சுதந்திர இந்தியாவின் கொள்கை சமாதானமே என்றும் ஆகவே, ஆயுத ஒழிப்பு, மற்றும் அணு ஆற்றலை யுத்த நோக்கங்களுக்கு அல்லாமல் சமாதானக் காரியங்களுக்கே பயன்படுத்தல் ஆகியவற்றை முறையாகச் செயல்படுத்துவோம் என்றும் அடிக்கடி முழங்கி வந்த பண்டித ஜவஹர்லால் நேரு, 1960க்குப் பிறகு தான் முழங்கி வந்த இந்த விஷயங்களில் அதிகமாக அக்கறை காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த மாற்றத்துக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. இந்த பின்னணி இந்திய சீன எல்லைத் தகராறிலிருந்து தொடங்குகிறது. 1959 மார்ச் 31 வாக்கில் திபெத்து நாட்டைச் சேர்ந்த தலாய் லாமா திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்து இந்தியாவிடம் புகலிடம் கேட்டு இந்திய அரசின் பாதுகாப்பில் இந்தியா வந்து தங்குகிறார். இதையொட்டி ‘இந்தி – சீனி’ பாய் பாய் நட்புறவு விரிசலடைகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கு மான எல்லைத் தகராறுப் பிரச்சனை முன்னுக்கு வந்து முற்றுகிறது. இந்தியா, இமாலய மலைப்பகுதியில் தனது எல்லை என்று கருதி வந்த எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தத் துவங்குகிறது. எல்லையோரக் காவல்படைப் போர் வீரர்களை உஷார் நிலையில் வைக்கிறது. இதனால், எந்த நேரத்திலும் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான யுத்தம் வெடிக்கலாம் என்கிற பதட்ட நிலை நிலவுகிறது.

இந்தச் சூழலில்தான் 1961 பிப்ரவரி 2ஆம் தேதி பாபா டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம், இந்தியா அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தால், இன்னும் இரண்டே ஆண்டுகளில் அதனால் அணுகுண்டு தயாரிக்க முடியும் என்கிறார். பாபாவின் குரல் பாபா என்கிற தனிப்பட்ட மனிதரின் குரல் அல்ல ,அது இந்திய அரசின் குரல்.

பாபா மிகச் சிறந்த அணுசக்தி விஞ்ஞானி என்பதிலோ, அவரது திறமையிலோ, மேதமையிலோ யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. உண்மையிலேயே அவர் சிறந்த மேதைதான் ஆனால் அவர் பிறந்த குடும்பம், வளர்ப்பு, படித்த, உருவாக்கப்பட்ட சூழல் இந்திய ஏகபோகத் தொழில் குடும்பங்களுள் ஒன்றான டாடா குடும்பப் பின்னணி ஆகியன இயல்பாகவே இந்திய அரசின் நலனுக்கு நெருக்ககமாக அவரைச் சிந்திக்க வைத்தன . அதே போல இந்திய அரசின் நலனுக்கும் இதுபோன்ற அறிவியலாளர்களின் தேவை அவசியமாகியது இப்படிப்பட்ட பரஸ்பர இணக்கத்தில் இந்திய அரசின் ராணுவ பலத்தை வலுப்படுத்த அணுகுண்டு தயாயரிக்க அதற்கான தொழில் நுட்பம் தெரிந்த ஒருவர் இயல்பாகவே அப்படிப்பட்ட போராயுதம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பியதிலோ, நிலவுகிற வாய்ப்பைப் பயன் படுத்தி அப்படித் தயாரிக்க முடியும் என்று அறிவித்ததிலோ ஆச்சரியப்பட எதுவுமில்லை.

ஆச்சரியப்படத்தக்கது, அப்போதைய இந்தியாவின் பிரதமரும், மனிதருள் மாணிக்கம், சமதானப் புறா என்றெல்லாம் போற்றப் பட்டவருமான ஜவஹர்லால் நேரு இந்திய அரசின் நலன்களுக்குகந்த அளவில் பாபாவின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய இணங்கியதுதான்.

பாபாவின், ‘வசியங்களுக்கு’ இணங்கி நேருவே, அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்புப் பணிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் நாம் தயாரிப்போடு இருக்கவேண்டும் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

 அவர் இவ்வாறு கூறியதற்கு பாபாவின் வசியம் மட்டும் காரணம் அல்ல, இந்திய - சீன எல்லைத் தகராறு முற்றி அது யுத்தமாகவும் வெடித்துவிட்டதும் ஒரு காரணம் என்பதையும் நாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.

இப்படி யுத்தம் வெடித்து இந்தியா அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த சூழலில்தான், இந்தியா இங்கி லாந்தையும், அமெரிக்காவையும் நோக்கி ராணுவ உதவி கோரி கையேந்தியது. பிரதமர் நேரு, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கு 1962 நவம்பர், 19இல் மிகவும் பரிதாபகரமான ஒரு வேண்டுகோளை விடுத்தார். “எங்களுக்கு அதிகமான உதவி தேவைப்படுகிறது. காரணம் இது எங்களுக்கு வாழ்வின் இருப்பு பற்றிய பிரச்சனையாக இருக்கிறது. எங்களுக்கு எல்லா விதமான உதவியும் தேவைப்படுகிறது. இதில் நாங்கள் கூச்சப்படு வதற்கே எதுவுமில்லை” என்பதே அந்த வேண்டுகோள்.

இப்படி இந்தியா யுத்த நெருக்கடியில் சிக்கியிருந்த சூழலில் தான் அணுசக்தியை, அணுகுண்டு தயாரிக்கும் முயற்சிகளுக்கு பாபா நேருவை இணங்க வைத்தார்.

இந்த இணக்கத்தின் முதல் நடவடிக்கைதான் நேரு அமெரிக்க ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுக்க இரண்டு மாதங்களுக்கு முன்பே அதாவது செப்டம்பர் 15, 1962இல் இந்தியப் பாராளுமன்றத்தில் அணு சக்திச் சட்டமான (ATOMIC ENERGY ACT) நிறைவேற்றப்பட்டது.

ஏற்கெனவே முதல் அணுசக்திக் கமிஷன் நிறுவிய காலத்திலேயே ஓர் அணுசக்திச் சட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த அணுசக்திச் சட்டம் 1948இல் கொண்டு வரப்பட்டது. அதாவது அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது என்று இந்திய அரசு கொள்கை கொண்டிருந்த நாளில் உருவாக்கப்பட்டது அது.

இப்போது அரசின் கொள்கையில் மாறுதல் ஏற்பட்டு அணு சக்தியை ஆக்கப் பணிகளுக்கு மட்டுமல்லாமல், பாதுகாப்புப் பணிகளுக்கு, அதாவது ராணுவக் காரியங்களுக்கும், நேரடியாகவே சொல்வதானால் அணுகுண்டு தயாரிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பிறகு இதற்கு ஏற்ப ஓர் அணுசக்திச் சட்டம் தேவைப்பட்டது. இப்படி இந்தத் தேவையொட்டி உருவாக்கப்பட்டதுதான் இந்திய அணுசக்திச் சட்டம் 1962.

எனவே இந்த அணுசக்திச் சட்டம் 1962, ஏற்கெனவே இருந்த அணுசக்திச் சட்டம் 1948ஐத் திரும்பப் பெற்று, அந்த இடத்தில் அதற்குப் பதிலாகப் புதிய வேறு ஒரு சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது என்பது முக்கியம். இந்தச் சட்டம் செப்டம்பர் 21, 1962லிருந்து அமலுக்கு வந்தது.

‘டெம்மி’ அளவிலான புத்தக வடிவத்தில் 24 பக்கங்களைக் கொண்டதாக உள்ள இந்தச் சட்டம் 32 பிரிவுகளை உடையது. இதில் 32ஆவது பிரிவு 1974ஆம் ஆண்டு கொண்டு வந்த ஒரு சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டு எஞ்சிய 31 பிரிவுகளும் தற்போதும் அப்படியே அமலில் இருந்து வருகின்றன.

இந்தச் சட்டத்தின் முழுமையையும் இங்கே ஆராய்வது இடவசதியளிக்காது என்பதால் இந்தச் சட்டத்தின் முக்கியமான சில பகுதிகளை மட்டும் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டியது நம் விவாதத்துக்கு அவசியமாகிறது.

உதாரணமாகப் பிரிவு 3 அணுசக்தியின் உற்பத்தி வளர்ச்சி, அந்தச் சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது, அதில் எப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வது, உற்பத்தி செய்யப்படும் சக்தியை என்னென்ன விதங்களில் பயன் படுத்துவது என்பதற்கான சில அதிகாரங்களை மத்திய அரசுக்கு அளிக்கிறது.

பிரிவு 18, அணுசக்தி சம்பந்தப்பட்ட எந்தத் தகவலையும் அதை ஆவணமாகவோ, வரைபடமாகவோ, புகைப்பட மாகவோ, திட்டப்படமாகவோ, மாதிரிப்படமாகவோ, வேறு எந்த ரூபத்திலோ அறிந்து கொள்வதைத் தடுக்க மத்திய அரசுக்கு முழு அதிகாரம் அளிக்கிறது.

பிரிவு 20 , அணுசக்திக் கமிஷனால் ஒப்புதல் அளிக்கப்படாத எந்தத் தனிநபரோ அல்லது அமைப்போ அணுசக்திக் கமிஷன் அணுசக்தியோடு சம்பந்தப்பட்டதாக நம்பும் எந்த ஒரு விஷயத்திலும் ஆய்வுகள் மேற்கொண்டு கண்டுபிடிப்புகள் நிகழ்த்துவதையோ அதைப் பதிவு செய்து கொள்வதையோ தடை செய்கிறது.

பிரிவு 21, சட்டபூர்வமான அல்லது சமரசபூர்வமான எந்த ஒரு பிரச்சனையிலும் அணுசக்திக் கமிஷனுக்கே முழு அதிகாரம் அளிக்கவும், அதுவே இப்பிரச்சனை பற்றி இறுதி முடிவு எடுக்கவும் வகை செய்கிறது.

மத்திய அரசு என்பது அணுசக்தித் துறையைப் பொறுத்தமட்டில் பிரதமர் மற்றும் அணுசக்திக் கமிஷனின் தலைவர் இருவரோடு மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்பதோடு, பிரதமர் என்பவர் அணுசக்திக் கமிஷனின் வேண்டுகோளுக்கிணங்க செயல்படுவார் என்பதால், மத்திய அரசு என்பது முழுக்க முழுக்க அணுசக்திக் கமிஷன் தலைவராகவும், அணுசக்தித் துறைச் செயலாளராகவும் செயல் படுபவர்தான். அவர் ‘பாபா’ தான் என்ற நிலைக்கு இருந்தது.

ஆகவே சுருக்கமாக 1962 அணுசக்திச் சட்டம் வரம்பற்ற அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்கியதன் மூலம் அப்போது பொறுப்புகளில் இருந்த பாபாவுக்கே சகல அதிகாரங்களையும் வழங்குவதாக ஆகியது.

அணுசக்தி பற்றிய திட்டமிடுதல், செயல்படுத்துதல், அதுபற்றி தகவல்கள் அளித்தல், கட்டுப்பாடுகள் விதித்தல், மற்றும் அணுசக்தியோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் இதர தொழில்களின் மீதும் முழு ஆதிக்கம் செலுத்தல் ஆகிய எல்லையற்ற அதிகாரங்களை 1962 அணுசக்திச் சட்டம் அறிவர் பாபாவுக்கு வழங்கியது.

இதன் மூலம் இந்தியா அணுசக்தியின் உற்பத்தி, பயன்பாடு, எதிர்காலம் ஆகிய எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஏகச் சக்கரவர்த்தியாக பாபாவே திகழ்ந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

அதோடு, சமாதானத்துக்கும் ஆக்கப் பணிகளுக்குமே அணுசக்தியைப் பயன்படுத்துவோம் என்று பறைசாற்றி வந்த சமதானப்புறா அணுசக்தியை அணுகுண்டு தயாரிப்புக்கு பயன்படுத்த ஒப்புதல் தந்ததோடு அதுபற்றிய ரகஸ்யங்களை பாதுகாக்க சட்டமும் இயற்றித் தந்தார் என்பதும் குறிப்பாக கவனிக்கத்தக்கது.

Pin It