பிரான்ஸ்

நேட்டோ, வார்ஸா இராணுவ ஒப்பந்தக் கூட்டு நாடுகளுக்கு அப்பால் தனியொரு நாடாக அணுசக்தித் தொழிலில் மிக அதிகம் ஈடுபட்டிருக்கும் நாடாகவும், ஆயுத விற்பனை செய்து வரும் நாடாகவும் பிரான்ஸ் இருக்கிறது. இந்நாட்டுக்குத் தேவைப்படும் மொத்த மின்சாரத்தில் 60% அணுசக்தி நிலையங்கள் மூலம் பெறப்படுகின்றன. உலகிலேயே அதிகமான சதவீதம் அணுமின் சக்தியைப் பெறும் நாடு பிரான்ஸ் என்றே அறியப்படுகிறது.

இவ்வாறு, அதிகமாக அணுசக்தி சார்ந்து இயங்குவதால் பிரான்சின் மின்சாரக் கழகத்திற்கு மட்டும் 32 பில்லியன் அதாவது 3,200 கோடி அமெரிக்க டாலர் கடனாக உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகமாக அணுசக்தித் தொழிலில் ஈடுபடுவதால் கழிவுகளும் அதிகமாகச் சேர்ந்து கழிவுகளை என்ன செய்வது என்பது இந்த நாட்டுக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.

இங்கு லாஹேக் என்னும் தீபகற்பப் பகுதியில் எரிபொருள் மறுபதனம் செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. 1981ஆம் ஆண்டில் இங்கு ஒரு தீ விபத்து ஏற்பட்டது. பிறகு 1984ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு கசிவு விபத்தில் 726.1 ரெம் அளவுக்கு அபாயகரமான கதிரியக்கம் வெளிப்பட்டது. இந்தத் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 800டன் எரிபொருள் மறுபதனம் செய்யத் திட்டமிட்டப்பட்டது.

ஆனால், நடைமுறையில் 79 முதல் 704டன் வரையே மறுபதனம் செய்ய சாத்தியப்பட்டது. இங்கு 1984ல் ஏற்பட்ட கசிவுக்குப் பிறகு, அணு உலைகள் பற்றிப் பத்திரிகைகள் அக்கறை காட்டத் தொடங்கின. மக்கள் விழிப்புற்று அணு சக்திக்கெதிராகப் போராடத் தொடங்கினார்கள். இங்கு 900 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்த போதும் 300 மெகாவாட் அளவே உற்பத்தி நடைபெறுகிறது.

பிரான்சு நாடு இந்த ஹேக் தீபகற்பப் பகுதியை எரி பொருள் மறுபதனம் செய்யும் தொழிற்சாலை நிறுவுவதற்காக தேர்ந்தெடுத்ததன் காரணம், இத்தீவு பிரான்சின் பிரதான நிலப்பகுதியை விட்டுத் தள்ளியுள்ளது. இங்கு ஏதும் விபத்து நேர்ந்தால், ஏற்படும் கதிரியக்கம் பிரான்ஸ் நாட்டு மக்களை அதிகம் பாதிக்காத வகையில், அக்கதிரியக்கத்தை வேறு திசைக்குக் கொண்டு செல்லும் வகையில் இங்கு வீசும் பருவக்காற்றுகள் அதற்குச் சாதகமாக உள்ளன.

இத்தொழிற்சாலை மூலம் கடலில் கொட்டப்படும் கழிவுகளும், கடலின் நீரோட்டத்தோடு கலந்து, அது கடலின் தொலை தூரத்துக்குக் கொண்டு சென்றுவிடும் வகையிலும், அது பிரான்சைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளைப் பாதிக்காத வகையிலும் வாய்ப்பாக உள்ளதாகச் சொல்லுகிறார்கள். அதோடு, பேரபாயம் விளைவிக்கும் விபத்து எதுவும் நேர்ந்தால் இப்பகுதியைப் பிரான்சிலிருந்து எளிதாகத் துண்டித்து விடலாம் என்றும் சொல்கிறார்கள்.

இதுபற்றி ஜெர்மானிய அறிஞர் ராபர்ட் யங் என்பவர் 1978இல் ‘அணுசக்தி அரசு’ என்ற நூலை எழுதியிருப்பதாகப் புறப்பாடு ஜூலை ஆகஸ்டு- 88 இதழ் ‘கதிரியக்க உணவு’ என்கிற கட்டுரை தெரிவிக்கிறது. அக்கட்டுரையில் உள்ள தகவல்களாவன,

ஹேக் கிராமம், பிரான்சு நாட்டில் உள்ள சிறு தீபகற்பப் பகுதியாகும். அங்கு வாழும் மக்களது விருப்பத்துக்கு மாறாக அவர்களை அடக்கி ஒடுக்கியும், மிரட்டியும், அச்சுறுத்தியும், சிலரைக் கொன்றும் இந்த நிலையம் கட்டப்பட்டது.

இந்த எரிபொருள் மறுபதன நிலையத்திலுள்ள புகை போக்கியிலிருந்து ஆக்டினைடு என்ற விஷப்பொருள் காற்றில் கலக்கிறது.

1974ஆம் ஆண்டு முதல் மெர்குரி 203, அயோடின் 131, மேலும் டிரிட்டியம், கிரிப்டான் 85 ஆகிய நச்சுப் பொருள்கள் ஆபத்தான அளவுக்கு வெளியிடப்பட்டன.

1975ஆம் ஆண்டு மட்டும் 11,000 கியூட் டியூரிட்டியம், 23,000 கியூரி ருத்னியம் 106, 1,000 கியூரி சீலியம் 134, 137 ஆகிய தனிமங்கள் அக்குழாய்கள் வழியாக வெளியேறின.

கடலில் புளுட்டோனியக் கழிவுகளை எடுத்துச் செல்லும் குழாய்களில் 30 தடவைக்கும் மேலே கசிவு ஏற்பட்டுள்ளது.

மீன்கள் கதிர் வீச்சுக்குள்ளாகி, அவற்றில் விநோதமான பருக்களும், தசைகள் கருத்தும், பல தலைகள் உடையதுமான விசித்திர மீன்கள் வலையில் அகப்பட்டன.

அப்பகுதியில் டீ, பால் விற்பனை ஆகவில்லை. 1978ஆம் ஆண்டிலிருந்து அணுசக்தித் துறையினரே பாலை வாங்க வேண்டியதாயிற்று.

விலங்கினங்களும், பறவைகளும் கதிரியக்கத்தைத் தொலை தூரங்களுக்குக் கொண்டு செல்கின்றன.

கதிரியக்கக் கழிவுகள் ஈயக்கலனில் அடைக்கப்பட்டு 300 அடி ஆழத்தில் புதைக்கப்படுகின்றன.

இவை 700-8000C வரை வெப்பமுள்ளவை. இவை மேலும் வெப்பமேறாமல் தடுக்கவும், உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் இராட்சத யந்திரங்கள்மூலம் குளிரூட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இயந்திரங்கள் பழுது அடையும் போதும், அல்லது சிறுசிறு தடைகள் ஏற்படும் போதும் ஈயக் கலனில் வெடிப்போ கசிவோ ஏற்பட்டு வருகிறது.

அடுத்து, இங்கு ப்ளான் மின்விலே என்ற இடத்தில் அணு மின் நிலையத்தின் குளிர்விக்கும் திறன் குறைந்து, இரண்டு முறை தடங்கல் ஏற்பட்டது.

நோஜெண்ட் சர்சேன் என்ற இடத்தில் ரேடியோக் கதிர் கொண்ட ஆவி வெளியேறியது.

இப்படி, அணுசக்தியை அதிகம் பயன்படுத்துவதால் கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் 4 மடங்கு பெருகி 2,900 மெகாவாட் அளவுக்கு உற்பத்தி உயர்ந்தாலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு 3,900 கோடி டாலர் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

1980இல் ஆண்டுக்கு 6 அணுமின் நிலையங்கள் அமைப்பதாக இருந்த திட்டம் ஆண்டுக்கு ஓர் அணுமின் நிலையமாகக் குறைக்கப்பட்டது. ஆயினும் மொத்த மின்சாரத்தில் 90 சதவீதத்தை அணு உலைகளிலிருந்தே உற்பத்தி செய்யப் போவதாக அரசு தீர்மானித்துள்ளது. கதிரியக்கச் சாம்பல் கழிவைப்பற்றி அரசு தவறான தகவலைத் தந்தது எனப்பொது மக்கள் கோபம் கொண்டுள்ளனர். அணு உலையின் பத்திரத் தன்மை பற்றி ஆராய அரசு உத்திரவிட்டுள்ளது.

மொத்த மின் உற்பத்தியில் எவ்வளவு சதவீதம் அணுசக்தி மூலம் பெறப்படுகிறது என்பது தெரியவில்லை.

இங்கு 1957ஆம் ஆண்டு விண்ட்ஸ் கேல் என்னுமிடத்தில் உள்ள அணுசக்தி நிலையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டுப் பெரும் தீ பரவியது. கதிரியக்க மேகம் ஒன்று சூறாவளியாகக் கிளம்பியது. இதனால் சுற்றுப்புறம் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. சுமார் 20 இலட்சம் லிட்டர் பால் கதிரியக்க அபாயம் காரணமான பயத்தால் பயன்படுத்தப்படாமல் கொட்டப்பட்டு விட்டது.

இங்குப் புதிய அணு உலைகள் நிறுவுவதற்கான எதிர்ப்பு 83 சதவீதமாக உயர்ந்துள்ளது. குடிமக்கள் கதிரியக்கக் கழிவுகள் சேமிக்கப்பட்டுள்ள இடங்களில் மறியல் செய்து வருகிறார்கள். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அரசு, தனது அணு ஆற்றல் கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தொழிற்கட்சியும் லிபரல் கட்சியும் அணு உலைகளை மூடும்படி கோருகின்றன.

இங்குச் செல்லாஃபீல்டு அணு எரிபொருள் பதன நிலையம் அபாய நிலையில் உள்ளதாகவும், வட கடல் பிராந்தியம் முழுவதும் மிகக் கதிரியக்கமுள்ள பகுதியாக மாறும் அபாயம் நிலவுவதாகவும், சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இதுபற்றி ஆய்வு செய்ய உள்ளது.

1980-87க்கு இடைப்பட்ட 8 ஆண்டுகள் கடுமையான விவாதத்துக்குப்பின் சைஸ்வெல் என்ற இடத்தில் அணுமின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

புதிதாக இனி எதுவும் அணுஉலை நிறுவப்பட வேண்டு மானால் மக்களிடம் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்னும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அயர்லாந்து

அரசுக்கு அணு ஆற்றல் தவிர்ப்புக் கொள்கை இல்லாத போதிலும், பொதுமக்கள் கருத்துக் கணிப்பு அணுமின் ஆற்றலுக்கு எதிராக அமைந்துள்ளது.

அர்ஜென்டினா

நான்கு அணுமின் நிலையங்கள் அமைக்கும் திட்டங்கள் கைவிடப்பட்டன. கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரே ஒரு அணுமின் நிலையமும் பூர்த்தி செய்யப்படாமல் போகலாம் என்று நம்பப்படுகிறது.

ஆஸ்திரேலியா

தொழிற்கட்சி அரசு அணு ஆற்றலைப் பயன்படுத்துவதில்லை என்கிற கொள்கையை வைத்திருக்கிறது.

கிரீஸ்

தனது முதல் அணு உலையைக் கைவிடத் தீர்மானித்துள்ளது.

நார்வே

அணுமின்சாரமே தயாரிப்பதில்லை என முடிவு செய்துள்ளது.

சீனா

ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம் பெற்றிருந்த 10 அணுமின் நிலையங்களில் 8 ரத்து செய்யப்பட்டன.

டென்மார்க்

நாடாளுமன்றம் எப்போதும் அணு உலைகளைக் கட்டுவதில்லை என முடிவு செய்துவிட்டது. தான் என் றென்றும் அணுசக்தி உற்பத்தியில் ஈடுபடுவதில்லை என 1885ல் சட்டம் நிறைவேற்றியுள்ளது.

நியூசிலாந்து

தொழிற்கட்சி அரசு அணு ஆற்றலற்ற மண்டலத்தை நிறுவும் கொள்கை கொண்டது. அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட உள்ளது.

பிரேசில்

1986இல் 8 அணுமின் நிலையத் திட்டங்களில் 6 அரசால் ரத்து செய்யப்பட்டன. மீதி இரண்டும் தாமதிக்கப்பட்டன.

பிலிப்பைன்ஸ்

நாட்டிலுள்ள ஒரே ஒரு அணுமின் நிலையத்தையும் பிரித்து விட அரசு முடிவு.

பின்லாந்து

அணு உலைகளுக்கு எதிர்ப்பு இரு மடங்காகி 64 சதவீதமாக உயர்ந்துள்ளது. 4,000 பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவிக்கின்றனர். புதிதாக அணு உலைகள் நிறுவும் திட்டங்கள் கைவிடப்பட்டன. ஏற்கனவே உள்ள நான்கு அணு உலைகளுக்கு மேலே 5ஆவது அணு உலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

மெக்சிகோ

1982இல் 20 அணுமின் நிலையங்களை அமைக்க இருந்த திட்டம் கைவிடப்பட்டது. மூன்றாவது, நான்காவது அணு உலைகளை அமைப்பது ரத்து செய்யப்பட்டது.

மேற்கு ஜெர்மனி

கடந்த 10 ஆண்டுகளாகப் புதிய அணுமின் நிலையங்களை அமைக்கும் திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை. அணுமின் நிலையங்கள் இங்குப் படிப்படியாக மூடப்படுவது சாத்தியமே.

போலந்து

சர்வதேச அணு ஆற்றல் முகமை (IAEA) பார்வையிட்டு சோதிக்கும்வரை அணு உலைகள் கட்டுவதை நிறுத்தி வைக்கக் கோரி 3,000 பேர் அரசுக்கு மனு. பத்திரத்தன்மை அளவை அதிகரிக்க அரசு வாக்குறுதி.

இங்கு நிறுவப்பட இருந்த ஜார்னோவிச் அணுமின் நிலையம் தள்ளிப் போடப்பட்டது.

லக்சம்பர்க்

அணு ஆற்றல் உற்பத்தி நடைமுறையில் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது. தற்போதைய அரசு ஒரு தெளிவான அணு ஆற்றல் எதிர்ப்புக் கொள்கையை வைத்திருக்கிறது.

ஜப்பான்

1984இல் உற்பத்தி இலக்குகள் எட்டப்பட்டன. ஒரு ஆண்டுக்கு 2 அணுமின் நிலையங்கள் மட்டுமே கட்டப்படும். ஆயினும் அரசு அணுமின் உற்பத்தித் திட்டத்தைக் கைவிடாது என அறிவித்துள்ளது.

ஸ்பெயின்

கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற 5 அணுமின் நிலையங்கள் 1984ல் கைவிடப்பட்டன.

ஸ்வீடன்

1980ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி 2010ஆம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்கள் மூடப்படும். 1986ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்கின்றன.

இதில் 1995க்குள் தனது 12 அணு உலைகளை மூடிவிட பொதுமக்கள் கருத்துக்கணிப்பு கேட்டு, 2010க்குள் எஞ்சிய அணு உலைகளையும் சேர்த்து எல்லாவற்றையும் மூடிவிடவும் திட்டம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த மின் உற்பத்தியில் 40% அணு சக்திமூலம் பெற்றுவரும் நாடாகும்.

யுகோஸ்லாவியா

அணு ஆற்றலுக்கு எதிர்ப்பு இருமடங்காகியுள்ளது. உள்ளூர் அளவில் அணுஆற்றல் எதிர்ப்புக் குழுக்கள் அமைக்கப் படுகின்றன. பத்திரத்தன்மை மதிப்பிடப்படும் வரை புதிய அணு உலைகளை நிறுவும் திட்டங்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன.

இங்குப் பிரெவ்லகா என்னுமிடத்தில் அணுஉலை அமைக்கப்படுவதை எதிர்த்து ‘ஸ்லாவ் கோபுலிக்’ என்கிற விஞ்ஞானி ஜனநாயகத்துக்கும் சோஷலிஸ சுய ஆட்சி அமைப்புக்கும் அணு மின் சக்தி எதிரானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

யுகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் இவானோவிச், அணுஉலை நிறுவும் முயற்சியை எதிர்த்து, ‘யுகோஸ்லாவியாவின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டாதீர்கள்’ என்று குரலெழுப்பியிருக்கிறார்.

இதன் விளைவாக மாற்றுத் திட்டம் காணும் வரை புதிதாக எதுவும் திறப்பதில்லை என முடிவு செய்யப்பட்டு, நீர்மின் சக்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

ஆஸ்திரியா

பொதுமக்கள் கருத்துக் கணிப்பு அணுமின் நிலையம் இயங்குவதைத் தடை செய்தது. இருந்த ஒரே ஒரு அணு உலையையும் பிரித்துவிட அரசு முடிவு செய்துள்ளது.  இந்த ஒரு அணு உலையும் கட்டுமானப் பணி முடிந்து இன்னும் செயல்படத் துவங்காத நிலையில் இருந்ததாகும். செயல்படத் தொடங்கும் முன்பே மூடிவிட முடிவு செய்யப்பட்டு விட்டது.

இந்த அணு மின்நிலையம் ஸ்வென்தார்ப் என்ற இடத்தில் அமைக்கப்பட்டதாகும். இது முழுப் பாதுகாப்பு வசதிகளுடன் கூடியது என்று பாராட்டப்பட்ட அணு உலையாகும்.

இத்தாலி

அணு உலையைப்பற்றிக் கருத்துக் கணிப்புக் கோரி பத்து இலட்சம் பேர் மனு. எல்லா முக்கிய கட்சிகளும் அணு உலைத் திட்டத்தை எதிர்க்கின்றன. 2000ஆம் ஆண்டில் 13,500 மெகாவாட் உற்பத்திசெய்ய இருந்த திட்ட அளவு கடுமையாகக் குறைக்கப்பட்டது. ஒரே ஒரு அணுமின் நிலையம் மட்டுமே பூர்த்தியாகும் நிலையில் உள்ளது.

மோண்டால்-டி-காஸ்ட்ரோ என்னும் இடத்தில் கட்டப்பட்டு வந்த ஒரு புதிய அணுமின் நிலையக் கட்டுமானப் பணியை நிறுத்தி, நடப்பில் உள்ள 3 அணு உலைகளையும் ஏககாலத்தில் அல்லாமல் மாற்றி மாற்றிப் பயன்படுத்தி வருகிறது.

இதுவரை குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் Re-assessing Nuclear Power State of the World 1987, A World Watch Institute Report, New York 1987இல் வெளிவந்தவை.

இது தவிர கிடைக்கும் தவல்கள்:

ஸ்காண்டிநேவியா

எல்லாத் திட்டங்களையும் ஒத்திவைத்துள்ளது.

பெல்ஜியம்

எல்லா திட்டங்களையும் கால வரம்பின்றி ஒத்தி வைத்துள்ளது.

ஹாலந்து

ஒரு அணுமின் நிலையம் கூட இல்லை. எதுவும் வேண்டாம் என முடிவு.

நெதர்லாந்து

தற்போதுள்ள இரண்டு அணு உலைகளுக்கு மேல் புதிதாக எதுவும் தொடங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து

1980க்குப்பின் புதிதாக எந்த அணுமின் நிலையத்தையும் கட்டவில்லை. 6ஆவது அணுமின் நிலையத்தைக் கட்டும் 22 ஆண்டுக்கால திட்டத்தை இரத்து செய்துவிட்டது.

ஆஸ்திரியா, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளை அணுசக்தியற்ற பிரதேசங்களாக (NUCLEAR FREE ZONE) ஆக்கத் திட்டம் தீட்டியுள்ளன.

ஆக, உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள், மக்கள் எதிர்ப்பு காரணமாக,

1. இனி புதிதாக அணுமின் திட்டங்களைத் தொடங்குவ தில்லை எனவோ,

2. உள்ள திட்டங்களையும் மூடிவிடுவது எனவோ,

3. அல்லது எந்தக் காலத்திலும் அணுசக்தி பக்கம் திரும்புவதில்லை எனவோ,

தீர்மானம் செய்துள்ளது என ஓரளவு புரிந்து கொள்ளலாம். இதில் சோஷலிச நாடுகளும் விதிவிலக்கில்லை என்பதையும் நாம் புரிந்து கொண்டு மேலே செல்வோம்.

Pin It