1949 இல் தொடங்கப்பட்டது திமுக. ஆரியப் பார்ப்பனியத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகத் திராவிட நாடு விடுதலை ஒன்றே தீர்வு எனும் நோக்கம் அப்போது அதற்கு இருந்தது.
1952 - தேர்தலில் திமுக பங்கேற்கவில்லை. மாறாக திராவிட நாடு கோரிக்கையை யார் ஒப்புக் கொள்ளுகிறார்கள் அவர்களுக்கே தங்கள் வாக்கு என்பதாக அறிவித்தனர்.
1957 தான் அவர்கள் பங்கேற்ற முதல் தேர்தல். தேர்தலில் பங்கேற்றது முதல் பல்வேறு ஏற்ற இறக்கமான செயல்பாடுகளில் வளர்ந்து வந்திருக்கிற கால வரலாற்றில் திமுக செய்த பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழர்கள் என்கிற பேருணர்ச்சி அதற்கு முன்பாக இருந்தது. பன்னூற்றுக்கணக்கான தமிழறிஞர்களின் பேருழைப்பில் அத்தகைய உணர்ச்சி உருவாக்கப்பட்டிருந்தது.. அதைக் கட்டிக்காத்து அரசியல் அளவில் ஒருங்குகூட்டி ஓரளவு நிறைவான நகர்வுகளை அப்போது திமுக செய்தது..
ஆனாலும் அதன் நீண்ட நெடிய கால வளர்ச்சியில் பல பிழைகளையும் அது செய்து வந்திருக்கிறது..
ஒப்பீட்டளவில் அளவில் அந்த நீண்ட நெடிய காலங்களில் திமுக செய்த பிழைகளைவிட, 2009 தொடங்கி குறுகிய காலத்திற்குள், ஆட்சி அதிகாரத்திற்கு வராமலேயே சீமான் தமிழினத்திற்குச் செய்த, செய்துவரும் பிழைகள் மிகுதி..
சமஸ்கிருத கலப்பை விட்டொழித்து மறைமலைஅடிகள் வழிநின்று சமஸ்கிருதம் கலக்காத தூயதமிழை மக்கள் புழக்க மொழியாக ஆக்கியது,
- வள்ளுவர் கோட்டம் கண்டது.
- பூம்புகார் கோட்டம் நிறுவியது.
- குமரியில் வள்ளுவர் சிலை அமைத்தது.
- தன்மதிப்புத் திருமணத்தைச் சட்டப்படி ஏற்க வைத்தது.
- தமிழ்நாடு பெயரைச் சட்டப்படி நிறுவியது.
- மாநில உரிமைகள் பலவற்றைப் போராடிப் பெற்றது.
- பார்ப்பனியக் கொடு நெறியைப் பல இடங்களில் வீழ்த்தியது.
இப்படிப் பல சிறப்பான செயல்பாடுகளைத் திமுக செய்து வந்திருந்தாலும்..
- தேர்தல் அரசியல் பாதைக்குள் நுழைந்து போராட்ட இலக்கை குறைத்துக்கொண்டது.
- விடுதலைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன நாங்கள்தாம் கைவிட்டு விட்டோம் என்றது.
- இராஜாஜியின் தலைமையிலான சுதந்திரா கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது.
- நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று இந்திரா காந்தியுடன் கூட்டுச் சேர்ந்தது.
- உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று இந்தியப் பகை அரசை எதிர்க்காமல் உறவு கொண்டது.
- இந்தியை முற்றிலும் அழித்தொழிக்க துணிவற்று மெலிவான நிலையிலேயே அணுகியது.
- ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்தியது.
- தமிழீழச் சிக்கலில் உறுதிவாய்ந்த ஆதரவைக் கொடுத்து இந்திய அரசை நெருக்கிப் பிடிக்காமல் இணக்கப்படுத்திக் கேட்டுக் கொண்டிருந்தது.
என்று பல பிழைகளைச் சுட்டலாம்..
ஆனால், அதன் பிழைகள் வெளிப்படையானவை.. அரசியல் நிலைப்பாட்டின் சறுக்கல் பிழைகள்.
அதேபோது சீமான் இந்தக் குறுகிய காலத்தில் செய்துவிட்ட அல்லது செய்து வரும் பிழையான செயல்கள் திரைமறைவிலானவை.. வெளிப்படையானவை அல்ல.
தொலைவிலிருந்து அவரின் பேச்சைக் கேட்பவர்களால் உணர்ந்துகொள்ள முடியாதவை. புறநிலையில் தமிழ்த் தேசத்தைப் பேசுவதுபோல் புறத்தோற்றத்தைத் தந்து,
பின்னணியில் ஆரியப் பார்ப்பனியத்தோடு.. அதன் அணிகளோடு கூட்டு வைத்து உறவாடுபவை.
எனவேதான் தமிழ்த் தேசத்தின் முதன்மை எதிரி என இந்தியப் பார்ப்பனியத்தை - பாஜகவை முதன்மை எதிரியாக அவரால் அடையாளம்காட்டி எதிர்க்க முடியவில்லை. முதல் எதிரியாக நிறுத்திப் போராட முடியவில்லை.
திமுகவே அரசியல் எதிரி.. என்று பாஜகவின் குரலை அவரும் தன் குரலில் இணைத்து முழங்குகிறார்.
பல குரல்களில் பாஜகவினுடையதும் சீமானுடையதும் ஒன்றாக இருப்பதற்கு அதுவே காரணம்.
இன்றைய தேர்தல் சூழலில் பார்ப்பனிய பாஜகவை வீழ்த்துவதற்குத் திமுகவைத் தவிர அதன் கூட்டணிக் கட்சிகளைத் தவிர வேறு யாரும் பார்ப்பனிய பாஜகவை முதன்மை எதிரியாகத் தேர்தல் களத்தில் நிறுத்தி போட்டியிடவில்லை என்பதையும் உணர்ந்தாக வேண்டும்..
திமுகவை சரி என்பதற்காக அல்ல.. வேறுயாரும் இந்தியப் பார்ப்பனியத்தை - அதன் இன்றைய முழு உருவாய் இருக்கிற பாஜகவை முதன்மை எதிரியாக நிறுத்தி எதிர்க்கவில்லை என்பதற்காக.
தமிழ்த்தேசிய அரசியலைத் தேர்தல் அரசியல் வழியாகப் பெற்றுவிட முடியும் என்பதாக நாம் நம்பவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால், அதே போது தேர்தல் அரசியல் வழியாகவும் இந்தியப் பார்ப்பனியத்தை, பாஜகவின் வெறியை வேரறுத்து வீழ்த்தியாக வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்தப் படிப்பினைகளையெல்லாம் தொகுத்துத் தமிழ்த்தேச அரசியலாளர்கள்.. மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு மிகப்பெரும் முன்னணியைக் கட்டியெழுப்பித் தேர்தல் களத்திலும் முன்னின்று இந்தியத்தையும், வல்லரசித்தையும், பார்ப்பனியத்தையும், சாதியத்தையும் என அனைத்து அதிகாரங்களையும் வீழ்த்துகிற பேராற்றல் வாய்ந்த எதிர்காலச் செயல்பாடு தேவையாகிறது.
அதேபோது நாளைய புரட்சிக்காக இலவுகாத்து இன்றைய காலத்தை வீணடித்துவிட முடியாது. தீவிரப் பொதுவுடைமையர்களின் அத்தகைய கடந்த கால இழப்புகள் ஏராளம்.
இன்றைய தேர்தல் வழக்கமான கட்சிகளின் தேர்தல் என்பதாக மட்டும் அளவிடமுடியாத நிலைகொண்டது.
இந்தியப் பார்ப்பனிய அதிகார வெறிக்கும்.. மொழித் தேச உரிமைகளுக்கும்.. - ஆன இருபெரும் போராட்டங்களுக்கு இடைப்பட்ட அடையாளங்கள் வெளிப்படக் கிளர்ந்து வந்திருக்கக்கூடிய தேர்தலாக இது இருக்கிறது.
பார்ப்பனியம் தன் அதிகாரத்தை நேரடியாகத் தமிழ்நாட்டிற்குள் நிலைப்படுத்துவதற்கு எடப்பாடி, கமலகாசன், சீமான் - போன்றவர்களை வெவ்வேறு அளவீடுகளில் பயன்படுத்தி வெறி கொண்டு பாய்ந்து வருகிறது..
அதைப் பார்ப்பனிய, வல்லரசிய எதிர்ப்பு கொண்ட முற்போக்குத் தமிழ்த் தேச உணர்வாளர்கள், மார்க்சிய உணர்வாளர்கள், பெரியாரிய உணர்வாளர்கள், அம்பேத்காரிய உணர்வாளர்கள் என எல்லாரும் ஒருங்கிணைந்து வீழ்த்துவதற்குரிய திட்டத்தைத் தீட்டியாகவேண்டும்.
அத்திட்டத்தின் செயல்பாட்டின் ஒரு பகுதியாகத்தான் திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இ பொ க, மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதன் வழி இந்தியப் பார்ப்பனியத்தை, பாஜகவை எதிர்ப்பதில் வீழ்த்துவதிலான ஒரு பகுதி முயற்சியும் முன்னெடுக்கப்படுகிறது. இதில் காலமும் செயலும் ஒன்றும் வீணாகிவிடப்போவதில்லை.
காலத்தையும் சூழலையும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்குச் சார்பாய்ப் பயனாக்கிக் கொள்ளாமல் போகிறபோதுதான் காலமும் செயல்களும் வீணாகிப் போகுமே அல்லாமல், பார்ப்பனிய பாசிசத்தை எதிர்க்கிற வகையில் தேர்தல் கட்சிகளையும் உந்தித் தள்ளுகிற முயற்சியால் எதுவும் வீணாகி விடப்போவதில்லை.
வீழட்டும் பார்ப்பனிய பாஜகவின் வெறியாட்டம்!
வெல்லட்டும் தமிழ்த்தேச மக்கள் விடுதலைப் போராட்டம்!
பொழிலன்
ஒருங்கிணைப்பாளர்
தமிழக மக்கள் முன்னணி