கப்பட்ட ஊதாரி கும்பலின் கைகளில் மாட்டிக்கொண்ட அதிமுக தமிழ்நாட்டில் தனது அரசியல் பரப்பை விரிவுபடுத்த துடித்துக் கொண்டிருந்த பிஜேபியின் கையில் தொக்காக மாட்டிக் கொண்டது.
கட்சியை உடைப்பது, கபளீகரம் செய்வது, எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது போன்றவற்றில் கைதேர்ந்த பிஜேபிக்கு அதிமுகவை ஒரே அடியில் வீழ்த்துவது அரசியல் நோக்கில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் உடன் இருந்து குடி கெடுப்பது என்ற முடிவெடித்தது.
இதன் மூலம் தனது பரம எதிரியான திமுகவை வீழ்த்துவது மற்றொரு பக்கம் அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக தன்வயப்படுத்துவது என்ற செயல்திட்டத்தில் காய்கள் நகர்த்த ஆரம்பித்தது.
ஏற்கெனவே ஊழல் முறைகேடுகளில் சிக்கி அம்மணமாக இருந்த அதிமுக அடிமைகள் தப்பிச்செல்ல வேறு எந்த வழியும் இல்லாமல் தங்களின் உச்சிக்குடுமியை அனாமத்து பிஜேபியிடம் கொடுத்துவிட்டு ஆட்சி தப்பித்தால் போதும், தப்பிப்பிழைக்கும் நேரத்தில் கிடைத்ததைச் சுருட்டினால் போதும் என ஆத்மார்த்தமாக மனமகிழ்ச்சி கொண்டனர்.
இதன் பகுதியாகத்தான் பிஜேபி தமிழகத்தின் மீது திணித்த நீட், ஜிஎஸ்டி, உதய் மின் திட்டம் என அனைத்தையும் ஏற்றுக் கொண்டதோடு தமிழக மக்களால் காறி உமிழப்படும் பிஜேபியோடு கடந்த மக்களவை தேர்தலில் கூட்டணிவைக்கும் இழி நிலைக்கு அதிமுக அடிமை கூட்டம் தள்ளப்பட்டது.
இதன் விளைவாக தான் போட்டியிட்ட 39 இடங்களில் 38 இடங்களில் தோல்வியடைந்து 44.92 சதவீத வாக்குகளில் இருந்து 18.48 சதவீத வாக்கு வங்கிக்கு சரிந்தது. அதே சமயம் பாசிச பிஜேபி தனது வாக்கு வங்கியை 3.66 சதவீதத்தில் இருந்து 5.56 சதவீதமாக உயர்த்திக் கொண்டது.
இப்படி பிஜேபிக்கு கைமாறிய ஓட்டுக்கள் எல்லாம் நிச்சயம் அதிமுகவின் ஓட்டுக்கள் என நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். அதற்குக் காரணம் அதிமுகவும் பிஜேபியும் அடிப்படையில் கட்சி விசுவாசம் என்பதை பார்ப்பனியத்தை விதந்தோதுதல் என்ற எல்லைக்குள் நின்று வளர்த்தெடுத்ததுதான்.
ஏற்கெனவே மண் சோறு தின்னுதல், மொட்டை அடித்தல், மீசை மழித்தல், பால்குடம் தூக்குதல், கோயில்களில் சிறப்பு பூசைகள் செய்தல் போன்றவற்றில் பிஜேபியையே விஞ்சும் பார்ப்பன விசுவாசத்தை கட்சிக்குள் ஏ1 குற்றவாளி வளர்த்து வைத்திருந்தது அதன் தொண்டர்களுக்கு பிஜேபியோடு இணக்கமான, மனப்பூர்வமான தொடர்பு இருப்பதாக உணரவைத்திருக்கின்றது இது அதிமுக தொண்டர்களை பிஜேபிக்கு இணக்கமாக நிச்சயம் கொண்டுவரும்.
மேலும் ஆண்ட பரம்பரை போட்டியில் முன்னிலையில் இருக்கும் பல சாதிச் சங்கங்களும் தன்னை பிஜேபியோடு அடையாளப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதும் அவற்றில் சில ஏற்கெனவே அமித்ஷாவை அழைத்து வந்து விழா எடுத்திருப்பதும் வளர்ந்துவரும் சாதிவெறியின் பலன் பிஜேபிக்கு இருப்பதை நிரூபிக்கின்றது.
அது மட்டுமல்லாமல் தொழில் நகரங்களில் வடமாநிலங்களில் இருந்து குவிக்கப்பட்டிருக்கும் அத்துக்கூலி தொழிலாளர்களும், இங்கே பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவரும் வட மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பனியாக்களும், இன்னும் சில தமிழக முதலாளிகளும் பிஜேபியின் ஆதார சக்திகளாக மாறியிருப்பதை நாம் மறுக்க முடியாது.
இவை எல்லாம் பிஜேபி வெற்றிபெரும் அளவிற்கு வலுவாக உள்ளதா என பார்த்தால் இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். ஆனால் இது போன்ற காரணிகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வலுவானவை. ஒரு சதவீத வாக்கு இழப்பு கூட பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பாதிக்கலாம். இது களத்தில் முன்னிலை வகிக்கும் பிற கட்சிகளுக்கு நெருக்கடியை உருவாக்கும்.
எனவே பிஜேபி கைவசம் வைத்திருக்கும் 5 சதவீத வாக்குவங்கி என்பது தேர்தல் களத்தில் குறைத்து மதிப்பிட முடியாதது. காரணம் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளுமே வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் போட்டியிடுவது கிடையாது. யார் வெற்றிபெற கூடாது என்ற நோக்கத்திலும் அவை போட்டியிடுகின்றன.
நாம் என்னதான் தமிழகம் பெரியார் மண் என்று சொல்லிக் கொண்டாலும் வட மாநிலங்களுக்கு நிகரான முரட்டு சாதிவெறியர்களும், மத வெறியர்களும், மூட நம்பிக்கையாளர்களும் தமிழகத்தில் கனிசமாக உள்ளதை மறுத்து ஒதுக்கிவிட முடியாது.
அமித்ஷா போன்ற நபர்கள் இது போன்ற பிற்போக்கு கும்பலை வளைத்துப் போடுவதில் வல்லவர்கள் என்பதை நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகின்றோம். களமே இல்லாத மாநிலங்களில் எல்லாம் இன்று தமக்கான களத்தை பிஜேபி உறுதியாக நிறுவி இருக்கின்றது.
வெற்றி பெறுவதற்கு 100 சதவீத ஓட்டுவங்கி வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றாலும் வெற்றிபெற தேவையான வாக்கு வங்கியை உறுதியாக தக்கவைத்துக் கொள்ள ஏற்கெனவே தனக்கான நிரந்தர வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சிக் கடுமையாக தனது தொண்டர்கள் மத்தியில் களப்பணி ஆற்றுவதோடு கூடுதலான வாக்கு சதவீதத்தை உறுதி செய்ய கூட்டணி கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாக முக்கியத்துவம் கொடுத்து இணைத்துக் கொள்வது முக்கியம். அது ஒன்றுதான் வெற்றிக்கான வழியை உறுதிபடுத்தும்.
ஏற்கெனவே நடந்த முடிந்த மக்களவை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றில் திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் வென்றதானது ஆளும் அதிமுகவிற்கு எதிரான மனநிலை மக்களிடம் நிலவுவது வெளிப்படையாகத் தெரிவதால் நிச்சயம் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அது எதிரொலிக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
எனவே அமித்ஷாவின் வியூகம் எப்படி இருந்தாலும் அது நிச்சயம் திமுக கூட்டணியை பெரிய அளவில் பாதிக்கப்போவதில்லை. சொல்லப்போனால் அது அதிமுக என்ற கட்சியை இன்னும் மோசமான நெருக்கடிக்கு இட்டுச் செல்லும்.
தனது தொண்டர்களை மட்டுமல்லாமல் கட்சியையே பிஜேபியிடம் கொடுத்துவிட்டு அதன் இன்றைய கொள்ளையர்கள் வெளியேறும் சூழல் ஏற்படும். இவை எல்லாம் தேர்தல் கணக்கைத் தாண்டிய பிஜேபியின் திட்டத்தில் அடக்கமாகும்.
எனவே அமித்ஷாவின் தமிழக வருகைக்காக இங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் அச்சப்படுவதைவிட ஆளும் கட்சியான அதிமுகவே அச்சப்பட வேண்டும். வரும் சட்ட மன்ற தேர்தல் திமுக அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான போட்டி என்பதைவிட அதிமுக பிஜேபிக்கு இடையான போட்டி என்பதுதான் உண்மை.
ஒரு விபச்சார தரகனிடன் சிக்கிக்கொண்ட பெண்ணாக பிஜேபியிடம் அதிமுக சிக்கியுள்ளது. ஆனால் அதிமுகவோ விபச்சாரம் செய்வது தப்பில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டதைதான் அமித்ஷாவிற்கு அது கொடுத்த வரவேற்பு தெளிவுபடுத்துகின்றது.
- செ.கார்கி