Karunanidhiகருத்துரிமை காக்கத் தமிழகத் தலைவர்கள் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தது வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றிய தங்கள் ஆதங்கத்தைத் தெரியப்படுத்தியது கிட்டத்தட்ட எல்லோரும் இதே கருத்தில்தான் உள்ளனர் என்பதை வெளிப்படுத்துவதாகவும் கட்டுரை பரந்துபட்ட மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளதை தெளிவுபடுத்தியது.

எனவே, இது பற்றி மேலும் ஆழ்ந்த பரிசீலனைக்காகவும் சீரிய சிந்தனைக்காகவும் சில கருத்துகள்.

தமிழர்களை பாதிக்கும் பொதுவான அரசியல், பொருளியல், சமூகப் பண்பாட்டுப் பிரச்சனைகளுடன் அண்டை மாநிலங்களால் பாதிக்கப்படும் பிரச்சனைகளாக காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, கண்ணகி கோட்டம் ஆகிய பிரச்சினைகள், அடுத்து கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் படும் அவதிகள், உயிரிழப்புகள், சிங்கள இனவெறி அரசு ஈழத் தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதலைக் கண்டித்து நாம் எதுவும் செய்ய உரிமையற்றவர்களாய், கண்ணீர் விடவும், இரங்கல் தெரிவிக்கவும் கூட அனுமதி மறுக்கப்பட்டவர்களாய் இருக்கும் அவலம் என இப்படிப் பல பிரச்சனைகளைச் சொல்லலாம்.

Jayalalithaஇப்பிரச்சனைகளுக்காகத் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறாமல் இல்லை. ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு பிரச்சனை குறித்து ஏதோ சில அமைப்புகள் போராடிக் கொண்டுதான், குரல் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றன. காட்டாக ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்காகத் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தொடர்ந்து போராடி வருகிறது. இதே போல காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைகளுக்கும், அந்தந்த ஆற்றுப் பாசனப் பகுதி விவசாயிகளும், பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. முதலான அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு இன உணர்வு அமைப்புகளும் அவ்வப்போது குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் இக்குரல்கள் அனைத்தும் ஒருமித்து ஒரே மேடையில் அல்லாமல் தனித்தனி மேடைகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இத்துடன் அந்தந்த பிரச்சனைக்காகவும் அது அது சார்ந்த அமைப்புகள் மேற்கொள்ளும் போராட்ட நடவடிக்கைகளுக்கு சகோதரக் கட்சிகள் சார்பில் அதன் தலைவர்கள் அந்நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு ஆதரவு தெரிவித்தும் வரு கின்றனர்.

ஆக, தமிழகத்தைப் பாதிக்கும் இப்பிரச்சனைகளில் யாருக்கும் எவருக்கும் மாற்றுக் கருத்து, எதிர்க் கருத்து இல்லை. ஆனாலும், இப்பிரச்சனைகளுக்கு அனைவரும் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து ஒரே மேடையில் ஒருமித்து குரல் கொடுப்பதில்லை. கொடுக்க முடிவதில்லை. ஏன் இந்த நிலை?

ஆட்சியாளர்கள் வருவார்களா, மறுப்பு, தடை என்றெல்லாம் வராதா என்று சிலர் நினைக்கலாம். வரட்டும். அப்படியே வந்தாலும், அதையெல்லாம் மீறி ஒரு லட்சம் பேருக்கு மேல் கைதாகி தமிழகச் சிறைகளை நிரப்பினால் ஆட்சியாளர்கள் அதிர்வார்கள். தில்லி அதிரும். பிரச்சனைகளில் கோரிக்கைகளில் அக்கறையில்லாவிட்டாலும் வாக்கு வங்கி, மக்கள் ஆதரவு எங்கே தங்களுக்கு எதிராகப் போய்விடுமோ என்று அஞ்சியாவது இதற்குப் பணிந்து இறங்கி வருவார்கள்.

திலலிக்கு மாற்றி மாற்றி காவடி தூக்கும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளும், தில்லியை வற்புறுத்தியோ அல்லது அதற்கு அழுத்தம் தந்தோ தமிழகக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கச் செய்வார்கள். பிரச்சனையில் அக்கறை இல்லாவிட்டாலும் தங்கள் இருப்பு கேள்விக்குறியாகி விடுமோ என்று அச்சத்திலாவது இதைச்செய்வார்கள். அதாவது தமிழக நலன்களில் அக்கறை கொண்டு அவ்வப்போது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த மூன்றாவது அணி பிரச்சனையைக் கையில் எடுக்கும். மக்கள் அதன் பின்னால் திரள்வார்கள் தங்கள் இருப்பு கேள்விக்குள்ளாகி விடும் என்கிற எச்சரிக்கை அவர்களை இதைச் செய்யவைக்கும்.

எல்லாம் நினைத்துப் பார்க்க நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் நிறைவேறுமா என்று பலரும் ஆதங்கப்படும் குரல் கேட்கிறது.

நியாயம், இக்கட்சிகளையும், தலைவர்களையும் தேர்தல் அரசியலை விட்டு வாருங்கள் என்றோ, அவர்கள் கட்சி நலனையோ, செல்வாக்கையோ இழந்து தியாகம் செய்யுங்கள் என்றோ நாம் அழைக்கவில்லை. மாறாக இதே தேர்தல் அரசியலில் இருந்து கொண்டே இப்போதுள்ள கட்சியமைப்பு செல்வாக்கு, பதவி சுகங்களை அனுபவித்துக் கொண்டே, தமிழகத்துக்காக, தமிழர் நலனுக்காக ஒரு மாற்றுக் கூட்டணியை உருவாக்குங்கள் என்றே நாம் கேட்டுக் கொள்கிறோம்.

சற்று யோசித்துப் பாருங்கள். அண்டை மாநிலங்கள் நம்மைத் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. தலையிட்டுத் தடுக்கவேண்டிய தில்லி அரசு மௌனம் காத்து காரியார்த்தமாய் இருந்து வருகிறது. அதைத் தட்டிக் கேட்டு தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள் தில்லிக்கு கைகால் பிடித்து சேவகம் செய்து தங்கள் குடும்ப நலன் காத்து, தமிழர் நலனைக் காவு கொடுத்து வருகிறார்கள்.

ஈழத் தமிழர்களுக்கு நாம் எதுவும் செய்ய முடியாத நிலை. தமிழக மீனவர்களை அன்றாடம் சுட்டுக்கொல்லும் சிங்களக் கப்பற்படை, தமிழர்களைக் காப்பாற்ற வக்கற்ற இந்திய கடற்படை, தமிழக காவல்படை. இப்படியே போனால், நாளை தமிழ்நாட்டின் கதிதான் என்ன? தமிழ்நாட்டிலேயே தமிழன் அனைத்து உரிமைகளையும் இழந்து அனாதையாகத் திரிய வேண்டியதுதானா? தில்லி மற்றும் அண்டை மாநில ஆதிக்கங்களுக்கு அடிமைப்பட்ட நாலாந்தரக் குடிமகனாக வதைய வேண்டியது தானா?

இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. அதனால்தான் சொல்கிறோம். தமிழக நலனில் தமிழர் நலனில் அக்கறையுள்ளவர்கள் இது பற்றிச் சிந்தித்து இதற்காக ஒரு கூட்டணி அமையுங்கள் என்கிறோம். இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் மக்கள் அதற்கு ஆதரவு தருவார்களா என்கிற சந்தேகம் சிலருக்கு எழலாம்.

இப்படிப்பட்ட சந்தேகமே யாருக்கும் எப்போதும் எழத் தேவையில்லை. காரணம் மக்கள் இப்பிரச்சனைகளில் எப்போதும் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றனர். அவர்களது ஆதங்கங்கள் எல்லாம் தலைவர்கள் ஒன்றுபடாமல் இருக்கிறார்களே, பிரச்சனைக்குத் தீர்வு காண குரல் எழுப்பாமல் இருக்கிறார்களே என்பதுதான். ஆகவே இப்படி ஒரு கூட்டணி அமைகிறது என்றால் மக்கள் அதற்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள். தொடக்கத்தில் சில தயக்கங்கள் இருந்தாலும், பிறகு இதன் நடைமுறைச் செயல்பாடுகளைப் பார்த்து முழு மூச்சோடு இதனோடு ஒன்று படுவார்கள். இதற்காக எத்துணைத் தியாகமும் செய்ய முன் வருவார்கள்.

இப்படி ஒரு நிலை வந்தால், அப்புறம் தமிழகத்தின் வரலாறே வேறாக, தமிழகம் தன் உரிமைகளை எல்லாம் மீட்டு தலை நிமிர்ந்து நிற்கும் பெருமை மிகு வரலாறாக மாறிவிடும். ஆகவே, தமிழகத் தலைவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். வரலாற்றில் மனிதர்கள், அவர்கள் எவ்வளவு செல்வாக்கோடு, வசதியோடு வாழ்ந்தார்கள் என்பதை வைத்து மதிக்கப்படுவதில்லை. நினைக்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் தாங்கள் முன் வைத்த இலக்குகளை நோக்கி எந்த அளவுக்கு உழைத்தார்கள், பாடுபட்டார்கள், எந்த அளவுக்கு அதற்கு விசுவாசமாக அர்ப்பணிப்போடு இருந்தார்கள் என்பதை வைத்தே தான் மதிக்கப்படுகிறார்கள். எனவே நமது தமிழகத் தலைவர்கள் இப்படிப்பட்ட வரலாற்று நாயகர்களாகத் திகழ்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

தற்போது பா.ம.க., சிறுத்தைகள், ம.தி.மு.க. தலைவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் தமிழக, தமிழர் நலன் சார்ந்ததுதான். ஆனால், அவர்கள் அதை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள். அதற்கான அவர்களின் நடவடிக்கைகள் என்ன, செயல்திட்டம் என்ன தற்போதுள்ள நிலையில் நீடித்துக் கொண்டே அதை நிறைவேற்றுவது சாத்தியமா என்பதெல்லாம் மிக ஆழமான கேள்விகள். இதிலுள்ள நடைமுறைச் சிக்கலும் அதுதான். எனவே இவர்கள் மாற்று முயற்சி பற்றி சிந்திக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு மாற்று முயற்சியே நாம்பரிந்துரைக்கும் மூன்றாவது கூட்டணி.

தொடக்கத்தில் இது சில நெருக்கடிகளைச் சந்திக்கலாம். ஆனால் எல்லா அமைப்புகளும் எல்லா முயற்சிகளுமே தொடக்கத்தில் இப்படிப் பல நெருக்கடிகளைச் சந்தித்தே வளர்ந்து வந்திருக்கின்றன, முன்னேறி வந்திருக்கின்றன இந்த வகையில் தமிழக நலனுக்காக நாம் இந்த தொடக்க இடுக்கண்களைச் சகித்துக் கொள்ளலாம் என்கிற நோக்கில் பார்த்தால், இச்சிந்தனைக்கு மனம் கொடுக்கலாம். இது சார்ந்த முயற்சிகளில் இறங்கலாம்.

அல்லாமல், இதே நிலைதான் நீடிக்கும் தொடரும் என்றால், இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே தமிழகம் உரிமை இழந்து, வஞ்சிக்கப்பட்டு, பின்கோக்கிக் கிடப்பது என்பதை நினைக்கவே வேதனையாக இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு அமைப்பு தனித்தனியே அதனதன் சக்திக்கு உட்பட்டு ஒரு போராட்டம் நடத்துகிறது. ஆனால் பிரச்சனை அப்படியே தொடர்கிறது.

இப்படிப்பட்ட போராட்டங்களுக்கு பெரிய கட்சித் தலைவர்கள் வருகிறார்கள், ஆதரவு தருகிறார்கள். வாழ்த்திப் பேசுகிறார்கள், போகிறார்கள் என்கிற அளவில் பெரும்பாலும் அவர்கள் விருந்தாளி மனப்பான்மையோடு தான் இருக்கிறார்களே தவிர, குறிப்பிட்ட பிரச்சனை சார்ந்து அவர்களும் அக்கறையோடு தங்கள் அமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்துவதில்லை. எல்லாம் ஓர் அடையாள பூர்வமாகவே அமைந்து விடுகிறது.

நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிட்டினால் இப்படி. அல்லாமல் தடை என்று வந்தால், மீறுவது, கைதாவது என்று ஆகி, நிகழ்ச்சியைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் திருமண மண்டபங்களிலோ, சமுதாயக் கூடங்களிலோ நடத்தி, நண்பகல் காவல்துறை வழங்கும் உணவை உண்டு, ஓய்வெடுத்து மாலை விடுதலையாவது, இல்லாவிட்டால், சிறைப்பட்டு, சில நாள் கழித்து பிணையில் வெளிவருவது என்று இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தால், இப்படியே நிலைமை நீடித்தால் இவற்றுக்கெல்லாம் முடிவுதான் எப்போது பிரச்சனைகள் தீருவதுதான் எப்போது?

சரி. இப்படியே நாம் வாழ்ந்து மறைந்தால் நமக்குப் பிறகான தமிழகம் எப்படி இருக்கும்? நமக்குப் பிறகான தலைமுறையின் வாழ்க்கை எப்படியிருக்கும்? இதை விடவும் கொடுமையானதாக, மோசமானதாக, கேவலமானதாக இருக்காதா? அப்போது அந்தப் புதிய தலைமுறை நமக்குப் பிறகான நம் சந்ததி நமது செயலற்ற தன்மைக்காக நம்மைச் சபிக்காதா. வரலாற்றில் இது என்றென்றைக்கும் நமக்கு களைய முடியாத களங்கம் ஆகாதா?

தமிழர் தலைவர்கள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும். தமிழர் நலன் காக்க தமிழர் உரிமை காக்க ஈழத்தமிழனரைப் பாதுகாக்க மாற்று அணியை உருவாக்க முயல, முனைய வேண்டும்.

- மண்மொழி 22, 2008, மே – ஜூன்

Pin It